Monday, April 24, 2017

திருமணம் எனும் நிக்காஹ்….

           சாதிக் வீட்டினுள் நுழையும் போது, குண்டூசி விழுந்தால் கூட அதிக சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது வீடு. ஹாலில் சோபாவில் தான் அத்தாவும்,அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அக்கா சாஜிதா சிறிது தள்ளி அமர்ந்துக் கொண்டு மடியில் தன் மகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்….. இத்தனை பேரும் இருந்தும் ஏன் இந்த அமைதி?என்று யோசித்துக் கொண்டே மாடியில் தன் ரூமுக்கு செல்ல முற்ப்பட்டான்.

           “சாதிக் உன்கிட்ட பேசணும் இங்க வந்து உக்காரு…”என்றார் சாதிக்கின் அத்தா வஹாப்.  அப்ப எனக்காக தான் காத்துக் கொண்டிருந்தார்களா?என்னவா இருக்கும்னு யோசித்தபடியே எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தான்.

     லேசாக தொண்டையை கணைத்து விட்டு, “ இங்க பாருப்பா சாதிக், நீயும் பயணுத்துலேர்ந்து வந்து ஒரு வாரம் ஆகப்போகுது.உன் அம்மாக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி உன்னிடம் சொல்ல சொன்னா இன்னும் தான் சொல்றா….. அதான் நானே உங்கிட்ட நேரிடையாகவே பேசிடலாமேன்னு வெளிய கூட போகாம காத்துக்கிட்டு இருக்கேன்.என் சினேகிதன் நவாஸ் தெரியுமுல்ல அவருக்கு இரண்டு பொண்ணுங்க… மூத்த பொண்ணு இப்பதான் காலேஜ் ல ஏதோ படிச்சுட்டு… ஏம்மா சாஜிதா…… என்ன படிச்சிருக்கு அந்த புள்ளன்னு அவங்க அம்மா சொன்னாங்க?

       பிஸிஏ பண்ணியிருக்காளாம் அத்தா…

      ஆ…. அந்த படிப்புதான் இந்த வருஷத்தோடு முடிக்குதாம். நீ ஊருக்கு வர்ற செய்தி சொன்னதும் நவாஸூம்,அவன் பொண்டாட்டியும் இங்கே வந்து உனக்கு தன் பொண்ணை கட்டிக் கொடுக்க விருப்பப்படுறதா சொல்லிட்டு பொண்ணு ஃபோட்டோவையும் கொடுத்துட்டு, நீ வந்ததும் பேசி ஒரு முடிவு சொல்லுங்கண்ணு சொல்லிட்டு போயிருக்கான்.எங்கங்கயோ பொண்ணு தேடி அலையிறதுக்கு நமக்கு தெரிஞ்ச வீட்டு பொண்ணா இருந்தா நல்லதுதானேன்னு நான் எனக்கு சம்மதம்தான்னு ஃபோன்ல அவன்ட்ட சொல்லிட்டேன்.உங்கம்மா கூட பொண்ணு ஃபோட்டோ பார்த்துட்டு பல்லை இழிச்சா…. ஏம்மா சாஜிதா நீயும் பார்த்தல்ல….

         ம்… பார்த்தேன் அத்தா…

      உன் தம்பிட்டையும் காட்டு மா…. சாதிக் நீ மறுக்க மாட்டேன்னு தெரியும்…. இருந்தாலும் அதை உன் வாயால சொல்லணும்னு உன் அம்மா சொல்றா… என்னப்பா சொல்ற?இன்ஷா அல்லாஹ் ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கிறா மாதிரி பேசிடலாமா?” என்று சொல்லி முடித்தார் வஹாப்.

    அத்தா அவனிடம் சொல்ல சொல்ல அக்காவையும்,அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சாதிக்.. அத்தா சொல்லி முடித்த உடனேயே… “இல்லை அத்தா இந்த இடம் சரி வராது அத்தா…. என் மனசுல இருக்குறதை ஏற்கனவே அம்மாட்டையும், அக்காக்கிட்டேயும்  சொல்லியிருக்கேன்.”என்று சொன்ன உடனேயே சடக்கென்று வேகமாக எழுந்து நின்று சத்தம் போட்டார் வஹாப்.

      “என்ன சாதிக் நீயும் எல்லார் மாதிரியும் காதல் கத்திரிக்காய்னு கதை அளக்க போறியா..?உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்?பொறுப்புள்ள புள்ள என் புள்ளன்னு ஊர்ல எல்லார்க்கிட்டேயும் சொல்லி பெருமைபட்டுகிட்டுல்ல இருந்தேன்.என் மூஞ்சில கறியை பூசுற மாதிரி இல்லைனு மறுத்து பேச ஆரம்பிச்சுட்டல்ல…..”என்று குரல் உயர்த்தினார்…

      “அத்தா தயவு செய்து நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்கங்க அத்தா…. நீங்க நினைக்கிறதுல எந்த மாற்றமும் வந்துடாது அத்தா…. என்னை நம்புங்க அத்தா….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,கடுகடுத்த முகத்தோட விட்டத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார் சாதிக்கின் அத்தா.

       சாதிக்கின் அம்மா ஜமீலா பயந்தவாறே…,கணவரின் அருகில் போய், ‘ஏங்க… நம்ம புள்ளைய தப்பா நினைக்காதீங்க….. அவன் மனசுல இருக்குறதை முழுசா கேட்டுட்டு அப்புறம் கோபப்படுறதா.. என்னன்னு பாருங்க….” என்று சொன்னதும்,திரும்பி அவர் ஒரு பார்வை பார்க்க பயந்தவளாய் பின்னே நகர்ந்தாள்….

      சாதிக்கின் அக்கா போடா போய் அத்தாவிடம் பேசு என சைகையில் காட்ட,சாதிக் எழுந்து அத்தா அருகில் நின்று பேச தொடங்கினான்.

       “அத்தா… வல்லாஹி நான் யாரையும் காதலிக்கலாம் இல்லை அத்தா…. ஆனால் ரொம்ப நாளா ஒரு விஷயம் என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு.உங்க அக்கா,அதான் என் மாமி  நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காவை தன் பைய்யனுக்கு கொடுக்குறீங்களான்னு கேட்டாங்க.ஆனால் நீங்களும்,அம்மாவும் மாமி வீட்டில் அவ்வளவு வசதியில்லை, பையனும் படிக்கலை நம்ம பொண்ணு அங்கே கஷ்ட்டபடுவாளேன்னு யோசித்து வெளியில பொண்ணை பார்த்துக்க.. சரிவராது அப்படின்னு மாமிக்கிட்ட சொல்லிட்டீங்க. அத்தா… நீங்க யோசித்ததிலும் தப்பில்லை.பொண்ணு வளரும் போதே நல்லவிதமா வசதியா வளர்ந்துட்டு,கட்டிக்கொடுக்குற இடத்துல நம்ம வீட்டில் இருக்கும் பாதி வசதிக்கூட இல்லாத நிலையில் பொண்ணை வாழ வைத்தால் நாளை நம்ம பொண்ணு கண்ணகசக்கிட்டு நிப்பாளோன்னு நீங்க பயப்படுறது பெற்றோர்களுக்கே உரிய ஒரு நியாயமான கவலைக்கொண்ட எண்ணம்தான்.ஏன்னா…. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அவள் வாழ்நாளில் தொண்ணூறு சதவீதம் அந்த வீட்டோடேயே ஐக்கியமாயிடுறா..அதனால அது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.…

      ஆனால் அதே வசதியில்லாத வீட்டில் உள்ள பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து தான் வாழ்வாளே தவிர… நான் அங்கே போய் வாழப்போறது இல்ல. இன்ஷா அல்லாஹ்…அந்த பொண்ணும் இங்கே நல்லபடியாக வாழ்வாள்…. மாமிக்கும் நிம்மதியா இருக்கும் தானே அத்தா…. அதான் நான் மாமி பொண்ணையே கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன் அத்தா….” என்று சொன்னான்.

        “சாதிக் நீ சொல்றதெல்லாம் சரிதான்.அந்த பொண்ணு சின்ன வயசா இருக்கும் போது கையில் முழுக்க சூடான எண்ணெய் கொட்டி அதன் சதை சுருக்கமும்,தழும்பும் இருப்பதால் கை பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும் பா…. இதனாலேயே நிறைய பேர் பொண்ணு பார்த்துட்டு போயிடுறதா உங்க அம்மா கூட சொல்லிகிட்டு இருந்தாளே….”என்று வஹாப் கவலையான குரலில் சொன்னார்.

       “ஆமா… அத்தா நானும் அம்மா,மத்தவங்க எல்லாம் சொல்லி கேட்டிருக்கேன்.நான் அந்த பொண்ணை ரொம்ப சின்ன வயசுல பார்த்ததுதான்.இப்ப எப்படி இருக்கும்னு  கூட தெரியாது…ஒரு தடவை என் காது படவே  மாமிக்கிட்ட நம்ம ஊர் பொண்ணுங்க வந்து நல்ல பொண்ணுக்கே இந்த காலத்துல மாப்பிள்ளை அமைய மாட்டேங்குதே…. உன் பொண்ணை எப்படி நீ கரை சேர்ப்பன்னு கேட்டாங்க… அப்ப மாமி எதுவுமே பேசாம அழுததை பார்த்தப்ப தான் முடிவுப்பண்ணேன் அத்தா…. சொந்தக்காரங்களான நாமளே கை கொடுக்கலன்னா இப்படி கண்டவங்க பேசதானே செய்வாங்கன்னு அந்த பொண்ணை மனப்பூர்வமா நான் கல்யாணம் செய்துக்கணும்னு மனசுல நிய்யத்து வச்சேன். இப்ப சொல்லுங்க அத்தா…. நான் நினைக்குறது தப்பா இருந்தா நீங்க சொல்றப்படியே நான் கல்யாணம் செய்துக்குறேன்.”என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்த்தவனாய் நின்றிருந்தான்….

         கண் கலங்கியவாறு மகனை பார்த்த வஹாப், “ அந்த காலத்திலேயே கல்யாணம் என வீட்டில் பேச்சு எடுத்தா வயசு பசங்களுக்கு மனசுல பல கனவுகள் வர ஆரம்பிச்சிடும்.நமக்கு வர போற பொண்ணு இப்படி இருந்தால் நல்லா இருக்கும்,அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைகள்.அதை வெளியிலே சொல்றோமோ இல்லயோ அது வேறு விஷயம்.
இந்த காலத்துல அதை வெளிப்படையா வீட்டில் சொல்லி இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டு வரணும்,இல்லை இப்படி ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என சொல்றதை தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்படியிருக்க இந்த ஒரு உயர்ந்த எண்ணம் கொண்ட விஷயத்தை சொல்வதற்கு நீ ஏன் பா தயங்கணும்….. இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய காரியத்தை செய்துடணும்னு நீ நினைக்கும் போது, உன் அத்தாவா என் வயசுக்கு இதற்கு நான் சம்மதிக்கலன்னா என்னை விட உள்ளத்தில் தாழ்ந்தவன் எவனுமில்லை பா….. இதற்கு எங்களது பரிபூரணம் சம்மதம்.என்ன ஜமீலா நான் சொல்றது சரிதானே?”என்று தன் மனைவியை பார்த்து சிரிக்க, “அப்பாடி… அல்ஹம்துலில்லாஹ்” என்பது போல் பெருமூச்சு விட்டு சிரித்தாள் ஜமீலா.

        “அல்ஹம்துலில்லாஹ்…. இவ்வளவு சீக்கிரம் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கல அத்தா…. ஆனால் அதே சமயம் முதலில்  இதுல மாமிக்கும்,அவுங்க பொண்ணுக்கும் இதில் மனதார சம்மதமான்னு தெரிஞ்சுக்கணும்.இரண்டாவது கல்யாண செலவுகள் முழுவதும் நாமளே பார்த்துக்களாம் அத்தா…. நான் கை நிறைய சம்பாதிக்கிறேன்.அல்லாஹ் பரக்கத் செய்திருக்கிறான்.அதனால துணிமணி நகைகள் இன்னும் என்ன வேணுமோ நாமளே செய்திடலாம் அத்தா…. அம்மா உங்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் சொல்லுங்கம்மா….என்று சாதிக் கேட்க,
       நீ இதை ஏற்கனவே என்னிடம் சொன்னதுதானே சாதிக்…. அதனால நான் என் மனசுல எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்கல பா…. நீ சந்தோஷமா என்ன நினைக்கிறியோ அதையே செய்திடலாம் சரியா”.என ஜமீலா கூறிவிட்டு,தன் கணவர் பக்கம் திரும்பி என்னங்க இப்பவே உங்க அக்காவுக்கு ஃபோனை போட்டு பேசுங்க… நல்ல விஷயத்தை ஏன் தள்ளி போடுவானேன்….” என்று கேட்க, “அதுவும் சரிதான்” என்றவாறு,தன் செல்ஃபோனில் எண்களை தட்டி தன் அக்காவிடம் விஷயத்தை சொன்னார்….

      “என்ன பா தம்பி சொல்ற?நம்ம சாதிக் சொல்றதை கேட்கும் போது எனக்கு பெருமையா இருக்கு பா…. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல…. சந்தோஷத்துல தொண்டைய அடைக்குது வேற வார்த்தையே வர மாட்டேங்குது… எனக்கு மணப்பூர்வ சம்மதம் தம்பி.”என்று பேசிவிட்டு முறைப்படி பேசி எழுதுவதற்கான தேதியை குறித்து விட்டு ஃபோனை வைத்தனர்.

      சாதிக்கின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்து போனது….. அன்றே அந்த வீட்டில் திருமண கலை கட்டியவாறு எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்… சாதிக் தன் அக்காவிடம் போய் அவள் காதோரம் மெதுவாக, “அக்கா… போய்ட்டு சும்மா அங்கே போய் மூக்குபிடிக்க சாப்பிட்டு வராம ஜெஸிமாவை ஃபோட்டோ எடுத்துட்டு வரணும்”.என்று சொல்ல  புன்சிரிப்போடு தன் தம்பியை செல்லமாக தட்டினாள் சாஜிதா….


Wednesday, April 12, 2017

வீடியோ பதிவேற்றம் ஆரம்பம்
எனது நீண்ட நாள் எண்ணமும்,ஆசையுமும் இறைவனின் உதவியால் இனிதே நிறைவேறியது.ஆம்!ஒரு வழியாக யூட்யூபின் வழியாக எனது சமையல் காணொளியை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருக்கின்றேன்.

அதில் சமையல் மட்டும் அல்லாது எனக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து கொண்ட விஷயங்களையும் அங்கே பகிரலாம் என்றே நினைக்கின்றேன்.எல்லோரும் அங்கே சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நான் பதிவேற்றம் செய்த காணொளிகளின் லின்க் கீழே

1) நூடுல்ஸ் பேன் கேக்(நூடுல்ஸ் அடை)
******************************************

2)கறிவடகம்
**************

3) சக்கரவள்ளிகிழங்கு வட்டிலாப்பம்
**************************************

4) ஃபலாஃபில்
****************

5) க்ராச்செ வேலைப்பாடு செய்வது பற்றி
*******************************************

Monday, January 9, 2017

சிக்கன் பர்கர்(ஈஸி&ஹெல்தி)தேவையான பொருட்கள்
**********************
சிக்கன் பேட்டீஸ்க்கு அரைக்க
**************************
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சைமிளகாய்-2
மல்லி மற்றும் புதினா தழை-சிறிதளவு
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-11/2 ஸ்பூன்
மிளகுத்தூள் -1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப

$இதர பொருட்கள்$
***************
பிரட் துண்டு -3(அல்லது)
பிரட் க்ரம்ஸ் -3/4 கப்
ப்ர்கர் பன் -5
முட்டை-1
மயோனைஸ்-2 மேசைக்கரண்டி
டொமேட்டோ கெட்சப்-2மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் -1 ஸ்பூன்
பட்டர் - 2 மேசைக்கரண்டி
விரும்பினால் லெட்டியூஸ் இலைகள்,சீஸ் வகைகள்

செய்முறை
**********
🍔 ப்ரட் க்ரம்ஸ் இல்லையெனில் ப்ரட் துண்டுகளை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
🍔 அரைக்க கொடுத்தவைகளை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் ப்ரட் பொடித்தது மற்றும் முட்டை உடைத்து அதில் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

🍔 ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை மேசைக்கரண்டி பட்டர் போட்டு உருகியதும் மிதமான தீயில் வைத்து விட்டு உள்ளங்கையில் எண்ணெய் சிறிது தடவிக்கொண்டு,அரைத்த கலவையிலிருந்து பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பேட்டீஸாக வட்ட வடிவில் தட்டி தவாவில் விடவும்.இதே போல் நான்கு அல்லது ஐந்து ஒரே நேரத்தில் போட்டு இரு புறமும் நன்கு சிவக்க மிதமான தீயிலேயே சுட்டு எடுக்கவும்.

🍔 ஒரு கோப்பையில் மயோனைஸ் மற்றும் டொமேட்டோ கெட்சப்பையும் போட்டு அதில் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

🍔 பர்கர் பன்னை எடுத்து கொண்டு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
🍔 கலந்து வைத்திருக்கும் மயோனைஸ் கலவையை பன்னின் இரு உள்பக்கமும் தடவிவிட்டு,ஒரு புறம் இலை மற்றும் பாட்டின் வைத்து அதன் மேல் விரும்பினால் சீஸ் பேடையும்  வைத்து மறு பன் பாகத்தை வைத்து மூடி மேலே லேசாக பட்டர் தடவி தவாவில் சிறிது நேரம் வைத்து விட்டு எடுத்து விடவும்.

🍔 சுவையான,சத்தான,செய்வதற்கும்  எளிதான பர்கர் தயார்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Monday, March 7, 2016

சிக்கன் புரிட்டோ


மெக்ஸிகோ உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த புரிட்டோ... இது கேள்விபட்டதோடு சரி... வெளியே நான் சாப்பிட்டு பார்த்தது இல்லை... என் பிள்ளைகள் கார்ட்டூனில் இது அடிக்கடி வருகிறது இது சாப்பிட்டு பார்க்கணும்னு ஆசையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்க உடனே நானும் செய்ய களம் இறங்கியாச்சு...
நெட்டில் பார்த்து பொதுவாக அவர்கள் செய்யும் விதத்தை  தெரிந்து கொண்டு அதையே கொஞ்சம் நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக அமைந்தது...
என் பிள்ளைகளும் ஆசையாக சாப்பிட்டார்கள்... அதை எனது இல்லத்தில் பதிகின்றேன்....
சரி வாங்க செய்முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
********** ****************
மேல் டார்ட்டிலாஸ் செய்ய:-)
*********************************
மைதா மாவு  - 1 1/2 கப் 
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
நெய்  - 2 தேக்கரண்டி 
ஸ்டஃப்பிங்கிற்கு 
******************
சிக்கன் கைமா - 1/2 கப் 
பெரிய வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2 தேக்கரண்டி 
பொடியாக அரிந்த குடைமிளகாய் 
(சிகப்பு,மஞ்சள் ,பச்சை கலந்தது )} - 1/2 கப் 
சாதம்  - 1/2 கப் 
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
இத்தாலி ஸ்பைசஸ் - 1 1/2 தேக்கரண்டி 
ஒரிகேனோ - 1 தேக்கரண்டி 
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி 
ஆலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி 

செய்முறை 
************
1) முதலில் மாவை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு மிருதுவாக மாவை நன்கு பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி வைத்து விடவும்.

2)ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு லேசாக வரும் போதே பூண்டை போட்டு வதக்கவும்.வாசம் வரும்போதே நறுக்கிய மற்ற காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3)அதில் சிக்கன் கைமாவை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4)சிக்கன் நிறம் மாறி வெந்தது போன்று வந்ததும்,தூள் மற்றும் சாஸ் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

5)வாசம் வர வதக்கியதும் சாதம் சேர்த்து நன்கு ஒன்று சேர  கிளறி  தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நன்கு ஒன்று சேர்ந்து  தண்ணீர் வற்றிய நிலையில் ரெடி ஆனதும் இறக்கி வைத்து ஆற விடவும்.
6)இப்போது பிணைந்த மாவை மீடியமான உருண்டைகளாக்கி விட்டு,சப்பாத்தி போன்று மெல்லியதாக இட்டு தவாவில்  இரு பக்கமும் லேசாக  எண்ணெய் தடவி சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.


7)இனி அந்த டார்டிலாஸின் நடுவில் ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டி லேசாக தவாவில் வைத்து எடுத்து இரண்டாக கட் செய்து பரிமாறவும்.

குறிப்பு:-)
*இந்த ஸ்டஃப்பிங்கில் ரெட் பீன்ஸை வேக  வைத்தும் முக்கியமாக சேர்ப்பார்கள். 
*வெஜிடேரியன்ஸ் சிக்கனை தவிர்த்து ரெட் பீன்ஸை அதிகம் சேர்த்து கொள்ளலாம்....
*விரும்பினால் இதில் சீஸும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்Monday, August 24, 2015

செட்டிநாடு சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு பெரும்பாலும் ஒரே செய்முறையில் செய்வது வழக்கம் என்றாலும்,ஒரு சில ஊர்களில் செய்யும் செய்முறை பலரையும் கவரும்படி இருக்கும்.
அதிலும் செட்டிநாடு ஸ்பெஷல் உணவு என்பது நம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்... அதில் பலவகை சமையல் குறிப்புகள் உண்டு... அப்படி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் செய்து காண்பிக்கப்பட்ட சிக்கன் குழம்பு செய்முறை என்னை மிகவும் கவர்ந்தது.... அந்த முறையில் செய்தும் பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... பலருக்கும் தெரிந்திருந்திருக்கலாம்...
இருப்பினும் தெரியாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்குமல்லவா? அதுவுமில்லாமல் ஒரே செய்முறையில் செய்யாது இப்படி மாற்றி செய்து பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்...
சரி வாங்க செய்முறைக்கு போவோம்....


                 செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்
**********. ***************
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி(tsp)
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி(tsp)
மல்லித்தழை - சிறிதளவு
வறுத்து அரைக்க:-)
****************
சின்ன வெங்காயம் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி(tsp)
பட்டை - இரண்டு இன்ச் அளவு - 2
கிராம்பு - 3
காய்ந்த மிளகாய் - 4
பச்சைமிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு இன்ச் அளவு - 3 துண்டுகள்
பூண்டு - 10 பல்
மிளகு - 2 தேக்கரண்டி(tsp)
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி(tbsp)
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
தாளிக்க;
*******
எண்ணெய் - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1செய்முறை:-)
************ஒரு வானலியில் நல்லெண்ணெயை ஊற்றி வறுக்க கொடுத்தவற்றில் பட்டை கிராம்பு முதலில் போட்டு பின்பு சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு பொன்னிறமாகி வாசம் வந்ததும்,சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அறிந்து சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதுமே நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதுவும் வாசம் வரும்போது தேங்காய் துருவல்,மிளகு சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின் கறிவேப்பிலை இலைகளையும், மல்லித்தூளையும் சேர்த்து நன்கு பிரட்டி வாசம் வர வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொறிந்ததும், அரிந்த வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.வதங்கியதும்,தக்காளியை அரிந்து சேர்த்து வதக்கி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,கழுவி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதங்கவிடவும்.
கோழி வதங்கும் நேரம் ஆற வைத்திருக்கும் வறுத்தவற்றை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
இப்போது வதங்கிய கோழியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மல்லிதழை நறுக்கி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
சுவையான மணமான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்....


***இது நெய் சாதம்,பரோட்டா,சப்பாத்தி,இடியாப்பம் இவற்றிற்கு சூப்பராக இருக்கும்...***


Saturday, December 6, 2014

வெப் கேக் (குக்கர் முறை)

இந்த குக்கர் கேக் செய்முறையை நான் ஊரில் இருக்கும் எனது உறவினர்களுக்காக செய்து பார்த்த முறை.... மைக்ரோவேவ்,ஓவன் இதெல்லாம் இருந்தால் தான் கேக் செய்யமுடியும் என்று இல்லாமல் இவ்வாறும் சுலபமாக செய்யலாம் என்று சொல்லி அவர்களும் செய்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.எனவே இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
 

தேவையான பொருட்கள்                   

மைதா  - 1 ¼ கப்

பட்டர்   - 50 கிராம்

பொடித்த சீனி – 1 1/2 கப்

முட்டை   - 2

கொகோ பவுடர்  - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி

பால்      - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்  - 2 மேசைக்கரண்டி

வெனிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி

உப்பு ( பேக் செய்ய) – 1 ½ (அ) 2 கப்


செய்முறை

பட்டர்,முட்டை,எஸன்ஸ்,பால் இவையெல்லாம் ரூம் டெம்பரேச்சரில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.ஐந்து லிட்டர் குக்கரில் உப்பை பரவலாக கொட்டி அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய தட்டோ வைத்து மூடியில் லப்பரோ,வெய்ட்டோ போடாமல் குக்கரை மூடி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு படுத்த வைக்கவும்.ஒரு சில்வர் அல்லது சுதேசி பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்க்கு உள்ளதை எடுத்து அதன் உள்ளே வெண்ணெயை உள் அடி பாகமும்,சுற்றிலும் தடவி விட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு மைதாவை போட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டும் அளவிற்கு சுத்தி தட்டி விடவும்.ஒட்டியது போக மிச்சம் இருப்பின் மாவை கொட்டி விடவும்.


மைதாவையும்,பேக்கிங் பவுடரையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலப்பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியை போட்டு எலெக்ட்ரிக் அல்லது ஹாண்ட் விஸ்க்கால் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.இப்போது அதில் வெனிலா எஸன்ஸ்,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு,கொஞ்சம் கொஞ்சமாக மாவையும் பாலையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வைக்கவும்.


மற்றுமொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கொக்கோ பவுடரை கட்டியில்லாமல் கலந்துக் கொண்டு,அதில் கலந்து வைத்திருக்கும் கலவையில் பாதியை அதில் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் கலந்து விட்டு வைக்கவும்.வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொக்கோ கலவையில் சின்ன குழி கரண்டியால் எடுத்து மெதுவாக நடுவே ஊற்ற வேண்டும். இன்னொரு குழிக் கரண்டியால் வெள்ளை கலவையை அதன் மேலே மெதுவாக ஊற்றவும்.இப்படியே மாற்றி மாற்றி முழுவதுமாக ஊற்றி விட்டு பாத்திரத்தை தட்டி சமபடுத்திவிட்டு,குக்கரை திறந்தால் சூடு வந்திருக்கும்.அதன் உள்ளே மெதுவாக வைத்து மறுபடியும் குக்கரை மூடி வைக்கவும்.முதல் 40 நிமிடம் வரை குக்கரை திறக்க கூடாது.அதன் பிறகு திறந்து பார்த்தால் நன்கு உப்பியிருக்கும் அதன் நடுவே ஒரு குச்சியை தண்ணியில் கழுவி விட்டு குத்தி வெளியே எடுத்துப் பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும்.அப்படியிருப்பின் அடுப்பை அணைத்து விடவும்.இல்லை கொஞ்சம் பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டி இருந்தால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வைத்து விட்டு,அதன் பின் சரிப்பார்த்துவிட்டு இறக்கவும்.


பாத்திரத்தை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கத்தியால ஓரத்தை ஒரு முறை சுத்தி தளர்த்திவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்தால் அழகாக வந்து விடும்….
இதை அப்படியே துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.மிகவும் டேஸ்டாக இருக்கும்.இல்லையென்றால் ஐஸிங் செய்து அலங்கரித்து சாப்பிடலாம்.ஐஸிங் முறையை அடுத்த பதிவில் பார்க்கவும்.

 குறிப்பு:-

1.இதே குக்கர் செய்முறையில் எல்லாவிதமான கேக்கும் செய்யலாம்.நன்கு மிருதுவாக வரும்.பிஸ்கட்டும் செய்யலாம்.அதன் குறிப்பை பின்பு போடுகின்றேன்.

2.சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் மில்க்மெய்ட் ஊற்றி செய்யலாம்.அதற்க்கேற்றார் போல் இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லை எக் ரீப்ப்ளேஸர் என்று கிடைக்கின்றது அதையும் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3.மாவை மாற்றி மாற்றி ஊற்றியப்பின் ஒரு கத்தியால் டிசைனுக்காக வெப் போல் ஆங்காங்கே இழுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்துள்ளேன்.இதுவே அப்படியே இழுத்து விடாமலும் வைக்கலாம். அது ஜீப்ரா டிசைனாக இருக்கும்.அப்படி செய்ததில் ஒரு பீஸ் இதோ உங்கள் பார்வைக்கு....

Tuesday, September 30, 2014

ருமாலி ரொட்டி

சமீபகாலமாக ... சப்பாத்தி வெரைட்டி லிஸ்ட்ல புதுசா நான் சேர்த்து கொண்டது தான் இந்த ருமாலி ரொட்டி.நாம் வீட்டில் ஏதும் புதுசா ட்ரை பண்ணோம்னா அதை மறுபடியும் செய்யலாம்னு ஒரு ஆசை வருவதற்க்கு காரணமாக இருப்பது கணவரும்,குழந்தைகளும்தாங்க..... அவங்க சாப்பிட்டு சூப்பர் சொன்னா போதும்.... இந்த சூப்பர் வார்த்தை கணவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது... முடிக்க போறாங்கன்னு நினைக்கும்போது இன்னொன்று அவர் எடுத்து சாப்பிடுறாங்க பாருங்க.... அது தாங்க நம்ம சக்ஸஸ்....அப்படி எங்க வீட்டு டின்னர் லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துடுச்சுங்க...
இதன் செய்முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்டா - 1 கப்
மைதா  -  1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
நெய் (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை
~~~~~~~~~~~


ஒரு பாத்திரத்தில் மைதாவையும்,ஆட்டாவையும் கலந்து தேவைக்கேற்ப உப்பும் கலந்து தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி நல்ல சாஃப்ட்டாக ஆகும் வரை நன்கு பிசையவும்.கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் இளகுவாக சாஃப்ட்டாக இருக்க வேண்டும்.
நன்கு பிசைந்த மாவை ஈரத்துணி கொண்டு மூடி ஒரு பதினைந்து நிமிடம் வரை வைத்து விடவும்.
பிறகு அந்த மாவின் சிறிது அரிசி மாவி தூவிக் கொண்டு ஒரு தடவை பிசைந்து விட்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகள் போட்டுக் கொள்ளவும்.10 முதல் 12 உருண்டைகள் வரும்.
இப்போது சப்பாத்தி கட்டையில் இரண்டு உருண்டைகளை உள்ளங்கைய்யை விட கொஞ்சம் பெரியதாக அரிசி மாவை தூவி வார்த்துக் கொண்டு,அதில் ஒரு சப்பாத்தியின் மேல் நெய்யோ, எண்ணையோ கைய்யில் தொட்டு முழுவதுமாக தடவி விட்டு மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரத்தை லேசாக அழுத்தி ஒட்டி விடவும்.இதே போல் எல்லா உருண்டையும் செய்து அதேன் மேல் அரிசி மாவை தூவி வைத்து கொள்ளலாம்.


நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
ஒட்டி வைத்திருக்கும் ஒரு சப்பாத்தியை எடுத்து அரிசி மாவை தூவி மிகவும் மெல்லியதாக வார்க்கவும்.அதை நன்கு சூடான தவாவில் போடவும்.
அதில் லேசாக பபுள் வர ஆரம்பிக்கும் போது திருப்பி போட்டு லேசாக துணியைக்கொண்டு அழுத்திவிட்டால் நன்கு உப்பும் அடியும் லேசாக சிவந்திருப்பின் எடுத்து விடவும்.
எடுத்து தட்டில் வைத்ததும் ரொட்டியின் ஓரத்தை பார்த்தோமேயானால் எடுத்து வந்தது போலோ இல்லை பிரிப்பதற்க்கு ஏதுவாகவோ இருக்கு.அதை கொண்டு இரண்டாக பிரித்தால் அழகாக இரண்டு ரொட்டியாக வந்துவிடும்.அது ஒவ்வொன்றையும் முக்கோணமாக மடித்து வைத்து விடவும்.இப்படியே எல்லா சப்பாத்தியையும் செய்யவும்.
சுட்டதும் ஹாட்பேக்கில் வைத்து விட்டோமெயானால் ஒரு நாள் முழுக்க வைத்திருந்தாலும் கொஞ்சம் கூட சாஃப்ட்டே குறையாமல் சூப்பராக இருக்கும்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள எந்த க்ரேவியும் சூப்பராக இருக்கும்.
என் குழந்தைகளுக்கு சிக்கன் க்ரேவியும்,தால் மக்கனியும் ரொம்ப பிடிக்கும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியவை:-))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மாவை நன்கு சாஃப்ட்டாக பிசைவது முக்கியம்.
2. நெய்யோ,எண்ணையோ   சேர்க்காமல் இருப்பதே இதன் ஸ்பெஷல்.
3.சுடும்போது தவா நன்றாக சூடாக இருப்பது முக்கியம்.
4.ஒவ்வொரு ரொட்டியையும் சுட்டு எடுக்கும் போது அடுப்பை குறைத்து விட்டு மீண்டும் ரொட்டி இட்டு போடுமுன் தவாவை நன்கு சூடுபடுத்தி விட்டு போடுவது முக்கியம்.
Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out