தேவையான பொருட்கள்
சாக்லேட்சிப்ஸ்(அ) பார் - 80 கிராம்
பட்டர் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
திக் க்ரீம் - 120 மிலி
சீனி - 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு அகன்ற பாத்திரத்தில் சாக்லேட் பாரை உடைத்து போட்டு அதனோடு பட்டரை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொஞ்சம் வத்து கொதிக்க விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் இந்த சாக்லேட் உள்ள பாத்திரத்தை வைத்து சூடு படுத்தவும்.உடனே சூடேறியதும் சாக்லேட் எல்லாம் உருக ஆரம்பிக்கும் போது அந்த பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி விடவும் திரி திரியாக ஆனதென்றால் ஒரு சில துளிகள் தண்ணீர் தெளித்து கிளறி மறுபடியும் அந்த கொதிநீர் பாத்திரத்தின் மேல் வைத்து நன்கு ஒன்று சேர கிளறவும் ஒன்று சேர்ந்து இளகி இருக்க வேண்டும்.அதன் பின் இறக்கி வைத்து விடவும்.(அதிக நேரம் கொதிநீர் பாத்திரத்தின் மேலேயே வைத்திருக்க கூடாது.)


ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைகருவை தனியே ஊற்றி விட்டு மஞ்சள் கருவை இந்த சாக்லேட் வெதுவெதுப்பாக இருக்கும் போது சேர்க்கவும்.சாக்லேட்டோடு மஞ்சள் நன்கு ஒன்று சேர ஸ்பூனால் நன்கு அடித்து கலக்கி வைக்கவும்.வெள்ளை கருவை தனியே நன்கு நொரை பொங்க கிரீம் போல் அடித்து வைத்துக்கொள்ளவும்.(எலக்ட்ரிக் பீட்டர் இருந்தால் க்ரீம் போல் வெள்ளை கரு அடிக்க வரும்.என்னிடம் இல்லாததால் கை பீட்டரால் தான் அடித்தேன் எனவே மிகவும் க்ரீமியாக வரவில்லை.)
மற்றொரு பாத்திரத்தில் திக்கான க்ரீமை ஊற்றி அதில் சீனியை சேர்த்து நன்கு பீட்டரால் கை விடாமல் அடிக்கவும் கெட்டியான க்ரீமாக ஆகிவிடும்.ஸ்பூனால் எடுத்து போடுவது போல் திக்காக ஆகவேண்டும்.
இப்பொழுது சாக்லேட் கலவை மேல் நன்கு அடித்து வைத்திருக்கும் இந்த வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.அதன் பின் அந்த க்ரீமையும் சேர்த்து மெதுவாக ஒன்று சேர கிளறவும்.
அதன்பிறகு இரண்டு கப்களில் அதை ஊற்றி ஃப்ரீசரில் 4 அல்லது 5 மணிநேரம் வைத்து விடவும்.சாப்பிடும் முன்பாக வெளியில் எடுத்து க்ரீமை சீனி சேர்த்து அடித்தோம் அல்லவா அதே போல் கொஞ்சம் அடித்து அதை இந்த மூஸ் மேல் ஒரு ஸூன் வைத்து அதன் மேல் சாக்லேட்ஸை துருவி தூவி அலங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.விரும்பி சாப்பிடுவார்கள்.இல்லையென்றால் இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு இப்படி அலங்கரித்து மீண்டும் வைத்து விட்டு செட் ஆனதும் கொடுக்கலாம்.5 மணிநேரம் முழுமை அடைந்தால் நன்கு திக்காக சாப்பிட நன்றாக இருக்கும்.பெரியவர்களுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும் முயன்று பாருங்களேன்.
குறிப்பு:-)) இதற்க்கு நான் மில்க் சேர்ந்த கொகோ சாக்லேட்டை சேர்த்தேன்.டார்க் சாக்லேட் விரும்புவர்கள் டார்க் சாக்லேட் சேர்க்கலாம்.

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு காலங்களில் அனைத்து இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நோன்பு திறந்தவுடன் சாப்பிடுவது நோன்பு கஞ்சிதான்.எவ்வளவு வகை வகையாக சாப்பிடுவதற்கு இருந்தாலும் நம் கலைப்பை போக்குவதற்க்கு மனம் நாடுவது இந்த கஞ்சியைதான்.
இதை ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிவாசல் வாயில்களில் காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவது என்பது ஒரு தனி சிறப்பே...ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பள்ளிவாசல்களில் அமர்ந்தும் சரி,எல்லோர் வீடுகளிலும் சரி ஒருங்கிணைந்து சாப்பிடுவதும் இந்த கஞ்சியைதான்.
அப்படியான இந்த கஞ்சியை வெளிநாட்டில் வாழும் நாங்களும் எங்கள் வீட்டில் விரும்பி செய்து சாப்பிடுவோம்.நிறைய சகோதரிகள் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தாலும் எனது இல்லத்தில் இடம்பெற வேண்டும் அல்லவா?அதிலும் ஒவ்வொரு மாவட்டுங்களுக்கு ஏற்ப அதன் குறிப்பு சற்றே வித்தியாசப்படும்.எனவே எங்கள் ஊர் சிறப்பு கஞ்சி என்ற முறையில் இந்த குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
நோன்பு கஞ்சி
தேவையான பொருட்கள்
உடைத்த பச்சரிசி - கால் கப்
கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
தக்காளி,கேரட் - (தலா)அரிந்தது ஒரு தேக்கரண்டி அளவு
பச்சை மிளகாய் - 2(அ)3
புதினா தழை - சிறிதளவு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு,ஏலக்காய் - தலா ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு அரவை - 1 ஸ்பூன்
திக்கான தேங்காய் பால் - கால் கப்
செய்முறை
அரிசியோடு கடலைபருப்பையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவிவிட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தையும்,பூண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறி வைத்து விடவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு பின் தக்காளி,புதினா தவிர்த்து மற்றவற்றை போட்டு வதக்கவும்.லேசாக வதங்கும் போதே இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வாசம் வர வதக்கவும்.பின்பு தக்காளி,புதினாவை சேர்த்து சிறிது வதக்கி விட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசி,பருப்பை போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போடவும்.ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் விடுபவர்கள் சாதத்திற்க்கு வைப்பது போல் விசில் விட்டு இறக்கலாம்)
ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து நன்கு பூணடை மசித்தபடி கிளறிவிட்டு பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.(மிகவும் கெட்டியாக இருந்தால் பாலோடு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.)
சுவையான கலைப்பை போக்க கூடிய நோன்பு கஞ்சி தயார்.இதை பேச்சுலர்ஸ் கூட செய்ய கூடிய அளவிற்க்கு சுலபமான குறிப்பாகும்.(இது நான்கு கப் அதாவது நான்கு பேர் குடிப்பதற்கான குறிப்பாகும்)
குறிப்பு:-)) இதில் கைமா விரும்புவர்கள் ஆரம்பத்தில் சேர்த்து வதக்கி விட்டு பின் மற்றவற்றை சேர்த்து வதக்கலாம்.கடைசியில் முருங்கை கீரை இலை ஒரு கைப்பிடி பால் ஊற்றும் போது அதையும் சேர்க்கலாம்.பார்க்கவும் சரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.அதே போல் சுண்டல் அதில் தனியேவும் சேர்க்கலாம்.இல்லை தனியே தாளித்து கஞ்சியோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
