Saturday, February 12, 2011

என் குழந்தைகளின் கைவண்ணம்


இந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட அதிபுத்திசாலிகள்.... எல்லா விஷயங்களையும் கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றார்கள்... அதிலும் அவர்களுக்கென்று தனித்து காட்டும் அளவிற்க்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களின் ஆர்வமும்,கவனமும் அதிகம் இருக்கும்.அப்படி என் குழந்தைகளின் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவந்தேன்....

 எனது மூத்த மகனின் பெயர் அர்ஷாத்.... ஒன்பதரை வயதை தொட்டு விட்டான்... நான்காம் வகுப்பை முடிப்பதற்க்கு மும்முரமாக உள்ளான்...
எந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் மிகுந்த நாட்டம் அவனுக்கு.... நிறைய கேட்டு தெரிந்து கொண்டு தன் தம்பி,தங்கைகளுக்கும் சொல்லித்தருவான்.அவனுக்கென்ற மிகுந்த ஆர்வம் உள்ள விஷயம் கிரிக்கெட்.அதனை பற்றி அந்த நிமிஷம் வரை உள்ள செய்திகளை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.எனக்கு கிரிக்கெட்டில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் சொல்வதற்க்காக கேட்டு கொண்டிருப்பேன்.அதுவும் அவன் டாடி இல்லாதபோதுதான்.டாடி இருந்துட்டா அவங்க ரெண்டு பேரும் பயங்கர டிஸ்கஷனில் இறங்கிடுவாங்க.... என்னை விடுங்கப்பா ஆளை என்று அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்.  

Friday, February 11, 2011

மேத்தி தால் மக்கனி


தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை                       _    சிறிய கட்டாக ஒன்று
பாசிபருப்பு                                _    முக்கால் கப் 
வெங்காயம்                              _    ஒன்று
தக்காளி                                      _    பதியளவு
பூண்டு                                         _    3 பல்
மிளகாய்த்தூள்                         _    1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                            _   1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்                    _   1/4 தேக்கரண்டி
சோம்புத்தூள்                              _    1/4 தேக்கரண்டி
சீரகம்                                             _    1/2 தேக்கரண்டி
எண்ணெய்                                    _    5 தேக்கரண்டி

*** செய்முறை ***

Thursday, February 10, 2011

இட்லி வெஜ் உசிலி


தேவையான பொருட்கள்

இட்லி                        _    3
வெங்காயம்             _    1
முட்டைகோஸ்      _    3 தேக்கரண்டி(அரிந்தது)
கேரட்                         _     3 தேக்கரண்டி(அரிந்தது)
சிகப்பு,பச்சை
குடைமிளகாய் }     _  3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்        _   1 தேக்கரண்டி
கறிவேப்பிலை        _   1 கொத்து
எண்ணெய்                 _   3 தேக்கரண்டி

*** செய்முறை ***
இட்லியை நன்கு உதிர்த்து வைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி மற்ற பொடியாக நறுக்கிய காய்களோடு வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வாசனை போக வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி உப்பு சரி பார்த்து விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
சிம்பிள் மற்றும் சுவையான இட்லி வெஜ் உசிலி தயார். 

விரும்பினால் ஒரு கைய்யளவு முருங்கைகீரையை காய்கள் வதங்கியதும் சேர்த்து ஒரு கிளறு கிளறி மற்றவைகளை சேர்த்து இறக்கலாம்.
இங்கு எனக்கு கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை.
ஒரே இட்லியாக சாப்பிட்டு போரடிப்பவர்களுக்கு இதே போல் சத்துள்ளதாக சுலபமான முறையில் செய்து தரலாம்.நிச்சயம் ரசித்து சாப்பிடுவார்கள்.


அன்புடன்,
அப்சரா.

Wednesday, February 9, 2011

மாங்காய் இனிப்பு பச்சடி


தேவையான பொருட்கள்

 மாங்காய்            _    சிறியதாக ஒன்று
 கலர் பவுடர்        _    சிறிதளவு
 சீனி                       _    6 தேக்கரண்டி
 நெய்                      _    2 தேக்கரண்டி
 முந்திரி                 _   6
 கிராம்பு                  _    2
பட்டை                    _    சிறிய துண்டு

 *** செய்முறை ***

 மாங்காயின் தோலை சீவி விட்டு கழுவி மெல்லியதாக சதை பகுதியை சீவி வைத்துக் கொள்ளவும். 
 ஒரு பாத்திரத்தில் மாங்காய் வேகும் அளவிற்க்கு தண்ணீர்எடுத்து கொண்டு அடுப்பில்  வைத்து கொதி வந்ததும்,மாங்காயை போட்டு கலர் பவுடரையும்,உப்பு மூன்று சிட்டிகையையும் சேர்க்கவும்.

மாங்காய் வெந்ததும்,வடிக்கட்டி விடவும்.
 வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும்,கிராம்பு,இரண்டு மூன்றாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் மாங்காயை கொட்டவும்.

உடனே சீனீயையும் சேர்த்து நன்கு மிதமான தீயிலேயே கிளறவும்.
 நன்கு சீனி கரைந்து சுருண்டதும் இறக்கி விடவும்.
 (சீனி அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்றார் போல் சேர்க்கலாம்.)
சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி தயார்.
நெய் சாதம்,கோழிகுழம்பு இவைகளுடன் இதையும் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.




அன்புடன், 
அப்சரா.

Tuesday, February 8, 2011

சுபமான வைத்திய முறைகள் சில

 


இன்றைய அவசர உலகத்தில் உடலில் நோய்களும் அவசர அவசரமாகவே வந்து குடியேறிவிடுகின்றது.யாரை நலம் விசாரித்தாலும் “எங்கே ஏதோ இருக்கேன் இதற்க்கு மருந்து சாப்பிடுகிறேன்.அதற்க்கு மருந்து சாப்பிடுகிறேன்” என்ற பதிலை தான் கேட்க முடிகின்றது.
நோய் எல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் என்ற காலம் போய் இருபதிலிருந்து முப்பதுக்குள்ளாகவே ஆரம்பம் ஆகின்றது.ஏனென்றால் இன்றைய வேலை முறைகளும்,அதனால் ஏற்படும் டென்ஷனுமே காரணம்.மருந்துகள் நிறைய சாப்பிடுவதற்க்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சில கை வைத்தியங்களை தினசரி வாழ்வில் செய்து வந்தால் ஒரு சில உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று ரஷ்யாவில் இருக்கும் Dr.med.karch என்ற மருத்துவர் ஒருவர் நிருபித்து உள்ளார்.அவை என்னவென்று பார்ப்போமா…….
முதலாவதாக **** ஆயில் புல்லிங்**** 


எவ்வாறு  செய்வது :- காலையில் வெறும் வயிற்றில் (தண்ணீர் கூட குடித்திருக்க கூடாது) வாயில் ஒரு ஸ்பூன் ரீஃபைண்ட் ஆயிலோ அல்லது நல்லெண்ணெயோ ஊற்றி வாயை மூடி மெதுவாக வாயின் எல்லா இடங்களிலும் எண்ணெய் படும்படி கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு பதினைந்து முதல் இருபது நிமிடம் வரை செய்து கொண்டிருந்தால் அது கொழகொழப்பின்றி தண்ணீர் நிலையிலும் வெண்மை நிலையிலும் இருக்கும்.அதை துப்பி விட்டு வெது வெதுப்பான தண்ணீரில் வாயை கழுவி விட வேண்டியதுதான்.(கொஞ்சம் கூட விழுங்கி விட கூடாது.)
இதனால் ஏற்படும் பயன் :- இதை தினசரி கடைப்பிடிப்பதால் தலைவலி,பல்வலி,வயிற்று உபாதைகள்,நுரையீரல் பிரச்சனைகள்,ஆஸ்துமா,அசிடிட்டி,அல்ஸர்,மூட்டு வலி போன்றவைகளிலிருந்து நல்ல நிவாரணம் பெற முடியும் என்று கூறுகின்றார்.
இதை ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் செய்யலாம் என நிருபித்து உள்ளதாக கூறுகின்றார்.இதற்க்கு எல்லா சமையல் எண்ணையையும் பயன்படுத்தலாம். குறிப்பாக நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்றும் கூறுகின்றார்.
இரண்டாவதாக *****அசிடிட்டிக்கு*****  
 
என்ன செய்வது :- தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டிலிருந்து பத்து வரை எண்ணிக்கையில் அரிசியை வாயில் போட்டு முழுங்க வேண்டும்.மெல்ல கூடாது.
இதனால் ஏற்படும் பயன் :-  இது போல் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் அசிடிட்டி தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும்.மூன்று மாதங்கள் கடைப்பிடிப்பின் இந்த உபாதையிலிருந்து முற்றிலுமே விடுபடலாம் என்கிறார்.
மூன்றாவதாக **** கொலஸ்ட்ரால்****
இந்த கொலஸ்ட்ரால் தான் மிக பெரிய வியாதியாக உலாவி கொண்டு இருக்கின்றது.இது இருந்தால் நிச்சயம் இரத்த கொதிப்பு,ஹார்ட் சம்பந்தமான நோய்கள் இருக்கதான் செய்யும். 

என்ன செய்வது :- தினமும் நாம் சாப்பிட்டதற்க்கு பிறகு இந்த சுப்பாரியை(அதாவது படத்தில் உள்ளது போல் எந்த ஒரு வாசனை பொருளோ,வேறு ஏதும் கலக்காத வெறுமென இருக்கும் சுப்பாரி துண்டுகள்)நன்கு இருபதிலிருந்து நாற்பது நிமிடம் வரை மென்று கொண்டிருக்க வேண்டும்.சாறு மட்டுமே விழுங்க வேண்டும்.நாற்பது நிமிடம் கழித்து சக்கையை துப்பி விட வேண்டும்.
இதனால் ஏற்படும் பயன் :- நாம் மென்று விழுங்கும் சாறு உள்ளே சென்று இரத்தத்தின் அடர்த்தியை,கொழுப்பை குறைத்து லேசான இரத்த ஓட்டத்திற்க்கு வழி வகுக்கின்றது.இந்த இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே இதயம் சம்பந்தமான  பிரச்சனைகள்,இரத்த கொதிப்பு இவைகள் வராமல் இருக்கும்.
நான்காவதாக ***** இரத்த கொதிப்பிற்கானது ****
   இது பெரும்பாலானோர் அறிந்ததுதான்.

என்ன செய்வது :- தினந்தோறும் காலையில் உணவு எடுத்து கொள்ளும் முன்பாகவே எட்டிலிருந்து பத்துவரை உள்ள வெந்தயத்தை தண்ணீருடன் விழுங்க வேண்டும்.
இதனால் ஏற்படும் பயன் :- இரத்த கொதிப்பை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
ஐந்தாவதாக  ***** சர்க்கரை நோய்(டயாபிடீஸ்) ****

             
என்ன செய்வது :- சர்க்கரை நோய் உள்ளவர்கள் பால்,சர்க்கரை சேர்க்காமல் வெறும் டீத்தூளை தண்ணீர்ல் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிப்பதே மிக சிறந்தது.சிலர் எலுமிச்சை இதனுடன் கலந்து ருசிக்காக குடிப்பார்கள் அதுவும் கூடாது.வெறும் கறுப்பு டீயாக தான் (சுலைமானி என்று அழைப்பர்) குடிக்க வேண்டும்.
அதே போல் வெண்டைக்காயை கழுவிவிட்டு முதல் நாள் இரவில் தண்ணீரில் இரண்டாக அரிந்து ஊற வைத்து விட வேண்டும்.பின்பு மறுநாள் காலை உணவு சாப்பிடுவதற்க்கு முன்பாகவே  இந்த ஊற வைத்திருக்கும் தண்ணீரை மட்டும் அருந்த வேண்டும்.

இதனால் ஏற்படும் பயன் :- கறுப்பு டீ குடிப்பதால் சிறுநீரக பை நன்கு வேலை செய்ய உதவியாக இருக்கின்றது.எனவேதான் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வெண்டைக்காயை ஊற வைப்பதால் அதன் சத்துக்களை தண்ணீர் பெற்று கொண்டிருக்கும்.இந்த தண்ணீர் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.உடலிற்க்கு மிகவும் நன்று என்று பரிசோதனை செய்து பார்த்து பலன் பெற்ற டாக்டர் கூறுகின்றார்.


இதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பொருட்களுமே நமது வீட்டில்,எளிதில் கிடைக்க கூடியவைகள்.செய்வது என்பது எளிதானவைதான்....எனவே இதை முயன்றுதான் பார்ப்போமே…..
இது எனக்கு மெயிலில் ஆங்கில வடிவில் வந்தது.இதை இங்கே வெளியிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று மொழி பெயர்த்து அனுப்பியிருக்கின்றேன்.




அன்புடன்,
அப்சரா.

Monday, February 7, 2011

சிம்பிள் சிக்கன் கிரேவி


தேவையான பொருட்கள்

சிக்கன்                           _   1/4 கிலோ
வெங்காயம்                 _   ஒன்று
சில்லி சாஸ்                 _   ஒரு தேக்கரண்டி
 மிளகுதூள்                    _    ஒரு தேக்கரண்டி
 கரம் மசாலாத்தூள்     _    1/4 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்             _    1/2 தேக்கரண்டி
 இஞ்சி,பூண்டு விழுது  _    1 தேக்கரண்டி
 எண்ணெய்                       _  நான்கு தேக்கரண்டி
 கறிவேப்பிலை               _   ஒரு கொத்து
 மல்லி தழை                    _    சிறிதளவு

*** செய்முறை ***

சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு,பின் சில்லி சாஸ்,தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு சிக்கனையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூன்று நிமிடம் மிதமான தீயீலேயே வதங்க விடவும்.
பிறகு சிறிதளவே தண்ணீர் சேர்த்து மல்லி தழை சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,குக்கர்வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் திறந்து பார்த்து தண்ணீர் விட்டிருந்தால் அடுப்பில் சிறிது நேரம் வைத்து திக்கான கிரேவி ஆனதும் இறக்கவும்.
சிம்பிளான சுவையான சிக்கன் கிரேவி தயார்.
இதை சாதத்திற்க்கும் பக்க உணவாகவும்,சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்க்கும் தொட்டு கொள்ளலாம்...

அன்புடன், 
அப்சரா.

Sunday, February 6, 2011

துபாயின் DSF கோலாகலம்





வளைகுடா நாடுகளில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவந்ததில் யு.ஏ.இ அமீரகமும் ஒன்று.அதிலும் குறிப்பாக துபாயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது ஆச்சர்யமே..... சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து பார்வையிடும் நாடாகவும்,தங்கத்திற்க்கு பெயர் பெற்ற நாடாகவும் இருந்து வருவது குறிப்பிட தக்கது.



 இங்கே வருடந்தோறும் DSF எனப்படும் dubai shopping festival மிகவும் அனைவராலும் எதிர்ப்பார்க்கபடும் ஒன்றாகும்.இதை 1996 ம் வருடம் பிப்ரவரி 15-ம் தேதி முதன் முதலாக  கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும்...ஒரு மாதக்காலம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.துபாய் முழுவதுமே போகின்ற ரோடுகள் எல்லாம் வர்ண விளக்குகளாலும்,விளம்பர அட்டைகளாலுமே அலங்கரிக்கபட்டிருக்கும்.
எந்த மாலுக்கும்,கடைகளுக்கும் சென்றாலே DSF SALE என்றே அறிவிப்பு பலகைகள் மின்னும்.ஜனவரி முதல் பிப்ரவரி வரை வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும்.
 ரிகா...,மொர்ரகாபாத் என்று அழைக்கப்படும் இரு பகுதிகளில் இந்த ஒரு மாதமும் நம் ஊர் திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும்.உள்ளே கார் கொண்டு போகும் அனைவரும் அவ்வளவு சீக்கிரம் அந்த ஏரியாவை விட்டு வெளியே வந்து விட முடியாது.... அவ்வளவு கூட்டமாக இருக்கும்.
பல கலை நிகழ்ச்சிகள்,பலவிதமான கடைகள்,ஆங்காங்கே பார்வையாளர்களின் பசியார சிறு சிறு கடைகள்,குழந்தைகளை கவரும் விளையாட்டு ஆவணங்கள்,சர்க்கஸ்கள் என சும்மா கலைகட்டும்னு வச்சிக்கங்க...
அதே போல் இந்த வருடமும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரை என்று துபாய் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டு,அதன் படியே நடைப்பெற்று கொண்டும் இருக்கின்றது....

நான்  இங்கு இருந்து கொண்டிருக்கும் இந்த பத்து வருடத்தில் முழுவதுமாக ரசித்து ஜாலியாக பார்த்தது என்னவோ  குழந்தைகள் வரும் வரைதான்.... அதன் பின் வெளியில் போவது என்பதே குறைந்து விட்டது...போனால் அடுத்து பத்து நாட்களுக்கு மருந்தும் கைய்யுமாகதானே இருக்க வேண்டியுள்ளது... சரி அது எதற்க்கு இப்ப...

இந்த வருடம் சரி வெளியில் போக வேண்டாம்... மால் எங்கேயாவது சென்று ஏதேனும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்து சென்றோம்.( 5-ம் தேதி சனிக்கிழமை அன்று)எல்லா மால்களிலுமே ஏதேனும் கலை நிகழ்ச்சிகள்,ஆட்டம் பாட்டம் என நடந்து கொண்டுதான் இருக்கும்.எனவே நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு மிர்தீஃப் எனப்படும் இடத்தில் திறக்கப்பட்டிருந்த  சிட்டிசெண்ட்டருக்கு இதுவரை செல்லாததால் அங்கே சென்றோம்....


துபாயில் வித்தியாசமாகவும்,அழகாகவும் பல மால்கள் இருப்பது போன்றே... இந்த சிட்டி செண்ட்டரும் அதிலும் மிக பிரமாண்டமாகவும் இருந்தது.இரவு நேரங்களில் அந்த இடத்தை கடந்து செல்லும்போதே கார் பார்க்கிங்கின் விளக்கு வெளிச்சம் மட்டுமே கண்கூசும் அளவிற்க்கு அதிக அளவில் இருக்கும்.உட்புறம் கேட்க்கவா வேண்டும்..? 

























அப்பப்பா... மிக அழகான வடிவமைப்போடும்,மேல்பகுதிகளில் கண்கவரும் வெவ்வேறு வகையான டிசைன்களோடும் காட்சி அளித்தது.சுருக்கமா ஒரு கிராமத்தார் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால்...  “இந்த இடத்தை முழுசா சுத்தி வரவே மூணு வேளையும் கட்டி சோறு கட்டிட்டுள்ள வரணும்” என்பது போன்ற இடமாகும்.... குழந்தைகளை கூட்டிட்டு முழுவதும் எங்களால் உலா வரமுடியவில்லை என்றாலும் ஓரளவிற்க்கு பார்வையிட்டு வந்தோம்.
மால்கள் என்றாலே வெளிநாடுகளில் நிச்சயம் இருப்பது ஃபுட் கோர்ட்டும்,ப்ளே ஸ்டெஷனும்தான்.இங்கும் அது இருந்தது.குழந்தைகளை விளையாட நாமும் அங்கே எட்டி பார்க்காமல் இருக்க முடியவில்லை.நுழைந்த ஆரம்பத்திலேயே வியக்கதக்க ஒரு காட்சி கண்முன்னே.... ஆமாங்க... ஒரு கண்ணாடி சூழப்பட்ட அறைக்குள் மனிதன் பறந்து கொண்டிருக்கின்றாரே... அவரை பிடித்து கொண்டு இன்னொருவரும் சேர்ந்து பறந்து கொண்டிருந்தார்.... என்னவென்று கவனிக்கையிலேதான் தெரிந்தது... அந்த பொழுதை களிக்கும் வித்தையின் பெயர் ஐ-ஃப்ளை(i fly) என்று... அதற்க்கென்று ஒரு உடையை அவர்களுக்கு கொடுத்து அணிய சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு போய் நிற்க்க சொல்லி அதி வேகமான காற்றை செலுத்துகிறார்கள்.அது  அவர்களை பறக்கசெய்கின்றது.

சிறுவயதினருக்கும்,கொஞ்சம் பயப்படுவர்களுக்கும் ஒரு ஆள் பிடித்து கொள்கிறார்... தைரியசாலிகள் பிடிமானம் இல்லாமல் அதி வேகமாகவும் உயரமாகவும் பறக்கின்றார்கள்.என்னமா யோசிக்கிறாங்கன்னு நினச்சிட்டு நகர்ந்து போய் குழந்தைகளை விளையாட வைக்க ஆயுத்தமானோம்.


அரபியர்கள் ஐநூறு,ஆயிரம் திர்ஹம் என்று செலவழித்து விளையாடவைக்கும் இடமாச்சே.... இங்கு அதுவும் சர்வசாதாரணமாகவே காசு கரியாகும்... சரி நம் பிள்ளைகளும் கொஞ்சம் விளையாடி மகிழட்டும் என்று விட்டோம்.(அதுவே 100 திர்ஹம்) அந்த இடத்திலேயே அரபியர்களின் மெய்டுகளின் உதவியோடு ஒன்று,இரண்டு வயது குழந்தைகள் எல்லாம் விளையாட ஒரு தனி இடம் வேறு உண்டு....
இதெல்லாம் உங்க பார்வைக்கு ஒரு சில ஃபோட்டோக்கள் இங்கே கொடுத்துள்ளேன்....

இதெல்லாம் முடித்து வெளியே மற்றொரு இடம் நோக்கி சென்றோம்.
இங்கே DSF க்கான சிறப்பு நிகழ்ச்சியில் இன்று சீன,ஜப்பானியர்களின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நாட்டில் இவர்களின் பங்களிப்புகள் அதிகம் இருக்கும் என்றே சொல்லுவேன்.என்ன திறமை அவர்களுக்கு.... சின்ன சின்ன விஷயங்கள் கொண்டே நிறைய அபூர்வ அமைப்புகளை தருபவர்கள்.... இந்த நிகழ்ச்சியில் இசையின் அழகான வெளிப்பாடு.... அதிர வைக்கும் இசை இல்லை.... பிரமாண்டமான கீ போர்ட்,ட்ரம்ஸ் என்றெல்லாம் இல்லை.ஒரு புல்லாங்குழல்,அவர்களின் பாரம்பர்ய இசைகருவியாக இரண்டு..(எனக்கு அதன் பெயர் தெரியதுங்கோ....) அதை வைத்து அவர்களின் திறமையை வெளிபடுத்தியதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது... 


இதன் நடுவே நடனம் வேறு அழகிய உடைகளோடு அழகாக பொம்மை போன்று அசைந்தாடி சென்றனர்.ஏதோ இந்த வருட   DSF-ல் இதையாவது கண்டு களிக்க முடிந்ததே என்று நினைத்து அதனை உங்களுக்கு ஒரு சில படங்களை க்ளிக் செய்து வந்தேன்.இதோ அதுவும் உங்கள் பார்வைக்காக....
இன்னும் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இந்த DSF-ல் இருக்கின்றது.... அவற்றையெல்லாம் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பல புகைபடங்களோடு சொல்கிறேன்..... இப்போது பொறுமையாக இதை படித்தவர்களுக்கு நன்றியை சொல்லி கொண்டு விடைபெறுகிறேனுங்க.....


அன்புடன், 
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out