Showing posts with label என் கதைகள். Show all posts
Showing posts with label என் கதைகள். Show all posts

Monday, April 24, 2017

திருமணம் எனும் நிக்காஹ்….





           சாதிக் வீட்டினுள் நுழையும் போது, குண்டூசி விழுந்தால் கூட அதிக சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது வீடு. ஹாலில் சோபாவில் தான் அத்தாவும்,அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அக்கா சாஜிதா சிறிது தள்ளி அமர்ந்துக் கொண்டு மடியில் தன் மகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்….. இத்தனை பேரும் இருந்தும் ஏன் இந்த அமைதி?என்று யோசித்துக் கொண்டே மாடியில் தன் ரூமுக்கு செல்ல முற்ப்பட்டான்.

           “சாதிக் உன்கிட்ட பேசணும் இங்க வந்து உக்காரு…”என்றார் சாதிக்கின் அத்தா வஹாப்.  அப்ப எனக்காக தான் காத்துக் கொண்டிருந்தார்களா?என்னவா இருக்கும்னு யோசித்தபடியே எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தான்.

     லேசாக தொண்டையை கணைத்து விட்டு, “ இங்க பாருப்பா சாதிக், நீயும் பயணுத்துலேர்ந்து வந்து ஒரு வாரம் ஆகப்போகுது.உன் அம்மாக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி உன்னிடம் சொல்ல சொன்னா இன்னும் தான் சொல்றா….. அதான் நானே உங்கிட்ட நேரிடையாகவே பேசிடலாமேன்னு வெளிய கூட போகாம காத்துக்கிட்டு இருக்கேன்.என் சினேகிதன் நவாஸ் தெரியுமுல்ல அவருக்கு இரண்டு பொண்ணுங்க… மூத்த பொண்ணு இப்பதான் காலேஜ் ல ஏதோ படிச்சுட்டு… ஏம்மா சாஜிதா…… என்ன படிச்சிருக்கு அந்த புள்ளன்னு அவங்க அம்மா சொன்னாங்க?

       பிஸிஏ பண்ணியிருக்காளாம் அத்தா…

      ஆ…. அந்த படிப்புதான் இந்த வருஷத்தோடு முடிக்குதாம். நீ ஊருக்கு வர்ற செய்தி சொன்னதும் நவாஸூம்,அவன் பொண்டாட்டியும் இங்கே வந்து உனக்கு தன் பொண்ணை கட்டிக் கொடுக்க விருப்பப்படுறதா சொல்லிட்டு பொண்ணு ஃபோட்டோவையும் கொடுத்துட்டு, நீ வந்ததும் பேசி ஒரு முடிவு சொல்லுங்கண்ணு சொல்லிட்டு போயிருக்கான்.எங்கங்கயோ பொண்ணு தேடி அலையிறதுக்கு நமக்கு தெரிஞ்ச வீட்டு பொண்ணா இருந்தா நல்லதுதானேன்னு நான் எனக்கு சம்மதம்தான்னு ஃபோன்ல அவன்ட்ட சொல்லிட்டேன்.உங்கம்மா கூட பொண்ணு ஃபோட்டோ பார்த்துட்டு பல்லை இழிச்சா…. ஏம்மா சாஜிதா நீயும் பார்த்தல்ல….

         ம்… பார்த்தேன் அத்தா…

      உன் தம்பிட்டையும் காட்டு மா…. சாதிக் நீ மறுக்க மாட்டேன்னு தெரியும்…. இருந்தாலும் அதை உன் வாயால சொல்லணும்னு உன் அம்மா சொல்றா… என்னப்பா சொல்ற?இன்ஷா அல்லாஹ் ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கிறா மாதிரி பேசிடலாமா?” என்று சொல்லி முடித்தார் வஹாப்.

    அத்தா அவனிடம் சொல்ல சொல்ல அக்காவையும்,அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சாதிக்.. அத்தா சொல்லி முடித்த உடனேயே… “இல்லை அத்தா இந்த இடம் சரி வராது அத்தா…. என் மனசுல இருக்குறதை ஏற்கனவே அம்மாட்டையும், அக்காக்கிட்டேயும்  சொல்லியிருக்கேன்.”என்று சொன்ன உடனேயே சடக்கென்று வேகமாக எழுந்து நின்று சத்தம் போட்டார் வஹாப்.

      “என்ன சாதிக் நீயும் எல்லார் மாதிரியும் காதல் கத்திரிக்காய்னு கதை அளக்க போறியா..?உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்?பொறுப்புள்ள புள்ள என் புள்ளன்னு ஊர்ல எல்லார்க்கிட்டேயும் சொல்லி பெருமைபட்டுகிட்டுல்ல இருந்தேன்.என் மூஞ்சில கறியை பூசுற மாதிரி இல்லைனு மறுத்து பேச ஆரம்பிச்சுட்டல்ல…..”என்று குரல் உயர்த்தினார்…

      “அத்தா தயவு செய்து நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்கங்க அத்தா…. நீங்க நினைக்கிறதுல எந்த மாற்றமும் வந்துடாது அத்தா…. என்னை நம்புங்க அத்தா….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,கடுகடுத்த முகத்தோட விட்டத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார் சாதிக்கின் அத்தா.

       சாதிக்கின் அம்மா ஜமீலா பயந்தவாறே…,கணவரின் அருகில் போய், ‘ஏங்க… நம்ம புள்ளைய தப்பா நினைக்காதீங்க….. அவன் மனசுல இருக்குறதை முழுசா கேட்டுட்டு அப்புறம் கோபப்படுறதா.. என்னன்னு பாருங்க….” என்று சொன்னதும்,திரும்பி அவர் ஒரு பார்வை பார்க்க பயந்தவளாய் பின்னே நகர்ந்தாள்….

      சாதிக்கின் அக்கா போடா போய் அத்தாவிடம் பேசு என சைகையில் காட்ட,சாதிக் எழுந்து அத்தா அருகில் நின்று பேச தொடங்கினான்.

       “அத்தா… வல்லாஹி நான் யாரையும் காதலிக்கலாம் இல்லை அத்தா…. ஆனால் ரொம்ப நாளா ஒரு விஷயம் என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு.உங்க அக்கா,அதான் என் மாமி  நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காவை தன் பைய்யனுக்கு கொடுக்குறீங்களான்னு கேட்டாங்க.ஆனால் நீங்களும்,அம்மாவும் மாமி வீட்டில் அவ்வளவு வசதியில்லை, பையனும் படிக்கலை நம்ம பொண்ணு அங்கே கஷ்ட்டபடுவாளேன்னு யோசித்து வெளியில பொண்ணை பார்த்துக்க.. சரிவராது அப்படின்னு மாமிக்கிட்ட சொல்லிட்டீங்க. அத்தா… நீங்க யோசித்ததிலும் தப்பில்லை.பொண்ணு வளரும் போதே நல்லவிதமா வசதியா வளர்ந்துட்டு,கட்டிக்கொடுக்குற இடத்துல நம்ம வீட்டில் இருக்கும் பாதி வசதிக்கூட இல்லாத நிலையில் பொண்ணை வாழ வைத்தால் நாளை நம்ம பொண்ணு கண்ணகசக்கிட்டு நிப்பாளோன்னு நீங்க பயப்படுறது பெற்றோர்களுக்கே உரிய ஒரு நியாயமான கவலைக்கொண்ட எண்ணம்தான்.ஏன்னா…. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அவள் வாழ்நாளில் தொண்ணூறு சதவீதம் அந்த வீட்டோடேயே ஐக்கியமாயிடுறா..அதனால அது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.…

      ஆனால் அதே வசதியில்லாத வீட்டில் உள்ள பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து தான் வாழ்வாளே தவிர… நான் அங்கே போய் வாழப்போறது இல்ல. இன்ஷா அல்லாஹ்…அந்த பொண்ணும் இங்கே நல்லபடியாக வாழ்வாள்…. மாமிக்கும் நிம்மதியா இருக்கும் தானே அத்தா…. அதான் நான் மாமி பொண்ணையே கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன் அத்தா….” என்று சொன்னான்.

        “சாதிக் நீ சொல்றதெல்லாம் சரிதான்.அந்த பொண்ணு சின்ன வயசா இருக்கும் போது கையில் முழுக்க சூடான எண்ணெய் கொட்டி அதன் சதை சுருக்கமும்,தழும்பும் இருப்பதால் கை பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும் பா…. இதனாலேயே நிறைய பேர் பொண்ணு பார்த்துட்டு போயிடுறதா உங்க அம்மா கூட சொல்லிகிட்டு இருந்தாளே….”என்று வஹாப் கவலையான குரலில் சொன்னார்.

       “ஆமா… அத்தா நானும் அம்மா,மத்தவங்க எல்லாம் சொல்லி கேட்டிருக்கேன்.நான் அந்த பொண்ணை ரொம்ப சின்ன வயசுல பார்த்ததுதான்.இப்ப எப்படி இருக்கும்னு  கூட தெரியாது…ஒரு தடவை என் காது படவே  மாமிக்கிட்ட நம்ம ஊர் பொண்ணுங்க வந்து நல்ல பொண்ணுக்கே இந்த காலத்துல மாப்பிள்ளை அமைய மாட்டேங்குதே…. உன் பொண்ணை எப்படி நீ கரை சேர்ப்பன்னு கேட்டாங்க… அப்ப மாமி எதுவுமே பேசாம அழுததை பார்த்தப்ப தான் முடிவுப்பண்ணேன் அத்தா…. சொந்தக்காரங்களான நாமளே கை கொடுக்கலன்னா இப்படி கண்டவங்க பேசதானே செய்வாங்கன்னு அந்த பொண்ணை மனப்பூர்வமா நான் கல்யாணம் செய்துக்கணும்னு மனசுல நிய்யத்து வச்சேன். இப்ப சொல்லுங்க அத்தா…. நான் நினைக்குறது தப்பா இருந்தா நீங்க சொல்றப்படியே நான் கல்யாணம் செய்துக்குறேன்.”என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்த்தவனாய் நின்றிருந்தான்….

         கண் கலங்கியவாறு மகனை பார்த்த வஹாப், “ அந்த காலத்திலேயே கல்யாணம் என வீட்டில் பேச்சு எடுத்தா வயசு பசங்களுக்கு மனசுல பல கனவுகள் வர ஆரம்பிச்சிடும்.நமக்கு வர போற பொண்ணு இப்படி இருந்தால் நல்லா இருக்கும்,அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைகள்.அதை வெளியிலே சொல்றோமோ இல்லயோ அது வேறு விஷயம்.
இந்த காலத்துல அதை வெளிப்படையா வீட்டில் சொல்லி இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டு வரணும்,இல்லை இப்படி ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என சொல்றதை தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்படியிருக்க இந்த ஒரு உயர்ந்த எண்ணம் கொண்ட விஷயத்தை சொல்வதற்கு நீ ஏன் பா தயங்கணும்….. இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய காரியத்தை செய்துடணும்னு நீ நினைக்கும் போது, உன் அத்தாவா என் வயசுக்கு இதற்கு நான் சம்மதிக்கலன்னா என்னை விட உள்ளத்தில் தாழ்ந்தவன் எவனுமில்லை பா….. இதற்கு எங்களது பரிபூரணம் சம்மதம்.என்ன ஜமீலா நான் சொல்றது சரிதானே?”என்று தன் மனைவியை பார்த்து சிரிக்க, “அப்பாடி… அல்ஹம்துலில்லாஹ்” என்பது போல் பெருமூச்சு விட்டு சிரித்தாள் ஜமீலா.

        “அல்ஹம்துலில்லாஹ்…. இவ்வளவு சீக்கிரம் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கல அத்தா…. ஆனால் அதே சமயம் முதலில்  இதுல மாமிக்கும்,அவுங்க பொண்ணுக்கும் இதில் மனதார சம்மதமான்னு தெரிஞ்சுக்கணும்.இரண்டாவது கல்யாண செலவுகள் முழுவதும் நாமளே பார்த்துக்களாம் அத்தா…. நான் கை நிறைய சம்பாதிக்கிறேன்.அல்லாஹ் பரக்கத் செய்திருக்கிறான்.அதனால துணிமணி நகைகள் இன்னும் என்ன வேணுமோ நாமளே செய்திடலாம் அத்தா…. அம்மா உங்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் சொல்லுங்கம்மா….என்று சாதிக் கேட்க,
       நீ இதை ஏற்கனவே என்னிடம் சொன்னதுதானே சாதிக்…. அதனால நான் என் மனசுல எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்கல பா…. நீ சந்தோஷமா என்ன நினைக்கிறியோ அதையே செய்திடலாம் சரியா”.என ஜமீலா கூறிவிட்டு,தன் கணவர் பக்கம் திரும்பி என்னங்க இப்பவே உங்க அக்காவுக்கு ஃபோனை போட்டு பேசுங்க… நல்ல விஷயத்தை ஏன் தள்ளி போடுவானேன்….” என்று கேட்க, “அதுவும் சரிதான்” என்றவாறு,தன் செல்ஃபோனில் எண்களை தட்டி தன் அக்காவிடம் விஷயத்தை சொன்னார்….

      “என்ன பா தம்பி சொல்ற?நம்ம சாதிக் சொல்றதை கேட்கும் போது எனக்கு பெருமையா இருக்கு பா…. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல…. சந்தோஷத்துல தொண்டைய அடைக்குது வேற வார்த்தையே வர மாட்டேங்குது… எனக்கு மணப்பூர்வ சம்மதம் தம்பி.”என்று பேசிவிட்டு முறைப்படி பேசி எழுதுவதற்கான தேதியை குறித்து விட்டு ஃபோனை வைத்தனர்.

      சாதிக்கின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்து போனது….. அன்றே அந்த வீட்டில் திருமண கலை கட்டியவாறு எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்… சாதிக் தன் அக்காவிடம் போய் அவள் காதோரம் மெதுவாக, “அக்கா… போய்ட்டு சும்மா அங்கே போய் மூக்குபிடிக்க சாப்பிட்டு வராம ஜெஸிமாவை ஃபோட்டோ எடுத்துட்டு வரணும்”.என்று சொல்ல  புன்சிரிப்போடு தன் தம்பியை செல்லமாக தட்டினாள் சாஜிதா….


Thursday, March 3, 2011

உறவை புரிய ஒரு யுகம் வேண்டும்



அது காலை நேரம் 9 மணி .
 கணவருக்கான உணவை தயார்நிலையில் வைப்பதில் மும்முரமான வேலையில் இருந்து கொண்டிருந்தாள் கமலா.வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது.கணவரோ,மகனோ கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தாள்.மறுபடியும் இருமுறை மீண்டும் அழைப்பு மணி ஓசை ஒலிக்கவே…. “இங்கே வாசலில் யார் வந்திருக்காங்கன்னு கொஞ்சம் அப்பாவும்,பிள்ளையும் பார்க்கக் கூடாதா…நான் அடுக்களையில் வேலையாகதானே இருக்கின்றேன்.யார் வீட்டிலேயோ சத்தம் வர்ற மாதிரிதான் இருப்பீங்க…”என புலம்பிக் கொண்டே வாசலை நோக்கி சென்றாள்.கைய்யில் அட்ரஸை தேடியவாறு இருக்கும்  நிறைய கடித கவர்களை ஏந்திக் கொண்டு தபால் காரர் காத்துக் கொண்டிருந்தார்.
கமலாவின் தலை தெரிந்ததும் “அம்மா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குமா…இந்த பேப்பரில் கைய்யெழுத்து போட்டு கொண்டு கவரை வாங்கி கொள்ளுங்கள்.” என்றான்.

 “யார் பேர்ல பா வந்திருக்கு”என்றாள் கமலா. “நிதிஷ்குமார் உங்க பையன் தானே….?அவர் பேர்ல தான்மா வந்திருக்கு.”என்றான்.
“டேய்….நிதிஷ் உனக்குதாண்டா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு கைய்யெழுத்து போடனுமாம். வந்து வாங்கிக்க என்ன…”என்று கூறி விட்டு அடுக்களைக்குள் மறுபடியும் அவள் ஐக்கியமானாள்.

கைய்யெழுத்து போட்டு விட்டு தபாலை கைய்யில் வாங்கி பார்த்த நிதிஷ் முக மலர்ச்சியுடன் அம்மாவை நோக்கி சென்றான்.உரத்த குரலில் “அம்மா….இது என்ன தெரியுமா..?என் தலையெழுத்தையே மாற்றக் கூடிய கருவிமா” …..என்றவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
“ புரியவில்லையா அம்மா…? போன வாரம் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்வியூ முடிச்சுட்டு வந்தேன் தெரியுமா?அங்கிருந்துதான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு. இன்னும் இரண்டு நாளில் வந்து வேலையில் சேரும்படி சொல்லி இருக்காங்கம்மா.என்னமோ அப்பா அன்னைக்கு சவால் எல்லாம் விட்டாரே.உன்னால ஒருவேளை சாப்பாடு போட முடியுமா…?உன்னை கட்டிக்கிட்டு வர்றவளுக்கு ஒரு முழம் பூ வாங்க முடியுமான்னு? ஆச்சு,பூச்சுன்னு சத்தம் போட்டாரே.இப்ப பார்த்தியாம்மா மாசம் பொறந்தா அய்யாவுக்கு முப்பதாயிரம் சம்பளம் கைய்யில் வந்திடும்.அவரு என்னைக்காவது இந்த லெவலுக்கு வந்திருக்காரா….?
உன் புருஷனிடம் கொடுத்த சவால்ல ஜெயிச்சுட்டேன்மா” என்று அவன் அப்பா இருக்கும் இடத்தை ஓரக்கண்ணில் பார்த்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்.இதை கேட்ட கமலாவிற்க்கு மகனுக்கு வேலை கிடைத்து விட்டதே என்று சந்தோஷப்படுவதா…..இல்லை அப்பாவும் ,பிள்ளையும் எலியும் பூனையுமாக இருக்கின்றார்களே என்று நினைத்து வருத்தப்படுவதா என்று புரியவில்லை.இருப்பினும்,மகனின் தலையை கோதியவாறு “ ரொம்ப சந்தோஷமாக இருக்கு நிதிஷ்.உனக்கு என்னடா குறைச்சல் நீ நல்லா வருவேடா”என்று சொன்னாள்.

காதில் வாங்கியும் வாங்காததுபோல் அலுவலகத்திற்க்கு தயார் நிலையில் வந்த ராஜாராமன் “கமலா நேரம் ஆச்சு அங்கே என்ன செய்துகிட்டு இருக்க? டிபன் ரெடியா?நான் சாப்பிட்டு சீக்கிரம் போகணும்”என்று குரல் கொடுத்தார். “இதோ வந்துட்டேங்க”…. என்று குரல் கொடுத்தவாறு டிபனையும் சாப்பிட மேசையில் வைத்து விட்டு மதியத்திற்க்கான சாப்பாடை பைய்யில் வைத்து கொடுத்தாள்.டிபனை முடித்துவிட்டு “நான் போய் வருகிறேன் கமலா”என்று சொல்லி விட்டு TVS 50 யில் வெளியேறினார்.

அவர் தலை மறந்ததும் “ஏண்டா நிதிஷ் அப்பாவிடம் வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல கூடாதா?எவ்வளவு சந்தோஷம் படுவாரு தெரியுமா…. .அவர் உன்னை பெத்தவர்டா  அவர்ட்ட ஈகோ பார்க்கலாமா…?என்று கமலா சொல்லவும்,,,, தாமதிக்காமல் “நீ சும்மா இருமா நான் வேகமாதானே உன்னிடம் சொல்லி கொண்டிருந்தேன்.அது காதுல விழாமலா இருந்திருக்கும்.ஒரு வார்த்தை இதை பத்தி என்னிடம் வேண்டாம்……உன்னிடாமாவது கேட்டு இருக்கலாம்தானே. அதுவும் அன்னைக்கு அப்பா என்ன சொன்னார்?நாலு பேரோட ஊர் சுத்திக்கிட்டு இருப்பதால் என்ன பயன்னு கேட்டாரே….அதுல ஒருத்தனால கிடச்சதுதான் இந்த சூப்பரான வேலை.அதெல்லாம் அவருக்கு எங்கே தெரிய போகின்றது.”என்றான்.

கமலா நிறைய மனதை விட்டு மகனிடம் பல விளக்கங்களும்,விஷயங்களும் சொல்ல வாய் வந்தாலும் அதை காது கொடுத்து கேட்க்கும் மனநிலையில் மகன் இல்லை என்பதை அறிவாள்.அதுவும் இன்றி, கணவரின் சொல்லிற்க்கு கட்டுப்பட்டவாரு அவற்றை அடக்கி கொண்டு, “சரி நிதிஷ் போனது போகட்டும்.இனி சென்னையில் போய் நல்ல விதமாய் வேலை பார்க்க போகிறாய். இரவு அவர் வந்ததும் கோபமா இல்லாம சாந்தமா அப்பாவிடம் இந்த வேலை மற்றும் விபரம் எல்லாம் சொல்லணும் என்ன சரியா?”என்று கமலா கேட்டு கொண்டாள். “ப்ச்ச்….சரிம்மா சொல்லுகிறேன் போதுமா….?பசிக்குது டிபன் எடுத்து   வை” என்று நண்பர்களிடம் விஷயத்தை சொல்ல செல்ஃபோனை தட்டியவாறு நாற்காலியில் உட்கார்ந்தான்.

அலுவலகம் போகும் வழியில் இருக்கும் சின்ன பூங்கா வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தன் சட்டை பைய்யில் இருக்கும் செல்ஃபோனை எடுத்து நம்பரை அழுத்தி காதில் வைத்து காத்து கொண்டிருந்தார்.மணி அடித்து ஃபோனும் எடுக்கப்பட்டது.
 “ஹலோ…நான் தான் ராஜாராமன் பேசுகிறேன்…செந்தில்நாதன்தானே பேசுறது..”  “.டேய் ராஜாராமா எப்படி இருக்கே டா…?உன் அழைப்புக்காகதான் காத்துக் கொண்டிருந்தேன்.என்ன உன் மகனுக்கு லட்டர் வந்ததா உனக்கு இப்ப சந்தோஷம்தானே…?” “ம்…ரொம்ப சந்தோஷம் செந்தில் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல…சந்தோஷத்துல பேச்சே வர மாட்டேங்குது.பொண்ணை நல்லபடியாக கட்டி கொடுத்தேன்.பையன் பொறுப்பே இல்லாம இருக்கானே அவன் எதிர்காலம் என்னாகுமோன்னு கவலைபடாத நாளேயில்லை….இப்ப நீ செய்து இருக்கின்ற உதவிக்கு…..”என்று சொல்லும் போதே கண் கலங்கி கொண்டு நின்றது.வார்த்தைகள் வர மறுத்தன. 

“என்ன ராஜாராமா இப்படி சொல்லுற உன்னை விடவா நான் செய்துட்டேன்.நாம படிக்கும் காலத்தில் நம் வகுப்பில் முதலாம் இடத்தில் இருக்கும் உனக்கு மேற்படிப்புக்காக கிடைத்த அரசாங்க வாய்ப்பினை எனக்காக என் குடும்ப சூழ்நிலை கருதி விட்டு கொடுத்தியே அதற்க்கு இது ஒன்றுமே இல்லையடா…..அன்று நீ செய்ததுதான் இந்த அளவிற்க்கு ஒரு கம்பெனியின் தலைமை அதிகாரியாக இருக்க முடிகின்றது.ஆனால் நீயோ இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்டாக கஷ்ட்டபட்டு கொண்டு இருக்கின்றாய்.அது எனக்கு இன்று வரை உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது.நல்ல வேளையாக என்றும் இல்லாமல் யாரிடமும் உனக்காக உதவி கேட்காத நீ உன் மகனுக்காக கேட்க்கும் போது அதை நான் எப்படி மறுப்பேன்.அதுவும் நல்ல படிப்பையும் உன் மகனுக்கு கொடுத்திருக்கின்றாய்.அதுவும் நீ சொன்ன படி  உன் பையனின் நண்பனின் மூலமாக வேலை கிடைக்கணும்னு கேட்டு கொண்டதால்,நீ கொடுத்த மெயில் முகவரியிலேயே வேலை தேடுதலுக்கான இணையத்தளத்தின் வாயிலாக அவனுக்கு இண்டர்வியூ கார்டை அனுப்பினேன். அதற்க்கேற்றார் போல் தான் வேலையும் கொடுத்துள்ளேன்.அதற்க்கான திறமையும்,வேகமும் உன் பையனிடம் நிறையவே இருக்கின்றது.உனக்கு என்னால இப்படி ஏதும் செய்யும் வாய்ப்பு கிடத்ததேன்னு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்.இனி கவலை படாமல் இரு ராஜாராமா….என்ன நீ செய்த தியாகத்தை பற்றி உன் மகனிடம் பெருமையாக சொல்ல முடியவில்லை.
 இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லிட்ட. இனி உன் மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை படாதே..…?நேரம் கிடைக்கும் போது சென்னைக்கு வந்து வி்ட்டு போ என்ன….”என்று செந்தில் சொல்ல மறுபடியும் தன் நன்றியை ஒருமுறை தெரிவித்து  விட்டு தொலை தொடர்பை துண்டித்துவிட்டு, “வீட்டிற்க்கு செல்லும்  போது ஏதும் இனிப்பு வாங்கி செல்ல வேண்டும்.கமலாவிற்க்கு இப்போதாவது நாம் நடந்து கொண்டதற்க்கு அர்த்தம் புரிந்திருக்கும்.அது போதும் என்று நினைத்துக் கொண்டே….அலுவலகம் நோக்கி ராஜாராமன் சென்றார் சந்தோஷத்தோடு.

Tuesday, February 1, 2011

***தவமின்றி வரம்***


 பளப்பளப்பான மின் விளக்கின் வெளிச்சங்கள்.பரபரப்பாக அங்கும்,இங்குமாக நடக்கும் மனிதர்கள்.இவைகளை கண்டாலே கோப,கோபமாக அவளுக்கு வந்தது.அவற்றை எல்லாம் முறைத்து பார்த்த வண்ணம் மண்டபத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்தால் அனு. 
 “இங்க பாருமா அனு ரொம்ப நேரம் கண் விழிச்சிட்டு இருக்க கூடாது. நீ போமா போய் படுத்து தூங்கு.” அப்பாவின் அன்பு கட்டளை வரவே ரூமை நோக்கி  போனாள்.”அட பாவமே….நீ இன்னுமாடீ தூங்காம இருக்க.ஏம்மா லதா இங்க வா எங்கே உன் தோழியை விட்டுட்டு போய்ட்ட.பாரு நாளைக்கு மணப்பெண்ணா உட்கார வேண்டிய பொண்ணு தூங்காம உலாத்திட்டு இருக்கா.தூங்கினாதானே மணமேடையில் முகம் பளிச்சின்னு இருக்கும்.நீ கொஞ்சம் அவளை அழைச்சிட்டு போமா…என்ன….” என்று சொன்ன அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டே லதாவுடன் அனு ரூமுக்கு சென்றாள்.

லதாவும் குரலை உயர்த்தியவளாய்,”ஏண்டி இப்படி இருக்க இன்னும் நீ  உன்னை மாத்திக்க முயற்சி பண்ணவில்லையா….?அம்மா,அப்பாவுக்கு கல்யாண வேலை ஒரு டென்ஷன்னா நீ மூஞ்சை தூக்கி வச்சிகிட்டு நடந்துக்குறது அதை விட அவங்களுக்கு டென்ஷன் தான் டீ அனு.ப்ளீஸ்….புரிஞ்சுக்கோ டீ….”என்று சொன்னவளை “நானும் இதையே தான் சொல்றேன்.இந்த கல்யாணம் என்றாலே எல்லோருக்கும் டென்ஷன் தான்னு.யாரு புரிஞ்சுக்கிறீங்க”என்று சொல்லி அனு மடக்க பார்த்தாள்.

உன்னிடம் சொல்லி சொல்லி எனக்கு அலுத்து போச்சு அனு.மாப்பிள்ளையோட ஃபோட்டோவும் பார்க்க மாட்டேன்னுட்ட,ஃபோன் பேச அவர் கூப்பிட்டா அதையும் மறுத்துட்ட.இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை ஊர்வலம் முடிஞ்சு வருகின்றபோதும் கூப்பிட்டேன்.அப்போதும் வேண்டாம் என்னை விட்டுடுன்னு சொல்லிட்ட.மாப்பிள்ளையை பார்க்க ரொம்ப நல்ல விதமாய் தெரியுது அனு. அவர்ட்ட பேசி கூட பார்த்துட்டேன்.பேச்சும் மற்றவர்களை கவர்வது போல் தெரியுது”என்று சொன்னவளை அனு ஒரு பார்வை பார்த்து விட்டு “சரி நான் படுக்க போறேன் தலை வலிக்குது.நீ படுக்கிறியா என்ன?”என்றாள். “இல்லடீ…நீ நல்லா படுத்து ரெஸ்ட்டு எடு நான் அம்மாட்ட கொஞ்சம் ஃபோன் பேசிட்டு நாளைக்கு மண்டபத்திற்க்கு வருவதற்க்கான வழியையும் அவங்களுக்கு சொல்லிட்டு வரேன்.”என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டவளாய் லதா வெளியேறினாள்.

கதவை தாளிட்டு விட்டு படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.மனது நிறைய யோசனைகளும்,,படப்படப்பும் தான் அலைந்துக் கொண்டிருந்தது.அப்பா அம்மாவிற்க்கு நான்கு பெண் பிள்ளைகள்.அனு கடைக்குட்டி பெண்.எல்லோருக்கும் செல்லம் தான்.அம்மா,அப்பாதான்உலகம் என்றே இருப்பவள்.இதோ இந்த லதா தான் இவளின் சிறுவயது முதற்கொண்டு இருக்கும் உயிர் தோழி.இவர்களை தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள்.பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி போக பயந்தவளாய் அப்பாவிடம் தபால் மூலம் பி.ஏ.படிப்பதாக தெரிவித்தாள்.ஒரு வருடம் கழிந்தபின் தான் உறவுக்காரர் மூலம் சுனாமியாக இந்த கல்யாண வரன் அவள் வாழ்வில் வரவே அன்று கலங்கியவள் தான் அனு.

அவளை சொல்லி ஒன்றுமில்லை.அவளின் அக்காக்கள் மூவரின் கல்யாணமும்,அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையும் பார்த்து கொண்டிருப்பவள்.ஒவ்வோருவரின் திருமணத்திலும் அப்பா படாத கஷ்ட்டமில்லை.அம்மா அழுகாத நாளில்லை.முதல் அக்கா படும் கஷ்ட்டங்கள் கேள்விப்பட்டதுதான்.மற்ற இருவரின் நிலையும் இன்றும் அழுகையும்,போராட்டமாகவும் தான் ஓடி கொண்டிருக்கிறது.அதையெல்லாம் பார்த்து முடிவு பண்ணவள்தான்,என்னால் எனது அப்பாவும் ,அம்மாவும் கல்யாணம் என்ற பேரால் கஷ்ட்டபட கூடாது என்று.ஆனாலும் அப்பா ”பெங்களூரில் வேலை செய்யும் மாப்பிள்ளை,அருமையான சம்பந்தி உங்க பொண்ணுக்கு எது செய்வீர்களோ தெரியாது ஆனால் என் பிள்ளை வரதட்சனையோ,சீரோ ஏதும் கேட்காதேம்மா என்று சொல்லி விட்டான் எனவே நான் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை என்று  முகமலர்ச்சியோடு கூறுகின்றார்.  கொடுத்து வைத்தவள் மா நீ” என்று நிச்சயம் செய்து விட்டு வந்து விட்டார்.அன்று ஆரம்பித்தவள் தான்.ஒழுங்காக சாப்பிடுவதில்லை,தூங்குவதும் இல்லை,சந்தோஷமும் இல்லை.

ஏனோ பேச்சு சத்தம் கேட்டவளாய் நினைவுகள் கலைந்து எழுந்து உட்கார்ந்தாள்.பெரிய அக்காவும் லதாவும் வந்திருந்தார்கள்.கதவை திறந்து விட்டாள். “லதா கொஞ்சம் அனுவை ரெடி பண்ணி விட்டு நீயும் ரெடியாகி விடுமா…நேரம் ஆகிட்டா அப்பா வேற கத்துவார்.நான் இங்கு அடிக்கடி வந்து பார்த்துக்க முடியாது.அப்புறம் என் வீட்டுக்காரரும்,மாமியாரும் என்னை கவனிக்க ஆளேயில்லை ஒருத்தருக்கும் மரியாதையே இல்லை. என்று ஆரம்பித்து விடுவார்கள்.”என்று புலம்பி கொண்டே போய் விட்டால்.


இதோ மணமேடை எல்லா சடங்கு சம்பிரதாயங்களுடன் மாப்பிள்ளை தாலியும் கட்டி விட்டார்.அனுவின் காதில் லதா கிசுகிசுத்தாள்.”இப்பொழுதாவது மாப்பிள்ளையை பாரேன் டீ அனு.”அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்து கொண்டிருந்தாள்.விருந்து உபசரிப்பும்,உற்றார்,உறவினர்,நண்பர்களின் வாழ்த்தும் நல்லபடியாக முடியவே,அனுவின் மாமியார் பெண்ணை அனுப்பிவையுங்க சம்பந்தி என்று சொன்னார்.அனுவிற்க்கோ படபடப்பாக இருந்தது.உடனே அனுவின் அப்பா கைய்யில் வைத்திருந்த பைய்யிலிருந்து பணகட்டை எடுத்து தட்டில் பூ,பழத்துடன் மாப்பிள்ளை,சம்பந்தி அருகில் வந்து நின்று ”என் மூன்று பெண்களுக்கும் நான் அப்போது உள்ள சூழ்நிலையில் ஐம்பதாயிரம் ரொக்க பணமும்,ஐம்பதாயிரத்துக்கு சீரும் செய்தேன்.நீங்கள் கேட்கவில்லையென்றாலும் என் கடைசி பெண்ணுக்கும் அதை சேர்த்து மொத்த பணமாய் இந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து கொடுக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்”என்று நீட்டினார்.இதை கேட்ட அனுவிற்க்கு அப்போது வந்த எரிச்சலுக்கு அளவே இல்லாமல் இருந்தது.பல்லை கடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்க்கும் லதாவை பார்த்து கொண்டிருந்தாள்.

தட்டையை வாங்காமல் மாமனாரின் கைய்யை பிடித்த மாப்பிள்ளை ரமேஷ் “மாமா இதையெல்லாம் கொடுத்தால் தான் உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று நினைக்கிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை அழிச்சிடுங்க.எனக்கு இதையெல்லாம் விட பெரிய சொத்தாக உங்கள் பெண்ணை தந்திருக்கின்றீர்கள் அது போதும் மாமா.ஒரு பொக்கிஷமாக என்னருகில் வைத்து நல்லபடியாக பார்த்து கொள்கிறேன்.இனி அவளுக்கு எல்லாம் நான்தான்.என்னை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்.சரியா….கிளம்பட்டுமா மாமா…அத்தை” என்று சொன்னவரை அப்போதுதான் அனு நிமிர்ந்து பார்த்தாள்.அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.அப்பா,அம்மாவின் முகத்தில் முதன் முதலில் ஆனந்த கண்ணீர் வருவதை பார்த்தாள்.நிச்சயமாக நான் கொடுத்து வைத்தவள்தான்.என்னால் எனது பெற்றோர் வருத்தமோ,கஷ்ட்டமோ படவில்லை.இவர் எனக்கு தவமின்றி கிடைத்த வரம் தான் என்று எண்ணிகொண்டே,எல்லோரிடமும் சொல்லி விடை பெற்று கொண்டு, ஆனந்த கண்ணீர் மல்க கணவரின் கையை இருக பற்றிக் கொண்டு காரில் ஏறினாள்.


அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out