Wednesday, December 11, 2013

அவல் பாயாசம்

இது தமிழர் சமையலுக்காக செய்த ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகளுக்கு சத்தான அதே சமையம் கொஞ்சம் ரிச்சான பாயாசம்.



தேவையான பொருட்கள்

அவல்         -  ஒரு கப்
காய்ச்சிய பால் - அரை லிட்டர்
மில்க் மெய்ட்  - அரை டின்
சீனீ              -  கால் கப்
நெய்            -  இரண்டு தேக்கரண்டி
உப்பு            -  இனிப்பு எடுப்பதற்கு சிறிதளவு
முந்திரி,திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்   - 3
குங்குமப்பூ  -  சிறிதளவு

செய்முறை



அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி லேசாக சூடு வரும்போதே,உடைத்து வைத்திருக்கும் முந்திரியையும்,திராட்சையையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே நெய்யில் பொடித்து வைத்திருக்கும் அவலையும் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும்.(நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.)


நல்ல மணம் வந்ததும்,காய்ச்சிய பாலோடு ஒரு டம்ளர் தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.அவல் வெந்ததும் சீனியையும்,மில்க்மெய்டையும் சேர்த்து நன்கு கிளறி கொதித்ததும் ஏலக்காயை பொடித்து தூவி கிளறிவிடவும்.மிதமான தீயிலேயே  பாயாசம் ஒரு கொதி கொதித்ததும் வறுத்த முந்திரி திராட்சை,குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.ஆறியதும் பறிமாறவும்.ஃபிரிட்ஜில் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.



மிகவும் கெட்டியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.அப்படி அவல் வேகும்போதே உங்களுக்கு தோன்றினால் இன்னும் சிறிது பாலையோ தண்ணீரையோ சேர்த்துக் கொள்ளவும்.ஏனென்றால் ஆறினால் பாயாசம் கெட்டி கொடுக்கும் அல்லவா...  

Tuesday, November 26, 2013

வாழைப்பூ வதக்கல்

இது நம் தமிழர் சமையலுக்காக செய்த ஸ்பெஷல்.பாரம்பரிய சமையலில் ஒன்று எனவும் சொல்லலாம்.மிகவும் சத்தான சமையல்.செய்வது எளிது...கூடுதல் சுவை மிக்கது.இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்

வாழைப்பூ.      - ஒன்று
முருங்கை இலை - குவியலாக ஒரு கப்
பெரிய வெங்காயம் (அ)
சிறிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
வாழைப்பூவினை ஆய்ந்து நறுக்கி மோரும்,உப்பும் கலந்த தண்ணீரில் போட்டு நன்கு பிசைந்து கழுவி வடிகட்டி விட்டு மீண்டும் மூன்று நான்கு முறை வேறு தண்ணீரில் கழுவி வடித்து வைக்கவும்.



ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வைக்கவும்.

பாதி வதங்கியதும்,தண்ணீர் வடித்த வாழைப்பூவினை சேர்த்து நன்கு பிரட்டி மிதமான தீயில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.
பிறகு வெந்ததா என் சரிபார்த்து விட்டு முருங்கை இலையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

பிறகு தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்துவிட்டு இறக்கவும்.இது எல்லாவிதமான சாதத்திற்கும் தொட்டு கொள்ள ஏற்ற பக்க உணவாகும்.மிகவும் சத்தானதும் கூட. 


Tuesday, November 5, 2013

ப்ரவுன் ரைஸ்,உளுந்து அடை


தேவையான பொருட்கள்

உளுந்து.     - 2 கப்
ப்ரவுன் ரைஸ் - 3/4 கப்
முட்டை -  1
உப்பு.      -   தேவையான அளவு
எண்ணெய்(அ)நெய் - சுடுவதற்கு

செய்முறை


உளுந்தையும்,அரிசியையும் தனி தனியே குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இரண்டையும் நன்கு கழுவி விட்டு கிரைண்டரில் முதலில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பொடி ரவை பதத்துக்கு நீர்த்தார் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் உளுந்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

நன்கு அரைந்ததும் அதில் தேவையான உப்பு போட்டு,அரைத்த அரிசி மாவையும் அதில் ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்ததும் கிரைண்டரை விட்டு,மாவை அள்ளி எடுத்து வைத்துக் கொள்ளவும்.




பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு,தோசை கல்லை சூடுபடுத்தி அதில் மொத்தமாகவோ மெல்லியதாகவோ தோசை போல் வார்த்து சுற்றியும் நெய் ஊற்றி ஆப்ப முடியை போல் போட்டு மூடி சிவக்க வேக விடவும்.இருபக்கமும் சிவக்க சுட்டு எடுத்து தேங்காய்,பூண்டு சட்னியுடன் பறிமாறவும்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான சிற்றுண்டியாகும்.

குறிப்பு;))
இதில் முட்டை சேர்க்காமலும் சுடலாம்.ப்ரவுன் ரைஸ் இல்லையென்றால் நார்மலாக இட்லி மாவுக்கு பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையே பயன்படுத்தலாம்.

Tuesday, October 22, 2013

பாகற்காய் பொரியல்


தேவையான பொருட்கள்

பாகற்காய்                  -   1/2 கிலோ
வெங்காயம்               -   3
மிளகாய்தூள்             -   2 தேக்கரண்டி
உப்பு                               -   தேவையான அளவு

பொடிப்பதற்கு:-))

அரிசி                            -   இரண்டு கைப்பிடி
மிளகாய் வத்தல்     -   4
சோம்பு                        -   2 தேக்கரண்டி

தாளிப்பதற்கு:-))

கடுகு                           -  1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு     -  1 தேக்கரண்டி
கறிவேப்பிலை       -   1 கொத்து
எண்ணெய்                -    2 தேக்கரண்டி

செய்முறை:-

பாகற்காயை நன்கு கழுவிவிட்டு அரிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


நறுக்கிய பாகற்காயில் மிளகாய்தூள்,உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மைக்ரோவேவ் ஹையில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.இடையில் ஒரு முறை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டு வைக்கவும்.(எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதற்க்கும்,ஈரபசையை போக்குவதற்க்கும் இம்முறையில் செய்வதுண்டு.)
அதற்க்குள் பொடிப்பதற்க்கு தேவையான பொருட்களை வெறும் வானலியில் மிதமான தீயில் பொரியும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வானலியில் தாளிப்பதற்க்கு தேவையான பொருட்களை கொண்டு தாளித்து விட்டு பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் பாகற்காயை சேர்த்து நன்கு கிளறிவிட்டு உப்பு சரிப்பார்த்து சேர்த்து விட்டு குறைந்த தீயிலேயே நன்கு வதங்க விடவும்.
நன்கு உதிரியாக பொலபொலவென்று ஆனதும் பொடியில் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து கிளறி  விட்டு இறக்கவும்.
தேங்காயோ,அதிக மாசாலாவோ இல்லாத சத்தான பாகற்காய் ரெடி.

குறிப்பு:-))
மைக்ரோவேவில் வைத்து எடுப்பது கட்டாயம் இல்லை.அப்படி வைக்காமலும் செய்யலாம்.மைக்ரோவேவில் வைத்தால் குறைந்த எண்ணெயிலேயே உதிரியாகவும்,சற்றே மொறுகலாகவும் இருக்கும் என்பதற்க்காக இம்முறையில் நாங்கள் செய்வதுண்டு.



Wednesday, July 24, 2013

சாக்லேட் மூஸ்


தேவையான பொருட்கள்

சாக்லேட்சிப்ஸ்(அ) பார்   - 80 கிராம்
பட்டர்                                       - 1 தேக்கரண்டி
முட்டை                                  -  1
திக் க்ரீம்                                 -  120 மிலி
சீனி                                           -  2 ஸ்பூன்

செய்முறை


ஒரு அகன்ற பாத்திரத்தில் சாக்லேட் பாரை உடைத்து போட்டு அதனோடு பட்டரை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொஞ்சம் வத்து கொதிக்க விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் இந்த சாக்லேட் உள்ள பாத்திரத்தை வைத்து சூடு படுத்தவும்.உடனே சூடேறியதும் சாக்லேட் எல்லாம் உருக ஆரம்பிக்கும் போது அந்த பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி விடவும் திரி திரியாக ஆனதென்றால் ஒரு சில துளிகள் தண்ணீர் தெளித்து கிளறி மறுபடியும் அந்த கொதிநீர் பாத்திரத்தின் மேல் வைத்து நன்கு ஒன்று சேர கிளறவும் ஒன்று சேர்ந்து இளகி இருக்க வேண்டும்.அதன் பின் இறக்கி வைத்து விடவும்.(அதிக நேரம் கொதிநீர் பாத்திரத்தின் மேலேயே வைத்திருக்க கூடாது.)


ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைகருவை தனியே ஊற்றி விட்டு மஞ்சள் கருவை இந்த சாக்லேட் வெதுவெதுப்பாக இருக்கும் போது சேர்க்கவும்.சாக்லேட்டோடு மஞ்சள் நன்கு ஒன்று சேர ஸ்பூனால் நன்கு அடித்து கலக்கி வைக்கவும்.வெள்ளை கருவை தனியே நன்கு நொரை பொங்க கிரீம் போல் அடித்து வைத்துக்கொள்ளவும்.(எலக்ட்ரிக் பீட்டர் இருந்தால் க்ரீம் போல் வெள்ளை கரு அடிக்க வரும்.என்னிடம் இல்லாததால் கை பீட்டரால் தான் அடித்தேன் எனவே மிகவும் க்ரீமியாக வரவில்லை.)


மற்றொரு பாத்திரத்தில் திக்கான க்ரீமை ஊற்றி அதில் சீனியை சேர்த்து நன்கு பீட்டரால் கை விடாமல் அடிக்கவும் கெட்டியான க்ரீமாக ஆகிவிடும்.ஸ்பூனால் எடுத்து போடுவது போல் திக்காக ஆகவேண்டும்.


இப்பொழுது சாக்லேட் கலவை மேல் நன்கு அடித்து வைத்திருக்கும் இந்த வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.அதன் பின் அந்த க்ரீமையும் சேர்த்து மெதுவாக ஒன்று சேர கிளறவும்.


அதன்பிறகு இரண்டு கப்களில் அதை ஊற்றி ஃப்ரீசரில் 4 அல்லது 5 மணிநேரம் வைத்து விடவும்.சாப்பிடும் முன்பாக வெளியில் எடுத்து க்ரீமை சீனி சேர்த்து அடித்தோம் அல்லவா அதே போல் கொஞ்சம் அடித்து அதை இந்த மூஸ் மேல் ஒரு ஸூன் வைத்து அதன் மேல் சாக்லேட்ஸை துருவி தூவி அலங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.விரும்பி சாப்பிடுவார்கள்.இல்லையென்றால் இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு  இப்படி அலங்கரித்து மீண்டும் வைத்து விட்டு செட் ஆனதும் கொடுக்கலாம்.5 மணிநேரம் முழுமை அடைந்தால் நன்கு திக்காக சாப்பிட நன்றாக இருக்கும்.பெரியவர்களுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும் முயன்று பாருங்களேன்.


குறிப்பு:-)) இதற்க்கு நான் மில்க் சேர்ந்த கொகோ சாக்லேட்டை சேர்த்தேன்.டார்க் சாக்லேட் விரும்புவர்கள் டார்க் சாக்லேட் சேர்க்கலாம்.



Friday, July 19, 2013

நோன்பு கஞ்சி

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு காலங்களில் அனைத்து இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நோன்பு திறந்தவுடன் சாப்பிடுவது நோன்பு கஞ்சிதான்.எவ்வளவு வகை வகையாக சாப்பிடுவதற்கு இருந்தாலும் நம் கலைப்பை போக்குவதற்க்கு மனம் நாடுவது இந்த கஞ்சியைதான்.
இதை ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிவாசல் வாயில்களில் காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவது என்பது ஒரு தனி சிறப்பே...ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பள்ளிவாசல்களில் அமர்ந்தும் சரி,எல்லோர் வீடுகளிலும் சரி ஒருங்கிணைந்து சாப்பிடுவதும் இந்த கஞ்சியைதான்.
அப்படியான இந்த கஞ்சியை வெளிநாட்டில் வாழும் நாங்களும் எங்கள் வீட்டில் விரும்பி செய்து சாப்பிடுவோம்.நிறைய சகோதரிகள் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தாலும் எனது இல்லத்தில் இடம்பெற வேண்டும் அல்லவா?அதிலும் ஒவ்வொரு மாவட்டுங்களுக்கு ஏற்ப அதன் குறிப்பு சற்றே வித்தியாசப்படும்.எனவே எங்கள் ஊர் சிறப்பு கஞ்சி என்ற முறையில் இந்த குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.



                                                        நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

உடைத்த பச்சரிசி                  -  கால் கப்
கடலை பருப்பு                        -  ஒரு ஸ்பூன்
வெந்தயம்                                  -  ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம்                -  ஒன்று
பூண்டு                                          -   4 பல்
தக்காளி,கேரட்                         -   (தலா)அரிந்தது ஒரு தேக்கரண்டி அளவு
பச்சை மிளகாய்                       -   2(அ)3
புதினா தழை                             -  சிறிதளவு
பட்டை                                         - சிறு துண்டு
கிராம்பு,ஏலக்காய்                   - தலா ஒன்று
எண்ணெய்                                  - 2 தேக்கரண்டி
நெய்                                               -  1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு அரவை            -   1 ஸ்பூன்
திக்கான தேங்காய் பால்       -   கால் கப்

செய்முறை


அரிசியோடு கடலைபருப்பையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவிவிட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தையும்,பூண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறி வைத்து விடவும்.


ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு பின் தக்காளி,புதினா தவிர்த்து மற்றவற்றை போட்டு வதக்கவும்.லேசாக வதங்கும் போதே இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வாசம் வர வதக்கவும்.பின்பு தக்காளி,புதினாவை சேர்த்து சிறிது வதக்கி விட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசி,பருப்பை போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போடவும்.ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் விடுபவர்கள் சாதத்திற்க்கு வைப்பது போல் விசில் விட்டு இறக்கலாம்)


ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து நன்கு பூணடை மசித்தபடி கிளறிவிட்டு பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.(மிகவும் கெட்டியாக இருந்தால் பாலோடு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.)
சுவையான கலைப்பை போக்க கூடிய நோன்பு கஞ்சி தயார்.இதை பேச்சுலர்ஸ் கூட செய்ய கூடிய அளவிற்க்கு சுலபமான குறிப்பாகும்.(இது நான்கு கப் அதாவது நான்கு பேர் குடிப்பதற்கான குறிப்பாகும்)



குறிப்பு:-)) இதில் கைமா விரும்புவர்கள் ஆரம்பத்தில் சேர்த்து வதக்கி விட்டு பின் மற்றவற்றை சேர்த்து வதக்கலாம்.கடைசியில் முருங்கை கீரை இலை ஒரு கைப்பிடி பால் ஊற்றும் போது அதையும் சேர்க்கலாம்.பார்க்கவும் சரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.அதே போல் சுண்டல் அதில் தனியேவும் சேர்க்கலாம்.இல்லை தனியே தாளித்து கஞ்சியோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.




Saturday, July 13, 2013

ஜெல்லி லெயர் கேக்

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இந்த வலைப்பூவை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ரமலான் மாதம் சிறப்பிற்கான வாழ்த்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதம் நம் எல்லோர்க்கும் சிறப்பானதாக அமையவேண்டுமெனவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

இந்த மாதத்தில் எனது இல்லத்தில் இஃப்தாரில் செய்யும் ஒரு சில குறிப்புகளை இங்கே அவ்வபோது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.ஏதேனும் புதுவிதமான குறிப்புகளை செய்து பார்ப்பதும் உண்டு.அப்படி இந்த வருடம் இந்த ஜெல்லி லேயர் கேக்கினை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு பிடித்திருந்தது.அதை எனது இல்லத்தில் முதலாவதாக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.வாங்க செய்முறையை பார்ப்போம்....

                                                       ஜெல்லி லேயர் கேக்



தேவையான பொருட்கள்

அகர் அகர் (அ) ஜெல்லி மிக்ஸ்  -  ஒரு ஸ்பூன்(ரெட் கலர்)
கண்டன்ஸ்ட் மில்க்                        -  கால் கப்
ஜெலட்டின்                                         -   1 1/4 ஸ்பூன்
அன் சால்ட்டட் பட்டர்                    -   20 கிராம்
மேரி பிஸ்கட்                                     -   5
தேவைப்பட்டால் சீனி                    -   3 ஸ்பூன்

செய்முறை

மேரி பிஸ்கட்டை ஒரு பாலிதீன் கவரின் உள்ளே வைத்து ஒரு சப்பாத்தி கட்டையால் நொருக்கி கொள்ளவும்.
ஒரு சதுர அல்லது செவ்வக நான்ஸ்டிக்கோ,கண்ணாடி ட்ரேயையோ எடுத்துக் கொள்ளவும்.அதன் உள்ளே நெய்யோ பட்டரோ தடவி வைத்துக் கொள்ளவும்.

நுணுக்கிய பிஸ்கட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதை அந்த பட்டர் தடவிய ட்ரேயில் பரவலாகவும் சரிசமமாகவும் அழுத்தி வைத்து விட்டு,அதை ப்ரீசரில் 5 நிமிடம் வைக்கவும்.

அதற்க்குள்ளாக ஜெலட்டினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் 4 ஸ்பூன் ஊற்றி நன்கு கரையவிடவும்.நன்கு கரைந்தவுடன்,அதை மில்க்மெய்டோடு நன்கு கலந்துவிடவும்.அதை செட்டான பிஸ்கட் ட்ரேயை எடுத்து அதின் மேல் மெதுவாக ஊற்றவும்.அது பரவலாக ஆனதும் அதையும் ப்ரீசரில் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும்.
அதற்க்குள்ளாக ஜெல்லி மிக்ஸை கொதிக்கும் நீரில் கலந்து நன்கு கரைய விடவும்.அதில் உள்ள இனிப்பு போதவில்லையெனில் கொஞ்சம் கலந்து கொள்ளவும்.நன்கு கரைந்ததும் செட் ஆன ட்ரேயை எடுத்து அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.அதை நார்மலாக ப்ரிட்ஜில் வைத்து விடவும்.குறைந்தது ஒரு மணிநேரம் செட் ஆகவிடவும்.


பிறகு எடுத்து கத்தியால் துண்டு போட்டு அடிவரை நன்கு கீரி மெதுவாக எடுத்து வைக்கவும்.சில்லென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


Monday, March 11, 2013

எனது மாமியாரின் கைவண்ணம்

இங்கு எங்கள் வீட்டில் அலங்கரிக்கும் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் எனது மாமியார் அவர்கள்தான்.அதிலும் கைவேலைபாடுகளில் அவரின் ஆர்வத்தை ஏற்கனவே நான் முன்பு உள்ள எங்கள் வீட்டு கைவண்ணம் பகுதியில் சொல்லியிருக்கின்றேன்.இப்பொழுது சிங்கப்பூரில் வீட்டில் பொழுதை போக்குவதற்க்கு இது அவருக்கு கைகொடுக்கின்றது.
நாம் பொருட்கள் வாங்கி வரும் கலர் கலர் பாலீதின் பைகளைக் கொண்டு பல வண்ணப்பூக்களையும்,உடைந்து போன மக்குகளை கொண்டு பூச்சாடிகளையும் செய்து அலங்கரித்து வீட்டில் வைத்து அழகுப்படுத்தியுள்ளார்.இதோ அவற்றில் சில....


ஒரு சில பூக்களை கொண்டு பூங்கொத்துகளாக சுவரை அலங்கரித்தவண்ணம் ஆங்காங்கே வைத்துள்ளார்.அவற்றில் சில இதோ பார்வைக்கு.....



இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இதில் எந்த ஒரு பொருளுமே இதற்க்காக என  வாங்கியது இல்லை.இலைகளுக்கு பாத்திரம் துலக்க நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரையும்,பூக்களுக்கு வண்ண பாலீதின் பைகளும்,சில வண்ண அட்டைகளும் தான்.இவை எல்லாமே நாம் வேண்டாம் என தூர போடும் பொருட்களை சேர்ந்தவையே.... அவற்றை கொண்டு எங்கள் வீடு அலங்கரித்தவண்ணம் இருக்கின்றார் எனது மாமியார்.
இந்த வயதிலும் அதிக ஆர்வத்தோடு செயல்படுவது என்பது பெருமையோடு பாராட்டுக்குரியதாகும்.






Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out