Showing posts with label டிபன் வகைகள். Show all posts
Showing posts with label டிபன் வகைகள். Show all posts

Monday, March 7, 2016

சிக்கன் புரிட்டோ


மெக்ஸிகோ உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த புரிட்டோ... இது கேள்விபட்டதோடு சரி... வெளியே நான் சாப்பிட்டு பார்த்தது இல்லை... என் பிள்ளைகள் கார்ட்டூனில் இது அடிக்கடி வருகிறது இது சாப்பிட்டு பார்க்கணும்னு ஆசையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்க உடனே நானும் செய்ய களம் இறங்கியாச்சு...
நெட்டில் பார்த்து பொதுவாக அவர்கள் செய்யும் விதத்தை  தெரிந்து கொண்டு அதையே கொஞ்சம் நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக அமைந்தது...
என் பிள்ளைகளும் ஆசையாக சாப்பிட்டார்கள்... அதை எனது இல்லத்தில் பதிகின்றேன்....
சரி வாங்க செய்முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
********** ****************
மேல் டார்ட்டிலாஸ் செய்ய:-)
*********************************
மைதா மாவு  - 1 1/2 கப் 
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
நெய்  - 2 தேக்கரண்டி 
ஸ்டஃப்பிங்கிற்கு 
******************
சிக்கன் கைமா - 1/2 கப் 
பெரிய வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2 தேக்கரண்டி 
பொடியாக அரிந்த குடைமிளகாய் 
(சிகப்பு,மஞ்சள் ,பச்சை கலந்தது )} - 1/2 கப் 
சாதம்  - 1/2 கப் 
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
இத்தாலி ஸ்பைசஸ் - 1 1/2 தேக்கரண்டி 
ஒரிகேனோ - 1 தேக்கரண்டி 
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி 
ஆலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி 

செய்முறை 
************
1) முதலில் மாவை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு மிருதுவாக மாவை நன்கு பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி வைத்து விடவும்.

2)ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு லேசாக வரும் போதே பூண்டை போட்டு வதக்கவும்.வாசம் வரும்போதே நறுக்கிய மற்ற காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3)அதில் சிக்கன் கைமாவை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4)சிக்கன் நிறம் மாறி வெந்தது போன்று வந்ததும்,தூள் மற்றும் சாஸ் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

5)வாசம் வர வதக்கியதும் சாதம் சேர்த்து நன்கு ஒன்று சேர  கிளறி  தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நன்கு ஒன்று சேர்ந்து  தண்ணீர் வற்றிய நிலையில் ரெடி ஆனதும் இறக்கி வைத்து ஆற விடவும்.
6)இப்போது பிணைந்த மாவை மீடியமான உருண்டைகளாக்கி விட்டு,சப்பாத்தி போன்று மெல்லியதாக இட்டு தவாவில்  இரு பக்கமும் லேசாக  எண்ணெய் தடவி சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.


7)இனி அந்த டார்டிலாஸின் நடுவில் ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டி லேசாக தவாவில் வைத்து எடுத்து இரண்டாக கட் செய்து பரிமாறவும்.

குறிப்பு:-)
*இந்த ஸ்டஃப்பிங்கில் ரெட் பீன்ஸை வேக  வைத்தும் முக்கியமாக சேர்ப்பார்கள். 
*வெஜிடேரியன்ஸ் சிக்கனை தவிர்த்து ரெட் பீன்ஸை அதிகம் சேர்த்து கொள்ளலாம்....
*விரும்பினால் இதில் சீஸும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்



Tuesday, September 30, 2014

ருமாலி ரொட்டி

சமீபகாலமாக ... சப்பாத்தி வெரைட்டி லிஸ்ட்ல புதுசா நான் சேர்த்து கொண்டது தான் இந்த ருமாலி ரொட்டி.நாம் வீட்டில் ஏதும் புதுசா ட்ரை பண்ணோம்னா அதை மறுபடியும் செய்யலாம்னு ஒரு ஆசை வருவதற்க்கு காரணமாக இருப்பது கணவரும்,குழந்தைகளும்தாங்க..... அவங்க சாப்பிட்டு சூப்பர் சொன்னா போதும்.... இந்த சூப்பர் வார்த்தை கணவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது... முடிக்க போறாங்கன்னு நினைக்கும்போது இன்னொன்று அவர் எடுத்து சாப்பிடுறாங்க பாருங்க.... அது தாங்க நம்ம சக்ஸஸ்....அப்படி எங்க வீட்டு டின்னர் லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துடுச்சுங்க...
இதன் செய்முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்டா - 1 கப்
மைதா  -  1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
நெய் (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை
~~~~~~~~~~~


ஒரு பாத்திரத்தில் மைதாவையும்,ஆட்டாவையும் கலந்து தேவைக்கேற்ப உப்பும் கலந்து தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி நல்ல சாஃப்ட்டாக ஆகும் வரை நன்கு பிசையவும்.கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் இளகுவாக சாஃப்ட்டாக இருக்க வேண்டும்.
நன்கு பிசைந்த மாவை ஈரத்துணி கொண்டு மூடி ஒரு பதினைந்து நிமிடம் வரை வைத்து விடவும்.
பிறகு அந்த மாவின் சிறிது அரிசி மாவி தூவிக் கொண்டு ஒரு தடவை பிசைந்து விட்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகள் போட்டுக் கொள்ளவும்.10 முதல் 12 உருண்டைகள் வரும்.
இப்போது சப்பாத்தி கட்டையில் இரண்டு உருண்டைகளை உள்ளங்கைய்யை விட கொஞ்சம் பெரியதாக அரிசி மாவை தூவி வார்த்துக் கொண்டு,அதில் ஒரு சப்பாத்தியின் மேல் நெய்யோ, எண்ணையோ கைய்யில் தொட்டு முழுவதுமாக தடவி விட்டு மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரத்தை லேசாக அழுத்தி ஒட்டி விடவும்.இதே போல் எல்லா உருண்டையும் செய்து அதேன் மேல் அரிசி மாவை தூவி வைத்து கொள்ளலாம்.


நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
ஒட்டி வைத்திருக்கும் ஒரு சப்பாத்தியை எடுத்து அரிசி மாவை தூவி மிகவும் மெல்லியதாக வார்க்கவும்.அதை நன்கு சூடான தவாவில் போடவும்.
அதில் லேசாக பபுள் வர ஆரம்பிக்கும் போது திருப்பி போட்டு லேசாக துணியைக்கொண்டு அழுத்திவிட்டால் நன்கு உப்பும் அடியும் லேசாக சிவந்திருப்பின் எடுத்து விடவும்.
எடுத்து தட்டில் வைத்ததும் ரொட்டியின் ஓரத்தை பார்த்தோமேயானால் எடுத்து வந்தது போலோ இல்லை பிரிப்பதற்க்கு ஏதுவாகவோ இருக்கு.அதை கொண்டு இரண்டாக பிரித்தால் அழகாக இரண்டு ரொட்டியாக வந்துவிடும்.அது ஒவ்வொன்றையும் முக்கோணமாக மடித்து வைத்து விடவும்.இப்படியே எல்லா சப்பாத்தியையும் செய்யவும்.
சுட்டதும் ஹாட்பேக்கில் வைத்து விட்டோமெயானால் ஒரு நாள் முழுக்க வைத்திருந்தாலும் கொஞ்சம் கூட சாஃப்ட்டே குறையாமல் சூப்பராக இருக்கும்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள எந்த க்ரேவியும் சூப்பராக இருக்கும்.
என் குழந்தைகளுக்கு சிக்கன் க்ரேவியும்,தால் மக்கனியும் ரொம்ப பிடிக்கும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியவை:-))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மாவை நன்கு சாஃப்ட்டாக பிசைவது முக்கியம்.
2. நெய்யோ,எண்ணையோ   சேர்க்காமல் இருப்பதே இதன் ஸ்பெஷல்.
3.சுடும்போது தவா நன்றாக சூடாக இருப்பது முக்கியம்.
4.ஒவ்வொரு ரொட்டியையும் சுட்டு எடுக்கும் போது அடுப்பை குறைத்து விட்டு மீண்டும் ரொட்டி இட்டு போடுமுன் தவாவை நன்கு சூடுபடுத்தி விட்டு போடுவது முக்கியம்.




Tuesday, November 5, 2013

ப்ரவுன் ரைஸ்,உளுந்து அடை


தேவையான பொருட்கள்

உளுந்து.     - 2 கப்
ப்ரவுன் ரைஸ் - 3/4 கப்
முட்டை -  1
உப்பு.      -   தேவையான அளவு
எண்ணெய்(அ)நெய் - சுடுவதற்கு

செய்முறை


உளுந்தையும்,அரிசியையும் தனி தனியே குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இரண்டையும் நன்கு கழுவி விட்டு கிரைண்டரில் முதலில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பொடி ரவை பதத்துக்கு நீர்த்தார் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் உளுந்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

நன்கு அரைந்ததும் அதில் தேவையான உப்பு போட்டு,அரைத்த அரிசி மாவையும் அதில் ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்ததும் கிரைண்டரை விட்டு,மாவை அள்ளி எடுத்து வைத்துக் கொள்ளவும்.




பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு,தோசை கல்லை சூடுபடுத்தி அதில் மொத்தமாகவோ மெல்லியதாகவோ தோசை போல் வார்த்து சுற்றியும் நெய் ஊற்றி ஆப்ப முடியை போல் போட்டு மூடி சிவக்க வேக விடவும்.இருபக்கமும் சிவக்க சுட்டு எடுத்து தேங்காய்,பூண்டு சட்னியுடன் பறிமாறவும்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான சிற்றுண்டியாகும்.

குறிப்பு;))
இதில் முட்டை சேர்க்காமலும் சுடலாம்.ப்ரவுன் ரைஸ் இல்லையென்றால் நார்மலாக இட்லி மாவுக்கு பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையே பயன்படுத்தலாம்.

Saturday, February 23, 2013

ஸ்பெஷல் ரைஸ் நூடுல்ஸ்





தேவையான பொருட்கள்

ரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்    --------   ஒன்று
பெரிய வெங்காயம்                   --------   ஒன்று
கேரட்                                               --------   பாதி
முட்டைகோஸ்,கலர் குடமிளகாய்கள் ----- சிறிதளவு
ஸ்ப்ரவ்ட்                                        ---------  இரண்டு கப் அளவு
டோபு    
சொயாங் கீரை                              -------- ஒரு பாக்கெட்
பச்சைமிளகாய்                             --------  இரண்டு
பூண்டு                                                -------- மூன்று பல்
முட்டை                                           -------- 2
சில்லி பேஸ்ட்                              --------  3 ஸ்பூன்
சோயா சாஸ்                                 --------  ஒரு ஸ்பூன்
நார்(knorr)ஸ்டாக் க்யூப்ஸ்         --------  2
எண்ணெய்                                       -------- அரை கப்

செய்முறை

ஒரு அகலபாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதி வந்ததும்,இந்த நூடுல்ஸை அப்படியே போட்டு மூடி வைக்கவும்.


அதன்பின் காய்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஸ்ப்ரவ்ட்டை நன்கு அலசி வைத்து கொள்ளவும்.
கீரையையும் படத்தில் உள்ளவாறு நறுக்கி கொள்ளவும்.டோஃபுவை படத்தில் உள்ளபடி சின்ன சின்னதாக துண்டுகளாக்கவும்.பூண்டையும்,பச்சைமிளகாயையும் நசுக்கி கொள்ளவும்.
இப்போது நூடுல்ஸை தண்ணீர் வடிக்கட்டி வைத்து விடவும்.


ஒரு அகலபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,ஸ்டாக் க்யூபை போட்டு வதக்கவும் அது கரைந்ததும்,நசுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாய்,பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும்.
பின்பு நறுக்கிய காய்களையும்,ஸ்ப்ரவுட்டையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதன் பின் சோயா சாஸ்,சில்லி பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிட்டு பின்பு நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் ஒன்று சேர கிளறி விடவும்.எல்லாம் நன்கு கலந்து விட்டதும் குறைந்த தீயில் வைத்து விடவும்.நன்கு எல்லா பக்கமும் சூடேறியதும் உப்பு சரிபார்த்துவிட்டு இறக்கவும்.(ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் கடைசியில் பார்த்து விட்டு தேவைபடுமானால் போடவும்)










இதற்கிடையில் எண்ணெயில் டோஃபு துண்டுகளை பொன்னிறமாக (மிகவும் சிவந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்)பொறித்து எடுத்துக் கொள்ளவும்.பறிமாறுவதற்கு முன் சேர்த்து கிளறி பறிமாறினால் சாப்பிடுவதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
இதில் அதிக காய்கறிகள் சேர்த்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்க்கு இது போன்று சாப்பிடுவது நன்றாக சுவையாக இருக்கும்.

முன்பெல்லாம் நான் இந்த ரைஸ் நூடுல்ஸை அரிந்து வைத்திருக்கின்ற காயோடு இறாலும் சேர்த்து மட்டுமே செய்ததுண்டு.இங்கே சிங்கப்பூர் பழக்கபடி என் நாத்தினார் கீரை,ஸ்ப்ரவ்ட்,டோஃபு என புதிதாக சேர்த்து செய்து சாப்பிட பழக்கியது எனக்கு வித்தியாசமாகவும்,நால்ல மனமோடு சுவையாகவும் இருக்க,இப்போது விரும்பிய உணவுகளில் ஒன்றாக எனக்கு இது ஆகிவிட்டது.



Monday, March 21, 2011

வெங்காய அடை


*** தேவையான பொருட்கள் ***
பச்சரிசி             _    ஒரு டம்ளர்
முட்டை            _    ஒன்று
சோம்பு             _    ஒரு ஸ்பூன்
தேங்காய்த்துருவல்   _    கால் கப்
சின்னவெங்காயம்    _    15
பச்சைமிளகாய்      _    ஒன்று
சீனீ                _    ஒரு ஸ்பூன்
சமையல் சோடா உப்பு _    2 சிட்டிகை
நெய் (அல்லது)எண்ணெய் _     சுடுவதற்க்கு
உப்பு                    _    தேவையான அளவு

*** செய்முறை ***

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு கழுவி விட்டு கால் மணிநேரம் ஊற வைத்து,பின்பு தண்ணீர் இல்லாமல் வடிக்கவும்.
ஒரு வெள்ளைத்துணியிலோ,மரவையிலோ பரவலாக தடவி விட்டு நன்கு உலரவிடவும்.

நன்கு உலர்ந்ததும்,சோம்பு சேர்த்து மிக்ஸியில் ரவைக்கும் கொஞ்சம் பெரியதாக  பொடித்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய் துருவலை ஒரு சுற்று ஓடவிட்டு பின் உரித்து கழுவி வைத்திருக்கும் வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொடித்த அரிசியுடன் அரைத்தவை,சீனீ,உப்பு,சோடா உப்பு மற்றும் முட்டை உடைத்து ஊற்றி நன்கு பிணைந்து கொள்ளவும்.(அரைத்த விழுதின் தண்ணீரே போதுமானது.இல்லையெனில் கொஞ்சமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்)

பத்து நிமிடம் கழித்து தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் நெய் ஒரு ஸ்பூன் நிறைய ஊற்றி பின் கை நிறைய மாவை உருட்டினாற்போல் எடுத்து அடையாக அரை இன்ச் அளவு தட்டவும்.

மிதமான தீயிலேயே வேக விடவும்.அடி சிவந்ததும் மெதுவாக திருப்பி விட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேக விடவும்.நன்கு பரவலாக சிவந்ததும் எடுத்து விடவும்.
மாலை நேரத்தில் சுடசுட சாப்பிட மொறு மொறுவென்று மிகவும் நன்றாக இருக்கும்.

பாதி நெய் பாதி தேங்காய் எண்ணெய் என கலந்து சுட்டால் அடை நல்ல மணமாக இருக்கும்.கறி,கோழி குழம்பிலும் இதை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, March 18, 2011

மசால் வடை


இந்த வடையின் செய்முறை எல்லோருக்கும் தெரிந்ததுதானே....? என கேட்கலாம்.ஆனாலும் நன்கு க்ரிஸ்பியாக நிறைய பேருக்கு வருவதில்லை என்று சொல்லி கேட்டிருக்கின்றேன்.கடையில் உள்ளது போல வேணும் என எண்ணுபவர்கள் உண்டு.அதனால் தான் இந்த ரெஸிபியை எனது இல்லத்தில் கொடுக்க நினைத்தேன்.
அது மட்டுமில்லை என்னவருக்கு இந்த வடை மிகவும் பிடித்தமான ஒன்று.சிறு வயதில் இந்த வடையை சாப்பிட ஆசையாக இருந்தால், அம்மாவிடம் போய் “இந்த வடை செய்ய எவ்வளவு அம்மா செலவு ஆகும்?” என்பாராம்.ரொம்.........ப நல்லவரு இல்ல.... மூத்தவர் என்ற பொறுப்பு,பருப்பெல்லாம் அப்பவே வந்துடுச்சாக்கும்னு அவரை பார்த்து சொல்வேன்.ஒவ்வொரு முறையும் நான் இந்த வடை செய்யும்போது எனக்கும்,அவருக்கும் நினைவுக்கு வந்துடும்.எனவே இது எனது இல்லத்தின் ஸ்பெஷல் என்றே கருதுகிறேன்.
சரி இப்ப செய்முறையை பார்ப்போம்.

*** தேவையான பொருட்கள் ***
கடலைபருப்பு                                    _         ஒரு டம்ளர்
சின்ன வெங்காயம்                          _          பத்து 
பூண்டு                                                   _         இரண்டு பல்
காய்ந்த மிளகாய்                               _         இரண்டு
சோம்பு                                                  _         அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய்                                  _          ஒன்று
இஞ்சி                                                    _         சிறிய துண்டு
கறிவேப்பிலை                                   _        ஒரு கொத்து
மல்லி தழை                                        _        சிறிதளவு
எண்ணெய்                                           _        பொறித்தெடுக்க  

*** செய்முறை ***

பருப்பை நன்கு கழுவி விட்டு அரை மணியிலிருந்து ஒரு மணி வரை ஊற வைத்தல் போதுமானது.பிறகு வடிக்கட்டியில் நன்கு நீரை அப்படியே வடியவிடவும்.(கொஞ்சம் கூட தண்ணீரே இல்லாமல் இருக்கணும்).

அதற்க்கிடையில் ஈரத்தன்மையற்ற மிக்ஸியில் காய்ந்த மிளகாய்,சோம்பு,பூண்டை தோல் முழுவதுமாக உரிக்காமல் மெல்லிய தோலோடு கழிவியது என இவை அனைத்தையும்  மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை தோலுரித்து நன்கு கழுவி விட்டு மெல்லியதாக அரிந்து வைத்து கொள்ளவும். அதே  போல் பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,மல்லிதழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக பருப்பை போட்டு மிக்ஸியை ஒரே தடவையாக ஓட விடாமல் சற்று விட்டு விட்டு ஓடவிட்டு எடுத்தால் கொரகொரப்பாக இருக்கும்.மைய்ய ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.ஒண்ணு ரெண்டு பருப்பு முழுதாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
அதில் அரிந்து  மற்றும் பொடித்து வைத்திருக்கும் அனைத்தையும் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து  கொள்ளவும்.(இதை அப்படியே தயார் நிலையில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சுடலாம்.ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட்டாலும் நன்றாக இருக்கும்.)

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வரும் வரை,இந்த பருப்பு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து வடையாக மெல்லியதாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் தட்டி கொள்ளவும்.ஓவராக எண்ணெய் சூடேறாமல் ஓரளவிற்க்கு சூடானதும்,தட்டிய வடைகளை போட்டு மிதமான தீயிலேயே சுட்டு பொன்னிறமாக இருக்கும் நிலையில் எடுக்கவும்.

மொறு மொறுவென்று மணமாக இருக்கும் மசால் வடை தயார்.இது நீண்ட நேரம் க்ரிஸ்பியாகவே இருக்கும்.இதனுடன் முருங்கை கீரை  சிறிது சேர்த்து பிசைந்து சுடலாம்.நன்றாக இருக்கும்.சத்தானதும் கூட....

சூடா டீயோ,காஃபியோ போட்டு ஒரு கைய்யில கப் டீ,ஒரு கைய்யில வடை.இது ஒரு கடி இது ஒரு குடின்னு சாப்பிட்டா ஆஹா.... அதுவும் ஜன்னலில் மழையோ,அல்லது நல்ல குளிரோ இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.நோன்பு கஞ்சிக்கும் செமையாக இருக்கும்.

                                             


Sunday, February 27, 2011

*** ஈஸி பாஸ்தா ***



*** தேவையான பொருட்கள் ***

பாஸ்தா(விருப்பமான வடிவில்)   _   ஒரு கப்
வெங்காயம்                                          _    ஒன்று 
தக்காளி வித் சில்லி சாஸ்              _    அரை தேக்கரண்டி 
கேரட்,சிகப்பு குடைமிளகாய்,
முட்டை கோஸ்    அரிந்தது   }        _     தனி தனியே 2 மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது                         _    அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                                     _    அரை தேக்கரண்டி
எண்ணெய்                                              _   4   தேக்கரண்டி 
மல்லி தழை                                          _      சிறிதளவு

*** செய்முறை ***

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
சிறிய குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் மற்றும் அரிந்துள்ள அனைத்து காய்களையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,சாஸ் மற்றும் மிளகாய்த்தூளும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு பாஸ்தாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் ஒரு கப் நிறைய தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துவிட்டு மல்லிதழையை அரிந்து தூவி,குக்கரை மூடி,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான உதிரியான பாஸ்தா தயார்.காரம் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும்.நினைத்தவுடன் சுலபமாக செய்து விடலாம்.



Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out