Saturday, February 23, 2013

ஸ்பெஷல் ரைஸ் நூடுல்ஸ்





தேவையான பொருட்கள்

ரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்    --------   ஒன்று
பெரிய வெங்காயம்                   --------   ஒன்று
கேரட்                                               --------   பாதி
முட்டைகோஸ்,கலர் குடமிளகாய்கள் ----- சிறிதளவு
ஸ்ப்ரவ்ட்                                        ---------  இரண்டு கப் அளவு
டோபு    
சொயாங் கீரை                              -------- ஒரு பாக்கெட்
பச்சைமிளகாய்                             --------  இரண்டு
பூண்டு                                                -------- மூன்று பல்
முட்டை                                           -------- 2
சில்லி பேஸ்ட்                              --------  3 ஸ்பூன்
சோயா சாஸ்                                 --------  ஒரு ஸ்பூன்
நார்(knorr)ஸ்டாக் க்யூப்ஸ்         --------  2
எண்ணெய்                                       -------- அரை கப்

செய்முறை

ஒரு அகலபாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதி வந்ததும்,இந்த நூடுல்ஸை அப்படியே போட்டு மூடி வைக்கவும்.


அதன்பின் காய்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஸ்ப்ரவ்ட்டை நன்கு அலசி வைத்து கொள்ளவும்.
கீரையையும் படத்தில் உள்ளவாறு நறுக்கி கொள்ளவும்.டோஃபுவை படத்தில் உள்ளபடி சின்ன சின்னதாக துண்டுகளாக்கவும்.பூண்டையும்,பச்சைமிளகாயையும் நசுக்கி கொள்ளவும்.
இப்போது நூடுல்ஸை தண்ணீர் வடிக்கட்டி வைத்து விடவும்.


ஒரு அகலபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,ஸ்டாக் க்யூபை போட்டு வதக்கவும் அது கரைந்ததும்,நசுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாய்,பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும்.
பின்பு நறுக்கிய காய்களையும்,ஸ்ப்ரவுட்டையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதன் பின் சோயா சாஸ்,சில்லி பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிட்டு பின்பு நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் ஒன்று சேர கிளறி விடவும்.எல்லாம் நன்கு கலந்து விட்டதும் குறைந்த தீயில் வைத்து விடவும்.நன்கு எல்லா பக்கமும் சூடேறியதும் உப்பு சரிபார்த்துவிட்டு இறக்கவும்.(ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் கடைசியில் பார்த்து விட்டு தேவைபடுமானால் போடவும்)










இதற்கிடையில் எண்ணெயில் டோஃபு துண்டுகளை பொன்னிறமாக (மிகவும் சிவந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்)பொறித்து எடுத்துக் கொள்ளவும்.பறிமாறுவதற்கு முன் சேர்த்து கிளறி பறிமாறினால் சாப்பிடுவதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
இதில் அதிக காய்கறிகள் சேர்த்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்க்கு இது போன்று சாப்பிடுவது நன்றாக சுவையாக இருக்கும்.

முன்பெல்லாம் நான் இந்த ரைஸ் நூடுல்ஸை அரிந்து வைத்திருக்கின்ற காயோடு இறாலும் சேர்த்து மட்டுமே செய்ததுண்டு.இங்கே சிங்கப்பூர் பழக்கபடி என் நாத்தினார் கீரை,ஸ்ப்ரவ்ட்,டோஃபு என புதிதாக சேர்த்து செய்து சாப்பிட பழக்கியது எனக்கு வித்தியாசமாகவும்,நால்ல மனமோடு சுவையாகவும் இருக்க,இப்போது விரும்பிய உணவுகளில் ஒன்றாக எனக்கு இது ஆகிவிட்டது.



Friday, January 18, 2013

சிம்பிள் எண்ணெய் கத்திரிக்காய்



இந்த எண்ணெய் கத்திரிக்காய் எனது அம்மாவின் கைபக்குவத்தில் நான் ருசித்து சாப்பிடுபவற்றில் ஒன்று.அதை நான் செய்து உங்களோடு எனது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்

தேவையான பொருட்கள்:-

சின்ன கத்திரிக்காய்      -   5
சின்ன வெங்காயம்        -   1/2 கப்
தக்காளி                              -   2
பச்சைமிளகாய்                -   1
பூண்டு                                  -   3 பல்
புளி                                        - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்                  - 2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்                    -  1/4 ஸ்பூன்
மல்லித்தூள்                       -  1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணை                 -   1 1/2 குழிகரண்டி
கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் -எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்பூன்
தேங்காய் பல் பல்லாக நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை                _  ஒரு கொத்து

செய்முறை:-

கத்திரிக்காயை சிறியதாக இருப்பதால் காம்பை நீக்கிவிட்டு பாதியளவில் நான்காய் கீறி கழுவி வைத்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை நீளவாக்கில் இரண்டு மூன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கர் அல்லது வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் இவற்றை போட்டு பொறிந்ததும் கறிவேப்பிலையை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்,பூண்டு,தக்காளியையும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள்,மிளகாய்த்தூள்களை போட்டு வதக்கி கொண்டே நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயையும்,தேங்காய் பல்லையும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வதங்க விடவும்.

கத்திரிக்காய் வதங்கி எண்ணெய் மினுமினுப்போடு இருக்கும்போது மல்லித்தூளை சேர்த்து பிரட்டி விட்டு புளியை கரைத்து ஊற்றி விடவும்.
வானலியில் வைத்தால் வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றவும்.குக்கரில் வைத்தால் சிறிதளவே ஊற்றினால் போதும்.உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி விடலாம்.எண்ணெய் மினுமினுப்போடு  இருக்க வேண்டும்.தண்ணியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.அப்படியே தண்ணீர் நின்றாலும் சுண்டும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்து இறக்கவும்.
சுவையானதொரு எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.



இது பருப்பு சாதம்.கிச்சடி சாதம்,எல்லா வகையான பிரியாணி இவற்றிற்க்கு நல்லதொரு காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:- இதற்க்கு நல்ல பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.அதே போல் எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவு நல்ல சுவையை தரும்.






















Thursday, January 10, 2013

சிங்கப்பூரில் என்னை கவர்ந்த விஷயம்…..



நான் இங்கே சிங்கப்பூர் வந்து தெரிந்து கொண்ட ஒரு நல்ல விஷயம்,இங்கு இருக்கும் சில பள்ளிவாசல்களில் நிறைய இஸ்லாமிய வகுப்புகள் நடைப்பெற்றுவருவதுதான்.நான் இதற்க்கு முன் துபாயில் இருந்து வந்ததால் அங்கே நாம் தனியாக இஸ்லாமிய வகுப்பு என்று போய் கொண்டிருக்க தேவையில்லை.ஏனென்றால் அங்கே எல்லா பள்ளிக்கூடங்களிலுமே கட்டாயம் இஸ்லாமிய வகுப்புகள் இருக்கும்.அதிலேயே ஹதீஸ்கள்,நம் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் என அனைத்து விஷயங்களையும் சொல்லிதந்துவிடுவார்கள்.வீட்டிலும் பிள்ளைகள் வந்து நம்மோடு கலந்துரையாடி சின்ன சின்ன சந்தேகங்களையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நல்லபடியாக தொழுகையோடு நடைமுறைபடுத்தி வருவார்கள்.என் மூத்த பையனும் அப்படித்தான் மிகுந்த ஆர்வத்தோடு ஓதியப்படியும்,சூரா மனப்பாடம் செய்துக் கொண்டும்,தொழுது கொண்டும் இருந்து வந்தான்.அப்புறம் ஒன்றரை வருடங்கள் நம் ஊரில் நாட்கள் சென்றுவிட்டன.அங்கு அப்படியே நிறைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது.இஸ்லாமிய பாடத்தின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தும் போனது என்றே சொல்லலாம்.

இப்போது சிங்கப்பூரில் நாம் எப்படி பிள்ளைகளுக்கு பழையப்படி கொண்டுவருவது என்ற யோசனையிலேயே (ஏன் கவலை என்று கூட சொல்லலாம்)இந்த நாட்டிற்கு வந்தோம்.ஏனென்ன்றால் கலாச்சார சீரழிவு என்பது எந்த மாதிரி சூழ்நிலைகளிலும் ஏற்படுகின்றது.அவற்றிலிருந்து நம் பிள்ளைகளை மீட்டு கொண்டு வருவது என்பது மிக பெரிய விஷயம்.அதற்க்காக தான் அவர்களின் பிஞ்சு பருவத்திலேயே மார்க்கத்தினை பற்றி சொல்லி அவர்கள் மனதில் நல்லவை எது? கெட்டவை எது?என மார்க்க அடிப்படையில் பிரித்து பார்த்து செயல்பட பழக்கிவிட்டோமேயானால் அல்ஹம்துலில்லாஹ் அவர்களை தீயவைகளை விட்டு பாதுகாத்து விடலாம்.அதே சமயத்தில் நாம் என்னதான் வீட்டிலேயே சொல்லி கொடுத்தாலுமே…அதை ஆழமாக செயல்படுத்துவதற்க்கு உஸ்தாத் என்பவரின் பார்வையில் நடைப்பெறும் இஸ்லாமிய வகுப்பு மிகவும் சிறந்ததாக இருக்கும் என எனக்கும்,என்னவருக்கும் தோன்றியது….
அப்படிப்பட்ட ஒரு நல்ல விஷயத்தைதான் இந்த சிங்கப்பூரில் மிகவும் சிறந்த முறையில் வாராந்திர வகுப்பு நடத்திக் கொண்டு வருவதை பார்த்தோம்.மனதிற்க்கு ஒரு சந்தோஷம்,ஆறுதல்.அப்படி என்னவெல்லாம் ஒரு நாளில் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா..?அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.


வாரத்திற்க்கு ஒரு முறை சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை இரண்டு மணிநேரம் வகுப்பு நடைப்பெறுகின்றது.அதில் அரபு எழுத்துக்களை சொல்லி கொடுப்பது முதல் உச்சரிப்பு பிழையினை திருத்தம் செய்வது வரை அனைத்தையும் சொல்லித்தருகின்றார்கள்.அதுமட்டும் அல்லாது,அன்றாடம் பயன்படுத்த வேண்டிய சூரா முதல் குர்ஆன் ஆயத்துகளையும் மனபாடம் செய்ய ஆர்வமூட்டுகிறார்கள்.மற்றுமொரு சிறப்பு என்னவெனில்,ஒரு மாத விடுமுறை காலங்களில் மூன்று நாட்கள் கேம்ப் நடத்தி வருகிறார்கள்.இதில் பண்ணிரண்டு வயதும்,அதற்க்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளும் கலந்து கொள்ளலாம்.(இன்ஷா அல்லாஹ் என் மகனை அடுத்த விடுமுறையில் நடக்கவிருப்பதில் கலந்துக் கொள்ள செய்யணும்)ஆண்குழந்தைகள் இரவு,பகலாக தங்குவது எனவும் பெண்பிள்ளைகள் அந்த கேம்ப் நடக்கும் மூன்று நாளும் காலை எட்டு மணியளவில் வந்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புகின்ற முறையிலும் சிறப்பாக நடத்திவருகின்றார்கள்.இதற்க்காக அக்குழந்தைகளுக்கு சாப்பாடு தருவதற்க்காக ஒரு சிறு தொகையை கணக்கிட்டு பெற்றுகொள்கிறார்கள். இவையெல்லாம் மஸ்ஜிதில் தான் நடைப்பெறுகின்றது.அந்த கேம்ப்பில் தஹஜ்ஜத் தொழுகையை அவசியம் தொழச்செய்து,அதன் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறார்கள். எல்லோரும் கூட்டாக சேர்ந்து தொழுது ஓதிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல், பயான்கள் சொல்வது அதை அவர்களும் எப்படியெல்லாம் பேசி பழகுவது, இஸ்லாமிய விஷயங்கள் சம்பந்தபட்ட வகையில் சில ஆக்டிவிட்டீஸ் என செய்து குழந்தைகளை மிகவும் உற்ச்சாகப்படுத்தி ஆர்வமூட்டி வருகிறார்கள்.இது மட்டும் அல்லாது… தற்போதைய ஒரு மாத காலமாக குர்ஆன் ஓதும் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் ஸ்பெஷல் க்ளாஸாக புதன்கிழமை தோறும் மாலை ஒரு மணிநேரம் நடத்திவருகின்றார்கள்.அதன்பிறகு மக்ரிப் தொழுகைக்குபின்,சிறந்த தலைப்புகளில் பிள்ளைகளுக்கும்,பெரியவர்களுக்கும் புரியும்வண்ணம் பயான்கள் சொல்கின்றார் உஸ்தாத் ரஹ்மத்துல்லா என்பவர்.இவர்தான் இந்த இஸ்லாமிய வகுப்பு நடத்துவதற்க்கு தலைமை வகிப்பவர்.சிறந்த முறையில் செயல்படுத்தி கொண்டும் இருப்பது நன்கு தெரிய வருகின்றது.இது போன்று ஏழு இடங்களில் உள்ள பள்ளிகளிலுமே நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை கொடுத்தோம் என்ற திருப்தியோடு நமக்கும்,பள்ளிவாசல்களுக்கும் இடையே தூரம் அதிகமானாலும் இது போன்று அடிக்கடி சென்று நம் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவது என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தையும்,மனநிம்மதியையும் கொடுக்கின்றது.


நாம் இது போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவோ வெளியில் சுற்றுவது,அலங்கார பொருட்களை வாங்குவது,வெளியில் சாப்பிடுவது என நிறைய நேரங்களையும்,பணத்தையும் செலவழிக்கும் போது வாரத்திற்க்கு ஒரு முறையோ,இருமுறையோ நாம் இப்படி பள்ளிகளுக்கு சென்று நல்ல முறையில் நேரத்தை கழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்தானே…?இது போன்று நடைப்பெறும் வகுப்புகளுக்கு நாமும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்தோமேயானால் அவர்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும்.இந்த சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு சிலபேருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகலாம்.அதற்காகவே நான் இதை என் இல்லத்தில் பதிவு செய்கிறேன்.



எல்லாவல்ல இறைவன் எங்களுக்கு இதை நிலைக்க செய்திட தினம் தினம் இறைஞ்சுகிறேன்.







Saturday, January 5, 2013

நாஸி லிமா(க்) (nasi limak)



நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது இல்லத்தில் சமையல் குறிப்பை போடுகின்றேன்.

இந்த சமையல் மலேசிய,சிங்கப்பூர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.
நான் இந்த சிங்கப்பூருக்கு புதிதாக இருப்பதால் இப்பொழுதுதான் ஒவ்வொரு உணவாக சுவைத்துவருகின்றேன. 
இந்த நாஸி லிமா(க்) என்ற உணவு எனது நாத்தினார் திருமதி.ஆயிஷா  அவர்கள்  வீட்டில் செய்து தந்து நான் மிகவும் விரும்பி சாப்பிட்டதாகும்.

சாதத்தில் செய்யக்கூடிய எந்த உணவுக்கும் நாஸி என்று ஆரம்பித்துதான் பெயர் இருக்கும்.
அதைதான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வந்தேன்.மிகவும் சுலபமான சுவையான ஒரு உணவு.அதன் செய்முறை விளக்கத்தை இப்போது பார்க்கலாம் வாங்க….





              நாஸி லிமா(க்) (nasi limak)

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி    - 3கப்

தேங்காய் பால்    - 4 ½ கப்

பூண்டு              - 4 பல்

டவுண்பாண்டா இலை(அ)
பிரிஞ்சி இலை     - 1

பட்டை              - 1 இன்ச் அளவு

வேர்கடலை        - அரை கப்

நெத்திலி கருவாடு   - அரை கப்

கெட்டியான புளி தண்ணீர்  - 2 (அ) 3 ஸ்பூன்

முட்டை     - 5

நெய்        - 3 ஸ்பூன்

வெள்ளரிக்காய்  - இரண்டு

சீனீ                - ஒரு ஸ்பூன்

அரைத்துக்கொள்ள:-)

சின்ன வெங்காயம்    - அரை கப்

பூண்டு     - 3 பல்

இஞ்சி      - ஒரு இன்ச் அளவு

காய்ந்த மிளகாய்   - அரை கப்

நெத்திலி கருவாடு   - 8

செய்முறை :-


அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் 

வதக்கி ஆர வைத்தும் அரைக்கலாம்.இல்லையென்றால் சும்மாவே மிக்ஸியில் நைசாக 

அரைத்து வைத்து கொள்ளவும்.

முட்டையையும் வேக வைத்துக்கொள்ளவும்.


இப்போது சாதம் செய்வதற்க்கு எலெக்ட்ரிக் குக்கரிலையோ அல்லது சாதா 

பாத்திரத்திலையோ மிகவும் அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்  கலந்த தேங்காய் 

பாலை(இங்கே பாக்கெட் தேங்காய்பாலையே தண்ணீர் கலந்து ஊற்றுகிறார்கள் நன்றாகதான் 

இருகின்றது)கொடுத்திருக்கும் அளவில் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு 

போட்டு,பூண்டையும் நசுக்கி அதையும்,பட்டை,டவுண்பாண்டா இலை,நெய் இவற்றையும் 

போட்டு கொதி வந்ததும் சுத்தம் செய்து கால் மணிநேரம் ஊற வைத்திருக்கும் 

அரிசியையும்,தேவையான அளவு உப்பும் போட்டு நன்கு கிளறி நன்கு கொதித்ததும் தம் 

போடவும்.


அது தம் ஆவதற்க்குள் அரைத்து வைத்திருப்பதை கொண்டு சம்பல் என்கிற க்ரேவி தயாரித்து 

விடலாம்.ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அதில் கடலையை வறுத்து எடுத்து வைத்துக் 

கொள்ளவும்.அதே போல் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் நெத்திலியில் சிறிது 

உப்பு,மிளகாய்த்தூள் போட்டு பிரட்டி அதையும் அந்த எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து 

இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதே எண்ணெயில் இந்த அரைத்து 




வைத்திருக்கும் விழுதை கொட்டி சிறிது தண்ணீர் அலசி ஊற்றி புளித்தண்ணீர்,உப்பு,சீனி 

இவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மிலேயே சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க 

விடவும்.அந்த மசாலா நன்கு சுண்டி எண்ணேய் மேலே மிதந்து வாசமாக வந்தவுடன் இறக்கி 

விடவும்.


இப்போது எப்படி கடையில் நாஸி லிமக் என்று கேட்டால் கொடுப்பார்களோ அப்படியே 

காண்பிக்கிறேன் பாருங்கள்.


ஒரு ப்ளேட் அல்லது பவுலில் வட்ட அச்சு வடிவில் தேங்காய் பால் சாதத்தை நடுவில் கொட்டி 

அதன் மேல் முட்டையை பாதியாக வெட்டி வைத்து ஒரு பக்கம் அந்த சம்பலையும்(சாதத்தின் 

மேலேயே அந்த க்ரேவியை போட்டுதான் தருவார்கள் நான் சைடில் தெரிவதற்க்காக 

வைத்துள்ளேன்),மற்றொரு  பக்கம் வறுத்த கடலை நெத்திலி காம்பினேஷனையும் வைத்து 

சுற்றி நறுக்கிய  வெள்ளரிக்காயோடு தருவார்கள்.இது பார்க்க மட்டுமல்லாமல் சாப்பிடவும் 

சுவையாக  இருக்கும். 

நாஸி லிமா(க்)ஆயம் என்றால் இந்த காம்பினேஷனுடன் கோழியையும் சேர்த்து 

தருவது.அதுவும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவே

தேவையில்லை.நாம் வெளியில் சாப்பிடுவதை விட இது போல் ஆசையாக இருக்கும் போது

வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுத்தமாக செய்து சாப்பிட்ட ஒரு திருப்தியோடு

நமக்கும் அடிக்கடி செய்யும் சமையலில் இருந்து ஒரு சின்ன மாற்றமாகவும்இருக்கும் இல்லையா...?

முயன்று பாருங்களேன்.

குறிப்பு:- இந்த சம்பலில் அதிக காரம் விரும்புவோர் கூடுதல் காய்ந்த
மிளகாயையும்,நெத்திலி வாசம் விரும்புவோர் அதையும் கூடுதலாக சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.





















Friday, August 3, 2012

சிறப்பு மிக்க ரமலான்

இவ்வுலக மக்கள் நம் அனைவர் மீதும் இறவனின் சாந்தியும்,சமாதானாமும் நிலவட்டுமாக....

வலைப்பூ சகோதர சகோதரிகளே,,, எப்படியிருக்கீங்க பா.....

நான் எனது பக்கத்திற்க்கு பதிவு போட்டும்,மற்றவர்கள் பக்கத்திற்க்கு வந்து பார்வையிட்டு பதில் அனுப்பியும் பல நாட்கள் ஆச்சு.... மன்னிக்கவும்.அதற்க்காக என்னை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.அடடே நான் சொல்ல மறந்துட்டேனே....





எல்லோருக்கும் சிறப்பான ரமலான் வாழ்த்துக்கள்.... (இவ்வளவு லேட்டாவா சொல்றதுன்னு யாரும் முறைக்காதீங்கப்பா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்)

இன்றோடு ரமலானின் பதினான்காவது நாள் ஓடிக் கொண்டிருக்கின்றது.இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு மிகவும் சிறப்பாகவே போய் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.மற்ற சகோதர,சகோதரிகளும் அருகில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் இஃப்தார் நேரங்களில் கலந்து கொள்ளலாமே...அதுவும் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.நான் துபாயில் இருக்கும் போது எனது தோழிகள் இரண்டு குடும்பத்தினர் விரும்பி வந்து கலந்து கொள்வார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.இந்த இரண்டு வருடங்களாக நான் அதை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.அரபு நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் ஒரு தனி சிறப்புதான்...இஃப்தார் நேரங்களில் பள்ளிகளில் அதிக விஷேஷமாக இருக்கும்.அந்த நேரத்தில் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டிருந்தாலும் கூட அங்கே சில பேர் தேடி வந்து ஒரு பாட்டில் தண்ணீரும்,பேரிச்சைபழமும்,அத்துடன் ஏதேனும் பசியாற்றும் திண்பண்டமும் வைத்த பேக்கை தந்து விட்டு செல்வார்கள்.எல்லா பள்ளிகளிலும் இதே போல் மிகவும் அழகிய முறையில் தொழுகை நடக்கும்.பெண்களுக்கென்ற தனி இடம் எல்லா பள்ளிகளிலும் அழகிய முறையில் அமைத்திருப்பார்கள்.அங்கு நான் இருந்த நாட்கள் மிகவும் அழகிய அனுபவம் வாய்ந்தது.

இங்கு நம் பிறந்த ஊரில் ரமலான் நாட்கள் அது ஒரு வித பாணியில் செல்லும்.கூட்டு குடும்பமாக இருக்கும் வீடுகளில் இஃப்தார் நேரமானாலும் சரி,இரவு நேர தொழுகையானாலும் சரி ஒன்று சேர செயல்படுவது என்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.நம்மோடு நம் குழந்தைகளுக்கு அது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.எனவே நாம் ஒவ்வொருவரும் இந்த மாதத்தை அழகிய முறையில் ஒவ்வொரு நாட்களையும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்வோம்.

இறைவனின் நாட்டத்தோடு நம் அனைவருக்கும் இந்த மாதம் முழுவதும் நல்லபடியாக அமைந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக ஈத் பெருநாளை கொண்டாடுவோமாக....






Wednesday, January 18, 2012

பருப்பு கடைசல் ரசம்

மங்கையர் உலகம் வலைப்பூவில் நடக்கும் ஜனவரி மாத போட்டியில் நானும் கலந்து கொள்ளலாமென ஆசைப்பட்டு அதன் முதல் முயற்ச்சியாக இந்த சமையல் குறிப்பை வெளியிடுகின்றேன்.
இந்த சமையல் பலரும் அறிந்த, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகையாகும்.அவற்றை இந்த போட்டியின் ஒரு தலைப்பான “பாரம்பர்ய சமையல்”பகுதிக்காக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.இனி அதன் செய்முறை விளக்கத்தை பார்வையிடுவோம்.




                                               பருப்பு கடைசல் ரசம்


தேவையான பொருட்கள்


பாசி பருப்பு _    ஒரு டம்ளர்
தக்காளி         _    பெரியதாக இரண்டு
தேங்காய்த்துருவல் _     கால் கப்
புளி --------------------------------சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்த்தூள்                 _     இரண்டு ஸ்பூன்
 பூண்டு _     பண்ணீரண்டு
மல்லித்தழை _     சிறிதளவு


வறுத்து பொடித்துக் கொள்ள:
மிளகு _     ஒரு தேக்கரண்டி
சீரகம் _      ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் _       நான்கு


தாளிப்பதற்க்கு:
கறிவடகம் _       இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை _       இரண்டு கொத்து
பெருங்காயம் _       அரை ஸ்பூன்
நெய் _       ஒரு தேக்கரண்டி
எண்ணெய்   _       மூன்று தேக்கரண்டி


செய்முறை:




முதலில் பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்த்தூளும்,பூண்டு ஐந்து பல்லும் போட்டு கொஞ்சம் திப்பி திப்பியாக வேக விடவும்.
பிறகு அதை நன்கு தண்ணீர் வடிய விடவும்.அந்த தண்ணியில் தக்காளியை கழு்விவிட்டு நான்காக அரிந்து போடவும்.
புளியை ஊற வைக்கவும்.


நன்கு தண்ணீர் வடிந்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய்த்துருவலை சேர்த்து வெந்த பூண்டு மசிய எல்லாம் ஒன்று சேர ஒரு கரண்டியால் பருப்பை நன்கு மசிக்கவும்.




நன்கு கலந்ததும்,ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவிடம் சிறிது போட்டு பெருங்காயத்தூள் மிக சிறிதளவு,கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும் கலந்தை பருப்பை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.


இப்போது ரசத்திற்க்கு என்ன செய்யலாம் என பார்க்கலாம்.


புளியை நன்கு கரைத்து வி்ட்டு அதனுடன்,வடித்த பருப்புத்தண்ணீரையும் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவைகளை நன்கு பொடித்து அதனுடன் பூண்டையும் சேர்த்து நசுக்கி எல்லாவற்றையும் புளி கரைசலோடு போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
(தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்)
அவற்றை அடுப்பில் வைத்து பெருங்காயத்தூள்,பொடியாக அரிந்த மல்லிதழை போட்டு கொதிக்க விடவும்.


நன்கு இரண்டு கொதி கொதித்ததும்,இறக்கி விட்டு மற்றொரு வானலியில் எண்ணெய் விட்டு கறிவிடம் கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கலந்து விடவும்.
இதோ சுவையான மணமிக்க பருப்பு கடைசல் ரசம் தயார்.



சூடான குழைந்த சாதத்தி்ல் நெய் ஊற்றி கடைந்த பருப்பு சிறிது போட்டு ரசம் நன்கு ஊற்றி சாதத்தை பிசைந்து அதனுடன் தொட்டுக்கொள்ள ஒரு பக்கம் உருளைகிழங்கு வறுவல்,மற்றொரு பக்கம் அப்பளம் என சாப்பிட சும்மா சத்தமில்லாமல் சாப்பாடு போய் கொண்டிருக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் எங்கள் ஊர் பகுதிகளில் மின்னலை என்பதை சேர்த்து கொதிக்க விடுவர்.
அது ஒரு தனி மணத்தை கொடுக்கும்.
இதுவே எங்கள் ஊர் பாரம்பர்ய சமையல்களில் ஒன்றாகும்.


நன்றி.  


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out