Showing posts with label சிறப்பு உணவுகள். Show all posts
Showing posts with label சிறப்பு உணவுகள். Show all posts

Saturday, March 8, 2014

குவே

இந்த குவே... தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் காரைக்கால்,நாகப்பட்டினம் ஊர்களில் எந்த ஒரு விஷேச,பண்டிகையானாலும் இந்த இனிப்பு வகை இடம்பெற்றிருக்கும்.

இது நம் தமிழ்நாட்டு குறிப்பு என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.ஏனென்றால் நான் முதன்முதலில் சாப்பிட்டு பார்த்ததும் எங்கள் ஊர் பெண் வீட்டில் தான்.அவர் சொல்லிதான் நான் முதன் முதலில் செய்தேன்.
இங்கே சிங்கப்பூர் வந்த பிறகுதான் தெரிய வந்தது இது மலாய் மக்களின் பாரம்பர்ய இனிப்பு வகை என்று.ஆம் அவர்கள்தான் வீட்டின் சின்ன விஷேசம் முதல் திருமண நிகழ்ச்சி ஆனாலும் எத்தனை வகை உணவுகள் இருப்பினும் இந்த இனிப்பு இல்லாமல் இருப்பதில்லை.அவ்வளவு கலர் கலராக வகைப்படுத்தி வைப்பார்கள்.இதில் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து செய்வார்கள் அது ஒரே கலராக அது ஒரு வகையாக வைக்கப்பட்டிருக்கும்.கிழங்கு வகைகளை சேர்த்தும் சேர்த்தும் அது ஒரு வகையாக செய்வார்கள்.இங்கு நிறைய இனிப்புகள் விற்க்கும் கடைகளிலும் கிடைக்கும்.அவ்வளவு பெயர் பெற்றதாகும்.அது அப்படியே இங்கு பல வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களிடமும் பரவிவிட்டது  என்றுதான் சொல்ல வேண்டும்.சரி இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.

                        குவே
தேவையான பொருட்கள்
அரிசிமாவு       - ஒரு கப்
சீனீ              - 1 ½ கப்
கெட்டியான தேங்காய் பால்  - 2 கப்
டவுன் பாண்டன் இலை  -  1 (அல்லது)
ஏலக்காய்          - 3 (ஆனால் ஏலக்காய் அவர்கள் சேர்ப்பதில்லை)
சோம்பு            - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர்ஸ்       - விருப்பமான                         கலர்(ஆரஞ்சு,பச்சை,ரோஸ்)       
செய்முறை

முதலில் சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சோம்பு,பாண்டன் இலை அல்லது ஏலக்காயை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.சீனி நன்கு கரைந்து இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.அதை இறக்கி நன்கு ஆற விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதில் தேங்காய்பால் சேர்த்து,அத்துடன் இந்த சீனி கரைசலையும் வடிக்கட்டி சேர்த்து நன்கு கட்டியில்லாமல் நீர்க்க கரைக்க வேண்டும்.கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதை மாவு சல்லடை அல்லது வடித்தட்டில் வடிக்கட்டி கொள்ளவும்.
இப்போது இதை நான்கு சரிசமமாக கப்களில் எடுத்துக் கொண்டு மூன்று கப்களில் நாம் தனியே கலர்களை நன்கு கலந்து விடவும்.
ஒரு ரைஸ் குக்கர் பாத்திரத்திலோ அல்லது இட்லி அவிக்கும் பாத்திரத்திலோ உள்ளே 3 இன்ச் உயர அளவு வட்ட பாத்திரத்தினை (ஒரு பாத்திர ஸ்டாண்ட் மேலே)வைத்தால் அதில் ஒரு இன்ச் அளவிற்க்கு தண்ணீர் தொடும் படி ஊற்றவும்.அதை சூடு படுத்தவும்.
இனி அந்த வட்ட பாத்திரத்தில் சிறிது நெய் தடவிக்கொண்டு முதலில் பச்சைக்கலர் ஒரு பெரிய குழிக்கரண்டி அளவு எடுத்து ஊற்றவும்.மிகவும் மெல்லிய லேயராக இருந்தால் தான் சீக்கிரம் சீக்கிரம் வேக வைத்து எடுக்க வசதியாக இருக்கும்.

அதை அந்த கொதிக்கும் நீரில் வைத்து மூடியில் ஒரு கர்ச்சீப் அல்லது துணியை கட்டி மூடி ஐந்து நிமிடம் வேக விடவும்.(வட்டிலாப்பம் வேக விடுவது போல்)
அதன் பிறகு மூடியை திறந்து பார்த்து விரலால் தொட்டு பார்த்தால் வெந்தும் அதே சமையம் லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்.இப்போது அடுத்த கலரை அதே அளவு எடுத்து மெதுவாக வெந்திருக்கும் அந்த லேயரின் மேலேயே ஊற்றி அதே போல் ஐந்து நிமிடம் வேக விடவும்.இதே போல் எல்லா கலரையும் ஒன்றன் மேல் ஒன்றாக மாற்றி ஊற்றி வேக விடவும்.இடையிடையே வேகும் அளவிற்க்கு தண்ணீர் இருக்கிறதா என பார்த்து ஊற்றவும்.கடைசி கரைசலை ஊற்றிய பிறகு பத்து நிமிடம் வேகவிட்டு பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை மெதுவாக வெளியே எடுத்து வைத்து ஆறவிடவும்.வேண்டுமானால் சூடு சிறிது குறைந்ததும் குளிர்சாதன பெட்டியிலும் அரை மணிநேரம் வைத்து எடுக்கலாம்.ஆறியதை ஒரு தாம்புலத்தில் தலைகீழ் கவிழ்த்து லேசாக தட்டினால் அப்படியே பாத்திரத்தை விட்டு விழுந்து விடவும்.கத்தியில் சிறிது நெய் தடவி கொண்டு,அதை விரும்பிய வடிவில் துண்டு போடலாம்.

சுவையான வண்ணமிகு குவே தயார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆவியில் வேக வைப்பதாலும் எண்ணெய் நெய் வஸ்துகள் இல்லாததாலும் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது….
குறிப்பு:- )))
இதில் பாரம்பரிய செய்முறை என பார்த்தால் பச்சரிசியை கழுவி 4 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் மைய நைசாக அரைத்து அதன் பிறகு மற்றவற்றை அதில் கலந்து அதே போல் வடிக்கட்டி செய்வார்கள்.நான் மாவிலும் செய்து பார்த்து அதுவும் நன்றாக வரவே உங்களுக்கு அந்த  ஈஸியான முறையை செய்து காண்பித்திருக்கின்றேன்.இதில் மற்றொரு முறையையும் விரைவில் செய்து எனது பக்கத்தில் சேர்க்கிறேன்.


Saturday, January 25, 2014

சாக்லெட் லார்வா கேக்

டிசம்பர் பள்ளி விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் முழுநேரமும் இருந்ததால் ஏதாவது கொறிப்பதற்கு கேட்டு கொண்டிருப்பார்கள்.எனவே ஏதேனும் கேக்,டஸர்ட் ,நம்ம ஊர் திண்பண்டம் என செய்து கொடுத்து கொண்டிருந்தேன்.இதில் ரொம்ப நாளாக அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தது தான் சாக்லெட் லாவா கேக்.
இது தான் முதல் தடவை இந்த கேக்கை செய்வது.ரொம்ப நன்றாகவே வந்தது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.சூப்பர் என சர்டிஃபிகெட்டும் கொடுத்து விட்டார்கள்.இதை விட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கின்றது.இந்த சந்தோஷத்தோடு இதன் செய்முறையையும் பார்த்துவிடலாம்.
                                       
                                                சாக்லெட் லார்வா கேக்

தேவையான பொருட்கள்
**************************
குக்கிங் சாக்லெட் சிப்ஸ்    -  ஒரு கப்
பேக்கிங் சாக்லெட்      -    1
மைதா மாவு                 -  அரை கப்
கண்டன்ஸ்ட் மில்க்  -  அரை டின்
பேக்கிங் பவுடர்           -   1/2  தேக்கரண்டி
பட்டர்                              -  4  மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ்(விருப்பப்பட்டால்)  -  1 தேக்கரண்டி

செய்முறை
************

முதலில் ஒரு சில்வர் பாத்திரத்தில் குக்கிங் சாக்லெட் மற்றும் பட்டரை போட்டு டபுள் பாய்லர் மெத்தடில் உருக வைக்க வேண்டும்.அதாவது இந்த சாக்லெட் உள்ள பாத்திரத்தை மேலே வைக்கும் படியான வாய் கொஞ்சம் குறுகலான  பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் கால் பகுதி தண்ணீர் ஊற்றி சூடு படுத்திவிட்டு மிதமான தீயில் வைத்து விட்டு அதன் மேல் சாக்லெட் உள்ள பாத்திரத்தை வைத்து சாக்லெட்டை உருக செய்ய வேண்டும்.
(புகைப்படத்தில் உள்ளபடி)
இதற்கிடையில்,நடுத்தர அளவிலான பேக்கிங் கண்ணாடி பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பட்டரை உள்ளே நன்கு தடவி விட்டு சிறிது மைதா தூவி எல்லா இடத்திலும் படுமாறு தட்டி விட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டி கொண்டதும் மீதி மாவை கீழே தட்டி விடவும்.
இப்போது  அவனையும் 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும்.
சாக்லெட்டும்,பட்டரும் உருகியதும் நன்கு கலக்கி விட வேண்டும்.ஒன்று சேர கலக்கி கொண்டே கீழே இறக்கி வைத்துக் கொண்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றி கலந்து விடவும்.


பிறகு அதிலேயே பேக்கிங் பவுடர் மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு ஒன்று சேர அந்த சூட்டிலேயே கலக்கி விட வேண்டும்.கெட்டியாகி விடும்
 அதன் பிறகு முற்சூடு முடிந்ததும்,பேக்கிங் பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மாவை நன்கு கலந்த வண்ணம் ஊற்றி விட்டு அதன் நடுவே பேக்கிங் சாக்லெட்டில் கட்டம் கட்டமாக இருக்கும் அல்லவா அதில் ஒரு விரல் அளவு உடைத்த துண்டுகளில்  இரண்டு துண்டுகளை  நடுவில் மெதுவாக நிற்க்கும் படி வைக்கவும்.
அதை அவனில் வைத்து 18 நிமிடம் செட் செய்து பேக் செய்யவும்.
நேரம் முடிந்ததும் வெளியில் எடுத்து பத்து நிமிடம் வைத்து விட்டு ஒரு ட்ரேயில் தலை கீழாக வைத்து மெதுவாக கவிழ்த்தால் அழகாக வந்து விடும்.அதன் நடுவே லேசாக வெட்டி பார்த்தோமேயானால் சாக்லெட் மெல்ட்டாகிய படி இருக்கும்.சுற்றி கேக் வெந்து இருக்கும்.சாப்பிட ம்ம்ம்ம்... மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இளஞ்சூடாகவே சாப்பிட நன்றாக இருக்கும்.ஆறியும் சாப்பிடலாம்.




இதில் இன்னும் சில குறிப்புகள்:-)))
*********************************
இதில் அதிகம் சாக்லேட் லார்வா (நடுவில் உருகியிருப்பது)வேண்டுமெனில் இன்னும் ஒரு துண்டு சேர்த்து கொள்ளலாம்.
வெனிலா எஸன்ஸ் நான் ஊற்றவில்லை வெறும் சாக்லெட் சுவையுடனே இருக்கும்படி செய்தேன்.உங்களுக்கு விருப்பமெனில் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பேக் செய்யும் நேரம் ஓவனுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் வித்தியாசப்படலாம்.
எங்கள் வீட்டில் இருப்பது கன்வெக்‌ஷன் அவன்.எனவே எனக்கு இந்த டைம் சரியாக இருந்தது.மேலும் இதற்கு மேல் நேரம் தேவைபடாது 
என்றே நினைக்கிறேன்.20 நிமிடங்களுக்குள்ளாகவே ரெடியாக கூடியதுதான் இந்த கேக்.
இந்த அளவில் உள்ளதை இன்னும் சிறிய பவுலாக எடுத்துக் கொண்டு இரண்டு கேக்காகவும் ஒரே நேரத்தில் பேக் செய்யலாம்.

Friday, July 19, 2013

நோன்பு கஞ்சி

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு காலங்களில் அனைத்து இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நோன்பு திறந்தவுடன் சாப்பிடுவது நோன்பு கஞ்சிதான்.எவ்வளவு வகை வகையாக சாப்பிடுவதற்கு இருந்தாலும் நம் கலைப்பை போக்குவதற்க்கு மனம் நாடுவது இந்த கஞ்சியைதான்.
இதை ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிவாசல் வாயில்களில் காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவது என்பது ஒரு தனி சிறப்பே...ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பள்ளிவாசல்களில் அமர்ந்தும் சரி,எல்லோர் வீடுகளிலும் சரி ஒருங்கிணைந்து சாப்பிடுவதும் இந்த கஞ்சியைதான்.
அப்படியான இந்த கஞ்சியை வெளிநாட்டில் வாழும் நாங்களும் எங்கள் வீட்டில் விரும்பி செய்து சாப்பிடுவோம்.நிறைய சகோதரிகள் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தாலும் எனது இல்லத்தில் இடம்பெற வேண்டும் அல்லவா?அதிலும் ஒவ்வொரு மாவட்டுங்களுக்கு ஏற்ப அதன் குறிப்பு சற்றே வித்தியாசப்படும்.எனவே எங்கள் ஊர் சிறப்பு கஞ்சி என்ற முறையில் இந்த குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.



                                                        நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

உடைத்த பச்சரிசி                  -  கால் கப்
கடலை பருப்பு                        -  ஒரு ஸ்பூன்
வெந்தயம்                                  -  ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம்                -  ஒன்று
பூண்டு                                          -   4 பல்
தக்காளி,கேரட்                         -   (தலா)அரிந்தது ஒரு தேக்கரண்டி அளவு
பச்சை மிளகாய்                       -   2(அ)3
புதினா தழை                             -  சிறிதளவு
பட்டை                                         - சிறு துண்டு
கிராம்பு,ஏலக்காய்                   - தலா ஒன்று
எண்ணெய்                                  - 2 தேக்கரண்டி
நெய்                                               -  1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு அரவை            -   1 ஸ்பூன்
திக்கான தேங்காய் பால்       -   கால் கப்

செய்முறை


அரிசியோடு கடலைபருப்பையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவிவிட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தையும்,பூண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறி வைத்து விடவும்.


ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு பின் தக்காளி,புதினா தவிர்த்து மற்றவற்றை போட்டு வதக்கவும்.லேசாக வதங்கும் போதே இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வாசம் வர வதக்கவும்.பின்பு தக்காளி,புதினாவை சேர்த்து சிறிது வதக்கி விட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசி,பருப்பை போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போடவும்.ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் விடுபவர்கள் சாதத்திற்க்கு வைப்பது போல் விசில் விட்டு இறக்கலாம்)


ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து நன்கு பூணடை மசித்தபடி கிளறிவிட்டு பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.(மிகவும் கெட்டியாக இருந்தால் பாலோடு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.)
சுவையான கலைப்பை போக்க கூடிய நோன்பு கஞ்சி தயார்.இதை பேச்சுலர்ஸ் கூட செய்ய கூடிய அளவிற்க்கு சுலபமான குறிப்பாகும்.(இது நான்கு கப் அதாவது நான்கு பேர் குடிப்பதற்கான குறிப்பாகும்)



குறிப்பு:-)) இதில் கைமா விரும்புவர்கள் ஆரம்பத்தில் சேர்த்து வதக்கி விட்டு பின் மற்றவற்றை சேர்த்து வதக்கலாம்.கடைசியில் முருங்கை கீரை இலை ஒரு கைப்பிடி பால் ஊற்றும் போது அதையும் சேர்க்கலாம்.பார்க்கவும் சரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.அதே போல் சுண்டல் அதில் தனியேவும் சேர்க்கலாம்.இல்லை தனியே தாளித்து கஞ்சியோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.




Saturday, January 5, 2013

நாஸி லிமா(க்) (nasi limak)



நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது இல்லத்தில் சமையல் குறிப்பை போடுகின்றேன்.

இந்த சமையல் மலேசிய,சிங்கப்பூர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.
நான் இந்த சிங்கப்பூருக்கு புதிதாக இருப்பதால் இப்பொழுதுதான் ஒவ்வொரு உணவாக சுவைத்துவருகின்றேன. 
இந்த நாஸி லிமா(க்) என்ற உணவு எனது நாத்தினார் திருமதி.ஆயிஷா  அவர்கள்  வீட்டில் செய்து தந்து நான் மிகவும் விரும்பி சாப்பிட்டதாகும்.

சாதத்தில் செய்யக்கூடிய எந்த உணவுக்கும் நாஸி என்று ஆரம்பித்துதான் பெயர் இருக்கும்.
அதைதான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வந்தேன்.மிகவும் சுலபமான சுவையான ஒரு உணவு.அதன் செய்முறை விளக்கத்தை இப்போது பார்க்கலாம் வாங்க….





              நாஸி லிமா(க்) (nasi limak)

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி    - 3கப்

தேங்காய் பால்    - 4 ½ கப்

பூண்டு              - 4 பல்

டவுண்பாண்டா இலை(அ)
பிரிஞ்சி இலை     - 1

பட்டை              - 1 இன்ச் அளவு

வேர்கடலை        - அரை கப்

நெத்திலி கருவாடு   - அரை கப்

கெட்டியான புளி தண்ணீர்  - 2 (அ) 3 ஸ்பூன்

முட்டை     - 5

நெய்        - 3 ஸ்பூன்

வெள்ளரிக்காய்  - இரண்டு

சீனீ                - ஒரு ஸ்பூன்

அரைத்துக்கொள்ள:-)

சின்ன வெங்காயம்    - அரை கப்

பூண்டு     - 3 பல்

இஞ்சி      - ஒரு இன்ச் அளவு

காய்ந்த மிளகாய்   - அரை கப்

நெத்திலி கருவாடு   - 8

செய்முறை :-


அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் 

வதக்கி ஆர வைத்தும் அரைக்கலாம்.இல்லையென்றால் சும்மாவே மிக்ஸியில் நைசாக 

அரைத்து வைத்து கொள்ளவும்.

முட்டையையும் வேக வைத்துக்கொள்ளவும்.


இப்போது சாதம் செய்வதற்க்கு எலெக்ட்ரிக் குக்கரிலையோ அல்லது சாதா 

பாத்திரத்திலையோ மிகவும் அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்  கலந்த தேங்காய் 

பாலை(இங்கே பாக்கெட் தேங்காய்பாலையே தண்ணீர் கலந்து ஊற்றுகிறார்கள் நன்றாகதான் 

இருகின்றது)கொடுத்திருக்கும் அளவில் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு 

போட்டு,பூண்டையும் நசுக்கி அதையும்,பட்டை,டவுண்பாண்டா இலை,நெய் இவற்றையும் 

போட்டு கொதி வந்ததும் சுத்தம் செய்து கால் மணிநேரம் ஊற வைத்திருக்கும் 

அரிசியையும்,தேவையான அளவு உப்பும் போட்டு நன்கு கிளறி நன்கு கொதித்ததும் தம் 

போடவும்.


அது தம் ஆவதற்க்குள் அரைத்து வைத்திருப்பதை கொண்டு சம்பல் என்கிற க்ரேவி தயாரித்து 

விடலாம்.ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அதில் கடலையை வறுத்து எடுத்து வைத்துக் 

கொள்ளவும்.அதே போல் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் நெத்திலியில் சிறிது 

உப்பு,மிளகாய்த்தூள் போட்டு பிரட்டி அதையும் அந்த எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து 

இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதே எண்ணெயில் இந்த அரைத்து 




வைத்திருக்கும் விழுதை கொட்டி சிறிது தண்ணீர் அலசி ஊற்றி புளித்தண்ணீர்,உப்பு,சீனி 

இவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மிலேயே சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க 

விடவும்.அந்த மசாலா நன்கு சுண்டி எண்ணேய் மேலே மிதந்து வாசமாக வந்தவுடன் இறக்கி 

விடவும்.


இப்போது எப்படி கடையில் நாஸி லிமக் என்று கேட்டால் கொடுப்பார்களோ அப்படியே 

காண்பிக்கிறேன் பாருங்கள்.


ஒரு ப்ளேட் அல்லது பவுலில் வட்ட அச்சு வடிவில் தேங்காய் பால் சாதத்தை நடுவில் கொட்டி 

அதன் மேல் முட்டையை பாதியாக வெட்டி வைத்து ஒரு பக்கம் அந்த சம்பலையும்(சாதத்தின் 

மேலேயே அந்த க்ரேவியை போட்டுதான் தருவார்கள் நான் சைடில் தெரிவதற்க்காக 

வைத்துள்ளேன்),மற்றொரு  பக்கம் வறுத்த கடலை நெத்திலி காம்பினேஷனையும் வைத்து 

சுற்றி நறுக்கிய  வெள்ளரிக்காயோடு தருவார்கள்.இது பார்க்க மட்டுமல்லாமல் சாப்பிடவும் 

சுவையாக  இருக்கும். 

நாஸி லிமா(க்)ஆயம் என்றால் இந்த காம்பினேஷனுடன் கோழியையும் சேர்த்து 

தருவது.அதுவும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவே

தேவையில்லை.நாம் வெளியில் சாப்பிடுவதை விட இது போல் ஆசையாக இருக்கும் போது

வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுத்தமாக செய்து சாப்பிட்ட ஒரு திருப்தியோடு

நமக்கும் அடிக்கடி செய்யும் சமையலில் இருந்து ஒரு சின்ன மாற்றமாகவும்இருக்கும் இல்லையா...?

முயன்று பாருங்களேன்.

குறிப்பு:- இந்த சம்பலில் அதிக காரம் விரும்புவோர் கூடுதல் காய்ந்த
மிளகாயையும்,நெத்திலி வாசம் விரும்புவோர் அதையும் கூடுதலாக சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.





















Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out