Saturday, January 29, 2011

துபாயின் வானிலை மாற்றம்


நான் இந்த துபாயில் காலடி எடுத்து வைத்து  பத்து வருடங்கள் முடிவடைந்து விட்டன....
இங்கு நான் வந்த புதிதில் இருந்ததற்க்கும்,இப்போது இருப்பதற்க்குமே.... பலவித மாற்றங்களையும் இதுவரை பார்த்து கொண்டிருக்கின்றேன்.இந்த அமீரகம்... மிகவும் வேகமான முறையில் முன்னேறி வந்ததும்,சென்ற வருடம் ஏற்பட்ட வர்த்தக நிலவரத்தினால் துபாய் கொஞ்சம் அதிகமாகவே தளர்ந்து போனதும் அனைவரும் அறிந்ததே...
அதே போல் இந்த பாலைவனம் பகுதி சோலைவனமாக மாறிய பொழுதிலும்,திடீர் திடீரென ஏற்படும் வானிலை மாற்றங்கள்,அதனால் ஏற்படும் சில பாதிப்புகளும் அவ்வபோது நடப்பதுண்டு.அசுரத்தனாமான காற்றுகள் அடிக்கும்.சில நேரம் தொடர் மழையினால் தண்ணீர் வடிவதற்க்கு சரியானதொரு ஓட்டம் இல்லாமல் வெள்ளகாட்சியாக கூட காட்சியளிக்கும்.
 பனிக்காலம் வந்தாலோ..... விடியற்காலையில் பக்கத்தில் இருக்கும் கட்டிடமே தெரியாத வண்ணம் பனியால் எங்கும் சூழ்ந்திருக்கும்.இரவு பத்து மணிக்கு மேல் கூட சில நேரங்களில் கார் ஓட்டுபவர்களுக்கு தனக்கு முன்பு செல்லும் கார் தெரியாத வண்ணம் இருக்கும்.இதனால் நிறைய ஆக்ஸிடெண்ட் எல்லாம் நான் பார்த்து அனுபவபட்டதுண்டு.
இவை மட்டுமா....? வெயில் காலம் வந்தால் அது மிக பெரிய கொடுமையாக இருக்கும்.போகும் இடமெல்லாம் ஏஸி.... காரிலும் ஏஸி என்பவர்களுக்கே சிறிது நேரம் வெளியில் நிற்ப்பது தாங்க முடியாத அளவிற்க்கு இருக்கும்.ஆனால் நம் கண் முன்னே கட்டிட வேலையில் ஈடுபட்டவர்களை பார்க்க வேண்டுமே.... அல்லாஹு... மிகவும் பரிதாபமாக இருக்கும்.ஓய்வு நேரங்களில் அவர்கள் அப்படியே தலையில் துணியை போட்டு கொண்டு சுருண்டு தான் படுத்திருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு மாற்றங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள்,அனுபவங்கள்.
இதுவெல்லாம் இறைவன் நம்மை பார்த்து  “ஏய்... மனிதா..., தான் என்று அகங்காரத்தோடு ஆடாதே..... உன்னை சுற்றி இத்தனை விதமான இயற்க்கை சீற்றங்கள் நேருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு” என்று சொல்வது போன்று இருக்கும்.
 இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்கிறார்களா...? காரணம் இருக்கின்றது.

நேற்றைய தினம்( 28 ம் தேதி வெள்ளிகிழமையன்று) எங்கள் குடும்பமும்,நண்பரின் குடும்பமும் சேர்ந்து மதியம் ஒன்றரை மணியளவில் ஆப்ரா என்று அழைக்கப்படும் boat,மற்றும் ship-ல் பயணிக்கும் இடத்திற்க்கு சென்றோம்.
அது ஒரு அழகான இடம்.கிளைமேட் நன்றாக இருக்கும் போதுதான் அங்கெல்லாம் போய் நன்றாக enjoy பண்ண முடியும்.எனவே நாங்களும் அந்த இடத்திற்க்கு போய் ஒரு வருடத்திற்க்கு மேலாக ஆகின்றது என்றே சென்றோம்.குளிரான காற்றாக இருந்து கொண்டிருந்தது.
ஒரு சிறிய  boat ஐ  எங்களுக்கு மட்டுமே என பேசி எடுத்து கொண்டு ஏறி அமர்ந்து ஒரு பத்து நிமிடம் நல்லா ஜாலியாக இருந்தோம்.

ஒரே பாட்டு,ஆட்டம் என குழந்தைகளும்,என் கணவர்,அவர் நண்பர்கள் அவர்கள் குழந்தையினர் எல்லாம் ஜாலியாக இருந்தனர்.boat -ம் நல்ல வேகமெடுத்து போய்கொண்டே இருந்தது.

போட் செல்ல செல்ல தூரத்தில் கருமையான மேகம் சுழன்று புகை மூட்டதோடு இருப்பதை கவனித்தோம். என்ன இது? அங்கே தீ விபத்து ஏதும் ஏற்பட்டுள்ளதா...? இல்லை மழை வரும் அறிகுறியா என்று எண்ணி பேசி கொண்டிருக்கும்போதே.... எங்கள் போட்டை நோக்கி பலமான காற்று வீசியது பாருங்க.... மண் அள்ளி எல்லோர் முகத்திலும் வீசியது.தண்ணிரின் துள்ளலை பார்க்கணுமே....(சுபஹானல்லாஹ்)அதனால் boat ல் ஏற்பட்ட ஆட்டம் வேறு.... எல்லோர் அடிவயிற்றிலும் ஒரு கலக்கம் ஏற்பட்டு விட்டது.குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து விட்டன.அடுத்த சில நொடிகளில் அப்படியே அந்த இடமே இருள் சூழ்ந்தது போன்ற ஒரு நிலை.
என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கும் நிலை.குழந்தைகளில் என் பெரிய பையன் தான் பெரியவன்.அவன் பயப்படவே இல்லை. “ அம்மா.... இதைதானே நேச்சுரல் கேலமிட்டீஸ் என படித்திருக்கின்றேன்.இப்போது அதை நேரில் பார்த்துவிட்டேன்.இதை பத்தி இன்னும் நல்லா இப்போது எழுதலாம் அம்மா...”என்றான்.இது இப்ப ரொம்ப முக்கியம் டா என்று ஒரு நிமிடம் நான் நினைத்தாலும்,இதையும் தைரியமா சமாளிக்கணும்.பாசிட்டிவ்வா நினைக்கணும்னு நம்ம சொல்லி கொடுப்பதெல்லாம் வொர்க்கவ்ட் ஆகுதேன்னு மனசுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம்.ஆனால் அப்பொழுதுள்ள சூழ்நிலையில் முழுதாக வெளிகாட்டிக்க முடியாமல் “ வெரிகுட் செல்லம்” என்று ஒரு வார்த்தையில் சொன்னேன்.மற்ற குழந்தைகளுக்கும் தைரியம் சொன்னான்.boat ஐ boat டிரைவர் நிறுத்தி கட்டியும் விட்டார். மெதுவாக ஓட்டி கொண்டு ஒரு ஓரத்தில் அந்த
இங்கே இறங்கி மேலே போனால் ஏதும் டாக்ஸி கிடைக்குமா என்று விசாரித்தோம்.கொஞ்சம் நடந்து போனால் கிடைக்கும் என்றார்கள்.இப்படியே பேசி கொண்டிருக்கும் போதே நாங்கள் இருக்கும் இடத்தை தாண்டி அந்த அசுர காற்று நகர்ந்து கொண்டிருந்தது.இருளும் விலக ஆரம்பித்தது.இருந்தாலும் இனி இந்த போட்டில் பயணிப்பது சரி வராது என்று முடிவெடுத்து இறங்கி டாக்ஸி பிடித்து எங்கள் கார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தோம்.
ரோடெல்லாம் பார்க்கணுமே.... மரம் விழுந்திருக்கின்றது.ஆடம்பரமான பெரிய விளம்பர தகடுகளெல்லாம் காரின் மேலெ விழுந்து கிடக்கின்றன..... இப்படியே ஒவ்வொரு இடமாக சேதபடுத்திகொண்டே அந்த காற்று சென்று கொண்டிருந்தது.ஏதோ ஆங்கில படம் ஒன்றில் இது போன்ற காட்சிகள் பார்த்த நினைவுதான் அப்போது வந்தது.எங்கெங்கே... அடுத்தது சுனாமிதானோ... என்று மனதிற்க்குள் என்னன்னவோ எண்ணங்கள்...ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு வச்சிக்கங்க....
இந்த சம்பவம் எங்களை பொருத்தவரை மரணபயத்தைதான் ஏற்படுத்தியது என்பேன். வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சி.எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்ன்னு தான் எடுத்துக்க முடிஞ்சது.
இதோ இன்று தைரியமாக இருந்த என் மகனுக்கும்,அழுது கொண்டே இருந்த என் மகளுக்கும் காய்ச்சல் வந்து விட்டது.என்னவென்று சொல்ல....? இது தேவையா... இது தேவையா... -ன்னு வடிவேலு ஸ்டைலில் முகத்துக்கு நேரே விரலை காட்டி கேட்டு கொண்டேன்.ஹூம்...
எல்லாவற்றிற்க்கும் அல்லாஹ் போதுமானவன்....

அன்புடன், 
அப்சரா.

Thursday, January 27, 2011

அண்டா,கார்ன் புர்ஜி


தேவையான பொருட்கள்

முட்டை                          _       இரண்டு
உதிரிகார்ன்                   _         கால் கப்
 வெங்காயம்                 _         இரண்டு
 தக்காளி                         _         சிறியதாக ஒன்று
மிளகாய்த்தூள்            _         1 தேக்கரண்டி
மிளகுத்தூள்                  _         1/2  தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்               _         1/2 தேக்கரண்டி
எண்ணெய்                     _         3 தேக்கரண்டி
மல்லித்தழை                _         சிறிதளவு

*** செய்முறை ***

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி  வைத்துக் கொள்ளவும்.
கார்னையும் கழுவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் தக்காளிகளை சேர்த்து  சிறிது உப்பு போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

நன்கு வதங்கியதும்,தூள்வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.பிறகு கார்ன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

பின்பு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் தண்ணீயும் தொளித்து ஒரு கிளறு கிளறி விட்டு அப்படியே குறைந்த தீயில் வைத்து விட்டு மறுபடியும் கிளறி விடவும்.இபடியே இரண்டு மூன்று முறை கொஞ்சம் விட்டு விட்டு கிளறினால் உதிரியாக வந்து விடும்.

பிறகு உப்பு சரி பார்த்து மல்லிதழையை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான அண்டா,கார்ன் புர்ஜி தயார்.
இது குப்புஸ்,சப்பாத்தி இவைகளுக்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

இதை பிரட்டின் நடுவே வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.




அன்புடன்,
அப்சரா.

Wednesday, January 26, 2011

சிம்பிள் இடியாப்பம் அடை(இனிப்பு)





தேவையான பொருட்கள்

 இடியாப்பம்                          _      மூன்று    
முட்டை                                  _      ஒன்று
 சீனி                                           _      7 தேக்கரண்டி
உப்பு                                           _      2 பின்ச்
ரெட் ஃபுட் கலர்                       _     சிறிது
ஏலக்காய் பவுடர்                   _     1/4 ஸ்பூன்
 நெய்                                            _    சுடுவதற்க்கு

*** செய்முறை ***


இடியாப்பத்தோடு முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,ஃபுட் கலர்,உப்பு,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சீனி கரைந்து எல்லாம் ஒன்று சேர பிசைந்து கொள்ளவும். 

தோசை தவாவை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு வந்ததும்,ஒரு மாவு கரண்டி நிறைய கலவையை எடுத்து மெதுவாக ஊற்றி மெல்லிதாக இல்லாமல் லேசால பரத்தி விட்டு  அடுப்பை குறைந்து தீயில் வைக்கவும்.
அடி நன்கு சிவந்ததும் அகலமான தோசைதிருப்பியாலும், தேவைபட்டால் மற்றுமொரு கரண்டியையும் கொண்டு மெதுவாக திருப்பவும்.(திருப்பும் போது பிய்ந்து விடும் கவனமாக திருப்புதல் வேண்டும்)
அதை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.

ஓரமெல்லாம் மொறு மொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த அளவில் இரண்டு அடைகள் சுடலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ரசித்து சாப்பிடுவார்கள்.


அன்புடன், 
அப்சரா.

Tuesday, January 25, 2011

பருப்பு சாதம்


இந்த முறையில் செய்யும் பருப்பு சாதம் எங்கள் ஊர்களில் வயதுக்கு வந்த பெண் வீட்டில் அன்று இந்த சாதத்தை நிறைய செய்து ஒரு பெரிய மரவையில் பரவலாக வைத்து நடுவே பெரிய முட்டை ஆம்லெட் போட்டு அதில் வைத்து தெரு பிள்ளைகள் அனைவரையும் கூப்பீட்டு உட்கார்ந்து எல்லோரையும் ஒன்றாக சாப்பிட சொல்லுவார்கள்.சுட சுட இருக்கும்.இதெல்லாம் நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது....
இப்போது ஒரு சில வீடுகளில்தான் இந்த பழக்கம் உண்டு.காலம் செல்ல செல்ல எல்லாமே மாறிவருகின்றதே.... என் குழந்தைகளுக்கு இதை மாதம் ஒரு முறையாவது செய்து கொடுத்துவிடுவேன்.  
இப்போது அதன் செய்முறை கீழெ....



தேவையான பொருட்கள்
 பாஸ்மதி அரிசி                        _         ஒரு டம்ளர்     
துவரம்பருப்பு                             _         ஒரு கை நிறைய
வெங்காயம்                                _          ஒன்று
 தக்காளி                                       _           பாதியளவு
 பச்சைமிளகாய்                         _           ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது           _           ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                              _            அரை தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்                     _            ஒரு தேக்கரண்டி
தேங்காய் விழுது(அல்லது)
தேங்காய் பால் பவுடர்              _             இரண்டு தேக்கரண்டி
 புதினா தழை                                _               சிறிதளவு
 பட்டை                                            _              ஒரு இன்ச் அளவு
 எண்ணெய்                                    _               3 தேக்கரண்டி

*** செய்முறை *** 


அரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி விட்டு ஊறவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும்.

 குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு உடனே வெங்காயம் ,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் விழுதையும்(தேங்காய் பால் பவுடராக இருந்தாலும்..) புதினாவையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி  தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும் அரிசி,பருப்பை தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும்.

  
நன்கு கொதித்து தண்ணீர் சுண்டும் நிலையை அடைந்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். 
 ஸ்டீம் வீட்டதும் குக்கரை திறந்து ஒரு முறை அடி வரை கிளறிவிட்டு பரிமாறவும்.

சுவையான சத்தான பருப்பு சாதம் தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்வதும் எளிது.

அன்புடன்,
அப்சரா.

கதை சொல்வோமா....

\\\என்ன இது..... சின்னபுள்ள தனமால்ல இருக்கு/// ன்னு தலைப்பை படித்ததும் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னு தோணியிருக்குமே.......
ரொம்ப யோசிப்பதற்க்குள் நானே விஷயத்திற்க்கு வந்து விடுகிறேன்.
நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு என்னதான் பெட் டைம் ஸ்டோரி புக்ன்னு வாங்கி படிக்க சொன்னாலும்,நாம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆக்‌ஷனோடு ரசிச்சு சொல்லி அவங்க அப்படியே வாய் பிளந்து கேட்பதே ஒரு தனி ஸ்வாரஸ்யம் தானே.... அப்படிதானே நாம் சின்னபிள்ளையா இருக்கும் போது நம்ம பாட்டிகள் எல்லாம் சொல்லுவாங்க.... நாம ரசிச்சு கேட்போம் இல்லையா...?

ஆனால்.... இப்ப உள்ள பிள்ளைங்க பயங்கர உஷாருங்க.... சின்னதா ஒரு விஷயம் தப்பா சொன்னாலும் அது எப்படி வரும்...?இது எப்படி முடியும் என்றெல்லாம் பல கேள்வி கேட்டு கொண்டு இருப்பாங்க..... அதுவும் நாம அதற்க்கு விளக்கம் கொடுக்கவே நிறைய யோசிக்கணும்.இதுல நம்ம அறிவும் சேர்ந்து வளருதுல்ல.....கதையில் சொல்லபடும் கருத்து என்ன?(Morel of the story) என்றெல்லாம் குழந்தைகளை கேட்டால் அவர்களும் ஓரளவு அதை அழகாக சொல்லுவாங்க...

இப்படி யோசிச்சு தான் நான் சின்ன வயதில் ரத்னபாலா,கோகுலம் இதிலெல்லாம் படித்த கதையில் நம்ம எக்ஸ்ட்ரா சீன்ஸும் போட்டு என் பசங்களுக்கு சொல்லுவேன்.அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாமுன்னு வந்தேன்.

                                               ***குமரியும்,சிங்கமும் ***



[ஒரு ஊருல....ஒரு பெரிய காடு இருந்துச்சா..... இப்படி தானே....குழந்தைகளுக்கு ஆரம்பிப்போம்...
இங்கே எழுத்துக்கு அது சரிவராது என்பதால் இப்படி எழுதுறேன்...]


ஒரு பெரிய காட்டுக்கு அருகே ஒரு சிறிய கிராமம் இருந்து வந்தது.
அந்த கிராமத்தில் ஒரு பாட்டியும்,பேத்தியும் வாழ்ந்து வந்தனர்.அடிப்படை வசதிகளுக்கு கூட தினமும் கஷ்ட்டபடும் நிலை அவர்களுடையது. அவர்களுக்கு உதவ சொந்த பந்தங்கள் என்று வேறு யாரும் இல்லை.வீடு கூட ஏதோ ஒரு பெரிய காத்து அடித்தால் கூட பரந்திடும் நிலையில்தான் இருந்தது.அந்த பேத்தியாக இருக்கும் பெண் நல்ல அழகுடன் இருந்தாலும் அவளது இயலாமை அழகை மறைத்தே காட்டியது.
அந்த கிராமத்தில் இருக்கும் மற்றவர்களும் அவர்களை தள்ளி வத்தே பார்த்தனர்.இதனால் அவள் யாருடனும் எங்கும் செல்வதோ..இல்லை அவளுக்கென்று தோழியோ... கிடையாது.எல்லாமே அவள் பாட்டிதான்.யாரும் அவளை கேலி கிண்டல் செய்தால் கூட நமக்கு ஏன் வீண் வம்பு என்றே பாட்டியும்,பேத்தியும் இருந்து விடுவார்கள்.காட்டில் விறகை பொருக்கி வந்து வேறு கிராமத்தில் விற்று அதில் வரும் காசில் பொழுதை கழித்து வந்தனர்.
இப்படியே அவர்கள் வாழ்க்கை போய் கொண்டிருக்க தனது பேத்திக்கு ஒரு கல்யாணமாவது செய்து தனக்கு பின் ஒரு துணையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டி எண்ணினாள்.அந்த ஊரின் பெரியவர் ஒருவரிடம் இதுவரை பேசாதவள் அன்று முதன் முறையாக பேசினாள்.
“ எனது பேத்திக்கு ஒரு கல்யாணம் செய்து பாக்கணும்னு ஆசைபடுறேனுங்க.... அவளுக்கு ஒரு மாப்பிளையாக யாராவது தெரிந்த பையன் இருந்தா சொல்லுங்க அய்யா....” என கேட்டாள்.
இதை கேட்ட அந்த பெரியவர் ஏதோ நகைச்சுவையை கேட்டவர் போல் மிகவும் சத்தமாக நீண்ட நேரம் சிரித்தார்.போகின்றவர்கள்,வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி சிரித்தார்.
  “ பாருடா... இந்த கிழவி சொன்னதை... இதுங்களுக்கு கஞ்சி குடிக்க கூட வழியில்லையாம்... இதுல பேத்திக்கு கல்யாணம் செய்து வைக்க போகுதாம் இந்த கிழவி.... இது என்னவோ மகாராணி பாரு... பேத்தி இளவரசியை கட்டிக்க நா நீன்னு போட்டி போட்டு கொண்டு மாப்பிளை வர்றா மாதிரியில்ல என் கிட்ட வந்து சொல்லுது.போ கிழவி போ... அடுத்த வேலை கஞ்சிக்கு எப்படி காசு எடுக்கலாமுன்னு யோசி... பேராசை எல்லாம் படக்கூடாது என்ன....”
என்று சொல்லி எல்லோரும் சிரித்ததும் வந்த கண்ணீரை துடைத்து கொண்டே வீடு திரும்பினாள் பாட்டி.
பாட்டியின் தோலை பிடித்தவாறு அமர்ந்த பேத்தி, “ அழாதே பாட்டி... எதுக்காக இவங்களிடமெல்லாம் நீ பேசுற...? உனக்கு நான்...எனக்கு நீன்னு இருக்குறப்போ... நீ எதை பற்றியும் கவலைபடாதே... நமது விதி போகும் வழி நாம் செல்வோம்...” என்றாள்.

இப்படி நாட்கள் கடந்து செல்ல ஒரு நாள் பாட்டி விறகுகளை விற்று காசு வாங்கி வர அருகே உள்ள வேறு ஒரு கிராமம் சென்று விற்றாள்.பேத்தி மட்டும் வீட்டில் இருந்தபோது  வெளியில் ஒரே சத்தமாக இருந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். என்னவென்று மெதுவாக வெளியே சென்று பார்த்தாள். “ சிங்கம் ஊருக்குள்ள வந்துடுச்சு எல்லோரும் ஓடுங்க எல்லோரும் ஓடுங்க” என்று அலறியவாறு அவரவர்கள் வீட்டிற்க்கு சென்று கதவை தாழிட்டு கொண்டிருந்தனர் அந்த கிராமத்து மக்கள்.இவளுக்கு பாட்டி இன்னும் வரவில்லையே அவளுக்கு என்னவாவது ஆகிவிடுமோ என்ற கவலையில் யோசித்து கொண்டிருக்கும்போதே தன் வீட்டை நோக்கி சிங்கம் வருவதை உணர்ந்தாள்.

அலறினாள் சிங்கம் இன்னும் வீறு கொண்டு எழும் என்று எண்ணி மெதுவாக வீட்டுக்குள் சென்றாள்.சிங்கமும் வீட்டுக்குள் புகுந்தது.மிரண்டு போனவளாய் இருந்தாலும்,மனதிற்க்குள் பயத்தை வைத்துக் கொண்டு,சிங்கத்தை நோக்கி..., “ சிங்கமே.... நான் உன்னை அடிக்கவோ,இல்லை நான் எங்கும் ஓடியோ போக மாட்டேன்  எனவே உனக்கு என்ன சாப்பிட வேண்டுமோ கேள் நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன்.ஆனால் இந்த ஊரில் இருக்கும் யாரையும் ஒன்றும் செய்துவிடாதே...” என்று கை குவித்து கேட்டு கொண்டாள்.

உடனே அந்த சிங்கம் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தது. “ என்ன வேண்டுமானாலும் செய்வாய் அல்லவா.... அப்ப சரி... என்னை கல்யாணம் செய்து கொள்.நாம் இருவருமே சேர்ந்து காட்டுக்கு போய் வாழலாம்” என்று சொன்னது.இதை கேட்டு அதிர்ந்தவள் சற்றே யோசித்து...,

“ அவ்வளவுதானே.... நீங்கதான் காட்டுக்கு ராஜாவாச்சே உங்களை திருமணம் செய்து கொள்ள யாரும் மறுப்பார்களா என்ன? நிச்சயம் என் பாட்டியிடம் சொல்லி உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்.... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நீங்கள் செய்யவேண்டும்...” என்றாள்

 “ என்ன செய்யணும்?” என்று கர்ஜிக்கும் குரலில் கேட்டது.

 “ சொல்றேன்னு கோபித்து கொள்ளக்கூடாது.... உங்களுக்கு மனைவியாக வரவேண்டுமானால் உங்களிடம் எனக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும் அல்லவா.... அப்பத்தானே சகஜமாக நாம் வாழ முடியும்....? எனவே உங்க அகோரமான பல்லையும்,நீளமான நகங்களையும் நீக்கிவிடுங்கள்.... அதுபோதும்.அப்புறம் பாருங்க...உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நான் பணிவிடையாக செய்கிறேன்.” என்றாள்.

சற்று நேரம் கூட தாமதிக்காமல் “ ஓ...ஓ...அவ்வளவுதானா...? அதை நான் எப்படி  நீக்குவது? உன்னால் முடிந்தால் நீயே நீக்கிவிடு” என சொன்னது.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும்.... தன் வீட்டில் இருக்கும் கடினமான கருவியான குரடை கொண்டு பற்களையும்,நகத்தையும் நீக்கினாள்.உடனே... “உன் விருப்பம் நிறைவேறியது அல்லவா...? இப்போது என் விருப்பத்தை நிறைவேற்று” என்று சிங்கம் சொன்னது.

தான் நினைத்தபடி சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று எண்ணி உரலை எடுத்து சிங்கத்தை ஓங்கி அடிக்க ஆரம்பித்தாள் அந்த பெண். தன்னால் எதிர்த்து போராட முடியாத நிலைக்கு ஆகி விட்டோமே என்று நினைத்து கொண்டே தலைத்தெறிக்க காட்டை நோக்கி ஓடி போனது சிங்கம்.

இதை சற்றும் எதிர் பார்க்காத கிராம மக்கள் மகிழ்ச்சிக்கு ஆளானார்கள்.எல்லோரும் அப்பெண்ணின் வீரச்செயலை புகழ்ந்தார்கள்.எந்த பெரியவர் நக்கலாக சிரித்தாரோ அவரே “ நீ உன்னை மட்டும் இல்லை இந்த ஊர் மக்களின்   உயிரையே அல்லவா காப்பாற்றி விட்டாய்.... எவ்வளவு புத்திசாலித்தனம் உனக்குள்.உங்களை ஒதுக்கி வைத்து பார்த்த நாங்கள் தான் முட்டாள்.” என்றார்.
இவற்றை ஏதும் அறியாத பாட்டி தன் வீட்டின் முன் கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து வேகமாக பதட்டத்துடன் ஓடி வந்தாள்.கூடியிருந்த அனைவரும்  அவள் பேத்தியின் செயலை சொல்லி சொல்லி புகழ்ந்தார்கள்.
இறுதியாக அந்த ஊர் பெரியவர்...அப்பெண்ணை பார்த்து , “ இனி உன் அறிவுக்கு நிஜமாவே மாப்பிளை நீ நான்னு போட்டி போட்டுகொண்டு வருவாங்கம்மா....
நானே நல்லபடியாக திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறி சென்றார்.

பெருமையிலும்,சந்தோஷத்திலும் பேத்தியை பார்த்து ஆனந்த கண்ணீரோடு நின்றாள் பாட்டி...

 சரி இப்ப கதை சொல்லியாச்சு.... இந்த கதை மூலம் தெரிஞ்சுகிட்டது என்ன?
  **** யாரும் யாரையும் இருக்கும் நிலையை வைத்து தவறாக மதிப்பிட கூடாது.ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமை நிச்சயம் இருக்கும் என்றே எண்ண வேண்டும்.இது ஒன்று....
அதே போல் எந்த ஒரு கஷ்ட்டத்திலும்,இக்கட்டான நிலையிலும் சோர்வடைந்துவிடாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இதற்க்கு தீர்வு நிச்சயம் இறைவன் வைத்திருப்பார் என்று நினைத்து யோசித்து செயல்படவேண்டும்.அப்படி யோசித்ததால்தானே...தன்னையும் காப்பாற்றி கொண்டதோடு இல்லாமல் அந்த ஊரையும் காப்பாற்றி விட்டாள் நம் கதையின் கதாநாயாகி.....****

என்ன கதையை படிச்சாச்சா...... என் கற்பனை சில கலந்த கதை. இதை விரும்பியவர்கள் உங்க குழந்தைக்கு சில ஆக்‌ஷனோடு சொல்லுங்க.... ஆனால் கோபத்துல கண்ணாமுன்னான்னு என்னை திட்டாதீங்க..... நான் பாவம்.....



அன்புடன், 
அப்சரா.

Sunday, January 23, 2011

குழந்தைகளின் சளி குறைய...,




குழந்தைகள் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் உடம்பிற்க்கு ஏதேனும் செய்து கொண்டே இருக்கும்.கொஞ்ச நாள் நன்றாக இருப்பார்கள்.ஆஹா..,இப்போதுதான் நன்றாக இருக்கிறாள்(ன்).உடம்பு கூட பூசினாற்போல் சதைபோட்டுள்ளது என்று பெருமையாக சொல்லவேண்டாம்.நினைத்தாலே போதும்.அடுத்த ரெண்டு நாளில் குழந்தைகளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிடும்.அது காய்ச்சலாகவும் இருக்கலாம்.வாந்தி பேதியாகவும் இருக்கலாம்.

இதில் சளி பிடிப்பதுதான் மிகவும் அதிகம்.என்னதான் குழந்தையை நாம் பார்த்து பார்த்து வைத்துக் கொண்டாலும் சளிபிடிப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு....ஆனால் அதன் வீரியத்தை குறைக்கலாம்.சளி பிடித்தவுடனே சில கைவைத்திய முறைகளை கைய்யாண்டால் உடனே சரியாகும்.அதற்க்கான கை வைத்திய முறையை இங்கே தந்துள்ளேன்.

இன்று பல இளதாய்மார்கள் அருகில் பெரியவர்கள் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அவதிபடுகின்றார்கள். அவர்களுக்கே இந்த குறிப்பு.அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஜூ ஜூபியாகவே இருக்கும்.சரி…. இப்ப என்ன செய்யலாம் என்று பார்ப்போமா…?


துளசி இலை _ 10   
ஓமம் _ ½ ஸ்பூன்   
பூண்டு _ 1 பல்
மிளகு  _  4    

துளசி இலையை நன்கு நீரில் அலசி விட்டு மற்ற பொருட்களுடன் ஒன்றாக சேர்த்து இடித்து (15 மிலி தண்ணீரையும் சேர்த்து ) நைசாக ஆனதும் சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேனை அதனுடன் நன்கு கலந்துவிட்டு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் கத்துவார்கள்.இருப்பினும் தண்ணீரோ,பாலோ ஒரு அரைமணிநேரத்திற்க்கு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
சில குழந்தைகள் அழுவதிலேயே வாந்தி போல் சளியெல்லாம் கக்கி விடுவார்கள்.தோண்டையில் சிக்கியிருக்கும் சளியெல்லாம் வெளியே வந்து நல்ல ரிலீஃபாக இருக்கும்.அல்லது மோஷனில் சளி வெளியாகும்.

இது நான்கு மாத குழந்தைகளிலிருந்தே கொடுக்கலாம்.பயப்படவேண்டாம்……தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டுமே கொடுத்தால் போதும்.அதன் பிறகு நிச்சயம் சரியாகியிருக்கும்.

இது என் மூன்று குழந்தைகளுக்கும் நான் கொடுத்துவந்த மருந்து.நல்ல பலனளிக்கும்.இப்போது நான் ஊருக்கு போனாலும் என் கொலுந்தரின் பைய்யனுக்கும் நான் தான் இந்த மருந்தை கொடுப்பேன்.எனது இல்லத்தின் கை கண்ட மருந்து இதுதான்.
எனவே தான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
 
** பெரியவர்களுக்கும் இது உகந்ததே… வெறுமெனவே துளசி இலையை காலையில் மென்று சாப்பிடலாம்.**



அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out