Friday, March 18, 2011

மசால் வடை


இந்த வடையின் செய்முறை எல்லோருக்கும் தெரிந்ததுதானே....? என கேட்கலாம்.ஆனாலும் நன்கு க்ரிஸ்பியாக நிறைய பேருக்கு வருவதில்லை என்று சொல்லி கேட்டிருக்கின்றேன்.கடையில் உள்ளது போல வேணும் என எண்ணுபவர்கள் உண்டு.அதனால் தான் இந்த ரெஸிபியை எனது இல்லத்தில் கொடுக்க நினைத்தேன்.
அது மட்டுமில்லை என்னவருக்கு இந்த வடை மிகவும் பிடித்தமான ஒன்று.சிறு வயதில் இந்த வடையை சாப்பிட ஆசையாக இருந்தால், அம்மாவிடம் போய் “இந்த வடை செய்ய எவ்வளவு அம்மா செலவு ஆகும்?” என்பாராம்.ரொம்.........ப நல்லவரு இல்ல.... மூத்தவர் என்ற பொறுப்பு,பருப்பெல்லாம் அப்பவே வந்துடுச்சாக்கும்னு அவரை பார்த்து சொல்வேன்.ஒவ்வொரு முறையும் நான் இந்த வடை செய்யும்போது எனக்கும்,அவருக்கும் நினைவுக்கு வந்துடும்.எனவே இது எனது இல்லத்தின் ஸ்பெஷல் என்றே கருதுகிறேன்.
சரி இப்ப செய்முறையை பார்ப்போம்.

*** தேவையான பொருட்கள் ***
கடலைபருப்பு                                    _         ஒரு டம்ளர்
சின்ன வெங்காயம்                          _          பத்து 
பூண்டு                                                   _         இரண்டு பல்
காய்ந்த மிளகாய்                               _         இரண்டு
சோம்பு                                                  _         அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய்                                  _          ஒன்று
இஞ்சி                                                    _         சிறிய துண்டு
கறிவேப்பிலை                                   _        ஒரு கொத்து
மல்லி தழை                                        _        சிறிதளவு
எண்ணெய்                                           _        பொறித்தெடுக்க  

*** செய்முறை ***

பருப்பை நன்கு கழுவி விட்டு அரை மணியிலிருந்து ஒரு மணி வரை ஊற வைத்தல் போதுமானது.பிறகு வடிக்கட்டியில் நன்கு நீரை அப்படியே வடியவிடவும்.(கொஞ்சம் கூட தண்ணீரே இல்லாமல் இருக்கணும்).

அதற்க்கிடையில் ஈரத்தன்மையற்ற மிக்ஸியில் காய்ந்த மிளகாய்,சோம்பு,பூண்டை தோல் முழுவதுமாக உரிக்காமல் மெல்லிய தோலோடு கழிவியது என இவை அனைத்தையும்  மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை தோலுரித்து நன்கு கழுவி விட்டு மெல்லியதாக அரிந்து வைத்து கொள்ளவும். அதே  போல் பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,மல்லிதழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக பருப்பை போட்டு மிக்ஸியை ஒரே தடவையாக ஓட விடாமல் சற்று விட்டு விட்டு ஓடவிட்டு எடுத்தால் கொரகொரப்பாக இருக்கும்.மைய்ய ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.ஒண்ணு ரெண்டு பருப்பு முழுதாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
அதில் அரிந்து  மற்றும் பொடித்து வைத்திருக்கும் அனைத்தையும் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து  கொள்ளவும்.(இதை அப்படியே தயார் நிலையில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சுடலாம்.ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட்டாலும் நன்றாக இருக்கும்.)

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வரும் வரை,இந்த பருப்பு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து வடையாக மெல்லியதாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் தட்டி கொள்ளவும்.ஓவராக எண்ணெய் சூடேறாமல் ஓரளவிற்க்கு சூடானதும்,தட்டிய வடைகளை போட்டு மிதமான தீயிலேயே சுட்டு பொன்னிறமாக இருக்கும் நிலையில் எடுக்கவும்.

மொறு மொறுவென்று மணமாக இருக்கும் மசால் வடை தயார்.இது நீண்ட நேரம் க்ரிஸ்பியாகவே இருக்கும்.இதனுடன் முருங்கை கீரை  சிறிது சேர்த்து பிசைந்து சுடலாம்.நன்றாக இருக்கும்.சத்தானதும் கூட....

சூடா டீயோ,காஃபியோ போட்டு ஒரு கைய்யில கப் டீ,ஒரு கைய்யில வடை.இது ஒரு கடி இது ஒரு குடின்னு சாப்பிட்டா ஆஹா.... அதுவும் ஜன்னலில் மழையோ,அல்லது நல்ல குளிரோ இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.நோன்பு கஞ்சிக்கும் செமையாக இருக்கும்.

                                             


8 comments:

ஸாதிகா said...

அம்சமா பண்ணிக்காட்டி இருக்கீங்க அப்சரா மசால் வடையை.பவுன்கலரில் எடுத்த் சாப்பிடத்தூண்டுகின்றது நீங்கள் பண்ணிய வடை.

shamima said...

சூப்பர் வடை,அழகா செஞ்சு இருக்கீங்க.மொறு,மொறுப்பா இருக்கும் என்று பார்க்கும் போதே தெரியுது.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா...,
தங்கள் கருத்தை கண்டு மகிழ்ச்சி.
மிக்க நன்றி அக்கா..

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஷமீமா...,நலமா?
தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

சூப்பர் அப்சரா,ஒரு கடி. ஒரு குடி.அசத்தல் அசத்தல்..

apsara-illam said...

மிகவும் நன்றி ஆசியா அக்கா..

அன்புடன்,
அப்சரா.

மகி said...

சூப்பரா இருக்கு வடை! நான் மோஸ்ட்லி பட்டாணிப் பருப்புதான் வடைக்கு போடுவேன்.கடலைப்பருப்பு வடை சுட்டு ரொம்பநாளாச்சு.

apsara-illam said...

நான் பதிவுல சொல்லியிருப்பது போல் என்னவருக்கு இதுதான் ரொ....ம்ப..... ஃபேவரட்...
அதே போல் வெங்காய அடையும்...
இது இரண்டும் செய்து வைத்தால் போதும் போக வர என சாப்பிட்டு கொண்டிருப்பார்.
நன்றி மஹி.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out