Tuesday, April 22, 2014

ப்ரொக்கொலி வித் ஸ்ப்ரவ்ட்


இந்த ப்ரோக்கொலியும் ,ஸ்ப்ரவ்ட்டும் நமது தமிழர்களின் சாப்பாடு வழக்கத்தில் இல்லாத ஒன்று.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சீனர்கள் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.இதனை நம்மை போன்ற வெளிநாட்டு வாழ்  தமிழர்கள் சமைத்து சாப்பிட பழகியும் விட்டார்கள்.அப்படிதான் நானும் அடிக்கடி   செய்து சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.உடம்புக்கும் மிகவும் நல்லது.இது போன்று பிரட்டியோ ,சூப் வைத்தும் சாப்பிடலாம்.நூடுல்ஸ்களிலெல்லாம் பல காய்களோடு இந்த ஸ்ப்ரவ்ட்டையும் சேர்த்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.இனி  செய்முறை  பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 

ப்ரொக்கொலி பூ  -  சிறியதாக ஒன்று 
ஸ்ப்ரவ்ட்   -  ஒரு கப் 
பூண்டு   -  பெரியதாக 2 பல் 
பச்சைமிளகாய் - ஒன்று 
சில்லி சாஸ்  -  ஒரு தேக்கரண்டி 
எண்ணெய்   -  ஒரு மேசைக்கரண்டி 

செய்முறை 



ப்ரோக்கொலியை சிறு சிறு பூவாக அரிந்து வைத்துக் கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிந்து வைத்திருக்கும் பூவை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து நீரை வடிக்கட்டி விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
ஸ்ப்ரவ்ட்டையும் கழுவி வைக்கவும்.
பூண்டையும்,பச்சைமிளகாயையும் கழுவி விட்டு நன்கு நைசாக தட்டி வைக்கவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நசுக்கி வைத்திருக்கும் பூண்டு மிளகாயை சேர்த்து வதக்கவும்.
உடனே ப்ரொக்கொலி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு அதில் ஸ்ப்ரவ்ட் சேர்த்து சில்லி பேஸ்ட்டும்,தேவையான அளவு உப்பும்  சேர்த்து நன்கு  பிரட்டி விட்டு குறைந்த தீயில் மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிடவும்.
மிகவும் வெந்து விடாமல் அரைவேக்காடாக இருப்பின் மிகவும் உடம்பிற்கு நல்லது சாப்பிடவும் மிகவும் சுவையாகவே இருக்கும்.
இதில் வாசத்திற்கு இறால்,கருவாடு இரண்டு வாசத்திற்கு சேர்க்கலாம்.
ரசம்,சாம்பார்,இப்படி எல்லாவற்றிற்க்கும் சாப்பிட நன்றாகவே இருக்கும்.

Saturday, March 8, 2014

குவே

இந்த குவே... தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் காரைக்கால்,நாகப்பட்டினம் ஊர்களில் எந்த ஒரு விஷேச,பண்டிகையானாலும் இந்த இனிப்பு வகை இடம்பெற்றிருக்கும்.

இது நம் தமிழ்நாட்டு குறிப்பு என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.ஏனென்றால் நான் முதன்முதலில் சாப்பிட்டு பார்த்ததும் எங்கள் ஊர் பெண் வீட்டில் தான்.அவர் சொல்லிதான் நான் முதன் முதலில் செய்தேன்.
இங்கே சிங்கப்பூர் வந்த பிறகுதான் தெரிய வந்தது இது மலாய் மக்களின் பாரம்பர்ய இனிப்பு வகை என்று.ஆம் அவர்கள்தான் வீட்டின் சின்ன விஷேசம் முதல் திருமண நிகழ்ச்சி ஆனாலும் எத்தனை வகை உணவுகள் இருப்பினும் இந்த இனிப்பு இல்லாமல் இருப்பதில்லை.அவ்வளவு கலர் கலராக வகைப்படுத்தி வைப்பார்கள்.இதில் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து செய்வார்கள் அது ஒரே கலராக அது ஒரு வகையாக வைக்கப்பட்டிருக்கும்.கிழங்கு வகைகளை சேர்த்தும் சேர்த்தும் அது ஒரு வகையாக செய்வார்கள்.இங்கு நிறைய இனிப்புகள் விற்க்கும் கடைகளிலும் கிடைக்கும்.அவ்வளவு பெயர் பெற்றதாகும்.அது அப்படியே இங்கு பல வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களிடமும் பரவிவிட்டது  என்றுதான் சொல்ல வேண்டும்.சரி இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.

                        குவே
தேவையான பொருட்கள்
அரிசிமாவு       - ஒரு கப்
சீனீ              - 1 ½ கப்
கெட்டியான தேங்காய் பால்  - 2 கப்
டவுன் பாண்டன் இலை  -  1 (அல்லது)
ஏலக்காய்          - 3 (ஆனால் ஏலக்காய் அவர்கள் சேர்ப்பதில்லை)
சோம்பு            - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர்ஸ்       - விருப்பமான                         கலர்(ஆரஞ்சு,பச்சை,ரோஸ்)       
செய்முறை

முதலில் சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சோம்பு,பாண்டன் இலை அல்லது ஏலக்காயை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.சீனி நன்கு கரைந்து இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.அதை இறக்கி நன்கு ஆற விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதில் தேங்காய்பால் சேர்த்து,அத்துடன் இந்த சீனி கரைசலையும் வடிக்கட்டி சேர்த்து நன்கு கட்டியில்லாமல் நீர்க்க கரைக்க வேண்டும்.கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதை மாவு சல்லடை அல்லது வடித்தட்டில் வடிக்கட்டி கொள்ளவும்.
இப்போது இதை நான்கு சரிசமமாக கப்களில் எடுத்துக் கொண்டு மூன்று கப்களில் நாம் தனியே கலர்களை நன்கு கலந்து விடவும்.
ஒரு ரைஸ் குக்கர் பாத்திரத்திலோ அல்லது இட்லி அவிக்கும் பாத்திரத்திலோ உள்ளே 3 இன்ச் உயர அளவு வட்ட பாத்திரத்தினை (ஒரு பாத்திர ஸ்டாண்ட் மேலே)வைத்தால் அதில் ஒரு இன்ச் அளவிற்க்கு தண்ணீர் தொடும் படி ஊற்றவும்.அதை சூடு படுத்தவும்.
இனி அந்த வட்ட பாத்திரத்தில் சிறிது நெய் தடவிக்கொண்டு முதலில் பச்சைக்கலர் ஒரு பெரிய குழிக்கரண்டி அளவு எடுத்து ஊற்றவும்.மிகவும் மெல்லிய லேயராக இருந்தால் தான் சீக்கிரம் சீக்கிரம் வேக வைத்து எடுக்க வசதியாக இருக்கும்.

அதை அந்த கொதிக்கும் நீரில் வைத்து மூடியில் ஒரு கர்ச்சீப் அல்லது துணியை கட்டி மூடி ஐந்து நிமிடம் வேக விடவும்.(வட்டிலாப்பம் வேக விடுவது போல்)
அதன் பிறகு மூடியை திறந்து பார்த்து விரலால் தொட்டு பார்த்தால் வெந்தும் அதே சமையம் லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்.இப்போது அடுத்த கலரை அதே அளவு எடுத்து மெதுவாக வெந்திருக்கும் அந்த லேயரின் மேலேயே ஊற்றி அதே போல் ஐந்து நிமிடம் வேக விடவும்.இதே போல் எல்லா கலரையும் ஒன்றன் மேல் ஒன்றாக மாற்றி ஊற்றி வேக விடவும்.இடையிடையே வேகும் அளவிற்க்கு தண்ணீர் இருக்கிறதா என பார்த்து ஊற்றவும்.கடைசி கரைசலை ஊற்றிய பிறகு பத்து நிமிடம் வேகவிட்டு பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை மெதுவாக வெளியே எடுத்து வைத்து ஆறவிடவும்.வேண்டுமானால் சூடு சிறிது குறைந்ததும் குளிர்சாதன பெட்டியிலும் அரை மணிநேரம் வைத்து எடுக்கலாம்.ஆறியதை ஒரு தாம்புலத்தில் தலைகீழ் கவிழ்த்து லேசாக தட்டினால் அப்படியே பாத்திரத்தை விட்டு விழுந்து விடவும்.கத்தியில் சிறிது நெய் தடவி கொண்டு,அதை விரும்பிய வடிவில் துண்டு போடலாம்.

சுவையான வண்ணமிகு குவே தயார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆவியில் வேக வைப்பதாலும் எண்ணெய் நெய் வஸ்துகள் இல்லாததாலும் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது….
குறிப்பு:- )))
இதில் பாரம்பரிய செய்முறை என பார்த்தால் பச்சரிசியை கழுவி 4 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் மைய நைசாக அரைத்து அதன் பிறகு மற்றவற்றை அதில் கலந்து அதே போல் வடிக்கட்டி செய்வார்கள்.நான் மாவிலும் செய்து பார்த்து அதுவும் நன்றாக வரவே உங்களுக்கு அந்த  ஈஸியான முறையை செய்து காண்பித்திருக்கின்றேன்.இதில் மற்றொரு முறையையும் விரைவில் செய்து எனது பக்கத்தில் சேர்க்கிறேன்.


Monday, February 10, 2014

ப்ளைன் பிரியாணி

என் பெரிய  மகனுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிறுகிழமைகளில் அவசியம் பிரியாணி வேண்டும்.அது எந்த வகை பிரியாணி ஆனாலும் சரியே.ஒரு வாரம் ஏதேனும் காரணத்தினால் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான் பயங்கர அப்சட் ஆகிவிடுவான்.அதனாலேயே வெள்ளிக்கிழமைகளில் சிக்கன் அல்லது இது போன்ற ப்ளைன் பிரியாணி செய்து ஸ்கூலுக்கு தந்து விடுவேன்.விரும்பி சாப்பிட்டுவிட்டு வருவான்.
அதனை என் இல்லத்தில் பதிவிடுகிறேன்.

                                                  

தேவையான பொருட்கள்
**************************
பாஸ்மதி அரிசி -  1 டம்ளர்
வெங்காயம்      -   1
தக்காளி.            -   பெரியதாக 1
பச்சைமிளகாய் -   1
தயிர்.      -  2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்.  -  1தேக்கரண்டி
மஞ்சள் தூள்.      -   1/4 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் -  1மேசைக்கரண்டி
மல்லி,புதினா இலைகள் - ஒரு கையளவு

தாளிப்பதற்கு
**************
எண்ணெய்     -  3 மேசைக்கரண்டி
நெய்                  -   1 தேக்கரண்டி
பட்டை             -    1 இன்ச் அளவு
ஏலக்காய்        -    1
கிராம்பு              -    2
பிரிஞ்சி இலை -   பாதி
விரும்பினால் அன்னாசி பூவில் ஒரு இதழ்

செய்முறை
************
அரசியை நன்கு  கழுவி விட்டு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு வந்ததும்,இதர தாளிப்பு சாமான்களை சேர்த்து பொரிந்ததும்,அறிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சி,பூண்டு அரவையை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிய வதங்கியதும்,மிளகாய்,மஞ்சள்,கரம்மசாலாக்களை சேர்த்து வதக்கி அத்தோடு தயிரையும்,மல்லி புதினா தழைகளையும் சேர்த்து ஒன்று சீர பிரட்டி குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து விடவும்.பச்சை வாசனை போய் எண்ணெய் மினுமினுக்க இருக்கும் போது ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசியை சேர்த்து கிளறி விடவும்.
நன்கு தளதளவென்று கொதிக்கும் போது ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி விடவும்.
ஸ்டீம்  வந்ததும்,வெய்ட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 7 நிமிடம் கழித்து இறக்கவும்.
 ஸ்டீம் விட்டதும் திறந்து ஒரு முறை கிளறி விட்டு வைத்து விடவும்.
பிரியாணி வாசத்தோடு அருமையான சாதம் ரெடி......
வெஜ் விரும்பிகள் இத்துடன் காலிஃப்ளவர் மஞ்சூரியன் ,வெஜிடபுள் மஞ்சூரியன் சேர்த்து செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.
நான் வெஜ் விரும்பிகள் அவித்த முட்டை,முட்டை மசாலா,சிக்கன் ஃப்ரை,சிக்கன் க்ரேவி செய்து சாப்பிடலாம்.





Saturday, January 25, 2014

சாக்லெட் லார்வா கேக்

டிசம்பர் பள்ளி விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் முழுநேரமும் இருந்ததால் ஏதாவது கொறிப்பதற்கு கேட்டு கொண்டிருப்பார்கள்.எனவே ஏதேனும் கேக்,டஸர்ட் ,நம்ம ஊர் திண்பண்டம் என செய்து கொடுத்து கொண்டிருந்தேன்.இதில் ரொம்ப நாளாக அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தது தான் சாக்லெட் லாவா கேக்.
இது தான் முதல் தடவை இந்த கேக்கை செய்வது.ரொம்ப நன்றாகவே வந்தது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.சூப்பர் என சர்டிஃபிகெட்டும் கொடுத்து விட்டார்கள்.இதை விட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கின்றது.இந்த சந்தோஷத்தோடு இதன் செய்முறையையும் பார்த்துவிடலாம்.
                                       
                                                சாக்லெட் லார்வா கேக்

தேவையான பொருட்கள்
**************************
குக்கிங் சாக்லெட் சிப்ஸ்    -  ஒரு கப்
பேக்கிங் சாக்லெட்      -    1
மைதா மாவு                 -  அரை கப்
கண்டன்ஸ்ட் மில்க்  -  அரை டின்
பேக்கிங் பவுடர்           -   1/2  தேக்கரண்டி
பட்டர்                              -  4  மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ்(விருப்பப்பட்டால்)  -  1 தேக்கரண்டி

செய்முறை
************

முதலில் ஒரு சில்வர் பாத்திரத்தில் குக்கிங் சாக்லெட் மற்றும் பட்டரை போட்டு டபுள் பாய்லர் மெத்தடில் உருக வைக்க வேண்டும்.அதாவது இந்த சாக்லெட் உள்ள பாத்திரத்தை மேலே வைக்கும் படியான வாய் கொஞ்சம் குறுகலான  பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் கால் பகுதி தண்ணீர் ஊற்றி சூடு படுத்திவிட்டு மிதமான தீயில் வைத்து விட்டு அதன் மேல் சாக்லெட் உள்ள பாத்திரத்தை வைத்து சாக்லெட்டை உருக செய்ய வேண்டும்.
(புகைப்படத்தில் உள்ளபடி)
இதற்கிடையில்,நடுத்தர அளவிலான பேக்கிங் கண்ணாடி பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பட்டரை உள்ளே நன்கு தடவி விட்டு சிறிது மைதா தூவி எல்லா இடத்திலும் படுமாறு தட்டி விட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டி கொண்டதும் மீதி மாவை கீழே தட்டி விடவும்.
இப்போது  அவனையும் 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும்.
சாக்லெட்டும்,பட்டரும் உருகியதும் நன்கு கலக்கி விட வேண்டும்.ஒன்று சேர கலக்கி கொண்டே கீழே இறக்கி வைத்துக் கொண்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றி கலந்து விடவும்.


பிறகு அதிலேயே பேக்கிங் பவுடர் மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு ஒன்று சேர அந்த சூட்டிலேயே கலக்கி விட வேண்டும்.கெட்டியாகி விடும்
 அதன் பிறகு முற்சூடு முடிந்ததும்,பேக்கிங் பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மாவை நன்கு கலந்த வண்ணம் ஊற்றி விட்டு அதன் நடுவே பேக்கிங் சாக்லெட்டில் கட்டம் கட்டமாக இருக்கும் அல்லவா அதில் ஒரு விரல் அளவு உடைத்த துண்டுகளில்  இரண்டு துண்டுகளை  நடுவில் மெதுவாக நிற்க்கும் படி வைக்கவும்.
அதை அவனில் வைத்து 18 நிமிடம் செட் செய்து பேக் செய்யவும்.
நேரம் முடிந்ததும் வெளியில் எடுத்து பத்து நிமிடம் வைத்து விட்டு ஒரு ட்ரேயில் தலை கீழாக வைத்து மெதுவாக கவிழ்த்தால் அழகாக வந்து விடும்.அதன் நடுவே லேசாக வெட்டி பார்த்தோமேயானால் சாக்லெட் மெல்ட்டாகிய படி இருக்கும்.சுற்றி கேக் வெந்து இருக்கும்.சாப்பிட ம்ம்ம்ம்... மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இளஞ்சூடாகவே சாப்பிட நன்றாக இருக்கும்.ஆறியும் சாப்பிடலாம்.




இதில் இன்னும் சில குறிப்புகள்:-)))
*********************************
இதில் அதிகம் சாக்லேட் லார்வா (நடுவில் உருகியிருப்பது)வேண்டுமெனில் இன்னும் ஒரு துண்டு சேர்த்து கொள்ளலாம்.
வெனிலா எஸன்ஸ் நான் ஊற்றவில்லை வெறும் சாக்லெட் சுவையுடனே இருக்கும்படி செய்தேன்.உங்களுக்கு விருப்பமெனில் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பேக் செய்யும் நேரம் ஓவனுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் வித்தியாசப்படலாம்.
எங்கள் வீட்டில் இருப்பது கன்வெக்‌ஷன் அவன்.எனவே எனக்கு இந்த டைம் சரியாக இருந்தது.மேலும் இதற்கு மேல் நேரம் தேவைபடாது 
என்றே நினைக்கிறேன்.20 நிமிடங்களுக்குள்ளாகவே ரெடியாக கூடியதுதான் இந்த கேக்.
இந்த அளவில் உள்ளதை இன்னும் சிறிய பவுலாக எடுத்துக் கொண்டு இரண்டு கேக்காகவும் ஒரே நேரத்தில் பேக் செய்யலாம்.

Monday, January 20, 2014

தேங்காய் பால் சாதம்

இது நம் தமிழர் சமையலுக்கான குறிப்பு...
அதுவும் இல்லாமல் இந்த குறிப்பை நீண்ட நாளாக எனது வலைப்பூ இல்லத்தில் போட இருந்த சமையல் குறிப்பாகும்.
ஏனெனில் எங்கள் வீட்டின் ஸ்பெஷல் உணவு வகைகளில் இந்த தேங்காய்பால் சாதம்,மீன் காம்பினேஷன் அனைவரின் விருப்ப சாப்பாடாகும்.இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.



                               தேங்காய்பால் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
தேங்காய்                                       - 2
பெரிய வெங்காயம்                    -  1
பூண்டு (  முழுதாக )                    -   1
பட்டை                                              -  2 இன்ச் அளவில் 2
ஏலக்காய்                                         -  3
வெந்தயம்                                        -  1 மேசைக்கரண்டி
நெய்                                                    -  3 மேசைக்கரண்டி
புதினா மல்லி தழை                     -  ஒரு கைப்பிடி
கருவேப்பிலை                               -  ஒரு கொத்து

செய்முறை

அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் வடித்து விட்டு வைக்கவும்.
தேங்காயை உடைத்து அதில் நன்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.(முதல் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் என...)
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.பூண்டை உரித்து விட்டு அம்மியிலோ,குத்துக்கல்லிலோ நசுக்கி வைத்துக் கொள்ளவும்.நைசாக அரைக்க கூடாது.

இப்போது சாதம் செய்யும் பாத்திரத்திலோ,அல்லது ஒன்றரைபடி குக்கரிலோ மூன்று முறையாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை எட்டு டம்ளராக அளந்து ஊற்றவும்.தேங்காய் பால் முடிந்து போனால் மீதிய அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.(ஒன்றுக்கு இரண்டு என கணக்கில் அளந்து வைக்க வேண்டும்.) 
அதில் தேவையான அளவு உப்பு,நசுக்கிய பூண்டு,அரிந்த வெங்காயம்,அரிசியை தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.
கொதிக்க ஆரம்பிக்க நுரை பொங்க வரும் அந்த சமையத்தில் கழுவி வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்கு கிளறவும்.
சட்டியில் தம் போடுவதென்றால் தண்ணீர் சுண்டும் நிலையில் தம் போடும் தவாவை அடுப்பில் வைத்து அதன் மேல் இந்த சட்டியை வைத்து தவா சூடேறியது,அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு,மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு மூடி மேலே ஏதேனும் வெயிட் வைத்து 15 நிமிடம் விடவும்.
அதன் பிறகு திறந்து பார்த்து கிளறிவிட்டு பார்த்தால் சாதம் வெந்திருக்கும்.உதிரியாகவும் இருக்கும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
இதே குக்கரில் வைத்தோமேயானால்,இதே போல் அரிசியை போட்டு கிளறிய பின் நன்கு தள தளவென்று கொதிக்கும் போது குக்கரை மூடி விடவேண்டும்.
நன்கு ஸ்டீம் வரும் போது வெயிட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 8 நிமிடம் கழித்து இறக்கவும்.ஸ்டீம் விட்டதும்,மூடியை திறந்து ஒரு முறை அடியிலிருந்து கிளறிவிட்டு வைத்தோமேயானால் சாதம் உதிரியாக இருக்கும்.


இத்தோடு மீன்குழம்பும்,மீன் பொறித்தும்,ஒரு கீரை அல்லது ஏதேனும் காய் கூட்டோ வைத்து அப்பளமும் சேர்த்து சாப்பிட்டோமேயானால் சாப்பாடு செல்வதே தெரியாது.அவ்வளவு ருசியாக இருக்கும்.
கோழி,கறி குழம்பும் நன்றாகவே இருக்கும்.சைவம் எனில் பாசி பருப்பு சாம்பார் புளி அல்லது புதினா துவையல் காம்பினேஷன் அப்படியே அள்ளும்.


Wednesday, December 11, 2013

அவல் பாயாசம்

இது தமிழர் சமையலுக்காக செய்த ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகளுக்கு சத்தான அதே சமையம் கொஞ்சம் ரிச்சான பாயாசம்.



தேவையான பொருட்கள்

அவல்         -  ஒரு கப்
காய்ச்சிய பால் - அரை லிட்டர்
மில்க் மெய்ட்  - அரை டின்
சீனீ              -  கால் கப்
நெய்            -  இரண்டு தேக்கரண்டி
உப்பு            -  இனிப்பு எடுப்பதற்கு சிறிதளவு
முந்திரி,திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்   - 3
குங்குமப்பூ  -  சிறிதளவு

செய்முறை



அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி லேசாக சூடு வரும்போதே,உடைத்து வைத்திருக்கும் முந்திரியையும்,திராட்சையையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே நெய்யில் பொடித்து வைத்திருக்கும் அவலையும் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும்.(நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.)


நல்ல மணம் வந்ததும்,காய்ச்சிய பாலோடு ஒரு டம்ளர் தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.அவல் வெந்ததும் சீனியையும்,மில்க்மெய்டையும் சேர்த்து நன்கு கிளறி கொதித்ததும் ஏலக்காயை பொடித்து தூவி கிளறிவிடவும்.மிதமான தீயிலேயே  பாயாசம் ஒரு கொதி கொதித்ததும் வறுத்த முந்திரி திராட்சை,குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.ஆறியதும் பறிமாறவும்.ஃபிரிட்ஜில் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.



மிகவும் கெட்டியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.அப்படி அவல் வேகும்போதே உங்களுக்கு தோன்றினால் இன்னும் சிறிது பாலையோ தண்ணீரையோ சேர்த்துக் கொள்ளவும்.ஏனென்றால் ஆறினால் பாயாசம் கெட்டி கொடுக்கும் அல்லவா...  

Tuesday, November 26, 2013

வாழைப்பூ வதக்கல்

இது நம் தமிழர் சமையலுக்காக செய்த ஸ்பெஷல்.பாரம்பரிய சமையலில் ஒன்று எனவும் சொல்லலாம்.மிகவும் சத்தான சமையல்.செய்வது எளிது...கூடுதல் சுவை மிக்கது.இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்

வாழைப்பூ.      - ஒன்று
முருங்கை இலை - குவியலாக ஒரு கப்
பெரிய வெங்காயம் (அ)
சிறிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
வாழைப்பூவினை ஆய்ந்து நறுக்கி மோரும்,உப்பும் கலந்த தண்ணீரில் போட்டு நன்கு பிசைந்து கழுவி வடிகட்டி விட்டு மீண்டும் மூன்று நான்கு முறை வேறு தண்ணீரில் கழுவி வடித்து வைக்கவும்.



ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வைக்கவும்.

பாதி வதங்கியதும்,தண்ணீர் வடித்த வாழைப்பூவினை சேர்த்து நன்கு பிரட்டி மிதமான தீயில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.
பிறகு வெந்ததா என் சரிபார்த்து விட்டு முருங்கை இலையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

பிறகு தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்துவிட்டு இறக்கவும்.இது எல்லாவிதமான சாதத்திற்கும் தொட்டு கொள்ள ஏற்ற பக்க உணவாகும்.மிகவும் சத்தானதும் கூட. 


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out