Showing posts with label மனதில் உதித்தவைகள். Show all posts
Showing posts with label மனதில் உதித்தவைகள். Show all posts

Friday, August 3, 2012

சிறப்பு மிக்க ரமலான்

இவ்வுலக மக்கள் நம் அனைவர் மீதும் இறவனின் சாந்தியும்,சமாதானாமும் நிலவட்டுமாக....

வலைப்பூ சகோதர சகோதரிகளே,,, எப்படியிருக்கீங்க பா.....

நான் எனது பக்கத்திற்க்கு பதிவு போட்டும்,மற்றவர்கள் பக்கத்திற்க்கு வந்து பார்வையிட்டு பதில் அனுப்பியும் பல நாட்கள் ஆச்சு.... மன்னிக்கவும்.அதற்க்காக என்னை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.அடடே நான் சொல்ல மறந்துட்டேனே....





எல்லோருக்கும் சிறப்பான ரமலான் வாழ்த்துக்கள்.... (இவ்வளவு லேட்டாவா சொல்றதுன்னு யாரும் முறைக்காதீங்கப்பா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்)

இன்றோடு ரமலானின் பதினான்காவது நாள் ஓடிக் கொண்டிருக்கின்றது.இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு மிகவும் சிறப்பாகவே போய் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.மற்ற சகோதர,சகோதரிகளும் அருகில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் இஃப்தார் நேரங்களில் கலந்து கொள்ளலாமே...அதுவும் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.நான் துபாயில் இருக்கும் போது எனது தோழிகள் இரண்டு குடும்பத்தினர் விரும்பி வந்து கலந்து கொள்வார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.இந்த இரண்டு வருடங்களாக நான் அதை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.அரபு நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் ஒரு தனி சிறப்புதான்...இஃப்தார் நேரங்களில் பள்ளிகளில் அதிக விஷேஷமாக இருக்கும்.அந்த நேரத்தில் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டிருந்தாலும் கூட அங்கே சில பேர் தேடி வந்து ஒரு பாட்டில் தண்ணீரும்,பேரிச்சைபழமும்,அத்துடன் ஏதேனும் பசியாற்றும் திண்பண்டமும் வைத்த பேக்கை தந்து விட்டு செல்வார்கள்.எல்லா பள்ளிகளிலும் இதே போல் மிகவும் அழகிய முறையில் தொழுகை நடக்கும்.பெண்களுக்கென்ற தனி இடம் எல்லா பள்ளிகளிலும் அழகிய முறையில் அமைத்திருப்பார்கள்.அங்கு நான் இருந்த நாட்கள் மிகவும் அழகிய அனுபவம் வாய்ந்தது.

இங்கு நம் பிறந்த ஊரில் ரமலான் நாட்கள் அது ஒரு வித பாணியில் செல்லும்.கூட்டு குடும்பமாக இருக்கும் வீடுகளில் இஃப்தார் நேரமானாலும் சரி,இரவு நேர தொழுகையானாலும் சரி ஒன்று சேர செயல்படுவது என்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.நம்மோடு நம் குழந்தைகளுக்கு அது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.எனவே நாம் ஒவ்வொருவரும் இந்த மாதத்தை அழகிய முறையில் ஒவ்வொரு நாட்களையும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்வோம்.

இறைவனின் நாட்டத்தோடு நம் அனைவருக்கும் இந்த மாதம் முழுவதும் நல்லபடியாக அமைந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக ஈத் பெருநாளை கொண்டாடுவோமாக....






Wednesday, March 30, 2011

அன்பான சான்றிதழ் தர அழைக்கிறேன்...

இந்த சான்றிதழை 
சகோதரி.திருமதி.ஜலீலா அவர்களுக்கும்,(சமையல் அட்டகாசங்கள்)
சகோதரி.திருமதி.ஆசியா உமர் (சமைத்து அசத்தலாம்)
சகோதரி.கீதா ஆச்சல் ( என் சமையல் அறையில்)அவர்களுக்கும்....
 அன்போடு அளிக்கின்றேன்....


இந்த சான்றிதழை சகோதரி.திருமதி.மஹி(மஹிஸ் ஸ்பேஸ்)
சகோதரி.திருமதி.ரேவா (காரசாரம்)
சகோதரி.திருமதி.இமா (இமாவின் உலகம்)
சகோதரி.திருமதி.சங்கீதா நம்பி (Recipe-excavator)
சகோதரி.திருமதி.சவிதா (சவிதா’ஸ் கிச்சன்)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகிறேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.ஸாதிகா (எல்லா புகழும் இறைவனுக்கே)
சகோதரி.திருமதி.மலிக்கா (கலைச்சாரல் மற்றும் நீரோடை)
சகோதரி.திருமதி.அஸ்மா (பயணிக்கும் பாதை) 
சகோதரி.திருமதி.ஹூஸைனம்மா (ஹூஸைனம்மா)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகின்றேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.அதிரா (என் பக்கம்)
சகோதரி.திருமதி.ஆமினா (குட்டி சுவர்க்கம்)
சகோதரர்.திரு.ஜெய்லானி (ஜெய்லானி) அவர்களுக்கும்...,
அன்போடு வழங்குகின்றேன்.


இந்த சான்றிதழினை இந்த வலைப்பூவுலகத்தில் பயணிக்கும் அத்தனை சகோதாரி,சகோதரர்களுக்கு அன்போடு வழங்குவதில் பெருமைபடுகின்றேன்.

என் வருகையை ஏற்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி.








Wednesday, March 16, 2011

***பெண் எழுத்து***


பெண் எழுத்துக்கான தொடர் பதிவை எழுத அழைத்த ஸாதிகா அக்கா அவர்களுக்கு முதலில் என் மனம்திறந்து நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைப்பூவில் நான் காலடி எடுத்து வைத்து மூன்று மாதங்களே முடிவடைந்த நிலையில் என்னையும் இது போன்ற தொடர் பதிவுக்கு ஸாதிகா அக்கா அழைத்திருப்பது  நான் செய்த பாக்கியமே....

இதையும் பெண் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.என்னை அழைத்ததற்க்காக இதை நான் சொல்ல வில்லை.ஒரு விஷயங்களை  ஏதோ ஒரு மூலையில்,எந்தந்த நாடுகளிலோ இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் மனதை விட்டு நம் எண்ணங்களை திறந்து வெளியிட்டும்,பரிமாறியும் கொள்ளும் அளவிற்க்கு நம் எழுத்துக்கள் ஆங்காங்கே பதிவிடபடுவதைதான் சொல்லி பெருமை அடைகின்றேன்.இந்த அளவிற்க்கு கூட நம் பெண்களால் எழுத முடியுமா..?அவள் எண்ணங்களை இவ்வாறெல்லாம் எழுத்தாக்கி வெளியட முடியுமா? என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த வலையுலகம் ஒரு நல்ல சான்று.இதுவே நமக்கு கிடைத்திருக்கும் முன்னேற்றம்,வெற்றி  என்பது எனது ஆழமான கருத்து.


நிச்சயமாக ஆண் எழுத்துக்கும்,பெண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவே.... அதை மறுப்பதற்க்குமில்லை,மாறப்போவதுமில்லை.
ஸாதிகா அக்கா சொன்னது போல் சில வரைமுறைகள்,கட்டுப்பாடுகள், இந்த அளவிற்க்கு எழுதுவதே திகட்டாமல் இருக்கும் என்பது போன்றவை பெண் எழுத்துக்கு நிச்சயம் வேண்டும்.அதுவே அவள் முன்னேற்றத்தோடு என்றென்றும் நிலையாக இருக்க உதவிடும்.

ஆணாக இருப்பினும்,பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவை சந்தோஷத்தையும்,நன்மையும்  தரும்.அதே போன்று தான் ஒவ்வொரு பெண்ணின் எழுத்து சுதந்திரமும்...   அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது.

ஏன் இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும்?ஆணுக்கு பொருந்தாதா என்றால் ஒரு ஆணின் எழுத்தை விட ஒரு பெண்ணின் எழுத்து அனைவராலும் கூர்ந்து கவனிக்க படுகின்றது.இதுவே இயல்பான நிலை.அதுமட்டுமின்றி அவளின் எழுத்து அவளை கடந்து வருபவர்களுக்கும்,அவளின் சந்ததினருக்கும் அது ஒரு நல் வழிகாட்டுதலாக அமையும்.இன்றைய  கட்டத்தில் அப்படிதான் பல பெண்களின் எழுத்துக்களை பார்க்கின்றோம். பெருமையடைகின்றோம்.இதே போல் நாம் என்றும் ஆழமான எண்ணங்களையும்,கருத்துக்களையும் அழகான வார்த்தைகளோடும்,நடைகளோடும் கொடுத்தோமேயானால்
*** பெண் எழுத்து *** என்றென்றும் பெருமையோடு இன்னும் பல முன்னேற்றங்களை காணும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும்,என் அன்பான கருத்தும் .

ஸாதிகா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் தோழிகளே... இதை பற்றி யாரேனும் பதிவிட விரும்பினால்  எழுதலாம். 

Monday, February 28, 2011

திடீர் விருந்தினரின் வருகை...


நமது கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.வருபவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு வயிறார சாப்பிட கொடுத்து திருப்திபடுத்த வேண்டும் என்பது காலம்காலமாக பல புராணங்கள் முதற்கொண்டு சொல்ல பட்ட விஷயங்கள்.சின்ன விருந்துகள் முதற்கொண்டு பெரிய பெரிய கல்யாண விருந்துகள் வரை சாப்பாடு என்பது மிக முக்கியம்.அதை எந்த ஒரு குறையும் இன்றி அனைவரையும் திருப்தி படுத்தவே அனைவரும் கவனமாக இருப்பர்.
அதில் சிறு குறை ஏற்பட்டாலுமே அதையும் பிரச்சனையாக பேசுபவர்களும் உண்டு.அந்த அளவிற்க்கு விருந்துக்கென்ற தனி முக்கியத்துவம் நமது மக்களிடையே உண்டு.

அதே போல் தான் சிறிய விருந்துகளுமான நமது வீடுகளில் அவ்வபோது விருந்தினர்களின் வருகையும் ஆகும். வரும் விருந்தினர்கள் முதல் நாளோ... அல்லது அதற்க்கு முன்னதாகவோ வருகையினை தெரிவித்திருந்தார்களேயானால்..., நாம் அதற்க்கு ஏற்றவாறு தயார் நிலையில் சாமான்களை வாங்கி, விதம் விதமாக  சமைத்து ,வீட்டினை முன்னதாகவே சுத்தம் செய்து வைத்து கொண்டு, வந்தவர்களோடு உரையாடி விட்டு, உணவு பரிமாறுதல் என்று மட்டுமே இருப்பது போன்று தயார் நிலையில் இருக்கலாம்.இது வந்தவர்களை சந்தோஷப்படுத்தியதோடு அல்லாமல் ,நம் மனதிற்க்கு முழு திருப்தியை அழிக்கும்.


ஆனால் சொல்லாமல் சிலர் திடீர் வருகையாக வருபவர்களும் உண்டு. “உன்னால் முடிந்ததை,அல்லது ஏற்கனவே  செய்ததை வைம்மா போதும்”என்பார்கள். ஆனால் அப்படி செய்வதற்க்கு நமக்கு மனசும் இடம் கொடுப்பதில்லை.திடீரென்று உணவு வேளையின் நெருக்க கட்டத்தில் வந்தார்களேயானால் வேறு வழியே இல்லை.இருப்பதையே வைத்து விடுவோம்.அதை சாப்பிட்டுவிட்டு சிலர் குறை சொல்பவர்களையும் நான் பார்த்ததுண்டு.... “என்னதான் நாம சொன்னாலும் இப்படியா வந்தவங்களுக்கு சாப்பாடு வைக்கிறது...ஆளை பார்த்ததும் பதறி அடிச்சு சமைக்க வேணாம்... நாமெல்லாம் அந்த காலத்துல மனுசங்கல பார்த்துட்டா...எப்படி துரு துருன்னு இருப்போம்.இப்ப உள்ளதுங்களுக்கெல்லாம் அது எங்கே தெரியுதுன்னு?” ஆரம்பிச்சுடுவாங்க. இது ஊரில் ஆங்காங்கே நடக்கிற விஷயம் தான்.
முன்பெல்லாம் ஃபோன் வசதி அவ்வளவாக இல்லாததால் திடீர் வருகைக்கு ஏதும் நாம் சொல்ல இயலாது.ஆனால் இப்பதான் வீட்டிற்க்கே ஆளுக்கோர் செல் என்ற நிலை வந்துவிட்டதே.... இன்றைக்கும் சிலர் அப்படியே எந்த ஒரு அறிவுப்பும் இல்லாமலே வந்து நிற்ப்பார்கள்.அவசர வேலையில் சில சந்தர்ப்பங்களால் வருவதௌ என்பது பரவாயில்லை.ஆனால் சிலர்  “நேரம் இன்னைக்கு கிடைத்தது.ரொம்ப நாளா நீயும் கூப்பிட்டு கொண்டிருந்ததால் உடனே கிளம்பி வந்துட்டோம்” என வந்தார்களேயானால் தனியே இருப்பவர்களுக்கு என்ன செய்ய முடியும் சொல்லுங்க.. கிளம்பி வாகன பயணத்தில் இருக்கும் போது வருகையினை சொன்னாலே போதும் நாம் ஓரளவிற்க்கு தயாராக இருக்கலாம்.நாம் எல்லாம் நமக்கு வேண்டியதை சமைத்துமுடித்து அப்பாடி வேலை முடிந்து விட்டது என நினைக்கும் போதோ....இல்லை கிடப்பில் கிடக்கும் வேறு வேலைகளை செய்ய முற்படும் போதோ.... திடீரென விருந்தினர்கள் இரண்டு,மூன்று பேர் வந்து நின்றால் நாம் என்ன செய்யமுடியும்?ஒரு சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாத நிலையில் பட படவென்று நிற்ப்போம்.அப்புறம் மறுபடியும் கோழியை வாங்கு கறியை வாங்கு காயை வாங்குன்னு ஆளை புடிச்சு அங்கே அனுப்பி இங்கே அனுப்பி மறுபடியும் மூன்று நான்கு வகை சமையலோடு விருந்தும் அரங்கேறும்.இதில் வந்தவர்களிடம் உட்கார்ந்து பேச முடியாமல்,வந்தவர்களுக்கும் சங்கடமாக தான் முடியும்.இந்த நிலையை பலர் மாற்றி கொள்வது நல்லது.


வெளிநாட்டில் வாழ்பவர்களேயானாலும் இதையேதான் சொல்லி கொள்ள நினைக்கிறேன்.சாப்பாட்டிற்க்கென்று இல்லை.ஒரு மாலை நேர விசிட்டிங்க் என்று இருந்தாலும் கூட நாம் அன்று காலையிலேயே ஃபோன் செய்து நீங்கள் ஃபிரீயாக இருக்கின்றீர்களா...?உங்களுக்கு முக்கிய வேலை,வெளியில் செல்லும் நிகழ்ச்சி என ஏதும் இல்லையே என அறிந்து கொண்டு பிறகு தான் வர நினைக்கும் செய்தியை தெரிவித்தல் நல்லது.
ஏனென்றால் இந்த வெளிநாட்டில் பலரும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் தான்(சிலருக்கு இரண்டு நாள்)கிடைக்கும்.அப்போது போக வேண்டிய வாங்க வேண்டிய விஷயங்கள் என இருக்கும்.திடீரென்று வந்து காலிங்பெல்லை அடிக்க யாரும் இல்லாமல் அவ்வளவு தூரம் வந்து திரும்பி செல்வது என்பது வருபவர்களுக்கும் தர்மசங்கடம்தானே....(இது எங்க வீட்டிலேயே பலதடவை நடந்து இருக்குங்க...வாசலில் நிற்க்கிறேன் என்று ஃபோன் வந்து இருக்கு...)  


இது மட்டும் காரணமில்லை.சில நேரங்களில் நம் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கலாம்.அதனால் வேலையை சரி வர செய்ய முடியாமல் குழந்தையை வைத்து கொண்டு போட்டது போட்டபடியே இருப்பது போன்றெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படும்.இப்படி ஒரு சூழ்நிலையில் ஒருவருடைய வருகை சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்குமா....?பலரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.  

அதற்க்காக விருந்தினர் வருவதை தவறு என்று சொன்னதாக யாரும் தயவுசெய்து எண்ண வேண்டாம்.எனக்கு விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிக்க மிகவும் பிடிக்கும்.அதையே பதட்டம் இல்லாமல் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் என்னுடைய கருத்து.என் கணவர் திடீர் வருகையால் ரொம்ப டென்ஷனாகி விடுவார்.நான் பெரும்பாலும் அந்த டென்ஷனை வெளியில் காட்டி கொள்ளமாட்டேன்.வேண்டிய சாமான்களை சீக்கிரம் ஆர்டர் செய்து சமைத்து கொடுக்க பார்ப்பேன்.இப்போது எல்லாம் பழகி போச்சுன்னு வச்சிக்குவோம்.புதிதாக சமைக்க ஆரம்பித்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் குடும்பதலைவிகளுக்கு எவ்வளவு பதட்ட நிலையும்,என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க்கும் நிலை கஷ்ட்டமாக இருக்கும்.இது போன்று வருபவர்களிடம் முடிந்தவரை ஃபோன் செய்து விட்டு வீட்டிற்க்கு வரும் பழக்கத்தை அவர்களிடத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டும்.இல்லையென்றால் விடுமுறை நாட்களில் யாரேனும் திடீர் என்று வந்தார்களேயானாலும் எப்படி நாம் சமாளிப்பது என்று நம்மை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.வேற வழியே இல்லைங்க....

இதற்க்கு அடுத்து அப்படி விருந்தினரை சமாளிப்பதற்க்கான சில டிப்ஸை கொடுக்க இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...


Thursday, February 24, 2011

பெற்றோர்,பிள்ளைகளின் நிலை???

ஸாதிகா அக்கா அவர்களுடைய *** பெற்ற மனம் பித்து *** எனும் கவிதையை படித்ததும்,எனக்கு நீண்ட நாட்களாக மனதில் உதித்த விஷயம் இன்னும் ஆழமாக நிற்க்க ஆரம்பித்துவிட்டது.அவற்றை உங்களோடு பகிர்ந்தால் தான் என்ன? என்று நினைத்தே வந்தேன்.ஏதேனும் தவறாக எழுதியிருப்பின் சுட்டிக்காட்டவும்.

 
ஸாதிகா அக்கா தாயின் சிறப்பையும் சொல்லி இத்தனை பாசமாக மற்றவர்களுக்கு இடையே வளர்த்த மகனே தன்னை பிரச்சனை என்று நினைக்கும் காலத்தை சொல்லியிருப்பது சில இடங்களில் நடப்பதே....
இது இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் வேதனை மிக்க விஷயம் என்பது ஒரு பக்கம் இருப்பினும்,பலவித சூழ்நிலைகளால் பல பெற்றோர்கள் தனிமையில் இருப்பதும் மற்றொரு நிலை.
அவர்களின் மகன்கள் அதிக பாசத்துடனும்,.அக்கறையுடனும் இருப்பார்கள்.மருமகளும் அதே போல் அதிக அக்கறையுடனும்,பாசத்துடன் இருப்பாள்.இப்படி இருப்பினும் இவர்கள் சேர்ந்து வாழமுடியாத  சூழ்நிலை.. ஏன் என்கிறீர்களா...?வெளிநாட்டில் மகன்கள் பிழைப்பிற்க்காக குடியேறி மனைவி,குழந்தைகளுடன் வாழும் நிலையே அதற்க்கு காரணம்.வருடத்திற்க்கு ஒரு முறை பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் இருந்துவிட்டு போவதோ... அல்லது பெற்றொர்களை முடிந்த போது வெளிநாட்டிற்க்கு வரவழைத்து ஒரு மாதமோ,அதற்க்கு மேலோ அவரவர் விருப்பம்போல் இருந்து விட்டு செல்வதுமே இருந்து கொண்டிருப்பது இன்றைய நடைமுறையின் சூழ்நிலை.இதில் பார்த்தீர்களேயானால் அவர்களிடையே நல்ல சுமூகமான உறவுகள்,கலந்துரையாடல்கள் என இருந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டி மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் மகனுக்கு  “அம்மா,அப்பா தனிமையாக இருக்கின்றார்களே...” என்ற கவலையும், “நாமும் பேரன்,பேத்திகளிஉடன் இந்த வயதான காலத்தை தள்ள மாட்டோமா...” என்று பெற்றொர்களின் வருத்தமும் இல்லாமல் இருப்பதில்லை.இது மனித இயல்பு.ஏன் இந்த நிலை...? “சொந்த நாட்டில் இருந்து கொண்டு ஏதோ ஒரு வேலையில் இருந்து கொண்டு எல்லொரும் ஒன்றாக இருந்தால் என்ன?”இது சிலர் ஆங்காங்கே எழுப்பப்படும் கேள்வி.இதற்க்கு பலவிதமான காரணங்களை நாம் சொல்ல முடியும். மகன் அவசரஅவசரமாக படித்து முடித்து விட்டு குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு சீக்கிரம் நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இருந்து கொண்டிருக்க அவர்கள் படிப்பிற்க்கு ஏற்றவாறு அவர்களின் வேலை பார்த்த கம்பெனியின் மூலமாக வெளிநாட்டிற்க்கு மாற்றுதலாகும் வாய்ப்போ..அல்லது நேரடியாக வெளிநாட்டில்வேலை கிடைத்து போவது என்று நடக்கும்.அவர்களும் ஒரு வருடத்திற்க்குள் நன்கு செட்டிலாகி குடும்பம் நல்ல நிலைக்கு திரும்பும்போது கல்யாணம் முடிந்துவிடும்.நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளத்தோடு அல்லாமல் குடும்பத்தோடு இருப்பதற்க்கான விசா சலுகை,மருத்துவ சலுகை,இன்னும் அதிக பச்சம் போனால் வீடு,குழந்தைகள் படிப்பு என சலுகைகள் வெளிநாட்டில் இருக்க அவர்கள் அங்கே குடும்பத்தோடு அழுத்தமாக தங்கி விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பெற்றொர்களும் தங்கும் படி இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் தங்குவது என்பது அவர்களை கஷ்ட்டத்திற்க்குள்ளாக்கி விடுகின்றது.அப்படியும் சிலர் தன் மகனும்,மருமகளும் வேலைக்கு சென்று விடுகிறார்கள் பேரன் பேத்திகளுக்கு துணையாக இருக்கின்றோம் எனவும் தியாகத்தோடு இருந்து விடுகின்றனர்.அதையும் நான் கண்கூடாக பார்க்கின்றேன்.
இவ்வளவு விளக்கமும் ஏன் சொல்கிறேன் என்றால் முதியோர் இல்லத்திற்க்கு செல்பவர்கள் மகனின்,மருமகளின் கொடுமைகள் என சொல்லும் காரணங்கள் ஒரு பக்கம் இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகளாலும் பலர் தன்னை தானே கவனிக்க முடியாத காரணத்தினால் இப்படி வந்து இருக்கின்றோம்.என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.இப்ப நான் சொன்னது இரண்டாம் நிலை.இதற்க்கு அடுத்தும்  ஒரு நிலை உள்ளது.அது என்ன என்கிறீர்களா...?
மகனை பெற்றவர்களை மகளுக்கு அப்புறம் மருமகள் என்ற உறவு ஆதரிப்பாள் என்பது நமது கலாச்சாரம்.அதே பெண்ணை மட்டும் பெற்றவர்களின் நிலை...? பெண்ணை மட்டுமே பெற்று விட்டு அவர்களை நல்ல படியாக கட்டி கொடுத்த பின்னர் தனிமையில் தள்ளபடுகிறார்களே.... அந்த சூழ்நிலையை என்னவென்று சொல்வது.மகள்,மருமகனோடு சில பெற்றோர்களோ இல்லை தாய் மட்டுமே இருப்பினும் இந்த சமுதாயம் அதை இன்னும் முழுமையாக திருப்தியுடன் பார்க்கின்றதா...? “ பொண்ணை கொடுத்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க கூடாது” என்பதையே ஒரு ஏட்டில் பதித்தவாறு அவரவர் மனதில் பதித்து வைத்துள்ளார்கள்.ஏன் ஒரு சில பெற்றோர்களே   ஊர்,உலகம் என்ன சொல்லும் என்பது போல் நினைத்து கொண்டு கஷ்ட்டமோ,நஷ்ட்டமோ தனிமையிலேயே காலத்தை தள்ளுவார்கள்.மகள்களோ திருமணத்திற்க்கு முன் இருந்த படி திருமணத்திற்க்கு பின் அம்மா வீட்டிற்க்கு வந்து தங்கி பார்த்து கொள்ள முடியாது.அவளுடைய முதல் முக்கியத்துவம் தன் கணவருடைய வீட்டினருக்காக என ஆகிவிடும்.இது என்னவோ காலம்,காலமாக நடந்து வரும் விஷயம்.இதில் யாரும் யாரையும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.குழந்தையிலிருந்து பெண் பிள்ளைகளை  நம் பெற்றோர்களே சொல்லி வளர்ப்பது அப்படி.அது நம் ரத்தத்திலேயே ஊறிவிடுகின்றது.எனவே பெண் பிள்ளைகள் விஷெசங்களிலும்,அவ்வபோது நேரம் கிடைக்கும் போது அம்மா,அப்பாவிற்க்கு முடிந்த உதவிகளை செய்து விட்டு வருவதோடு சரி... “இன்னும் இரண்டு நாள் தங்கிட்டு போயேம்மா...” என்று பெற்றோர்கள் சொன்னாலும், “இல்லைமா பிள்ளைங்க ஸ்கூல் இருக்கு,மாமியார் தனியாக இருப்பாங்க வேலைகளெல்லாம் இருக்குமா..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவோம்.அப்போது பெற்றோர்களுக்கும்,மகளுக்கும் இடையே ஏற்படும் மனநிலை எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்... அதிக அளவில் பாசங்கள் மகனாக இருந்தாலும்,மகளாக இருந்தாலும் சரி பெற்றோர்களிடையே வைத்திருப்பினும் சந்தர்ப்பங்களாலும்,சூழ்நிலைகளாலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இன்று அதிகமாக காணப்படுகின்றது.

இந்த அவசர உலகத்தில் எதையுமே வெளிகாட்டி கொள்ளகூட முடியாமல் வாழ்ந்து வருவதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
குடும்ப சூழ்நிலையை கருதி பல ஆண்மகன்கள் சம்பாதிக்க வெளிநாட்டிற்க்கு வந்து உறவுகள்,சில விஷேசக்காலங்கள்,சின்ன சின்ன சந்தோஷங்கள் என எல்லாவற்றையுமே மனதிற்க்குள் பூட்டி இயந்திர வாழ்க்கையாக வாழ்ந்து தியாகம் செய்கிறார்களே அதை நினைத்து வருத்தப்படுவதா?நாம் வாழ்ந்து முடித்து விட்டோம் நம் பிள்ளைகளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெற்றோர்கள் தியாகம் செய்து மருமகள்,பேரன்,பேத்திகளை விட்டு தனிமையில் இருக்கின்றார்களே... அதை சொல்வதா...?பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி அவள் நன்றாக வாழ்ந்தால் போதும் கஞ்சியோ...கீரையோ... நம்ம வீட்டிலேயே முடிந்ததை செய்து வாழலாம் புகுந்த வீட்டில் நம்மால் அவளுக்கு சங்கடம் வரக்கூடாது என எண்ணி தனித்து வாழ்பவர்களை சொல்வதா...?
பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பலருடைய வாழ்க்கையின் நிலை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் தான் உள்ளது.வெளியே பல சந்தோஷங்கள் இருப்பதுபோல் இருந்தாலும்,மனதிற்க்குள் வேதனைகள் யாருக்கும் இல்லாமல் இல்லை. 

இவற்றையெல்லாம் சற்றே நிதானமாக யோசித்து பார்த்தால் எல்லோரும் ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இதை நம்மில் யாரும் மறுக்க கூடுமா...?இதற்க்கு மாற்றம் வராதா...?இல்லை இன்னும் இதையும் தாண்டி காலம் செல்லுமா...? எல்லாவற்றிற்க்கும் இறைவன் போதுமானவன்.













Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out