Tuesday, January 25, 2011

கதை சொல்வோமா....

\\\என்ன இது..... சின்னபுள்ள தனமால்ல இருக்கு/// ன்னு தலைப்பை படித்ததும் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னு தோணியிருக்குமே.......
ரொம்ப யோசிப்பதற்க்குள் நானே விஷயத்திற்க்கு வந்து விடுகிறேன்.
நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு என்னதான் பெட் டைம் ஸ்டோரி புக்ன்னு வாங்கி படிக்க சொன்னாலும்,நாம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆக்‌ஷனோடு ரசிச்சு சொல்லி அவங்க அப்படியே வாய் பிளந்து கேட்பதே ஒரு தனி ஸ்வாரஸ்யம் தானே.... அப்படிதானே நாம் சின்னபிள்ளையா இருக்கும் போது நம்ம பாட்டிகள் எல்லாம் சொல்லுவாங்க.... நாம ரசிச்சு கேட்போம் இல்லையா...?

ஆனால்.... இப்ப உள்ள பிள்ளைங்க பயங்கர உஷாருங்க.... சின்னதா ஒரு விஷயம் தப்பா சொன்னாலும் அது எப்படி வரும்...?இது எப்படி முடியும் என்றெல்லாம் பல கேள்வி கேட்டு கொண்டு இருப்பாங்க..... அதுவும் நாம அதற்க்கு விளக்கம் கொடுக்கவே நிறைய யோசிக்கணும்.இதுல நம்ம அறிவும் சேர்ந்து வளருதுல்ல.....கதையில் சொல்லபடும் கருத்து என்ன?(Morel of the story) என்றெல்லாம் குழந்தைகளை கேட்டால் அவர்களும் ஓரளவு அதை அழகாக சொல்லுவாங்க...

இப்படி யோசிச்சு தான் நான் சின்ன வயதில் ரத்னபாலா,கோகுலம் இதிலெல்லாம் படித்த கதையில் நம்ம எக்ஸ்ட்ரா சீன்ஸும் போட்டு என் பசங்களுக்கு சொல்லுவேன்.அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாமுன்னு வந்தேன்.

                                               ***குமரியும்,சிங்கமும் ***[ஒரு ஊருல....ஒரு பெரிய காடு இருந்துச்சா..... இப்படி தானே....குழந்தைகளுக்கு ஆரம்பிப்போம்...
இங்கே எழுத்துக்கு அது சரிவராது என்பதால் இப்படி எழுதுறேன்...]


ஒரு பெரிய காட்டுக்கு அருகே ஒரு சிறிய கிராமம் இருந்து வந்தது.
அந்த கிராமத்தில் ஒரு பாட்டியும்,பேத்தியும் வாழ்ந்து வந்தனர்.அடிப்படை வசதிகளுக்கு கூட தினமும் கஷ்ட்டபடும் நிலை அவர்களுடையது. அவர்களுக்கு உதவ சொந்த பந்தங்கள் என்று வேறு யாரும் இல்லை.வீடு கூட ஏதோ ஒரு பெரிய காத்து அடித்தால் கூட பரந்திடும் நிலையில்தான் இருந்தது.அந்த பேத்தியாக இருக்கும் பெண் நல்ல அழகுடன் இருந்தாலும் அவளது இயலாமை அழகை மறைத்தே காட்டியது.
அந்த கிராமத்தில் இருக்கும் மற்றவர்களும் அவர்களை தள்ளி வத்தே பார்த்தனர்.இதனால் அவள் யாருடனும் எங்கும் செல்வதோ..இல்லை அவளுக்கென்று தோழியோ... கிடையாது.எல்லாமே அவள் பாட்டிதான்.யாரும் அவளை கேலி கிண்டல் செய்தால் கூட நமக்கு ஏன் வீண் வம்பு என்றே பாட்டியும்,பேத்தியும் இருந்து விடுவார்கள்.காட்டில் விறகை பொருக்கி வந்து வேறு கிராமத்தில் விற்று அதில் வரும் காசில் பொழுதை கழித்து வந்தனர்.
இப்படியே அவர்கள் வாழ்க்கை போய் கொண்டிருக்க தனது பேத்திக்கு ஒரு கல்யாணமாவது செய்து தனக்கு பின் ஒரு துணையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டி எண்ணினாள்.அந்த ஊரின் பெரியவர் ஒருவரிடம் இதுவரை பேசாதவள் அன்று முதன் முறையாக பேசினாள்.
“ எனது பேத்திக்கு ஒரு கல்யாணம் செய்து பாக்கணும்னு ஆசைபடுறேனுங்க.... அவளுக்கு ஒரு மாப்பிளையாக யாராவது தெரிந்த பையன் இருந்தா சொல்லுங்க அய்யா....” என கேட்டாள்.
இதை கேட்ட அந்த பெரியவர் ஏதோ நகைச்சுவையை கேட்டவர் போல் மிகவும் சத்தமாக நீண்ட நேரம் சிரித்தார்.போகின்றவர்கள்,வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி சிரித்தார்.
  “ பாருடா... இந்த கிழவி சொன்னதை... இதுங்களுக்கு கஞ்சி குடிக்க கூட வழியில்லையாம்... இதுல பேத்திக்கு கல்யாணம் செய்து வைக்க போகுதாம் இந்த கிழவி.... இது என்னவோ மகாராணி பாரு... பேத்தி இளவரசியை கட்டிக்க நா நீன்னு போட்டி போட்டு கொண்டு மாப்பிளை வர்றா மாதிரியில்ல என் கிட்ட வந்து சொல்லுது.போ கிழவி போ... அடுத்த வேலை கஞ்சிக்கு எப்படி காசு எடுக்கலாமுன்னு யோசி... பேராசை எல்லாம் படக்கூடாது என்ன....”
என்று சொல்லி எல்லோரும் சிரித்ததும் வந்த கண்ணீரை துடைத்து கொண்டே வீடு திரும்பினாள் பாட்டி.
பாட்டியின் தோலை பிடித்தவாறு அமர்ந்த பேத்தி, “ அழாதே பாட்டி... எதுக்காக இவங்களிடமெல்லாம் நீ பேசுற...? உனக்கு நான்...எனக்கு நீன்னு இருக்குறப்போ... நீ எதை பற்றியும் கவலைபடாதே... நமது விதி போகும் வழி நாம் செல்வோம்...” என்றாள்.

இப்படி நாட்கள் கடந்து செல்ல ஒரு நாள் பாட்டி விறகுகளை விற்று காசு வாங்கி வர அருகே உள்ள வேறு ஒரு கிராமம் சென்று விற்றாள்.பேத்தி மட்டும் வீட்டில் இருந்தபோது  வெளியில் ஒரே சத்தமாக இருந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். என்னவென்று மெதுவாக வெளியே சென்று பார்த்தாள். “ சிங்கம் ஊருக்குள்ள வந்துடுச்சு எல்லோரும் ஓடுங்க எல்லோரும் ஓடுங்க” என்று அலறியவாறு அவரவர்கள் வீட்டிற்க்கு சென்று கதவை தாழிட்டு கொண்டிருந்தனர் அந்த கிராமத்து மக்கள்.இவளுக்கு பாட்டி இன்னும் வரவில்லையே அவளுக்கு என்னவாவது ஆகிவிடுமோ என்ற கவலையில் யோசித்து கொண்டிருக்கும்போதே தன் வீட்டை நோக்கி சிங்கம் வருவதை உணர்ந்தாள்.

அலறினாள் சிங்கம் இன்னும் வீறு கொண்டு எழும் என்று எண்ணி மெதுவாக வீட்டுக்குள் சென்றாள்.சிங்கமும் வீட்டுக்குள் புகுந்தது.மிரண்டு போனவளாய் இருந்தாலும்,மனதிற்க்குள் பயத்தை வைத்துக் கொண்டு,சிங்கத்தை நோக்கி..., “ சிங்கமே.... நான் உன்னை அடிக்கவோ,இல்லை நான் எங்கும் ஓடியோ போக மாட்டேன்  எனவே உனக்கு என்ன சாப்பிட வேண்டுமோ கேள் நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன்.ஆனால் இந்த ஊரில் இருக்கும் யாரையும் ஒன்றும் செய்துவிடாதே...” என்று கை குவித்து கேட்டு கொண்டாள்.

உடனே அந்த சிங்கம் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தது. “ என்ன வேண்டுமானாலும் செய்வாய் அல்லவா.... அப்ப சரி... என்னை கல்யாணம் செய்து கொள்.நாம் இருவருமே சேர்ந்து காட்டுக்கு போய் வாழலாம்” என்று சொன்னது.இதை கேட்டு அதிர்ந்தவள் சற்றே யோசித்து...,

“ அவ்வளவுதானே.... நீங்கதான் காட்டுக்கு ராஜாவாச்சே உங்களை திருமணம் செய்து கொள்ள யாரும் மறுப்பார்களா என்ன? நிச்சயம் என் பாட்டியிடம் சொல்லி உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்.... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நீங்கள் செய்யவேண்டும்...” என்றாள்

 “ என்ன செய்யணும்?” என்று கர்ஜிக்கும் குரலில் கேட்டது.

 “ சொல்றேன்னு கோபித்து கொள்ளக்கூடாது.... உங்களுக்கு மனைவியாக வரவேண்டுமானால் உங்களிடம் எனக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும் அல்லவா.... அப்பத்தானே சகஜமாக நாம் வாழ முடியும்....? எனவே உங்க அகோரமான பல்லையும்,நீளமான நகங்களையும் நீக்கிவிடுங்கள்.... அதுபோதும்.அப்புறம் பாருங்க...உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நான் பணிவிடையாக செய்கிறேன்.” என்றாள்.

சற்று நேரம் கூட தாமதிக்காமல் “ ஓ...ஓ...அவ்வளவுதானா...? அதை நான் எப்படி  நீக்குவது? உன்னால் முடிந்தால் நீயே நீக்கிவிடு” என சொன்னது.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும்.... தன் வீட்டில் இருக்கும் கடினமான கருவியான குரடை கொண்டு பற்களையும்,நகத்தையும் நீக்கினாள்.உடனே... “உன் விருப்பம் நிறைவேறியது அல்லவா...? இப்போது என் விருப்பத்தை நிறைவேற்று” என்று சிங்கம் சொன்னது.

தான் நினைத்தபடி சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று எண்ணி உரலை எடுத்து சிங்கத்தை ஓங்கி அடிக்க ஆரம்பித்தாள் அந்த பெண். தன்னால் எதிர்த்து போராட முடியாத நிலைக்கு ஆகி விட்டோமே என்று நினைத்து கொண்டே தலைத்தெறிக்க காட்டை நோக்கி ஓடி போனது சிங்கம்.

இதை சற்றும் எதிர் பார்க்காத கிராம மக்கள் மகிழ்ச்சிக்கு ஆளானார்கள்.எல்லோரும் அப்பெண்ணின் வீரச்செயலை புகழ்ந்தார்கள்.எந்த பெரியவர் நக்கலாக சிரித்தாரோ அவரே “ நீ உன்னை மட்டும் இல்லை இந்த ஊர் மக்களின்   உயிரையே அல்லவா காப்பாற்றி விட்டாய்.... எவ்வளவு புத்திசாலித்தனம் உனக்குள்.உங்களை ஒதுக்கி வைத்து பார்த்த நாங்கள் தான் முட்டாள்.” என்றார்.
இவற்றை ஏதும் அறியாத பாட்டி தன் வீட்டின் முன் கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து வேகமாக பதட்டத்துடன் ஓடி வந்தாள்.கூடியிருந்த அனைவரும்  அவள் பேத்தியின் செயலை சொல்லி சொல்லி புகழ்ந்தார்கள்.
இறுதியாக அந்த ஊர் பெரியவர்...அப்பெண்ணை பார்த்து , “ இனி உன் அறிவுக்கு நிஜமாவே மாப்பிளை நீ நான்னு போட்டி போட்டுகொண்டு வருவாங்கம்மா....
நானே நல்லபடியாக திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறி சென்றார்.

பெருமையிலும்,சந்தோஷத்திலும் பேத்தியை பார்த்து ஆனந்த கண்ணீரோடு நின்றாள் பாட்டி...

 சரி இப்ப கதை சொல்லியாச்சு.... இந்த கதை மூலம் தெரிஞ்சுகிட்டது என்ன?
  **** யாரும் யாரையும் இருக்கும் நிலையை வைத்து தவறாக மதிப்பிட கூடாது.ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமை நிச்சயம் இருக்கும் என்றே எண்ண வேண்டும்.இது ஒன்று....
அதே போல் எந்த ஒரு கஷ்ட்டத்திலும்,இக்கட்டான நிலையிலும் சோர்வடைந்துவிடாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இதற்க்கு தீர்வு நிச்சயம் இறைவன் வைத்திருப்பார் என்று நினைத்து யோசித்து செயல்படவேண்டும்.அப்படி யோசித்ததால்தானே...தன்னையும் காப்பாற்றி கொண்டதோடு இல்லாமல் அந்த ஊரையும் காப்பாற்றி விட்டாள் நம் கதையின் கதாநாயாகி.....****

என்ன கதையை படிச்சாச்சா...... என் கற்பனை சில கலந்த கதை. இதை விரும்பியவர்கள் உங்க குழந்தைக்கு சில ஆக்‌ஷனோடு சொல்லுங்க.... ஆனால் கோபத்துல கண்ணாமுன்னான்னு என்னை திட்டாதீங்க..... நான் பாவம்.....அன்புடன், 
அப்சரா.

3 comments:

Reva said...

Kalakkiteenga... singathooda pallai pidungina ponnu... super poonga... karpanai abaaramaa irukku... en ponnu kita solli parkirein... ava enna questions kaekkuraalo ungalai naan kaekkrein...
Reva

apsara-illam said...

தோழி ரேவா...,உங்கள் வருகைக்கு நன்றி....
\\\ Kalakkiteenga... singathooda pallai pidungina ponnu... super poonga...////

என்னை கிண்டல் பண்றமாதிரி இருக்குங்க....
அந்த குமரி சிங்கத்தோட பல்லை பிடிங்கி அடிக்கிறது மட்டும் தான் நான் படிச்ச கதை....
அதற்க்கு முன் பின் உள்ளது தான் என் கற்பனைங்க....
குழந்தை சொல்லிட்டு என்னை திட்டாம இருந்தா... சரிங்க.... :-)
நன்றி...

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

நல்லா கதை சொல்லறீங்க அப்ஸரா! :)

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out