Saturday, March 19, 2011

விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் சில


இந்த குறிப்புகள் திருமணம் முடிந்து இல்லத்தரசி பதவியை ஏற்று கணவருடன் தனியே வாழும் சில இளம்பெண்களுக்கு உரியதாகும்.
திருமணம் முடிந்து இன்றைய சூழலில் வேலையின் காரணமாக வெளி ஊர்களுக்கோ...,வெளிநாடுகளுக்கோ..., மனைவிகளை அழைத்து செல்லும் படி இருந்து வருகின்றது.
சில பெண்கள் ஓரளவு சிறு சிறு சமையல்,மற்றும் கை வேலைகளை கற்று தெரிந்தவர்களாக இருப்பர்.சில பெண்கள் படிப்பை தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்ற நிலையில் இருக்கும் பெண்களையும் பார்த்திருக்கின்றேன்.
அவர்களெல்லாம் தனிமையில் எப்படி சமையல் செய்வது? என்பதே தட்டு தடுமாறி வருவார்கள்.அவர்கள் வீட்டிற்க்கு கணவர் நண்பரை அழைத்து வர நினைத்து இருந்தாலோ... ஆசைப்பட்டாலோ... அவ்வளவுதான் அம்மணிக்கு இங்கு படபடக்க ஆரம்பித்துவிடும்.
இப்படியான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பெண்களை நான் நிறைய பார்த்ததுண்டு.அவர்களுக்கான இந்த சின்ன சின்ன குறிப்புகள்.

1.முதலில் நம் தினசரி வேலைகள் என்னவென்று தீர்மானித்து அதற்க்கேற்ற நேரத்தை கணக்கிட்டு வைத்து கொள்ள வேண்டும்.இந்த நேரத்தில் சமையலை முடிக்கணும்.இந்த நேரத்தில் சுத்தப்படுத்தும்  வேலையை முடிப்பது போன்ற வேலைகளை குறித்து அதையே தினமும் கடைப்பிடித்தால் ஓய்வு நேரங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
அதே போல் கணவர் வேலையை விட்டு வரும்போது எந்த வேலைகளிலும் ஈடுபடுத்தி கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.முடிந்தவரை சமையலாகட்டும்,சுத்தபடுத்தும் வேலையாகட்டும் முடித்து விட்டு கணவர் வந்ததும் அவருக்கு தேவையானதை செய்வது அவரோடு உட்கார்ந்து பேசுவது என்றே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
அதுவும் குழந்தை என வந்து விட்டால் உடனே அதற்க்கேற்றார் போல் நமது நேரத்தை மாற்றிக் கொள்வது நல்லது.முடிந்தவரை விடியற்காலையிலேயே எழுந்து சமையல் சுத்தபடுத்தும் வேலை ஆகியவற்றை குழந்தை கண்விழிப்பதுக்குள் முடித்துவிட்டால் போதும்.பிறகு நமக்கும் நன்கு குழந்தையை நல்லபடியாக கவனிக்க முடியும்.அவர்களுடன் அழகிய முறையில் நேரத்தை கழிக்க முடியும்.நமக்கும் ஓய்வு அவ்வபோது கிடைக்கும்.

2.அடுத்து, என்றைக்கு வார விடுமுறை  வருகிறதோ..,அதற்க்கு முதல் நாளிலேயே பாத்ரூமை பளீச் என்று சுத்தபடுத்தியும்,வீட்டை சுத்தபடுத்தி மோப் போட்டு வைப்பது போன்ற வேலைகளை முடித்து வைத்தால் இரண்டு நாளோ,ஒரு நாளோ கணவருடன் வெளியில் செல்வது,இல்லை விருந்தினர் வந்தால் சமாளிப்பது போன்றவைகளை சமாளிக்க முடியும்.வெறுமென வீட்டை (குப்பை இருந்தால் )பெருக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

வாரம் ஐந்து நாட்களிலுமே வீட்டை பெருக்கும் போதெல்லாம் ஒரு ஈர ஸ்பாஞ்சினால் சாப்பாடு மேஜை,செண்ட்டர் டேபிள்,கம்ப்யூட்டர் டேபிள் இவற்றையெல்லாம் தூசு தட்டி துடைத்து வைப்பது.கிச்சனில் அடுப்பை அவ்வபோது பளீர் என்று துடைத்து வைப்பது போன்றவைகளை செய்தோமேயானால் கஷ்ட்டம் தெரியாது.எல்லாம் சேர்த்து வைத்து வேலை செய்யும்போதுதான் கஷ்ட்டமாக இருக்கும்.

3.இப்ப சமையலறைக்கு வருவோம்...
சமையலுக்கு தேவையான பொருட்களில் பால்,தயிர்,மோர் இவைகளை தவிர்த்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்க்கொருமுறை சாமான்களை வாங்கி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்வது நல்லது.ஒன்று,இரண்டு சாமான்களுக்கெல்லாம் நாம் அலைய வேண்டியது இல்லை.
என்ன பொருட்கள் தீர்கின்றதோ கிச்சனில் ஒரு சிறிய நோட்டோ பேப்பர்களோ வைத்து அவ்வபோது அதில் குறித்து வைத்து கொள்வது நல்லது.அப்போதுதான் எதையும் மறக்காமல் வெளியில் செல்லும்போது நமக்கு வாங்கி வர ஏதுவாக இருக்கும்.
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில முக்கிய சாமான்கள் நம் வீட்டில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அவைகள் தீருவதற்க்கு முன்னதாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.சங்கடபடத்தேவையில்லை.கணவரிடம் நாம் திடீர் திடீரென்று சாமான்கள் சொல்லி அவரையும் டென்ஷன் ஆக்கி,நாமும் டென்ஷன் ஆக வேண்டியிருக்காது இல்லையா?
திடீரென்று யாரும் “இந்த பக்கம் வந்தேன் அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன்”என்று வரும் விருந்தினருக்கு வெறும் டீயோடு நிறுத்தாமல் கூட ஏதாவது வைப்பதற்க்கு தயாராக வீட்டில் ஏதேனும் வாங்கி வைத்திருக்க வேண்டும்.அவை பிஸ்கட்டோ,அதுவும் இல்லையென்றால் பழமோ நறுக்கி வைத்தால் கூட போதுமானது.
மிகவும் நெருங்கியவர்கள் எனில்,ஒரு சில நிமிடத்தில் தயார் செய்யும்படி கேசரிக்கு ரவையோ... பஜ்ஜி மிக்ஸோ..,அதிலேயே பக்கோடாவாகவோ,கோதுமை அப்பமோ செய்து வைத்து அவர்களை அசத்திடலாம்.எனவேதான் இந்த மாதிரி பொருட்களெல்லாம் அவசியம் நம் வீடுகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

4.தினசரி சமையலுக்கு இன்றைக்கு இதை சமைக்கலாம் என்று முன்னதாகவே அதாவது முதல் நாளே முடிவு செய்து வைத்துக் கொண்டால் செய்வதற்க்கு எளிதாக இருக்கும்.வேலைக்கு செல்பவர்கள்,அல்லது கணவருக்கு கைய்யில் சாப்பாடு கொடுத்தனுப்புபவர்கள் அந்த வாரத்திற்க்கான ஐந்து சமையலையும் யோசித்து வைத்துக் கொண்டோமேயானால் காலையில் எழுந்ததும் டென்ஷன் இல்லாமல் சமைத்து கொடுத்து அசத்திடலாம்.

இது நமக்கு சரி.... விடுமுறையில்  “நாங்கள் ஒரு நான்கு ஐந்து பேர் வருகின்றோம்”  என விருந்தாளிகள் முன் தகவலை சொல்கிறார்கள் என்றால் எப்படி நம்மை தயார் செய்து கொள்வது?எப்படி சமாளிப்பது?
அல்லது திடீரென்று இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வருகிறேன் என்று சொன்னால் அதற்க்கு பதற்றத்தை தவிர்த்து எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதை பற்றி இன்ஷா அல்லாஹ் மற்றுமொறு பகுதியில் சொல்கிறேன்.


13 comments:

ridaa said...

அனைத்து குறிப்புகளும் மிக்க பயனுள்ளதாய் இருக்கிறது.
அன்புடன்
ரிதா

ஸாதிகா said...

அனைத்தும் பயனுள்ள குறிப்புகள் அப்சரா.தொடருங்கள்.

Unknown said...

இங்க வந்த புதிதில் கண்ணைகட்டி காட்டில் விட்ட மாதிரிதான் இருந்தது,எப்படியோ சமாளிச்சாச்சு,[ம்ம்ம்ம்,மலரும் நினைவுகள்.]நல்ல பயனுள்ள தகவல்கள்.அடுத்த பகுதியை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

apsara-illam said...

சலாம் ரிதா...,வழக்கம்போல் தங்கள் கருத்து மகிழ்ச்சியை தந்துள்ளது.
மிகவும் நன்றி ரிதா....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகையும்,கருத்துகளும் கண்டு மிக்க மகிழ்ச்சி.உங்களை போன்ற அனுபவசாலிகளின் ஊக்கம் எனக்கு மிகவும் அவசியமாக உள்ளது.மகிழ்ச்சியையும் தருமின்றது.
மிக்க நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஷமீமா...,அதை ஏன் கேக்குறீங்க...?நான் சமையல்,கை வேலை என்று கற்று தெரிந்து வந்தாலும்,இங்கு நானே சமைத்து எல்லாவற்றையும் சமாளிப்பது என்பது கஷ்ட்டமாக இருந்தது.
நிறைய நேரங்கள் பதட்டங்களோடுதான் சமைப்பேன்.... எத்தனை பேருக்கு எவ்வளவு அளவுகள் என்பதெல்லாம் தெரியாமல் சமைத்து தடுமாறுவேன்.ஆனால் இதுவரை பத்தும் பத்தாமல் சமைத்தது கிடையாது.கூடுதலாகதான் சமைத்திருக்கின்றேன்.
அதனால் தான் நம்மை போன்று எத்தனை பெண்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைத்துதான் இந்த குறிப்பை எழுத ஆரம்பித்தேன்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஷமீமா...

அன்புடன்,
அப்சரா.

அஸ்மா said...

இப்போதான் இதைப் பார்க்க முடிந்தது அப்சரா. அருமையான டிப்ஸ்கள். மீதியையும் போடுங்கள்.

apsara-illam said...

வாங்க அஸ்மா...,தங்கள் கருத்திற்க்கு மிகவும் நன்றி மா...
விரைவில் இரண்டாம் பகுதியையும் சேர்த்து விடுகிறேன்.

அன்புடன்,
அப்சரா.

Asiya Omar said...

அருமையான டிப்ஸ்,தொடர்ந்து எழுதுங்க.

apsara-illam said...

வாங்க ஆசியா அக்கா...,தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி அக்கா...
உங்களை போன்றவர்களின் கருத்து எனக்கு டானிக் ஆக்கும்.
மிக்க நன்றி அக்கா.

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

புதுப்பொண்ணுங்களுக்கு உபயோகமான பதிவு.பொறுமையா தொகுத்து எழுதிருக்கீங்க அப்ஸரா.அடுத்த பதிவு இன்னும் காணோமே?! :)

apsara-illam said...

ஆமாம் மஹி...,எத்தனை பெண்கள் பதட்டதுடன் பரிதாபமாக தவிக்கிறார்கள்.அப்படியுள்ளவர்களில் யாரேனும் ஒன்றிரண்டு பேர்களுக்காவது உபயோகபடலாம் அல்லவா...?
இதோ அடுத்த அந்த பதிவுதான்...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மஹி...

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out