Saturday, March 12, 2011

என் மகளின் இசைத்திறன்

என் பிள்ளைகளின் ஓவியங்களை இதற்க்கு முன் என் இல்லத்தில் அரங்கேற்றினேன் அல்லவா...?அதே போல் இப்போது எனது மகளுக்கு கடந்த ஒரு வருடங்களாக ஏற்பட்டிருக்கும் இசை ஆர்வத்தினால் அவளாகவே ஸ்கூல் ரைம்ஸை இசை மூலம் முயன்று இசைத்து வருகிறாள்.மூத்த மகன் பிறந்து ஒரு வயதிருக்கும் போது என்று நினைக்கிறேன்.அப்போது ஏதோ ஒரு சூப்பர் மார்க்கேட்டின் இலவச கூப்பனால் என்ன வாங்குவதென்றே தெரியாமல் நாற்பது திர்ஹமுக்கு வாங்கிய கீ-போர்ட் அது.அதை அப்படியே கொஞ்ச நாள் தட்டிவிட்டு மேலே தூக்கி வைத்திருந்தேன்.சென்ற வருடம் தான் அவளுக்கு ஸ்கூல் டீச்சர் வாசிப்பதை பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தினால் அந்த கீ போர்டை எடுத்து தாங்கம்மா என்று கேட்டு வாங்கி வைத்து கொண்டு அவளாகவே வாசித்து வாசித்து கற்று கொண்டாள். எனது சின்ன மகன் டீச்சர் சொல்லி கொடுத்த ரைம்ஸை வீட்டில் வந்து பாடி கொண்டிருந்தான்.அதையும் அவள் விட்டு வைக்கவில்லை. அவனை திரும்ப திரும்ப பாட சொல்லி அதையும் அன்றே இசையாக வெளிகொண்டு வந்தாள். 
ஒரு நாள் அவள் எல்லா ரைம்ஸையும் பாடி வாசித்து கொண்டிருந்தபோது என்னவரை அதை வீடீயோவில் கவர் செய்யுங்கள் என்று சொன்னேன்.அவை முழுவதும் நிறைய நீளமுடன் இருப்பதால் குறிப்பிட்ட இந்த பாடலின் இசையை மட்டும்  இந்த வீடீயோ மூலம் வெளிப்படுத்தவே ஆசைப்பட்டேன்.அவளுக்கு இந்த ஆர்வம் ஒரு சில நாட்களுக்கு பிறகு மாறிவிடலாம்.குழந்தைகளே அப்படிதானே....?அவள் பெரியவளாக  ஆனதும் “நீ இப்படியெல்லாம் வாசித்திருக்க தெரியுமா?” என்று காட்டலாம் அல்லவா...? அதான் இந்த ஒரு சின்ன க்ளிக்.நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சரியா...?

 

Friday, March 11, 2011

மேத்தி புலாவ்


*** தேவையான பொருட்கள் ***

வெந்தயக்கீரை                          _   ஒரு சிறிய கட்டு
பாஸ்மதி அரிசி                         _     ஒரு டம்ளர்
வெங்காயம்                                _     ஒன்று
கேரட்(அரிந்தது)                        _      ஒரு மேசைக்கரண்டி
உதிரி கார்ன்                               _       ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது               _      ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய்                           _      இரண்டு
எண்ணெய்                                    _      4 தேக்கரண்டி
பட்டை                                           _      சிறு துண்டு
ஏலக்காய்                                      _      ஒன்று
கிராம்பு                                           _       இரண்டு
பிரிஞ்சி இலை                             _       கால் பகுதி

*** செய்முறை ***


வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த கார்னையும்,கேரட்டையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி விட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியையும் கழுவி விட்டு ஊறவித்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,பிரிஞ்சி இலை,ஏலக்காய்,கிராம்பு இவைகளை போட்டு தாளித்து அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் கேரட்,கார்ன்,பச்சை மிளகாய்  சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும்,கீரையை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
பின்,அரிசியை தண்ணீர் இல்லாமல் அதில் போட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து முக்கால் வாசி தண்ணீர் சுண்டும் நிலையில் குக்கரை மூடிவெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு வைக்கவும்.

சுவையான மேத்தி புலாவ் தயார்.
குழந்தைகளுக்கு கூட வெறும் கீரையை சமைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.அவர்களுக்கு இது போன்று சுவையாக செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.நமக்கும் சத்துள்ளதை தந்தோம் என்ற திருப்தி இருக்கும்.




Tuesday, March 8, 2011

சன்னா சால்னா...,


*** தேவையான பொருட்கள் *** 
வெள்ளை அல்லது 
காபூலி சன்னா         }                    _       அரை கப்
வெங்காயம்                                   _        ஒன்று
தக்காளி(சிறியதாக)                    _        ஒன்று  
பச்சைமிளகாய்                             _         ஒன்று  
இஞ்சி,பூண்டு விழுது                  _         ஒரு தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்                              _         ஒரு தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                                _         அரை தேக்கரண்டி
சோம்புத்தூள்                                  _         ஒரு தேக்கரண்டி
எண்ணெய்                                        _         6 தேக்கரண்டி
கறிவேப்பிலை                                _         ஒரு கொத்து
மல்லி,புதினா தழை                       _         சிறிதளவு

*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல்                      _     அரை கப்
முந்திரி                                              _     5
பட்டை                                               _     சிறியதுண்டு
கிராம்பு,ஏலக்காய்                           _     தலா ஒன்று 
மிளகுத்தூள்                                     _     ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள்                                          _     ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள்                                     _     இரண்டு தேக்கரண்டி

*** செய்முறை ***

சன்னாவை நன்கு ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை,மல்லி,புதினா தழைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதங்க விடவும்.

அதன் பின் தூள் வகைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறியிருக்கும் சன்னாவை தண்ணீர் இல்லாமல் போட்டு நன்கு கிளறி மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.

அதற்க்கிடையில் அரைக்க கொடுத்தவைகளை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.

ஐந்து நிமிடம் கழித்து வதங்கிய சன்னாவோடு அரைத்தவைகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது அடுப்பில் வைத்து இறக்கினால் மினுமினுப்பாக இருக்கும்.(கட்டாயம் இல்லை) 
 இதை பரோட்டா,சப்பாத்தி பூரி இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

### குறிப்பு ### 
இதில் இன்னொரு முறையும் செய்வதுண்டு.முந்திரியையும் தவிர்த்து தேங்காயையும் குறைத்து கொண்டு வேர்க்கடலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொண்டு எல்லாவற்றையும் சிறிது வதக்கி அரைத்தும் ஊற்றலாம்.இது டயட்டானவர்களுக்குன்னு செய்யலாம்.டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.









Monday, March 7, 2011

பேரிச்சை,மாங்காய் பச்சடி


*** தேவையான பொருட்கள் ***

பேரிச்சை பழம்                                _        5
மாங்காய் சீவியது                          _       கால் கப்
கேரட்     நறுக்கியது                       _       ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது                    _       கால் தேக்கரண்டி
வெங்காயம்                                      _       ஒன்று
தக்காளி சிறியதாக                        _       ஒன்று
பச்சைமிளகாய்                                _       ஒன்று
இஞ்சி                                                  _       சிறிய துண்டு
பூண்டு                                                  _       2 பல்
புளி                                                       _      நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள்                                  _     1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                                    _      1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்                                           _       1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                                       _      1/2 தேக்கரண்டி
தேங்காய் விழுது அல்லது
தேங்காய் பால் பவுடர்       }            _      1 தேக்கரண்டி
சீனீ                                                         _      1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்                                _     5 தேக்கரண்டி
கடுகு                                                      _     ஒரு ஸ்பூன்\
கறிவேப்பிலை                                   _      ஒரு கொத்து          

 *** செய்முறை ***


பேரிச்சம்பழத்தை கழுவி விட்டு விதையை நீக்கி விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே தண்ணீரில் புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி,பூண்டையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு பேரிச்சைபழத்தையும்,மாங்காய்,கேரட்டையும் சேர்த்து மிதமான தீயில் கிளறி இரண்டு நிமிடம் அப்படியே வதங்க விடவும்.

அதற்க்குள் புளியை கரைத்து வடித்த தண்ணீரில் மல்லி,சீரகத்தூள்,தேங்காய் விழுது அல்லது பவுடர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வதங்கியவற்றில் கரைத்து வைத்துள்ளவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்தித்து சுண்டும் நிலையில் இருக்கும் போது குறைந்த தீயில் வைத்து சீனியை தூவி கிளறி வைக்கவும்.
சிறிது நேரம் வைத்திருந்தால் எண்ணெய் மினுமினுப்போடு பிரண்டு இருக்கும்.அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

பிரியாணி,நெய் சோறு காம்பினேஷனுக்கு பொருத்தமான பக்க உணவாக இருக்கும்.
இதே செய்முறையில் வெறும் மாங்காயிலும் செய்யலாம்.வெறும் பேரிச்சைபழத்திலும் என தனி தனியே செய்யலாம்.வெறும் பேரிச்சை பழத்தில் செய்யும் குறிப்பைதான் முதன் முதலாக அறுசுவைக்கு படத்துடன் கூடிய குறிப்பில் அனுப்பி வைத்தேன்.
அதை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்.























                                              

Sunday, March 6, 2011

வெள்ளை மட்டன் குருமா..,


எங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...
அதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை  மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குறிப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.


*** தேவையான பொருட்கள் ***


மட்டன்                     _         முக்கால் கிலோ
தயிர்                          _         முக்கால் கப்
வெங்காயம்             _         பெரியதாக ஒன்று
தக்காளி                    _          அரிந்தது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்      _         மூன்று
பட்டை                       _         இரண்டு இன்ச் அளவு
ஏலக்காய்                  _         ஒன்று
மல்லி,புதினா தழை _      சிறிதளவு
எண்ணெய்                  _       5 தேக்கரண்டி
நெய்                              _       2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்            _       முன்று சிட்டிகை
எலுமிச்சை பழம்       _      ஒன்று

*** அரைத்து கொள்ள ***
 தேங்காய்த்துருவல்    _    அரை கப்
வெள்ளை மிளகுத்தூள் _   4 தேக்கரண்டி
முந்திரி                             _    10
பாதாம்                               _   15

*** செய்முறை ***  


மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.

பிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.


சுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.

 இதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.




Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out