Showing posts with label குருமா.குழம்பு வகைகள். Show all posts
Showing posts with label குருமா.குழம்பு வகைகள். Show all posts

Monday, August 24, 2015

செட்டிநாடு சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு பெரும்பாலும் ஒரே செய்முறையில் செய்வது வழக்கம் என்றாலும்,ஒரு சில ஊர்களில் செய்யும் செய்முறை பலரையும் கவரும்படி இருக்கும்.
அதிலும் செட்டிநாடு ஸ்பெஷல் உணவு என்பது நம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்... அதில் பலவகை சமையல் குறிப்புகள் உண்டு... அப்படி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் செய்து காண்பிக்கப்பட்ட சிக்கன் குழம்பு செய்முறை என்னை மிகவும் கவர்ந்தது.... அந்த முறையில் செய்தும் பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... பலருக்கும் தெரிந்திருந்திருக்கலாம்...
இருப்பினும் தெரியாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்குமல்லவா? அதுவுமில்லாமல் ஒரே செய்முறையில் செய்யாது இப்படி மாற்றி செய்து பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்...
சரி வாங்க செய்முறைக்கு போவோம்....


                 செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்
**********. ***************
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி(tsp)
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி(tsp)
மல்லித்தழை - சிறிதளவு




வறுத்து அரைக்க:-)
****************
சின்ன வெங்காயம் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி(tsp)
பட்டை - இரண்டு இன்ச் அளவு - 2
கிராம்பு - 3
காய்ந்த மிளகாய் - 4
பச்சைமிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு இன்ச் அளவு - 3 துண்டுகள்
பூண்டு - 10 பல்
மிளகு - 2 தேக்கரண்டி(tsp)
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி(tbsp)
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
தாளிக்க;
*******
எண்ணெய் - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1



செய்முறை:-)
************



ஒரு வானலியில் நல்லெண்ணெயை ஊற்றி வறுக்க கொடுத்தவற்றில் பட்டை கிராம்பு முதலில் போட்டு பின்பு சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு பொன்னிறமாகி வாசம் வந்ததும்,சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அறிந்து சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதுமே நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதுவும் வாசம் வரும்போது தேங்காய் துருவல்,மிளகு சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின் கறிவேப்பிலை இலைகளையும், மல்லித்தூளையும் சேர்த்து நன்கு பிரட்டி வாசம் வர வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொறிந்ததும், அரிந்த வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.வதங்கியதும்,தக்காளியை அரிந்து சேர்த்து வதக்கி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,கழுவி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதங்கவிடவும்.
கோழி வதங்கும் நேரம் ஆற வைத்திருக்கும் வறுத்தவற்றை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
இப்போது வதங்கிய கோழியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மல்லிதழை நறுக்கி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
சுவையான மணமான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்....


***இது நெய் சாதம்,பரோட்டா,சப்பாத்தி,இடியாப்பம் இவற்றிற்கு சூப்பராக இருக்கும்...***


Wednesday, January 18, 2012

பருப்பு கடைசல் ரசம்

மங்கையர் உலகம் வலைப்பூவில் நடக்கும் ஜனவரி மாத போட்டியில் நானும் கலந்து கொள்ளலாமென ஆசைப்பட்டு அதன் முதல் முயற்ச்சியாக இந்த சமையல் குறிப்பை வெளியிடுகின்றேன்.
இந்த சமையல் பலரும் அறிந்த, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகையாகும்.அவற்றை இந்த போட்டியின் ஒரு தலைப்பான “பாரம்பர்ய சமையல்”பகுதிக்காக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.இனி அதன் செய்முறை விளக்கத்தை பார்வையிடுவோம்.




                                               பருப்பு கடைசல் ரசம்


தேவையான பொருட்கள்


பாசி பருப்பு _    ஒரு டம்ளர்
தக்காளி         _    பெரியதாக இரண்டு
தேங்காய்த்துருவல் _     கால் கப்
புளி --------------------------------சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்த்தூள்                 _     இரண்டு ஸ்பூன்
 பூண்டு _     பண்ணீரண்டு
மல்லித்தழை _     சிறிதளவு


வறுத்து பொடித்துக் கொள்ள:
மிளகு _     ஒரு தேக்கரண்டி
சீரகம் _      ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் _       நான்கு


தாளிப்பதற்க்கு:
கறிவடகம் _       இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை _       இரண்டு கொத்து
பெருங்காயம் _       அரை ஸ்பூன்
நெய் _       ஒரு தேக்கரண்டி
எண்ணெய்   _       மூன்று தேக்கரண்டி


செய்முறை:




முதலில் பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்த்தூளும்,பூண்டு ஐந்து பல்லும் போட்டு கொஞ்சம் திப்பி திப்பியாக வேக விடவும்.
பிறகு அதை நன்கு தண்ணீர் வடிய விடவும்.அந்த தண்ணியில் தக்காளியை கழு்விவிட்டு நான்காக அரிந்து போடவும்.
புளியை ஊற வைக்கவும்.


நன்கு தண்ணீர் வடிந்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய்த்துருவலை சேர்த்து வெந்த பூண்டு மசிய எல்லாம் ஒன்று சேர ஒரு கரண்டியால் பருப்பை நன்கு மசிக்கவும்.




நன்கு கலந்ததும்,ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவிடம் சிறிது போட்டு பெருங்காயத்தூள் மிக சிறிதளவு,கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும் கலந்தை பருப்பை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.


இப்போது ரசத்திற்க்கு என்ன செய்யலாம் என பார்க்கலாம்.


புளியை நன்கு கரைத்து வி்ட்டு அதனுடன்,வடித்த பருப்புத்தண்ணீரையும் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவைகளை நன்கு பொடித்து அதனுடன் பூண்டையும் சேர்த்து நசுக்கி எல்லாவற்றையும் புளி கரைசலோடு போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
(தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்)
அவற்றை அடுப்பில் வைத்து பெருங்காயத்தூள்,பொடியாக அரிந்த மல்லிதழை போட்டு கொதிக்க விடவும்.


நன்கு இரண்டு கொதி கொதித்ததும்,இறக்கி விட்டு மற்றொரு வானலியில் எண்ணெய் விட்டு கறிவிடம் கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கலந்து விடவும்.
இதோ சுவையான மணமிக்க பருப்பு கடைசல் ரசம் தயார்.



சூடான குழைந்த சாதத்தி்ல் நெய் ஊற்றி கடைந்த பருப்பு சிறிது போட்டு ரசம் நன்கு ஊற்றி சாதத்தை பிசைந்து அதனுடன் தொட்டுக்கொள்ள ஒரு பக்கம் உருளைகிழங்கு வறுவல்,மற்றொரு பக்கம் அப்பளம் என சாப்பிட சும்மா சத்தமில்லாமல் சாப்பாடு போய் கொண்டிருக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் எங்கள் ஊர் பகுதிகளில் மின்னலை என்பதை சேர்த்து கொதிக்க விடுவர்.
அது ஒரு தனி மணத்தை கொடுக்கும்.
இதுவே எங்கள் ஊர் பாரம்பர்ய சமையல்களில் ஒன்றாகும்.


நன்றி.  


Wednesday, November 9, 2011

மட்டன் சூப்



தேவையான பொருட்கள்
   
மட்டன் நெஞ்செலும்பு ........................... 2 துண்டுகள்
சின்ன வெங்காயம் .................................. பத்து
தக்காளி .......................................................... ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை .............................. ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் ............................................... ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் .................................................. ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் .................................... கால் ஸ்பூனுக்கும் குறைவாக
பட்டை ............................................................ மிக சிறிய துண்டு
நல்லெண்ணை............................................ மூன்று தேக்கரண்டி
மல்லிதழை .................................................. சிறிதளவு


செய்முறை




மட்டன் எலும்பை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி விட்டு மிக்ஸியில் விட்டு விட்டு ஒன்றிரண்டாக (நைசாக இல்லாமல்)சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.



ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து ,எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு பின்பு இஞ்சி,பூண்டு அரவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.



ஓரளவு எண்ணெய் மினுமினுக்க வதங்கியதும்,பச்சைமிளகாய் சேர்த்து கூடவே தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி,மட்டன் எலும்பையும் சேர்த்து ஒரு நிமிடம் சிம்மிலேயே வதக்க விடவும்.
பிறகு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பும்,அரிந்த மல்லி தழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை வைத்து பின்பு இறக்கவும்.



சுவையான முறையில் மட்டன் சூப் தயார்.
இட்லி,தோசை,சாதம் இவைகளில் ஊற்றி சாப்பிடவும் சரி,சும்மாவே குடிக்கவும் சரி சுவை நன்றாகவே இருக்கும்.
இந்த செய்முறையிலேயே ஆட்டு கால்,கோழி இவைகளிலும் சூப் செய்யலாம்.அதற்க்கேற்றார் போன்றே சுவை நன்றாக இருக்கும்.மட்டன்,சிக்கன் இவைகளின் அளவிற்க்கேற்றார் போல் இதர பொருட்களின் அளவையும் அதிகரித்து கொள்ள வேண்டும்.


நன்றி.


Tuesday, March 22, 2011

திடீர் இட்லி சாம்பார்

நாம் எங்கேயாவது வெளியே போய் விட்டு வரும்போதோ... அல்லது திடீர் விருந்தாளிகள் இரவு வந்திருக்கின்றார்கள் என்றோ இருக்கும் சூழ்நிலையில் இட்லி மாவோ...,அல்லது மாவுதான் கடையில் விற்க்குமே உடனே அதை வாங்கியோ இரண்டு முறையாக இட்லியை வேக வைத்து எடுப்பதற்க்குள் இந்த சாம்பாரை செய்து, கூடவே ஒரு தேங்காய் சட்னியும் செய்து வைத்து விடலாம்.இங்கு நான் செய்து காட்டியிருக்கும் முறை  அந்த கால செய்முறையாகும்.அதிக நபர்கள் உள்ள கூட்டு குடும்பமாக அப்போதெல்லாம் வாழ்ந்து வந்ததால் சாம்பாரை நீட்டி வைக்க  இப்படி செய்திருக்கின்றார்கள். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


*** தேவையான பொருட்கள் ***
 பாசி பருப்பு                              _      ஒரு கப்
சிறிய வெங்காயம்                 _       15
தக்காளி       ( பெரியதாக )    _     ஒன்று
பச்சை மிளகாய்                      _      ஒன்று
மிளகாய்த்தூள்                       _      இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                         _       ஒரு தேக்கரண்டி
மல்லிதழை                            _        சிறிதளவு
இட்லி மாவு                             _       இரண்டு மேசைக்கரண்டி

*** தாளிக்க ***
எண்ணெய்                               _         4 தேக்கரண்டி
கடுகு                                         _          ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்                   _          இரண்டு
கறிவேப்பிலை                       _         ஒரு கொத்து
பெருஞ்சீரகம்( சோம்பு )        _         கால் தேக்கரண்டி   

*** செய்முறை ***

பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்த்தூள், பாதி மிள்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சிம்மிலேயே வைத்துக் கொண்டு கொதி வருவதற்க்குள்ளாக வெங்காயத்தையும் உரித்து விட்டு கழுவி நீளவாக்கில் அரிந்து அதில் பாதியையும்,தக்காளியையும் பொடியாக அரிந்தும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.(அவசரம் இல்லையெனில் பாத்திரத்திலேயே வேகவிடலாம்.)

பிறகு குக்கரை திறந்து அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.அதற்க்கிடையில் சோம்பை ஒன்றிரண்டுமாக நுணுக்கியும்,இட்லி மாவை சிறிது தண்ணீரில் கரைத்தும் வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து  மீதி அரிந்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிவிடவும்.பிறகு மீதி மிளகாய்த்தூளையும் சேர்த்து தாளித்து சாம்பாரை ஊற்றவும்.

பின்பு கரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி கலக்கி விட்டு ,மல்லி தழையை அறிந்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

இட்லி,தோசைக்கு  இந்த சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும்.



       

Tuesday, March 8, 2011

சன்னா சால்னா...,


*** தேவையான பொருட்கள் *** 
வெள்ளை அல்லது 
காபூலி சன்னா         }                    _       அரை கப்
வெங்காயம்                                   _        ஒன்று
தக்காளி(சிறியதாக)                    _        ஒன்று  
பச்சைமிளகாய்                             _         ஒன்று  
இஞ்சி,பூண்டு விழுது                  _         ஒரு தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்                              _         ஒரு தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                                _         அரை தேக்கரண்டி
சோம்புத்தூள்                                  _         ஒரு தேக்கரண்டி
எண்ணெய்                                        _         6 தேக்கரண்டி
கறிவேப்பிலை                                _         ஒரு கொத்து
மல்லி,புதினா தழை                       _         சிறிதளவு

*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல்                      _     அரை கப்
முந்திரி                                              _     5
பட்டை                                               _     சிறியதுண்டு
கிராம்பு,ஏலக்காய்                           _     தலா ஒன்று 
மிளகுத்தூள்                                     _     ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள்                                          _     ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள்                                     _     இரண்டு தேக்கரண்டி

*** செய்முறை ***

சன்னாவை நன்கு ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை,மல்லி,புதினா தழைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதங்க விடவும்.

அதன் பின் தூள் வகைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறியிருக்கும் சன்னாவை தண்ணீர் இல்லாமல் போட்டு நன்கு கிளறி மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.

அதற்க்கிடையில் அரைக்க கொடுத்தவைகளை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.

ஐந்து நிமிடம் கழித்து வதங்கிய சன்னாவோடு அரைத்தவைகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது அடுப்பில் வைத்து இறக்கினால் மினுமினுப்பாக இருக்கும்.(கட்டாயம் இல்லை) 
 இதை பரோட்டா,சப்பாத்தி பூரி இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

### குறிப்பு ### 
இதில் இன்னொரு முறையும் செய்வதுண்டு.முந்திரியையும் தவிர்த்து தேங்காயையும் குறைத்து கொண்டு வேர்க்கடலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொண்டு எல்லாவற்றையும் சிறிது வதக்கி அரைத்தும் ஊற்றலாம்.இது டயட்டானவர்களுக்குன்னு செய்யலாம்.டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.









Sunday, March 6, 2011

வெள்ளை மட்டன் குருமா..,


எங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...
அதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை  மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குறிப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.


*** தேவையான பொருட்கள் ***


மட்டன்                     _         முக்கால் கிலோ
தயிர்                          _         முக்கால் கப்
வெங்காயம்             _         பெரியதாக ஒன்று
தக்காளி                    _          அரிந்தது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்      _         மூன்று
பட்டை                       _         இரண்டு இன்ச் அளவு
ஏலக்காய்                  _         ஒன்று
மல்லி,புதினா தழை _      சிறிதளவு
எண்ணெய்                  _       5 தேக்கரண்டி
நெய்                              _       2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்            _       முன்று சிட்டிகை
எலுமிச்சை பழம்       _      ஒன்று

*** அரைத்து கொள்ள ***
 தேங்காய்த்துருவல்    _    அரை கப்
வெள்ளை மிளகுத்தூள் _   4 தேக்கரண்டி
முந்திரி                             _    10
பாதாம்                               _   15

*** செய்முறை ***  


மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.

பிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.


சுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.

 இதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.




Tuesday, February 22, 2011

நண்டு குருமா



*** தேவையான பொருட்கள் ***
நண்டு            _   2 கிலோ
வெங்காயம்       _   இரண்டு
தக்காளி            _   பெரியதாக ஒன்று
பச்சைமிளகாய்     _   இரண்டு
தேங்காய் பால்     _   2 டம்ளர்
இஞ்சி,பூண்டு விழுது_   1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்      _   2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்    _   ½ தேக்கரண்டி
எண்ணெய்          _   100 மிலி
மல்லிதழை         _  சிறிதளவு
கறிவேப்பிலை       _  ஒரு கொத்து
*** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்    _  ஒரு கப்
முந்திரி               _  6
பாதாம்                _  6
பூண்டு                 _  5 பல்    
மஞ்சள்த்தூள்           _   2 தேக்கரண்டி
மிளகுத்தூள்            _   1 தேக்கரண்டி
மல்லித்தூள்            _   3 தேக்கரண்டி
சீரகத்தூள்              _   2 தேக்கரண்ட
சோம்புத்தூள்            _    1 தேக்கரண்டி

*** செய்முறை ***

நண்டின் கழிவுகளை அகற்றிவிட்டு தண்ணீரில் அதிக நேரம் வைத்திருக்காமல் நன்கு கழுவி தண்ணிரை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
பாதாமை தோலுரித்து அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்து  நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பின்பு அதை ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து விட்டு மல்லிதழையை அரிந்து சேர்த்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து (நண்டை பிரட்டிகொதிக்க விட தாராளமாக இருக்க வேண்டும்.)எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.எல்லாம் நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியபின்,கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி நண்டையும் தண்ணீர் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து அதில் போட்டு கொதிக்க விடவும்.(மூட வேண்டாம்)
இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே இருபது நிமிடம் வைத்திருந்தால் நல்ல மணத்துடன் எண்ணெய் விட ஆரம்பிக்கும்.
பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கவும்.


சுவையான ,ரிச்சான நண்டு குருமா தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் படி இருக்கும்.
இந்த குருமாவை இடியாப்பம்,இட்லி,தோசை இவைகளுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

நல்ல முருங்கக்காயை நண்டு போடும்போதே சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்.    





Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out