Thursday, March 3, 2011

உறவை புரிய ஒரு யுகம் வேண்டும்



அது காலை நேரம் 9 மணி .
 கணவருக்கான உணவை தயார்நிலையில் வைப்பதில் மும்முரமான வேலையில் இருந்து கொண்டிருந்தாள் கமலா.வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது.கணவரோ,மகனோ கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தாள்.மறுபடியும் இருமுறை மீண்டும் அழைப்பு மணி ஓசை ஒலிக்கவே…. “இங்கே வாசலில் யார் வந்திருக்காங்கன்னு கொஞ்சம் அப்பாவும்,பிள்ளையும் பார்க்கக் கூடாதா…நான் அடுக்களையில் வேலையாகதானே இருக்கின்றேன்.யார் வீட்டிலேயோ சத்தம் வர்ற மாதிரிதான் இருப்பீங்க…”என புலம்பிக் கொண்டே வாசலை நோக்கி சென்றாள்.கைய்யில் அட்ரஸை தேடியவாறு இருக்கும்  நிறைய கடித கவர்களை ஏந்திக் கொண்டு தபால் காரர் காத்துக் கொண்டிருந்தார்.
கமலாவின் தலை தெரிந்ததும் “அம்மா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குமா…இந்த பேப்பரில் கைய்யெழுத்து போட்டு கொண்டு கவரை வாங்கி கொள்ளுங்கள்.” என்றான்.

 “யார் பேர்ல பா வந்திருக்கு”என்றாள் கமலா. “நிதிஷ்குமார் உங்க பையன் தானே….?அவர் பேர்ல தான்மா வந்திருக்கு.”என்றான்.
“டேய்….நிதிஷ் உனக்குதாண்டா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு கைய்யெழுத்து போடனுமாம். வந்து வாங்கிக்க என்ன…”என்று கூறி விட்டு அடுக்களைக்குள் மறுபடியும் அவள் ஐக்கியமானாள்.

கைய்யெழுத்து போட்டு விட்டு தபாலை கைய்யில் வாங்கி பார்த்த நிதிஷ் முக மலர்ச்சியுடன் அம்மாவை நோக்கி சென்றான்.உரத்த குரலில் “அம்மா….இது என்ன தெரியுமா..?என் தலையெழுத்தையே மாற்றக் கூடிய கருவிமா” …..என்றவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
“ புரியவில்லையா அம்மா…? போன வாரம் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்வியூ முடிச்சுட்டு வந்தேன் தெரியுமா?அங்கிருந்துதான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு. இன்னும் இரண்டு நாளில் வந்து வேலையில் சேரும்படி சொல்லி இருக்காங்கம்மா.என்னமோ அப்பா அன்னைக்கு சவால் எல்லாம் விட்டாரே.உன்னால ஒருவேளை சாப்பாடு போட முடியுமா…?உன்னை கட்டிக்கிட்டு வர்றவளுக்கு ஒரு முழம் பூ வாங்க முடியுமான்னு? ஆச்சு,பூச்சுன்னு சத்தம் போட்டாரே.இப்ப பார்த்தியாம்மா மாசம் பொறந்தா அய்யாவுக்கு முப்பதாயிரம் சம்பளம் கைய்யில் வந்திடும்.அவரு என்னைக்காவது இந்த லெவலுக்கு வந்திருக்காரா….?
உன் புருஷனிடம் கொடுத்த சவால்ல ஜெயிச்சுட்டேன்மா” என்று அவன் அப்பா இருக்கும் இடத்தை ஓரக்கண்ணில் பார்த்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்.இதை கேட்ட கமலாவிற்க்கு மகனுக்கு வேலை கிடைத்து விட்டதே என்று சந்தோஷப்படுவதா…..இல்லை அப்பாவும் ,பிள்ளையும் எலியும் பூனையுமாக இருக்கின்றார்களே என்று நினைத்து வருத்தப்படுவதா என்று புரியவில்லை.இருப்பினும்,மகனின் தலையை கோதியவாறு “ ரொம்ப சந்தோஷமாக இருக்கு நிதிஷ்.உனக்கு என்னடா குறைச்சல் நீ நல்லா வருவேடா”என்று சொன்னாள்.

காதில் வாங்கியும் வாங்காததுபோல் அலுவலகத்திற்க்கு தயார் நிலையில் வந்த ராஜாராமன் “கமலா நேரம் ஆச்சு அங்கே என்ன செய்துகிட்டு இருக்க? டிபன் ரெடியா?நான் சாப்பிட்டு சீக்கிரம் போகணும்”என்று குரல் கொடுத்தார். “இதோ வந்துட்டேங்க”…. என்று குரல் கொடுத்தவாறு டிபனையும் சாப்பிட மேசையில் வைத்து விட்டு மதியத்திற்க்கான சாப்பாடை பைய்யில் வைத்து கொடுத்தாள்.டிபனை முடித்துவிட்டு “நான் போய் வருகிறேன் கமலா”என்று சொல்லி விட்டு TVS 50 யில் வெளியேறினார்.

அவர் தலை மறந்ததும் “ஏண்டா நிதிஷ் அப்பாவிடம் வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல கூடாதா?எவ்வளவு சந்தோஷம் படுவாரு தெரியுமா…. .அவர் உன்னை பெத்தவர்டா  அவர்ட்ட ஈகோ பார்க்கலாமா…?என்று கமலா சொல்லவும்,,,, தாமதிக்காமல் “நீ சும்மா இருமா நான் வேகமாதானே உன்னிடம் சொல்லி கொண்டிருந்தேன்.அது காதுல விழாமலா இருந்திருக்கும்.ஒரு வார்த்தை இதை பத்தி என்னிடம் வேண்டாம்……உன்னிடாமாவது கேட்டு இருக்கலாம்தானே. அதுவும் அன்னைக்கு அப்பா என்ன சொன்னார்?நாலு பேரோட ஊர் சுத்திக்கிட்டு இருப்பதால் என்ன பயன்னு கேட்டாரே….அதுல ஒருத்தனால கிடச்சதுதான் இந்த சூப்பரான வேலை.அதெல்லாம் அவருக்கு எங்கே தெரிய போகின்றது.”என்றான்.

கமலா நிறைய மனதை விட்டு மகனிடம் பல விளக்கங்களும்,விஷயங்களும் சொல்ல வாய் வந்தாலும் அதை காது கொடுத்து கேட்க்கும் மனநிலையில் மகன் இல்லை என்பதை அறிவாள்.அதுவும் இன்றி, கணவரின் சொல்லிற்க்கு கட்டுப்பட்டவாரு அவற்றை அடக்கி கொண்டு, “சரி நிதிஷ் போனது போகட்டும்.இனி சென்னையில் போய் நல்ல விதமாய் வேலை பார்க்க போகிறாய். இரவு அவர் வந்ததும் கோபமா இல்லாம சாந்தமா அப்பாவிடம் இந்த வேலை மற்றும் விபரம் எல்லாம் சொல்லணும் என்ன சரியா?”என்று கமலா கேட்டு கொண்டாள். “ப்ச்ச்….சரிம்மா சொல்லுகிறேன் போதுமா….?பசிக்குது டிபன் எடுத்து   வை” என்று நண்பர்களிடம் விஷயத்தை சொல்ல செல்ஃபோனை தட்டியவாறு நாற்காலியில் உட்கார்ந்தான்.

அலுவலகம் போகும் வழியில் இருக்கும் சின்ன பூங்கா வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தன் சட்டை பைய்யில் இருக்கும் செல்ஃபோனை எடுத்து நம்பரை அழுத்தி காதில் வைத்து காத்து கொண்டிருந்தார்.மணி அடித்து ஃபோனும் எடுக்கப்பட்டது.
 “ஹலோ…நான் தான் ராஜாராமன் பேசுகிறேன்…செந்தில்நாதன்தானே பேசுறது..”  “.டேய் ராஜாராமா எப்படி இருக்கே டா…?உன் அழைப்புக்காகதான் காத்துக் கொண்டிருந்தேன்.என்ன உன் மகனுக்கு லட்டர் வந்ததா உனக்கு இப்ப சந்தோஷம்தானே…?” “ம்…ரொம்ப சந்தோஷம் செந்தில் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல…சந்தோஷத்துல பேச்சே வர மாட்டேங்குது.பொண்ணை நல்லபடியாக கட்டி கொடுத்தேன்.பையன் பொறுப்பே இல்லாம இருக்கானே அவன் எதிர்காலம் என்னாகுமோன்னு கவலைபடாத நாளேயில்லை….இப்ப நீ செய்து இருக்கின்ற உதவிக்கு…..”என்று சொல்லும் போதே கண் கலங்கி கொண்டு நின்றது.வார்த்தைகள் வர மறுத்தன. 

“என்ன ராஜாராமா இப்படி சொல்லுற உன்னை விடவா நான் செய்துட்டேன்.நாம படிக்கும் காலத்தில் நம் வகுப்பில் முதலாம் இடத்தில் இருக்கும் உனக்கு மேற்படிப்புக்காக கிடைத்த அரசாங்க வாய்ப்பினை எனக்காக என் குடும்ப சூழ்நிலை கருதி விட்டு கொடுத்தியே அதற்க்கு இது ஒன்றுமே இல்லையடா…..அன்று நீ செய்ததுதான் இந்த அளவிற்க்கு ஒரு கம்பெனியின் தலைமை அதிகாரியாக இருக்க முடிகின்றது.ஆனால் நீயோ இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்டாக கஷ்ட்டபட்டு கொண்டு இருக்கின்றாய்.அது எனக்கு இன்று வரை உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது.நல்ல வேளையாக என்றும் இல்லாமல் யாரிடமும் உனக்காக உதவி கேட்காத நீ உன் மகனுக்காக கேட்க்கும் போது அதை நான் எப்படி மறுப்பேன்.அதுவும் நல்ல படிப்பையும் உன் மகனுக்கு கொடுத்திருக்கின்றாய்.அதுவும் நீ சொன்ன படி  உன் பையனின் நண்பனின் மூலமாக வேலை கிடைக்கணும்னு கேட்டு கொண்டதால்,நீ கொடுத்த மெயில் முகவரியிலேயே வேலை தேடுதலுக்கான இணையத்தளத்தின் வாயிலாக அவனுக்கு இண்டர்வியூ கார்டை அனுப்பினேன். அதற்க்கேற்றார் போல் தான் வேலையும் கொடுத்துள்ளேன்.அதற்க்கான திறமையும்,வேகமும் உன் பையனிடம் நிறையவே இருக்கின்றது.உனக்கு என்னால இப்படி ஏதும் செய்யும் வாய்ப்பு கிடத்ததேன்னு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்.இனி கவலை படாமல் இரு ராஜாராமா….என்ன நீ செய்த தியாகத்தை பற்றி உன் மகனிடம் பெருமையாக சொல்ல முடியவில்லை.
 இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லிட்ட. இனி உன் மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை படாதே..…?நேரம் கிடைக்கும் போது சென்னைக்கு வந்து வி்ட்டு போ என்ன….”என்று செந்தில் சொல்ல மறுபடியும் தன் நன்றியை ஒருமுறை தெரிவித்து  விட்டு தொலை தொடர்பை துண்டித்துவிட்டு, “வீட்டிற்க்கு செல்லும்  போது ஏதும் இனிப்பு வாங்கி செல்ல வேண்டும்.கமலாவிற்க்கு இப்போதாவது நாம் நடந்து கொண்டதற்க்கு அர்த்தம் புரிந்திருக்கும்.அது போதும் என்று நினைத்துக் கொண்டே….அலுவலகம் நோக்கி ராஜாராமன் சென்றார் சந்தோஷத்தோடு.

3 comments:

Asiya Omar said...

நல்ல கதை,தொடர்ந்து எழுதுங்கள்.ஒரு சில குழந்தைகள் அப்பாவை புரிந்து கொள்வதில்லை.என்ன செய்ய,அவர்கள் அதே ஸ்தானத்திற்கு வரும் பொழுது புரியும்.உயிரோட்டமான கதை.

apsara-illam said...

தங்கள் கருத்தை கண்டு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
மிக்க நன்றி ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

கோமதி அரசு said...

அருமையான கதை.
தன்னலம் கருதா தந்தையின் பாசம் அருமை.
அப்பவின் பாசத்தை மகன் புரியும் காலம் வரும்.
வாழ்த்துக்கள்.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out