Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts
Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts

Saturday, December 6, 2014

வெப் கேக் (குக்கர் முறை)

இந்த குக்கர் கேக் செய்முறையை நான் ஊரில் இருக்கும் எனது உறவினர்களுக்காக செய்து பார்த்த முறை.... மைக்ரோவேவ்,ஓவன் இதெல்லாம் இருந்தால் தான் கேக் செய்யமுடியும் என்று இல்லாமல் இவ்வாறும் சுலபமாக செய்யலாம் என்று சொல்லி அவர்களும் செய்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.எனவே இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
 

தேவையான பொருட்கள்                   

மைதா  - 1 ¼ கப்

பட்டர்   - 50 கிராம்

பொடித்த சீனி – 1 1/2 கப்

முட்டை   - 2

கொகோ பவுடர்  - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி

பால்      - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்  - 2 மேசைக்கரண்டி

வெனிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி

உப்பு ( பேக் செய்ய) – 1 ½ (அ) 2 கப்


செய்முறை

பட்டர்,முட்டை,எஸன்ஸ்,பால் இவையெல்லாம் ரூம் டெம்பரேச்சரில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.ஐந்து லிட்டர் குக்கரில் உப்பை பரவலாக கொட்டி அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய தட்டோ வைத்து மூடியில் லப்பரோ,வெய்ட்டோ போடாமல் குக்கரை மூடி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு படுத்த வைக்கவும்.ஒரு சில்வர் அல்லது சுதேசி பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்க்கு உள்ளதை எடுத்து அதன் உள்ளே வெண்ணெயை உள் அடி பாகமும்,சுற்றிலும் தடவி விட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு மைதாவை போட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டும் அளவிற்கு சுத்தி தட்டி விடவும்.ஒட்டியது போக மிச்சம் இருப்பின் மாவை கொட்டி விடவும்.


மைதாவையும்,பேக்கிங் பவுடரையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலப்பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியை போட்டு எலெக்ட்ரிக் அல்லது ஹாண்ட் விஸ்க்கால் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.இப்போது அதில் வெனிலா எஸன்ஸ்,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு,கொஞ்சம் கொஞ்சமாக மாவையும் பாலையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வைக்கவும்.


மற்றுமொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கொக்கோ பவுடரை கட்டியில்லாமல் கலந்துக் கொண்டு,அதில் கலந்து வைத்திருக்கும் கலவையில் பாதியை அதில் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் கலந்து விட்டு வைக்கவும்.வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொக்கோ கலவையில் சின்ன குழி கரண்டியால் எடுத்து மெதுவாக நடுவே ஊற்ற வேண்டும். இன்னொரு குழிக் கரண்டியால் வெள்ளை கலவையை அதன் மேலே மெதுவாக ஊற்றவும்.இப்படியே மாற்றி மாற்றி முழுவதுமாக ஊற்றி விட்டு பாத்திரத்தை தட்டி சமபடுத்திவிட்டு,குக்கரை திறந்தால் சூடு வந்திருக்கும்.அதன் உள்ளே மெதுவாக வைத்து மறுபடியும் குக்கரை மூடி வைக்கவும்.முதல் 40 நிமிடம் வரை குக்கரை திறக்க கூடாது.அதன் பிறகு திறந்து பார்த்தால் நன்கு உப்பியிருக்கும் அதன் நடுவே ஒரு குச்சியை தண்ணியில் கழுவி விட்டு குத்தி வெளியே எடுத்துப் பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும்.அப்படியிருப்பின் அடுப்பை அணைத்து விடவும்.இல்லை கொஞ்சம் பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டி இருந்தால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வைத்து விட்டு,அதன் பின் சரிப்பார்த்துவிட்டு இறக்கவும்.


பாத்திரத்தை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கத்தியால ஓரத்தை ஒரு முறை சுத்தி தளர்த்திவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்தால் அழகாக வந்து விடும்….
இதை அப்படியே துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.மிகவும் டேஸ்டாக இருக்கும்.இல்லையென்றால் ஐஸிங் செய்து அலங்கரித்து சாப்பிடலாம்.ஐஸிங் முறையை அடுத்த பதிவில் பார்க்கவும்.

 குறிப்பு:-

1.இதே குக்கர் செய்முறையில் எல்லாவிதமான கேக்கும் செய்யலாம்.நன்கு மிருதுவாக வரும்.பிஸ்கட்டும் செய்யலாம்.அதன் குறிப்பை பின்பு போடுகின்றேன்.

2.சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் மில்க்மெய்ட் ஊற்றி செய்யலாம்.அதற்க்கேற்றார் போல் இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லை எக் ரீப்ப்ளேஸர் என்று கிடைக்கின்றது அதையும் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3.மாவை மாற்றி மாற்றி ஊற்றியப்பின் ஒரு கத்தியால் டிசைனுக்காக வெப் போல் ஆங்காங்கே இழுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்துள்ளேன்.இதுவே அப்படியே இழுத்து விடாமலும் வைக்கலாம். அது ஜீப்ரா டிசைனாக இருக்கும்.அப்படி செய்ததில் ஒரு பீஸ் இதோ உங்கள் பார்வைக்கு....





Sunday, August 24, 2014

சாக்லெட் ப்ரவ்னிஸ்

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வீட்டில் பார்ட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அயிட்டமாக இதை செய்து வைக்கலாம்.பெரியவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஈத் பெருநாள் வந்தாலே சிங்கப்பூரில் ஒரு மாதம் கொண்டாட்டம் தான்.மலாய் மக்களின் பழக்கப்படி இந்த ஒரு மாதமும் குடும்பத்துடன் தங்கள் அனைத்து உறவினர்களின் வீட்டிற்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி எல்லோரும் போக,வர இருப்பதால் எல்லோர் வீட்டின் டைனிங் டேபிளிலும் டப்பா டப்பாவாக ஸ்னேக்ஸ் செய்தோ,வாங்கியோ வைத்திருப்பார்கள்.வருபவர்கள் அதில் இருப்பதை டேஸ்ட் செய்து விட்டு காஃபியோ,ஜூஸோ குடித்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்ப எதுக்கு இந்த கதை என்கிறீர்களா?அந்த மாதிரி வைத்திருக்கும் ஸ்னேக்ஸில் இதுவும் ஒன்று.அதை எனது இல்லத்தில் பதிவிடவே விரும்புகிறேன்.

இப்போது அதன் செய்முறையை பார்க்கலாமா?

               

தேவையான பொருட்கள்
**********************
டார்க் சாக்லெட் - 100 கிராம்
பட்டர் - 1/4 கப்
மைதா(அ)ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
கண்டன்ஸ்ட் மில்க் - 1/2 டின்
பொடித்த சீனி - 1/2 கப்
வால்நட் - பொடியாக நறுக்கியது ஒரு கையளவு



செய்முறை
**********
பட்டர் ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்க வேண்டும்.
பட்டரையும்,சாக்லெட்டையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு மைக்ரோவேவ் ஹையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தோமேயானால் பட்டர் உருகியும்,சாக்லெட் லேசாக உருகியும் இருக்கும்.அந்த நிலையில் அதை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டோம் என்றால் நன்கு சாக்லெட் அந்த சூட்டிலேயே கரைந்து விடும்.அதை ஒன்று சேர கலந்து விட்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கையும் ஊற்றி கலந்து விட்டு பிறகு மைதா,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு முறை சலித்து விட்டு சாக்லெட் மிக்ஸில் சீனியையும்,இந்த மாவையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து விடவும்.அதன் பின் நறுக்கிய வால்நட்டில் பாதியை இதில் கலந்து விடவும்.
இப்போது ஓவனை 180டிகிரியில் முற்சூடு செய்யவும்.கேக் ட்ரேயில் பட்டர் முழுவதுமாக தடவி விரும்பினால் பட்டர் பேப்பர் போட்டுவிட்டு அதில் இந்த கலவையை பரவலாக கொட்டி  ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும்படி தட்டி விட்டு மீதி இருக்கும் வால்நட்டை தூவி விடவும்.
அதை முற்சூடு செய்த ஓவனில் வைத்து 30 முதல் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.(எனக்கு 30 நிமிடத்தில் ரெடியாகி விட்டது.எனவே அவரவர் ஓவனிற்கு தகுந்தார் போல் நேரத்தைப் பார்த்துக்கொள்ளவும்.)
இதன் நடுவில் டூத் பிக் வைத்து சோதித்து பார்த்து விட்டு வெளியே எடுத்து விடவும்.சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு எடுத்து விட்டு ஆறியதும் பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளலாம்.


இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.இதன் டேஸ்ட் கேக்குகள் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சிவ்வியாக இருக்கும்....
முயன்று பாருங்களேன் நிச்சயம் பிடிக்கும்.

குறிப்பு:)
*******
சாக்லெட் ,பட்டரை டபுள்பாயிலர் முறையில் உருக்கச்செய்யலாம்.

Saturday, March 8, 2014

குவே

இந்த குவே... தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் காரைக்கால்,நாகப்பட்டினம் ஊர்களில் எந்த ஒரு விஷேச,பண்டிகையானாலும் இந்த இனிப்பு வகை இடம்பெற்றிருக்கும்.

இது நம் தமிழ்நாட்டு குறிப்பு என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.ஏனென்றால் நான் முதன்முதலில் சாப்பிட்டு பார்த்ததும் எங்கள் ஊர் பெண் வீட்டில் தான்.அவர் சொல்லிதான் நான் முதன் முதலில் செய்தேன்.
இங்கே சிங்கப்பூர் வந்த பிறகுதான் தெரிய வந்தது இது மலாய் மக்களின் பாரம்பர்ய இனிப்பு வகை என்று.ஆம் அவர்கள்தான் வீட்டின் சின்ன விஷேசம் முதல் திருமண நிகழ்ச்சி ஆனாலும் எத்தனை வகை உணவுகள் இருப்பினும் இந்த இனிப்பு இல்லாமல் இருப்பதில்லை.அவ்வளவு கலர் கலராக வகைப்படுத்தி வைப்பார்கள்.இதில் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து செய்வார்கள் அது ஒரே கலராக அது ஒரு வகையாக வைக்கப்பட்டிருக்கும்.கிழங்கு வகைகளை சேர்த்தும் சேர்த்தும் அது ஒரு வகையாக செய்வார்கள்.இங்கு நிறைய இனிப்புகள் விற்க்கும் கடைகளிலும் கிடைக்கும்.அவ்வளவு பெயர் பெற்றதாகும்.அது அப்படியே இங்கு பல வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களிடமும் பரவிவிட்டது  என்றுதான் சொல்ல வேண்டும்.சரி இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.

                        குவே
தேவையான பொருட்கள்
அரிசிமாவு       - ஒரு கப்
சீனீ              - 1 ½ கப்
கெட்டியான தேங்காய் பால்  - 2 கப்
டவுன் பாண்டன் இலை  -  1 (அல்லது)
ஏலக்காய்          - 3 (ஆனால் ஏலக்காய் அவர்கள் சேர்ப்பதில்லை)
சோம்பு            - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர்ஸ்       - விருப்பமான                         கலர்(ஆரஞ்சு,பச்சை,ரோஸ்)       
செய்முறை

முதலில் சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சோம்பு,பாண்டன் இலை அல்லது ஏலக்காயை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.சீனி நன்கு கரைந்து இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.அதை இறக்கி நன்கு ஆற விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதில் தேங்காய்பால் சேர்த்து,அத்துடன் இந்த சீனி கரைசலையும் வடிக்கட்டி சேர்த்து நன்கு கட்டியில்லாமல் நீர்க்க கரைக்க வேண்டும்.கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதை மாவு சல்லடை அல்லது வடித்தட்டில் வடிக்கட்டி கொள்ளவும்.
இப்போது இதை நான்கு சரிசமமாக கப்களில் எடுத்துக் கொண்டு மூன்று கப்களில் நாம் தனியே கலர்களை நன்கு கலந்து விடவும்.
ஒரு ரைஸ் குக்கர் பாத்திரத்திலோ அல்லது இட்லி அவிக்கும் பாத்திரத்திலோ உள்ளே 3 இன்ச் உயர அளவு வட்ட பாத்திரத்தினை (ஒரு பாத்திர ஸ்டாண்ட் மேலே)வைத்தால் அதில் ஒரு இன்ச் அளவிற்க்கு தண்ணீர் தொடும் படி ஊற்றவும்.அதை சூடு படுத்தவும்.
இனி அந்த வட்ட பாத்திரத்தில் சிறிது நெய் தடவிக்கொண்டு முதலில் பச்சைக்கலர் ஒரு பெரிய குழிக்கரண்டி அளவு எடுத்து ஊற்றவும்.மிகவும் மெல்லிய லேயராக இருந்தால் தான் சீக்கிரம் சீக்கிரம் வேக வைத்து எடுக்க வசதியாக இருக்கும்.

அதை அந்த கொதிக்கும் நீரில் வைத்து மூடியில் ஒரு கர்ச்சீப் அல்லது துணியை கட்டி மூடி ஐந்து நிமிடம் வேக விடவும்.(வட்டிலாப்பம் வேக விடுவது போல்)
அதன் பிறகு மூடியை திறந்து பார்த்து விரலால் தொட்டு பார்த்தால் வெந்தும் அதே சமையம் லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்.இப்போது அடுத்த கலரை அதே அளவு எடுத்து மெதுவாக வெந்திருக்கும் அந்த லேயரின் மேலேயே ஊற்றி அதே போல் ஐந்து நிமிடம் வேக விடவும்.இதே போல் எல்லா கலரையும் ஒன்றன் மேல் ஒன்றாக மாற்றி ஊற்றி வேக விடவும்.இடையிடையே வேகும் அளவிற்க்கு தண்ணீர் இருக்கிறதா என பார்த்து ஊற்றவும்.கடைசி கரைசலை ஊற்றிய பிறகு பத்து நிமிடம் வேகவிட்டு பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை மெதுவாக வெளியே எடுத்து வைத்து ஆறவிடவும்.வேண்டுமானால் சூடு சிறிது குறைந்ததும் குளிர்சாதன பெட்டியிலும் அரை மணிநேரம் வைத்து எடுக்கலாம்.ஆறியதை ஒரு தாம்புலத்தில் தலைகீழ் கவிழ்த்து லேசாக தட்டினால் அப்படியே பாத்திரத்தை விட்டு விழுந்து விடவும்.கத்தியில் சிறிது நெய் தடவி கொண்டு,அதை விரும்பிய வடிவில் துண்டு போடலாம்.

சுவையான வண்ணமிகு குவே தயார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆவியில் வேக வைப்பதாலும் எண்ணெய் நெய் வஸ்துகள் இல்லாததாலும் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது….
குறிப்பு:- )))
இதில் பாரம்பரிய செய்முறை என பார்த்தால் பச்சரிசியை கழுவி 4 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் மைய நைசாக அரைத்து அதன் பிறகு மற்றவற்றை அதில் கலந்து அதே போல் வடிக்கட்டி செய்வார்கள்.நான் மாவிலும் செய்து பார்த்து அதுவும் நன்றாக வரவே உங்களுக்கு அந்த  ஈஸியான முறையை செய்து காண்பித்திருக்கின்றேன்.இதில் மற்றொரு முறையையும் விரைவில் செய்து எனது பக்கத்தில் சேர்க்கிறேன்.


Wednesday, December 11, 2013

அவல் பாயாசம்

இது தமிழர் சமையலுக்காக செய்த ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகளுக்கு சத்தான அதே சமையம் கொஞ்சம் ரிச்சான பாயாசம்.



தேவையான பொருட்கள்

அவல்         -  ஒரு கப்
காய்ச்சிய பால் - அரை லிட்டர்
மில்க் மெய்ட்  - அரை டின்
சீனீ              -  கால் கப்
நெய்            -  இரண்டு தேக்கரண்டி
உப்பு            -  இனிப்பு எடுப்பதற்கு சிறிதளவு
முந்திரி,திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்   - 3
குங்குமப்பூ  -  சிறிதளவு

செய்முறை



அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி லேசாக சூடு வரும்போதே,உடைத்து வைத்திருக்கும் முந்திரியையும்,திராட்சையையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே நெய்யில் பொடித்து வைத்திருக்கும் அவலையும் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும்.(நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.)


நல்ல மணம் வந்ததும்,காய்ச்சிய பாலோடு ஒரு டம்ளர் தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.அவல் வெந்ததும் சீனியையும்,மில்க்மெய்டையும் சேர்த்து நன்கு கிளறி கொதித்ததும் ஏலக்காயை பொடித்து தூவி கிளறிவிடவும்.மிதமான தீயிலேயே  பாயாசம் ஒரு கொதி கொதித்ததும் வறுத்த முந்திரி திராட்சை,குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.ஆறியதும் பறிமாறவும்.ஃபிரிட்ஜில் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.



மிகவும் கெட்டியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.அப்படி அவல் வேகும்போதே உங்களுக்கு தோன்றினால் இன்னும் சிறிது பாலையோ தண்ணீரையோ சேர்த்துக் கொள்ளவும்.ஏனென்றால் ஆறினால் பாயாசம் கெட்டி கொடுக்கும் அல்லவா...  

Wednesday, July 24, 2013

சாக்லேட் மூஸ்


தேவையான பொருட்கள்

சாக்லேட்சிப்ஸ்(அ) பார்   - 80 கிராம்
பட்டர்                                       - 1 தேக்கரண்டி
முட்டை                                  -  1
திக் க்ரீம்                                 -  120 மிலி
சீனி                                           -  2 ஸ்பூன்

செய்முறை


ஒரு அகன்ற பாத்திரத்தில் சாக்லேட் பாரை உடைத்து போட்டு அதனோடு பட்டரை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொஞ்சம் வத்து கொதிக்க விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் இந்த சாக்லேட் உள்ள பாத்திரத்தை வைத்து சூடு படுத்தவும்.உடனே சூடேறியதும் சாக்லேட் எல்லாம் உருக ஆரம்பிக்கும் போது அந்த பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி விடவும் திரி திரியாக ஆனதென்றால் ஒரு சில துளிகள் தண்ணீர் தெளித்து கிளறி மறுபடியும் அந்த கொதிநீர் பாத்திரத்தின் மேல் வைத்து நன்கு ஒன்று சேர கிளறவும் ஒன்று சேர்ந்து இளகி இருக்க வேண்டும்.அதன் பின் இறக்கி வைத்து விடவும்.(அதிக நேரம் கொதிநீர் பாத்திரத்தின் மேலேயே வைத்திருக்க கூடாது.)


ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைகருவை தனியே ஊற்றி விட்டு மஞ்சள் கருவை இந்த சாக்லேட் வெதுவெதுப்பாக இருக்கும் போது சேர்க்கவும்.சாக்லேட்டோடு மஞ்சள் நன்கு ஒன்று சேர ஸ்பூனால் நன்கு அடித்து கலக்கி வைக்கவும்.வெள்ளை கருவை தனியே நன்கு நொரை பொங்க கிரீம் போல் அடித்து வைத்துக்கொள்ளவும்.(எலக்ட்ரிக் பீட்டர் இருந்தால் க்ரீம் போல் வெள்ளை கரு அடிக்க வரும்.என்னிடம் இல்லாததால் கை பீட்டரால் தான் அடித்தேன் எனவே மிகவும் க்ரீமியாக வரவில்லை.)


மற்றொரு பாத்திரத்தில் திக்கான க்ரீமை ஊற்றி அதில் சீனியை சேர்த்து நன்கு பீட்டரால் கை விடாமல் அடிக்கவும் கெட்டியான க்ரீமாக ஆகிவிடும்.ஸ்பூனால் எடுத்து போடுவது போல் திக்காக ஆகவேண்டும்.


இப்பொழுது சாக்லேட் கலவை மேல் நன்கு அடித்து வைத்திருக்கும் இந்த வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.அதன் பின் அந்த க்ரீமையும் சேர்த்து மெதுவாக ஒன்று சேர கிளறவும்.


அதன்பிறகு இரண்டு கப்களில் அதை ஊற்றி ஃப்ரீசரில் 4 அல்லது 5 மணிநேரம் வைத்து விடவும்.சாப்பிடும் முன்பாக வெளியில் எடுத்து க்ரீமை சீனி சேர்த்து அடித்தோம் அல்லவா அதே போல் கொஞ்சம் அடித்து அதை இந்த மூஸ் மேல் ஒரு ஸூன் வைத்து அதன் மேல் சாக்லேட்ஸை துருவி தூவி அலங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.விரும்பி சாப்பிடுவார்கள்.இல்லையென்றால் இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு  இப்படி அலங்கரித்து மீண்டும் வைத்து விட்டு செட் ஆனதும் கொடுக்கலாம்.5 மணிநேரம் முழுமை அடைந்தால் நன்கு திக்காக சாப்பிட நன்றாக இருக்கும்.பெரியவர்களுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும் முயன்று பாருங்களேன்.


குறிப்பு:-)) இதற்க்கு நான் மில்க் சேர்ந்த கொகோ சாக்லேட்டை சேர்த்தேன்.டார்க் சாக்லேட் விரும்புவர்கள் டார்க் சாக்லேட் சேர்க்கலாம்.



Saturday, July 13, 2013

ஜெல்லி லெயர் கேக்

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இந்த வலைப்பூவை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ரமலான் மாதம் சிறப்பிற்கான வாழ்த்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதம் நம் எல்லோர்க்கும் சிறப்பானதாக அமையவேண்டுமெனவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

இந்த மாதத்தில் எனது இல்லத்தில் இஃப்தாரில் செய்யும் ஒரு சில குறிப்புகளை இங்கே அவ்வபோது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.ஏதேனும் புதுவிதமான குறிப்புகளை செய்து பார்ப்பதும் உண்டு.அப்படி இந்த வருடம் இந்த ஜெல்லி லேயர் கேக்கினை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு பிடித்திருந்தது.அதை எனது இல்லத்தில் முதலாவதாக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.வாங்க செய்முறையை பார்ப்போம்....

                                                       ஜெல்லி லேயர் கேக்



தேவையான பொருட்கள்

அகர் அகர் (அ) ஜெல்லி மிக்ஸ்  -  ஒரு ஸ்பூன்(ரெட் கலர்)
கண்டன்ஸ்ட் மில்க்                        -  கால் கப்
ஜெலட்டின்                                         -   1 1/4 ஸ்பூன்
அன் சால்ட்டட் பட்டர்                    -   20 கிராம்
மேரி பிஸ்கட்                                     -   5
தேவைப்பட்டால் சீனி                    -   3 ஸ்பூன்

செய்முறை

மேரி பிஸ்கட்டை ஒரு பாலிதீன் கவரின் உள்ளே வைத்து ஒரு சப்பாத்தி கட்டையால் நொருக்கி கொள்ளவும்.
ஒரு சதுர அல்லது செவ்வக நான்ஸ்டிக்கோ,கண்ணாடி ட்ரேயையோ எடுத்துக் கொள்ளவும்.அதன் உள்ளே நெய்யோ பட்டரோ தடவி வைத்துக் கொள்ளவும்.

நுணுக்கிய பிஸ்கட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதை அந்த பட்டர் தடவிய ட்ரேயில் பரவலாகவும் சரிசமமாகவும் அழுத்தி வைத்து விட்டு,அதை ப்ரீசரில் 5 நிமிடம் வைக்கவும்.

அதற்க்குள்ளாக ஜெலட்டினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் 4 ஸ்பூன் ஊற்றி நன்கு கரையவிடவும்.நன்கு கரைந்தவுடன்,அதை மில்க்மெய்டோடு நன்கு கலந்துவிடவும்.அதை செட்டான பிஸ்கட் ட்ரேயை எடுத்து அதின் மேல் மெதுவாக ஊற்றவும்.அது பரவலாக ஆனதும் அதையும் ப்ரீசரில் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும்.
அதற்க்குள்ளாக ஜெல்லி மிக்ஸை கொதிக்கும் நீரில் கலந்து நன்கு கரைய விடவும்.அதில் உள்ள இனிப்பு போதவில்லையெனில் கொஞ்சம் கலந்து கொள்ளவும்.நன்கு கரைந்ததும் செட் ஆன ட்ரேயை எடுத்து அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.அதை நார்மலாக ப்ரிட்ஜில் வைத்து விடவும்.குறைந்தது ஒரு மணிநேரம் செட் ஆகவிடவும்.


பிறகு எடுத்து கத்தியால் துண்டு போட்டு அடிவரை நன்கு கீரி மெதுவாக எடுத்து வைக்கவும்.சில்லென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


Tuesday, February 22, 2011

வட்டிலாப்பம்

 
இது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீட்டிலும் அடிக்கடி செய்ய 

கூடிய இனிப்பு ஆகும்.செய்முறைகள் வீட்டுக்கு வீடு சிறிதே 

வித்தியாச படலாம்.

*** தேவையான பொருட்கள் ***

தேங்காய் பால்         _   (திக்கானது) அரை டம்ளர்
முட்டை                _   மூன்று
பாதாம்                  _  12
முந்திரி                  _  7
ஏலக்காய்                _   3
சீனி                      _   முக்கால் கப்
உப்பு                      _   மூன்று சிட்டிகை
நெய்                       _   ஒரு தேக்கரண்டி
*** செய்முறை ***

பாதமை ஊறவைத்து தோல் நீக்கி விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயின் கறுப்பு விதையையும் சேர்த்து மிக்ஸியில் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு திட்டமான பாத்திரத்தை எடுத்து கொண்டு அரைத்ததையும்,தேங்காய் பாலையும் அதில் ஊற்றி விட்டு அதே மிக்ஸியில் முட்டையையும் நன்கு அடித்து வடிக்கட்டி சேர்க்கவும்.
தேங்காய் பால்,அரைத்த விழுது,முட்டை இவைகளுடன் சீனி,உப்பையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு நெய்யை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து வேகும் அளவிற்க்கு தண்ணீரை ஊற்றி நன்கு சூடு வந்ததும்,இந்த பாத்திரத்தை வைத்து மூடி நன்கு வேக விடவும்.

மிதமான தீயிலேயெ அரை மணிநேரம் வைத்து பின் மூடியை திறந்து கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.( ரைஸ் குக்கரிலும் வேக வைக்கலாம்.)

கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கி எடுத்து தட்டில் வைத்து விரும்பினால் வறுத்த முந்திரிகளுடன் பரிமாறலாம்.
இதில் பாதாமிற்க்கு பதில் கசகசாவை சேர்த்தும் அரைத்து செய்யலாம்.நன்றாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

சிம்பிள் இடியாப்பம் அடை(இனிப்பு)





தேவையான பொருட்கள்

 இடியாப்பம்                          _      மூன்று    
முட்டை                                  _      ஒன்று
 சீனி                                           _      7 தேக்கரண்டி
உப்பு                                           _      2 பின்ச்
ரெட் ஃபுட் கலர்                       _     சிறிது
ஏலக்காய் பவுடர்                   _     1/4 ஸ்பூன்
 நெய்                                            _    சுடுவதற்க்கு

*** செய்முறை ***


இடியாப்பத்தோடு முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,ஃபுட் கலர்,உப்பு,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சீனி கரைந்து எல்லாம் ஒன்று சேர பிசைந்து கொள்ளவும். 

தோசை தவாவை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு வந்ததும்,ஒரு மாவு கரண்டி நிறைய கலவையை எடுத்து மெதுவாக ஊற்றி மெல்லிதாக இல்லாமல் லேசால பரத்தி விட்டு  அடுப்பை குறைந்து தீயில் வைக்கவும்.
அடி நன்கு சிவந்ததும் அகலமான தோசைதிருப்பியாலும், தேவைபட்டால் மற்றுமொரு கரண்டியையும் கொண்டு மெதுவாக திருப்பவும்.(திருப்பும் போது பிய்ந்து விடும் கவனமாக திருப்புதல் வேண்டும்)
அதை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.

ஓரமெல்லாம் மொறு மொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த அளவில் இரண்டு அடைகள் சுடலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ரசித்து சாப்பிடுவார்கள்.


அன்புடன், 
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out