Showing posts with label கேக் வகைகள். Show all posts
Showing posts with label கேக் வகைகள். Show all posts

Saturday, December 6, 2014

வெப் கேக் (குக்கர் முறை)

இந்த குக்கர் கேக் செய்முறையை நான் ஊரில் இருக்கும் எனது உறவினர்களுக்காக செய்து பார்த்த முறை.... மைக்ரோவேவ்,ஓவன் இதெல்லாம் இருந்தால் தான் கேக் செய்யமுடியும் என்று இல்லாமல் இவ்வாறும் சுலபமாக செய்யலாம் என்று சொல்லி அவர்களும் செய்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.எனவே இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
 

தேவையான பொருட்கள்                   

மைதா  - 1 ¼ கப்

பட்டர்   - 50 கிராம்

பொடித்த சீனி – 1 1/2 கப்

முட்டை   - 2

கொகோ பவுடர்  - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி

பால்      - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்  - 2 மேசைக்கரண்டி

வெனிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி

உப்பு ( பேக் செய்ய) – 1 ½ (அ) 2 கப்


செய்முறை

பட்டர்,முட்டை,எஸன்ஸ்,பால் இவையெல்லாம் ரூம் டெம்பரேச்சரில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.ஐந்து லிட்டர் குக்கரில் உப்பை பரவலாக கொட்டி அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய தட்டோ வைத்து மூடியில் லப்பரோ,வெய்ட்டோ போடாமல் குக்கரை மூடி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு படுத்த வைக்கவும்.ஒரு சில்வர் அல்லது சுதேசி பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்க்கு உள்ளதை எடுத்து அதன் உள்ளே வெண்ணெயை உள் அடி பாகமும்,சுற்றிலும் தடவி விட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு மைதாவை போட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டும் அளவிற்கு சுத்தி தட்டி விடவும்.ஒட்டியது போக மிச்சம் இருப்பின் மாவை கொட்டி விடவும்.


மைதாவையும்,பேக்கிங் பவுடரையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலப்பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியை போட்டு எலெக்ட்ரிக் அல்லது ஹாண்ட் விஸ்க்கால் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.இப்போது அதில் வெனிலா எஸன்ஸ்,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு,கொஞ்சம் கொஞ்சமாக மாவையும் பாலையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வைக்கவும்.


மற்றுமொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கொக்கோ பவுடரை கட்டியில்லாமல் கலந்துக் கொண்டு,அதில் கலந்து வைத்திருக்கும் கலவையில் பாதியை அதில் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் கலந்து விட்டு வைக்கவும்.வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொக்கோ கலவையில் சின்ன குழி கரண்டியால் எடுத்து மெதுவாக நடுவே ஊற்ற வேண்டும். இன்னொரு குழிக் கரண்டியால் வெள்ளை கலவையை அதன் மேலே மெதுவாக ஊற்றவும்.இப்படியே மாற்றி மாற்றி முழுவதுமாக ஊற்றி விட்டு பாத்திரத்தை தட்டி சமபடுத்திவிட்டு,குக்கரை திறந்தால் சூடு வந்திருக்கும்.அதன் உள்ளே மெதுவாக வைத்து மறுபடியும் குக்கரை மூடி வைக்கவும்.முதல் 40 நிமிடம் வரை குக்கரை திறக்க கூடாது.அதன் பிறகு திறந்து பார்த்தால் நன்கு உப்பியிருக்கும் அதன் நடுவே ஒரு குச்சியை தண்ணியில் கழுவி விட்டு குத்தி வெளியே எடுத்துப் பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும்.அப்படியிருப்பின் அடுப்பை அணைத்து விடவும்.இல்லை கொஞ்சம் பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டி இருந்தால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வைத்து விட்டு,அதன் பின் சரிப்பார்த்துவிட்டு இறக்கவும்.


பாத்திரத்தை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கத்தியால ஓரத்தை ஒரு முறை சுத்தி தளர்த்திவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்தால் அழகாக வந்து விடும்….
இதை அப்படியே துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.மிகவும் டேஸ்டாக இருக்கும்.இல்லையென்றால் ஐஸிங் செய்து அலங்கரித்து சாப்பிடலாம்.ஐஸிங் முறையை அடுத்த பதிவில் பார்க்கவும்.

 குறிப்பு:-

1.இதே குக்கர் செய்முறையில் எல்லாவிதமான கேக்கும் செய்யலாம்.நன்கு மிருதுவாக வரும்.பிஸ்கட்டும் செய்யலாம்.அதன் குறிப்பை பின்பு போடுகின்றேன்.

2.சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் மில்க்மெய்ட் ஊற்றி செய்யலாம்.அதற்க்கேற்றார் போல் இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லை எக் ரீப்ப்ளேஸர் என்று கிடைக்கின்றது அதையும் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3.மாவை மாற்றி மாற்றி ஊற்றியப்பின் ஒரு கத்தியால் டிசைனுக்காக வெப் போல் ஆங்காங்கே இழுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்துள்ளேன்.இதுவே அப்படியே இழுத்து விடாமலும் வைக்கலாம். அது ஜீப்ரா டிசைனாக இருக்கும்.அப்படி செய்ததில் ஒரு பீஸ் இதோ உங்கள் பார்வைக்கு....





Sunday, August 24, 2014

சாக்லெட் ப்ரவ்னிஸ்

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வீட்டில் பார்ட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அயிட்டமாக இதை செய்து வைக்கலாம்.பெரியவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஈத் பெருநாள் வந்தாலே சிங்கப்பூரில் ஒரு மாதம் கொண்டாட்டம் தான்.மலாய் மக்களின் பழக்கப்படி இந்த ஒரு மாதமும் குடும்பத்துடன் தங்கள் அனைத்து உறவினர்களின் வீட்டிற்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி எல்லோரும் போக,வர இருப்பதால் எல்லோர் வீட்டின் டைனிங் டேபிளிலும் டப்பா டப்பாவாக ஸ்னேக்ஸ் செய்தோ,வாங்கியோ வைத்திருப்பார்கள்.வருபவர்கள் அதில் இருப்பதை டேஸ்ட் செய்து விட்டு காஃபியோ,ஜூஸோ குடித்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்ப எதுக்கு இந்த கதை என்கிறீர்களா?அந்த மாதிரி வைத்திருக்கும் ஸ்னேக்ஸில் இதுவும் ஒன்று.அதை எனது இல்லத்தில் பதிவிடவே விரும்புகிறேன்.

இப்போது அதன் செய்முறையை பார்க்கலாமா?

               

தேவையான பொருட்கள்
**********************
டார்க் சாக்லெட் - 100 கிராம்
பட்டர் - 1/4 கப்
மைதா(அ)ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
கண்டன்ஸ்ட் மில்க் - 1/2 டின்
பொடித்த சீனி - 1/2 கப்
வால்நட் - பொடியாக நறுக்கியது ஒரு கையளவு



செய்முறை
**********
பட்டர் ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்க வேண்டும்.
பட்டரையும்,சாக்லெட்டையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு மைக்ரோவேவ் ஹையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தோமேயானால் பட்டர் உருகியும்,சாக்லெட் லேசாக உருகியும் இருக்கும்.அந்த நிலையில் அதை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டோம் என்றால் நன்கு சாக்லெட் அந்த சூட்டிலேயே கரைந்து விடும்.அதை ஒன்று சேர கலந்து விட்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கையும் ஊற்றி கலந்து விட்டு பிறகு மைதா,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு முறை சலித்து விட்டு சாக்லெட் மிக்ஸில் சீனியையும்,இந்த மாவையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து விடவும்.அதன் பின் நறுக்கிய வால்நட்டில் பாதியை இதில் கலந்து விடவும்.
இப்போது ஓவனை 180டிகிரியில் முற்சூடு செய்யவும்.கேக் ட்ரேயில் பட்டர் முழுவதுமாக தடவி விரும்பினால் பட்டர் பேப்பர் போட்டுவிட்டு அதில் இந்த கலவையை பரவலாக கொட்டி  ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும்படி தட்டி விட்டு மீதி இருக்கும் வால்நட்டை தூவி விடவும்.
அதை முற்சூடு செய்த ஓவனில் வைத்து 30 முதல் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.(எனக்கு 30 நிமிடத்தில் ரெடியாகி விட்டது.எனவே அவரவர் ஓவனிற்கு தகுந்தார் போல் நேரத்தைப் பார்த்துக்கொள்ளவும்.)
இதன் நடுவில் டூத் பிக் வைத்து சோதித்து பார்த்து விட்டு வெளியே எடுத்து விடவும்.சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு எடுத்து விட்டு ஆறியதும் பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளலாம்.


இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.இதன் டேஸ்ட் கேக்குகள் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சிவ்வியாக இருக்கும்....
முயன்று பாருங்களேன் நிச்சயம் பிடிக்கும்.

குறிப்பு:)
*******
சாக்லெட் ,பட்டரை டபுள்பாயிலர் முறையில் உருக்கச்செய்யலாம்.

Saturday, January 25, 2014

சாக்லெட் லார்வா கேக்

டிசம்பர் பள்ளி விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் முழுநேரமும் இருந்ததால் ஏதாவது கொறிப்பதற்கு கேட்டு கொண்டிருப்பார்கள்.எனவே ஏதேனும் கேக்,டஸர்ட் ,நம்ம ஊர் திண்பண்டம் என செய்து கொடுத்து கொண்டிருந்தேன்.இதில் ரொம்ப நாளாக அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தது தான் சாக்லெட் லாவா கேக்.
இது தான் முதல் தடவை இந்த கேக்கை செய்வது.ரொம்ப நன்றாகவே வந்தது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.சூப்பர் என சர்டிஃபிகெட்டும் கொடுத்து விட்டார்கள்.இதை விட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கின்றது.இந்த சந்தோஷத்தோடு இதன் செய்முறையையும் பார்த்துவிடலாம்.
                                       
                                                சாக்லெட் லார்வா கேக்

தேவையான பொருட்கள்
**************************
குக்கிங் சாக்லெட் சிப்ஸ்    -  ஒரு கப்
பேக்கிங் சாக்லெட்      -    1
மைதா மாவு                 -  அரை கப்
கண்டன்ஸ்ட் மில்க்  -  அரை டின்
பேக்கிங் பவுடர்           -   1/2  தேக்கரண்டி
பட்டர்                              -  4  மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ்(விருப்பப்பட்டால்)  -  1 தேக்கரண்டி

செய்முறை
************

முதலில் ஒரு சில்வர் பாத்திரத்தில் குக்கிங் சாக்லெட் மற்றும் பட்டரை போட்டு டபுள் பாய்லர் மெத்தடில் உருக வைக்க வேண்டும்.அதாவது இந்த சாக்லெட் உள்ள பாத்திரத்தை மேலே வைக்கும் படியான வாய் கொஞ்சம் குறுகலான  பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் கால் பகுதி தண்ணீர் ஊற்றி சூடு படுத்திவிட்டு மிதமான தீயில் வைத்து விட்டு அதன் மேல் சாக்லெட் உள்ள பாத்திரத்தை வைத்து சாக்லெட்டை உருக செய்ய வேண்டும்.
(புகைப்படத்தில் உள்ளபடி)
இதற்கிடையில்,நடுத்தர அளவிலான பேக்கிங் கண்ணாடி பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பட்டரை உள்ளே நன்கு தடவி விட்டு சிறிது மைதா தூவி எல்லா இடத்திலும் படுமாறு தட்டி விட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டி கொண்டதும் மீதி மாவை கீழே தட்டி விடவும்.
இப்போது  அவனையும் 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும்.
சாக்லெட்டும்,பட்டரும் உருகியதும் நன்கு கலக்கி விட வேண்டும்.ஒன்று சேர கலக்கி கொண்டே கீழே இறக்கி வைத்துக் கொண்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றி கலந்து விடவும்.


பிறகு அதிலேயே பேக்கிங் பவுடர் மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு ஒன்று சேர அந்த சூட்டிலேயே கலக்கி விட வேண்டும்.கெட்டியாகி விடும்
 அதன் பிறகு முற்சூடு முடிந்ததும்,பேக்கிங் பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மாவை நன்கு கலந்த வண்ணம் ஊற்றி விட்டு அதன் நடுவே பேக்கிங் சாக்லெட்டில் கட்டம் கட்டமாக இருக்கும் அல்லவா அதில் ஒரு விரல் அளவு உடைத்த துண்டுகளில்  இரண்டு துண்டுகளை  நடுவில் மெதுவாக நிற்க்கும் படி வைக்கவும்.
அதை அவனில் வைத்து 18 நிமிடம் செட் செய்து பேக் செய்யவும்.
நேரம் முடிந்ததும் வெளியில் எடுத்து பத்து நிமிடம் வைத்து விட்டு ஒரு ட்ரேயில் தலை கீழாக வைத்து மெதுவாக கவிழ்த்தால் அழகாக வந்து விடும்.அதன் நடுவே லேசாக வெட்டி பார்த்தோமேயானால் சாக்லெட் மெல்ட்டாகிய படி இருக்கும்.சுற்றி கேக் வெந்து இருக்கும்.சாப்பிட ம்ம்ம்ம்... மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இளஞ்சூடாகவே சாப்பிட நன்றாக இருக்கும்.ஆறியும் சாப்பிடலாம்.




இதில் இன்னும் சில குறிப்புகள்:-)))
*********************************
இதில் அதிகம் சாக்லேட் லார்வா (நடுவில் உருகியிருப்பது)வேண்டுமெனில் இன்னும் ஒரு துண்டு சேர்த்து கொள்ளலாம்.
வெனிலா எஸன்ஸ் நான் ஊற்றவில்லை வெறும் சாக்லெட் சுவையுடனே இருக்கும்படி செய்தேன்.உங்களுக்கு விருப்பமெனில் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பேக் செய்யும் நேரம் ஓவனுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் வித்தியாசப்படலாம்.
எங்கள் வீட்டில் இருப்பது கன்வெக்‌ஷன் அவன்.எனவே எனக்கு இந்த டைம் சரியாக இருந்தது.மேலும் இதற்கு மேல் நேரம் தேவைபடாது 
என்றே நினைக்கிறேன்.20 நிமிடங்களுக்குள்ளாகவே ரெடியாக கூடியதுதான் இந்த கேக்.
இந்த அளவில் உள்ளதை இன்னும் சிறிய பவுலாக எடுத்துக் கொண்டு இரண்டு கேக்காகவும் ஒரே நேரத்தில் பேக் செய்யலாம்.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out