Showing posts with label வீட்டு குறிப்புகள். Show all posts
Showing posts with label வீட்டு குறிப்புகள். Show all posts

Saturday, October 22, 2011

பொன்னாங்கன்னி கீரை சார்

என்னதான் காலங்கள் மாறி,உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும்,நம்ம பாரம்பர்ய கை மணத்திற்க்கான சுவையே தனிதான்.சுவை மட்டும் அல்லாது உடம்பிற்க்கும் நல்லதொரு பலனை தரக்கூடியதாக இருக்கும்.
அதுவும் எங்கள் ஊர் கிராம பகுதிகளில் நிறைய சின்ன சின்ன சமையல்களெல்லாம் கை வைத்தியம் நிறைந்ததாக இருக்கும்.அவற்றில் ஒன்றை தான் இந்த குறிப்பாக வெளியிடுகிறேன்.




தேவையான பொருட்கள்


பொன்னாங்கன்னி கீரை --------------- நான்கு கைய்யளவு
முருங்கை கீரை இலை --------------    இரண்டு கப்
கெட்டி தேங்காய் பால் --------------- ஒரு டம்ளர்
அரிசி கழநீர்   ---------------------------- இரண்டு டம்ளர்
சின்ன வெங்காயம் -------------------- அரை கப்
பச்சைமிளகாய் ------------------------- இரண்டு
சீரகம் -------------------------------------- அரை ஸ்பூன்
உப்பு   -------------------------------------- தேவைக்கேற்ப  


செய்முறை


பொன்னாங்கன்னி கீரையை நல்ல இலைகளாக பார்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்.


அரிசி கழநீர் என்பது சாப்பாடு சமைக்கும் அரிசியை நல்ல தண்ணீர் ஊற்றி கலைந்து அந்த தண்ணீரை இருத்து தனியே வைத்துக் கொள்வதற்க்கு பெயர் தான்.இந்த தண்ணீரில் தூசு ஏதும் இருப்பின் வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.திக்காக இருக்கும்.இது ஒரு தனி மணம் கொடுக்கும்.


பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.


இப்போது அந்த தண்ணீரை (நாம் சொன்ன அளவு) ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் சீரகம்,பச்சைமிளகாய்,வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து விடவும்.
இரண்டு கொதி தள தளவென கொதித்ததும்,அதில் அலசி வைத்திருக்கும் பொன்னாங்கன்னி கீரையை போட்டு வேக விடவும்.


நன்கு கொதித்து பாதியளவு வெந்து கொண்டிருக்கும்போதே முருங்கை இலையையும் சேர்த்து கொதிக்க விடவும்.


இரண்டும் வெந்ததும்(கைய்யால் மசித்து பார்த்தால் தெரிந்து விடும்) அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் விட்டு கலக்கி மூடி வைத்து விடவும்.
மிகவும் சுவையான சத்தான கீரை சார் ரெடி.


இது அல்சர் போன்ற வயிற்று புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது.நல்ல பலன் கிடைக்கும். சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
தேங்காய் பால் வேண்டாம் என நினைப்பவர்கள் வெறுமெனவே சாராக சாப்பிடலாம்.ஆனால் தேங்காய்பாலும் வயிற்று,வாய் புண் உள்ளவர்களுக்கு நல்லதே....பொன்னாங்கன்னியும்,சரி முருங்கை கீரையும் சரி உடம்பிற்க்கு மிகவும் சத்தானது.மருத்துவ குணம் கொண்டது.
ஒரு வயது குழந்தைகள் முதற்க் கொண்டு வயதானவர்கள் வரை சாதத்தில் ஊற்றி சாப்பிட உகந்தது.
வெறும் முருங்கை இலை, மணத்தக்காளி இலையிலும் இதே போன்று செய்யலாம்.


***நீங்களும் முயன்று செய்து பார்த்துட்டு சொல்லுங்களேன்.இதற்க்கு தொட்டுக் கொள்ள சுருக்கென்று ஒரு மருத்துவமிக்க துவையல் இருந்தால் எப்படி இருக்கும்.....?நல்லாயிருக்குமுல்ல.... இதோ அடுத்து அந்த குறிப்போடு வருகிறேன்.



Wednesday, July 27, 2011

புடலங்காயில் இத்தனை சிறப்பா...???



ம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர்.  இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தனர்.  ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம்.  தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை.  நேரமும் இல்லை.
இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய  சூழ்நிலையில் உள்ளோம்.  இதனால் நோயின் பிடியில்  சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம்.   காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை.  இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.  

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.


இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.


புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல.  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும்.  அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.  

இப்போது புடலங்காயின் பயன்கள் என்னவென்று பார்க்கலாமா...?


* உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.  

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். 

* விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்.  உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* 
இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.



எனவே புடலங்காய் கூட்டு,பொறியல் இவைகளை பார்த்து பத்தடி தள்ளி செல்லாமல் நமது உணவுகளில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளலாமே...




*** முக்கிய அறிவிப்பு ***)))  இந்த தகவல்கள் அனைத்துமே நண்பர் மூலம் மெயிலில் எனக்கு வந்ததாக்கும்.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.(ஒரு சிலருக்காவது பயன்பெரும்படி இருக்குமேன்னு ஒரு நப்பாசைதான்.)






Saturday, March 26, 2011

விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் (2-ம்பகுதி)

இதற்க்கு முன் திடீர் விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகளில் பாதியை கொடுத்திருந்தேன்.இனி அவற்றை பதட்டம் எல்லாம் இல்லாமல் நம்மை எப்படி தயார் படுத்திக் கொள்ளலாம் என்று எனக்கு தெரிந்தவற்றை என் அனுபவங்களை கொண்டு எழுதியிருக்கின்றேன்.
 முதல் நாளோ.. அல்லது அதற்க்கு முன்னதாகவோ நம் வீட்டிற்க்கு விருந்தினர் வருவதாக அறிவித்திருந்தால் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்ப்போமா...


1. முதலில் அவர்கள் வரும் நேரம் லன்ச்சோ அல்லது டின்னரோ என்னவெல்லாம் சமைக்கலாம் என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள்.லன்ச் என்றால் நான் வெஜ் விரும்பிகள் என்றால் ஒன்று நெய் சாதம்,கோழி அல்லது கறி குழம்பு,சிக்கன் ஃப்ரை,இனிப்பு வகை,ரைத்தா இவை செய்தாலே போதுமானது.பிரியாணி என்று செய்தால் அதற்க்கு ரைத்தா,சிக்கன் ஃப்ரை அல்லது மட்டன் ஃப்ரை,முட்டை அவித்தது,ஒரு பாயாசமோ இல்லை வேறு ஏதேனும் இனிப்போ என சமைப்பதற்க்கு முடிவு செய்யலாம்.
அதே சைவம் சமைப்பதாக இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம்...?
வெஜ் பிரியாணி,அல்லது வெஜ் புலாவ் வகைகளில் ஒன்று,அதற்க்கு சைட் டிஷ்ஷாக கோபி அல்லது வெஜிடபுள்  மஞ்சூரியன் செய்யலாம்.அதுமட்டுமில்லை அதுகூட கொஞ்சம் ப்ளைன் சாதம்,காரக்குழம்பு,ரசம்,மோர்குழம்பு,ஏதேனும் கூட்டு,பொறியல்,வறுவல்,அப்பளம்,இனிப்பு வகை.இதையெல்லாம் பரிமாற வாழை இலை இருந்தால் அடாடா..... கேட்கவே வேண்டாம் விருந்து அசத்தலான விருந்தாக இருக்கும்.நமக்கும் கொஞ்சம் ப்ளேட் கழுவும் வேலை குறையும் இல்லையா...? 



2.சரி என்னவெல்லாம் செய்ய போறோமுன்னு மெனு எழுதியாச்சு.அடுத்து இன்னொரு பேப்பரில் இதற்க்கு தேவையான பொருட்களில் எதெல்லாம் இல்லையோ என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவற்றை எழுதி வைக்கவும்.எக்ஸ்ட்ராவாக பழங்கள்,பால்,பிஸ்கட்ஸ் இவையெல்லாம் சேர்த்து எழுதி வைத்துக் கொண்டு அதை முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


3.சரி...,இப்ப சாமான்களும் வாங்கியாச்சு... வேறு எந்த வகையில் முன்னேற்பாடாக இருக்கலாம்?முதலில் அசைவ விருந்திற்க்கு பார்ப்போம்...
மட்டன் பிரியாணிக்கோ,சிக்கன் பிரியாணிக்கோ... வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்றால்  முதல் நாள் மாலையிலேயே வாங்கி விடலாம் அல்லவா... எனவே அவற்றை வாங்கி வந்த உடனேயே சிறிது அலுப்பு பார்க்காமல் சுத்தம் செய்து நன்கு கழுவி விட்டு பிரியாணி, குழம்பு என்றால் அதற்க்கேற்றார் போல் உப்பு,தயிர்,சிறிது இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு பிரட்டி ஃப்ரீஜரில் வைத்து விடலாம்.இதை மேரினட் என்பார்கள்.சிக்கன் ஃப்ரைக்கும் இதே போல் அதற்க்கான அனைத்து மசாலாக்களையும் போட்டு நன்கு பிரட்டி வைத்து விடலாம்.மறுநாள் பொறித்தெடுப்பது மட்டும் தான் செய்ய வேண்டும்.இப்படி செய்வதனால் வேலையும் சுலபமாகும்.சிக்கன்,மட்டனில் நன்கு உப்பு ஏறி டேஸ்ட் கொடுக்கும்.மட்டனும் சீக்கிரம் வெந்து விடும்.எனவே இப்படி செய்வது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.மறுநாள் விடியற்காலையில் (ஐந்து மணியளவில்) வெளியில் எடுத்து அப்படியே வைத்து விட்டோமேயானால் நாம் சமைக்கும் நேரத்திற்க்கேற்றார் போல் சில் விட்டு ரெடியாக இருக்கும்.பழசாகிவிடுமோ என்று யாரும் எண்ணி பயப்படவேண்டாம்.

4.சைவம் சமைப்பவர்களுக்கு சொல்லலையேன்னு முறைக்ககூடாது.இதோ அதை சொல்லதான் வருகிறேன்.வெங்காயம்,தக்காளி இவைகளை தவிர்த்து மற்றவைகளை பொறியலுக்கு ஏற்றபடியும்,கூட்டுக்கு ஏற்றபடியும் நறுக்கி ஒரு மூடி போட்ட டப்பாவிலோ... ஜிப் பேக்கிலோ போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.கீரையையும் பழுத்தது,காய்ந்தது என எல்லாம்  நீக்கி காம்பு,வேர் எல்லாம் கிள்ளி ஒரு  பேப்பரில் சுற்றி வைத்து கொண்டோமேயானால் காலையில் எடுத்து நறுக்கி கழுவி சமைக்க ஏதுவாக இருக்கும்.
இனிப்புக்கு செய்பவற்றில் குலோப்ஜாமூனாகவோ.., பாதாம் கீராகவோ இருந்தால் அதையும் முதல் நாள் மாலையே செய்து வைத்து விடலாம்.கீரை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.குலோப்ஜாமுனை வைக்க தேவையில்லை. வடை ஏதும் செய்வதாக இருந்தால் அவற்றிற்க்கு தேவையான மாவையும் முதல் நாளே அரைத்து ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
என்னடா எல்லாவற்றையும் இப்படி சொல்கிறாளே என்கிறீர்களா...? இதெல்லாம் உங்கள் பதற்றத்தையும்,அதனால் ஏற்படும் சில சிறு சிறு  சொதப்பல்களையும் தவிர்ப்பதற்க்காகதான்.ஓரளவு எல்லா வேலையும் சும்மா கை வந்த கலையாகவும்,நல்ல அனுபவமும் வந்து விட்டால் அப்புறம் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.அப்படி செய்யவும் மாட்டீர்கள்.
சரி எப்ப எங்கே விட்டேன்.??? ஆ.......இவையெல்லாம் முதல் நாள் தயார் படுத்தி கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா?இப்ப அடுத்ததாக விருந்து அன்று செய்ய வேண்டியது....

5.காலையில் எழுந்ததும் அல்லது முதல் நாள் இரவிலேயே கூட எதை எதை செய்ய போகிறோம் என்பதை எழுதி கொள்வது போல் முதலில் செய்ய வேண்டிய சமையல்,இரண்டாவதாக செய்ய வேண்டிய சமையல்,மூன்றாவதாக செய்ய வேண்டியது என குறித்து வைத்துக் கொள்ளலாம்.அதன் பின் சமைக்க ஆரம்பிக்கும் போது கிடு கிடுன்னு வேலை நடந்து விடும்.கீழிருந்து மேல் என்பது போல் இனிப்பு என முதலில் செய்ய ஆரம்பித்து கூட்டு,பொறியல் சைட் அயிட்டம் என செய்து குழம்பு என கடைசியாக சுட சுட சாதம்,அப்பளம் வடை என செய்முறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
பிரியாணி,புலாவ் எல்லாவற்றிற்க்குமே அப்படித்தான்.



6.மைக்ரோவேவ் இருந்தால் விருந்தன்று காலையிலேயே கொஞ்சம் சீக்கிரமே சமையலை முடித்து வைத்தால் கூட சாப்பிடுவதற்க்கு முன் சூடு படுத்துவதற்க்கு ஏதுவான  பாத்திரத்தில் சமைத்தவைகளை எடுத்து வைத்து மூடி வைக்கலாம்.அப்படியே சூடு செய்து அப்படியே பரிமாற வைத்து விடலாம் அல்லவா..?வெறும் பிரியாணியே நிறைய செய்து இருப்பின் அவை அதே தம் போட்ட பாத்திரத்திலேயே இருப்பது நல்லது.சுவையும்,மணமும் மாறாமல் இருக்கும்.

7. சரி இப்ப சமைத்தும் முடித்தாகி விட்டது.இனி சின்க்கில் எந்த ஒரு சிறு பாத்திரமும் இல்லாதவாறு க்ளீன் செய்து,அடுப்பையும் சமைத்த தடம் இல்லாமல் சுத்தம் செய்து கிச்சனை பளீர் என்று சுத்த படுத்தி வைத்தோமேயானால் லேடீஸ் யாரும் வருவதாக இருப்பின் அவர்கள் கிச்சனில் நுழையும் போது முகம் சுழிக்காத வண்ணம் இருக்கும்.வீட்டின்  மற்ற இடங்களையும் கொஞ்சம் க்ளீன் செய்து வைத்து கொள்ளலாம்.இவையெல்லாம் சீக்கிரம் சமையலை முடித்தால் பிறகு ரிலாக்ஸாக செய்து விடலாம்.அதுவும் நான் முன்பு சொன்னது போன்று அவ்வபோது வீட்டை நாம்  சுத்தப்படுத்தி கொண்டோமேயானால் மிகவும் கஷ்ட்டபடத் தேவையில்லை.இல்லையென்றால் காலையிலேயே தூங்கும் கணவரையும் எழுப்பி உட்கார வைத்து விட்டு மாங்கு மாங்கு என துடைக்க வேண்டி வரும்.இவற்றையெல்லாம் தவிர்க்கலாம் அல்லவா...? 

8.இவையெல்லாமே.... முன் தகவலாக சொல்லி வரும் விருந்திற்க்கு தயார்படுத்தும் குறிப்புகள்.திடீரென வருகிறேன் என அன்றைக்கு காலையில் சொல்லும் போதோ..,இல்லை வந்தும் விடுகிறார்கள் அப்போது என்ன செய்வது?அவற்றிற்க்கும் நம்மை தயார் படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.விடுமுறை நாட்களில் யாரும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். அதற்க்குதான் ஒரு சில முக்கிய சாமன்களை நாம் எப்போதும் வீட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.ஒரு சாதம்,குழம்பு,ஒரு கூட்டோ அல்லது பொறியலோ செய்து வைக்கும் அளவிற்க்கு நம்மிடம் சாமான்கள் இருந்து கொண்டிருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.பலவகை செய்து வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.ஒன்றிரண்டு என திடீரென்று செய்தாலும் பக்குவமாக செய்தோமேயானால் அப்போது உங்களுக்கு கிடைக்கும் பேர் தான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.மனதிற்க்கு திருப்தியாகவும் இருக்கும்.எனவே பதட்டம் இருந்தாலும் அவை வெளியில் தெரியாதவாறு நடந்து கொள்வது அவசியமாகும்.

இப்போது இதற்க்கு முன் மற்றும் மேற்சொன்ன அனைத்துமே என் வாழ்வில் நான் செய்த செய்து கொண்டிருப்பதும்,ஒரு சில விஷயங்களை பலரிடம் பார்த்து கற்று கொண்ட அனுபவங்களும் ஆகும்.இது ஒரு சிலருக்கு உபயோகப்படும் என்றே பகிர்ந்து கொள்கிறேன்.... ம்ம்ம்.... ஓரளவாவது பயன்பெறும்னு நினைக்கிறேன்.(இப்படியெல்லாம் கஷ்ட்டபட்டு ப்ளான் போட்டு செய்யும் வேலைக்கு பலன் இல்லாமல் போகுமா என்னா..?நிச்சயம் ஆஹா...ஒஹோ..ன்னு பாராட்டு உங்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தும்...)

போய் வர்றேனுங்க.....






Saturday, March 19, 2011

விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் சில


இந்த குறிப்புகள் திருமணம் முடிந்து இல்லத்தரசி பதவியை ஏற்று கணவருடன் தனியே வாழும் சில இளம்பெண்களுக்கு உரியதாகும்.
திருமணம் முடிந்து இன்றைய சூழலில் வேலையின் காரணமாக வெளி ஊர்களுக்கோ...,வெளிநாடுகளுக்கோ..., மனைவிகளை அழைத்து செல்லும் படி இருந்து வருகின்றது.
சில பெண்கள் ஓரளவு சிறு சிறு சமையல்,மற்றும் கை வேலைகளை கற்று தெரிந்தவர்களாக இருப்பர்.சில பெண்கள் படிப்பை தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்ற நிலையில் இருக்கும் பெண்களையும் பார்த்திருக்கின்றேன்.
அவர்களெல்லாம் தனிமையில் எப்படி சமையல் செய்வது? என்பதே தட்டு தடுமாறி வருவார்கள்.அவர்கள் வீட்டிற்க்கு கணவர் நண்பரை அழைத்து வர நினைத்து இருந்தாலோ... ஆசைப்பட்டாலோ... அவ்வளவுதான் அம்மணிக்கு இங்கு படபடக்க ஆரம்பித்துவிடும்.
இப்படியான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பெண்களை நான் நிறைய பார்த்ததுண்டு.அவர்களுக்கான இந்த சின்ன சின்ன குறிப்புகள்.

1.முதலில் நம் தினசரி வேலைகள் என்னவென்று தீர்மானித்து அதற்க்கேற்ற நேரத்தை கணக்கிட்டு வைத்து கொள்ள வேண்டும்.இந்த நேரத்தில் சமையலை முடிக்கணும்.இந்த நேரத்தில் சுத்தப்படுத்தும்  வேலையை முடிப்பது போன்ற வேலைகளை குறித்து அதையே தினமும் கடைப்பிடித்தால் ஓய்வு நேரங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
அதே போல் கணவர் வேலையை விட்டு வரும்போது எந்த வேலைகளிலும் ஈடுபடுத்தி கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.முடிந்தவரை சமையலாகட்டும்,சுத்தபடுத்தும் வேலையாகட்டும் முடித்து விட்டு கணவர் வந்ததும் அவருக்கு தேவையானதை செய்வது அவரோடு உட்கார்ந்து பேசுவது என்றே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
அதுவும் குழந்தை என வந்து விட்டால் உடனே அதற்க்கேற்றார் போல் நமது நேரத்தை மாற்றிக் கொள்வது நல்லது.முடிந்தவரை விடியற்காலையிலேயே எழுந்து சமையல் சுத்தபடுத்தும் வேலை ஆகியவற்றை குழந்தை கண்விழிப்பதுக்குள் முடித்துவிட்டால் போதும்.பிறகு நமக்கும் நன்கு குழந்தையை நல்லபடியாக கவனிக்க முடியும்.அவர்களுடன் அழகிய முறையில் நேரத்தை கழிக்க முடியும்.நமக்கும் ஓய்வு அவ்வபோது கிடைக்கும்.

2.அடுத்து, என்றைக்கு வார விடுமுறை  வருகிறதோ..,அதற்க்கு முதல் நாளிலேயே பாத்ரூமை பளீச் என்று சுத்தபடுத்தியும்,வீட்டை சுத்தபடுத்தி மோப் போட்டு வைப்பது போன்ற வேலைகளை முடித்து வைத்தால் இரண்டு நாளோ,ஒரு நாளோ கணவருடன் வெளியில் செல்வது,இல்லை விருந்தினர் வந்தால் சமாளிப்பது போன்றவைகளை சமாளிக்க முடியும்.வெறுமென வீட்டை (குப்பை இருந்தால் )பெருக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

வாரம் ஐந்து நாட்களிலுமே வீட்டை பெருக்கும் போதெல்லாம் ஒரு ஈர ஸ்பாஞ்சினால் சாப்பாடு மேஜை,செண்ட்டர் டேபிள்,கம்ப்யூட்டர் டேபிள் இவற்றையெல்லாம் தூசு தட்டி துடைத்து வைப்பது.கிச்சனில் அடுப்பை அவ்வபோது பளீர் என்று துடைத்து வைப்பது போன்றவைகளை செய்தோமேயானால் கஷ்ட்டம் தெரியாது.எல்லாம் சேர்த்து வைத்து வேலை செய்யும்போதுதான் கஷ்ட்டமாக இருக்கும்.

3.இப்ப சமையலறைக்கு வருவோம்...
சமையலுக்கு தேவையான பொருட்களில் பால்,தயிர்,மோர் இவைகளை தவிர்த்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்க்கொருமுறை சாமான்களை வாங்கி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்வது நல்லது.ஒன்று,இரண்டு சாமான்களுக்கெல்லாம் நாம் அலைய வேண்டியது இல்லை.
என்ன பொருட்கள் தீர்கின்றதோ கிச்சனில் ஒரு சிறிய நோட்டோ பேப்பர்களோ வைத்து அவ்வபோது அதில் குறித்து வைத்து கொள்வது நல்லது.அப்போதுதான் எதையும் மறக்காமல் வெளியில் செல்லும்போது நமக்கு வாங்கி வர ஏதுவாக இருக்கும்.
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில முக்கிய சாமான்கள் நம் வீட்டில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அவைகள் தீருவதற்க்கு முன்னதாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.சங்கடபடத்தேவையில்லை.கணவரிடம் நாம் திடீர் திடீரென்று சாமான்கள் சொல்லி அவரையும் டென்ஷன் ஆக்கி,நாமும் டென்ஷன் ஆக வேண்டியிருக்காது இல்லையா?
திடீரென்று யாரும் “இந்த பக்கம் வந்தேன் அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன்”என்று வரும் விருந்தினருக்கு வெறும் டீயோடு நிறுத்தாமல் கூட ஏதாவது வைப்பதற்க்கு தயாராக வீட்டில் ஏதேனும் வாங்கி வைத்திருக்க வேண்டும்.அவை பிஸ்கட்டோ,அதுவும் இல்லையென்றால் பழமோ நறுக்கி வைத்தால் கூட போதுமானது.
மிகவும் நெருங்கியவர்கள் எனில்,ஒரு சில நிமிடத்தில் தயார் செய்யும்படி கேசரிக்கு ரவையோ... பஜ்ஜி மிக்ஸோ..,அதிலேயே பக்கோடாவாகவோ,கோதுமை அப்பமோ செய்து வைத்து அவர்களை அசத்திடலாம்.எனவேதான் இந்த மாதிரி பொருட்களெல்லாம் அவசியம் நம் வீடுகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

4.தினசரி சமையலுக்கு இன்றைக்கு இதை சமைக்கலாம் என்று முன்னதாகவே அதாவது முதல் நாளே முடிவு செய்து வைத்துக் கொண்டால் செய்வதற்க்கு எளிதாக இருக்கும்.வேலைக்கு செல்பவர்கள்,அல்லது கணவருக்கு கைய்யில் சாப்பாடு கொடுத்தனுப்புபவர்கள் அந்த வாரத்திற்க்கான ஐந்து சமையலையும் யோசித்து வைத்துக் கொண்டோமேயானால் காலையில் எழுந்ததும் டென்ஷன் இல்லாமல் சமைத்து கொடுத்து அசத்திடலாம்.

இது நமக்கு சரி.... விடுமுறையில்  “நாங்கள் ஒரு நான்கு ஐந்து பேர் வருகின்றோம்”  என விருந்தாளிகள் முன் தகவலை சொல்கிறார்கள் என்றால் எப்படி நம்மை தயார் செய்து கொள்வது?எப்படி சமாளிப்பது?
அல்லது திடீரென்று இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வருகிறேன் என்று சொன்னால் அதற்க்கு பதற்றத்தை தவிர்த்து எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதை பற்றி இன்ஷா அல்லாஹ் மற்றுமொறு பகுதியில் சொல்கிறேன்.


Monday, February 14, 2011

வீட்டு குறிப்புகள் சில


நாம் வீட்டில் சில வேலைகளை சீக்கிரம் முடித்து விடவும்,சில வேலைகளை சுலபமாக செய்யவும் சில முறைகளை கைய்யாளுவது என்பது அனைவரும் அறிந்ததே...
அது போன்று நான் செயல்படுத்தும் சில குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த வீட்டு குறிப்புகள் பகுதி... சிலருக்கு தெரிந்திருப்பின் அடுக்களைக்குள் புதிதாக காலடி எடுத்து வைப்பவர்களுக்கு இது உதவும் என்றே கொடுத்துள்ளேன்.எனவே தெரிந்தவர்கள் என்னை திட்ட வேண்டாம்... சரியா.....

1. நம் உடல்நலத்திற்க்கு பழங்கள் சாப்பிடுவது என்பது மிக முக்கியம்.அதிலும் இந்த ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது என்ற பழமொழிகள் கூட உண்டு.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out