Thursday, February 24, 2011

பெற்றோர்,பிள்ளைகளின் நிலை???

ஸாதிகா அக்கா அவர்களுடைய *** பெற்ற மனம் பித்து *** எனும் கவிதையை படித்ததும்,எனக்கு நீண்ட நாட்களாக மனதில் உதித்த விஷயம் இன்னும் ஆழமாக நிற்க்க ஆரம்பித்துவிட்டது.அவற்றை உங்களோடு பகிர்ந்தால் தான் என்ன? என்று நினைத்தே வந்தேன்.ஏதேனும் தவறாக எழுதியிருப்பின் சுட்டிக்காட்டவும்.

 
ஸாதிகா அக்கா தாயின் சிறப்பையும் சொல்லி இத்தனை பாசமாக மற்றவர்களுக்கு இடையே வளர்த்த மகனே தன்னை பிரச்சனை என்று நினைக்கும் காலத்தை சொல்லியிருப்பது சில இடங்களில் நடப்பதே....
இது இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் வேதனை மிக்க விஷயம் என்பது ஒரு பக்கம் இருப்பினும்,பலவித சூழ்நிலைகளால் பல பெற்றோர்கள் தனிமையில் இருப்பதும் மற்றொரு நிலை.
அவர்களின் மகன்கள் அதிக பாசத்துடனும்,.அக்கறையுடனும் இருப்பார்கள்.மருமகளும் அதே போல் அதிக அக்கறையுடனும்,பாசத்துடன் இருப்பாள்.இப்படி இருப்பினும் இவர்கள் சேர்ந்து வாழமுடியாத  சூழ்நிலை.. ஏன் என்கிறீர்களா...?வெளிநாட்டில் மகன்கள் பிழைப்பிற்க்காக குடியேறி மனைவி,குழந்தைகளுடன் வாழும் நிலையே அதற்க்கு காரணம்.வருடத்திற்க்கு ஒரு முறை பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் இருந்துவிட்டு போவதோ... அல்லது பெற்றொர்களை முடிந்த போது வெளிநாட்டிற்க்கு வரவழைத்து ஒரு மாதமோ,அதற்க்கு மேலோ அவரவர் விருப்பம்போல் இருந்து விட்டு செல்வதுமே இருந்து கொண்டிருப்பது இன்றைய நடைமுறையின் சூழ்நிலை.இதில் பார்த்தீர்களேயானால் அவர்களிடையே நல்ல சுமூகமான உறவுகள்,கலந்துரையாடல்கள் என இருந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டி மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் மகனுக்கு  “அம்மா,அப்பா தனிமையாக இருக்கின்றார்களே...” என்ற கவலையும், “நாமும் பேரன்,பேத்திகளிஉடன் இந்த வயதான காலத்தை தள்ள மாட்டோமா...” என்று பெற்றொர்களின் வருத்தமும் இல்லாமல் இருப்பதில்லை.இது மனித இயல்பு.ஏன் இந்த நிலை...? “சொந்த நாட்டில் இருந்து கொண்டு ஏதோ ஒரு வேலையில் இருந்து கொண்டு எல்லொரும் ஒன்றாக இருந்தால் என்ன?”இது சிலர் ஆங்காங்கே எழுப்பப்படும் கேள்வி.இதற்க்கு பலவிதமான காரணங்களை நாம் சொல்ல முடியும். மகன் அவசரஅவசரமாக படித்து முடித்து விட்டு குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு சீக்கிரம் நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இருந்து கொண்டிருக்க அவர்கள் படிப்பிற்க்கு ஏற்றவாறு அவர்களின் வேலை பார்த்த கம்பெனியின் மூலமாக வெளிநாட்டிற்க்கு மாற்றுதலாகும் வாய்ப்போ..அல்லது நேரடியாக வெளிநாட்டில்வேலை கிடைத்து போவது என்று நடக்கும்.அவர்களும் ஒரு வருடத்திற்க்குள் நன்கு செட்டிலாகி குடும்பம் நல்ல நிலைக்கு திரும்பும்போது கல்யாணம் முடிந்துவிடும்.நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளத்தோடு அல்லாமல் குடும்பத்தோடு இருப்பதற்க்கான விசா சலுகை,மருத்துவ சலுகை,இன்னும் அதிக பச்சம் போனால் வீடு,குழந்தைகள் படிப்பு என சலுகைகள் வெளிநாட்டில் இருக்க அவர்கள் அங்கே குடும்பத்தோடு அழுத்தமாக தங்கி விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பெற்றொர்களும் தங்கும் படி இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் தங்குவது என்பது அவர்களை கஷ்ட்டத்திற்க்குள்ளாக்கி விடுகின்றது.அப்படியும் சிலர் தன் மகனும்,மருமகளும் வேலைக்கு சென்று விடுகிறார்கள் பேரன் பேத்திகளுக்கு துணையாக இருக்கின்றோம் எனவும் தியாகத்தோடு இருந்து விடுகின்றனர்.அதையும் நான் கண்கூடாக பார்க்கின்றேன்.
இவ்வளவு விளக்கமும் ஏன் சொல்கிறேன் என்றால் முதியோர் இல்லத்திற்க்கு செல்பவர்கள் மகனின்,மருமகளின் கொடுமைகள் என சொல்லும் காரணங்கள் ஒரு பக்கம் இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகளாலும் பலர் தன்னை தானே கவனிக்க முடியாத காரணத்தினால் இப்படி வந்து இருக்கின்றோம்.என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.இப்ப நான் சொன்னது இரண்டாம் நிலை.இதற்க்கு அடுத்தும்  ஒரு நிலை உள்ளது.அது என்ன என்கிறீர்களா...?
மகனை பெற்றவர்களை மகளுக்கு அப்புறம் மருமகள் என்ற உறவு ஆதரிப்பாள் என்பது நமது கலாச்சாரம்.அதே பெண்ணை மட்டும் பெற்றவர்களின் நிலை...? பெண்ணை மட்டுமே பெற்று விட்டு அவர்களை நல்ல படியாக கட்டி கொடுத்த பின்னர் தனிமையில் தள்ளபடுகிறார்களே.... அந்த சூழ்நிலையை என்னவென்று சொல்வது.மகள்,மருமகனோடு சில பெற்றோர்களோ இல்லை தாய் மட்டுமே இருப்பினும் இந்த சமுதாயம் அதை இன்னும் முழுமையாக திருப்தியுடன் பார்க்கின்றதா...? “ பொண்ணை கொடுத்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க கூடாது” என்பதையே ஒரு ஏட்டில் பதித்தவாறு அவரவர் மனதில் பதித்து வைத்துள்ளார்கள்.ஏன் ஒரு சில பெற்றோர்களே   ஊர்,உலகம் என்ன சொல்லும் என்பது போல் நினைத்து கொண்டு கஷ்ட்டமோ,நஷ்ட்டமோ தனிமையிலேயே காலத்தை தள்ளுவார்கள்.மகள்களோ திருமணத்திற்க்கு முன் இருந்த படி திருமணத்திற்க்கு பின் அம்மா வீட்டிற்க்கு வந்து தங்கி பார்த்து கொள்ள முடியாது.அவளுடைய முதல் முக்கியத்துவம் தன் கணவருடைய வீட்டினருக்காக என ஆகிவிடும்.இது என்னவோ காலம்,காலமாக நடந்து வரும் விஷயம்.இதில் யாரும் யாரையும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.குழந்தையிலிருந்து பெண் பிள்ளைகளை  நம் பெற்றோர்களே சொல்லி வளர்ப்பது அப்படி.அது நம் ரத்தத்திலேயே ஊறிவிடுகின்றது.எனவே பெண் பிள்ளைகள் விஷெசங்களிலும்,அவ்வபோது நேரம் கிடைக்கும் போது அம்மா,அப்பாவிற்க்கு முடிந்த உதவிகளை செய்து விட்டு வருவதோடு சரி... “இன்னும் இரண்டு நாள் தங்கிட்டு போயேம்மா...” என்று பெற்றோர்கள் சொன்னாலும், “இல்லைமா பிள்ளைங்க ஸ்கூல் இருக்கு,மாமியார் தனியாக இருப்பாங்க வேலைகளெல்லாம் இருக்குமா..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவோம்.அப்போது பெற்றோர்களுக்கும்,மகளுக்கும் இடையே ஏற்படும் மனநிலை எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்... அதிக அளவில் பாசங்கள் மகனாக இருந்தாலும்,மகளாக இருந்தாலும் சரி பெற்றோர்களிடையே வைத்திருப்பினும் சந்தர்ப்பங்களாலும்,சூழ்நிலைகளாலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இன்று அதிகமாக காணப்படுகின்றது.

இந்த அவசர உலகத்தில் எதையுமே வெளிகாட்டி கொள்ளகூட முடியாமல் வாழ்ந்து வருவதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
குடும்ப சூழ்நிலையை கருதி பல ஆண்மகன்கள் சம்பாதிக்க வெளிநாட்டிற்க்கு வந்து உறவுகள்,சில விஷேசக்காலங்கள்,சின்ன சின்ன சந்தோஷங்கள் என எல்லாவற்றையுமே மனதிற்க்குள் பூட்டி இயந்திர வாழ்க்கையாக வாழ்ந்து தியாகம் செய்கிறார்களே அதை நினைத்து வருத்தப்படுவதா?நாம் வாழ்ந்து முடித்து விட்டோம் நம் பிள்ளைகளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெற்றோர்கள் தியாகம் செய்து மருமகள்,பேரன்,பேத்திகளை விட்டு தனிமையில் இருக்கின்றார்களே... அதை சொல்வதா...?பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி அவள் நன்றாக வாழ்ந்தால் போதும் கஞ்சியோ...கீரையோ... நம்ம வீட்டிலேயே முடிந்ததை செய்து வாழலாம் புகுந்த வீட்டில் நம்மால் அவளுக்கு சங்கடம் வரக்கூடாது என எண்ணி தனித்து வாழ்பவர்களை சொல்வதா...?
பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பலருடைய வாழ்க்கையின் நிலை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் தான் உள்ளது.வெளியே பல சந்தோஷங்கள் இருப்பதுபோல் இருந்தாலும்,மனதிற்க்குள் வேதனைகள் யாருக்கும் இல்லாமல் இல்லை. 

இவற்றையெல்லாம் சற்றே நிதானமாக யோசித்து பார்த்தால் எல்லோரும் ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இதை நம்மில் யாரும் மறுக்க கூடுமா...?இதற்க்கு மாற்றம் வராதா...?இல்லை இன்னும் இதையும் தாண்டி காலம் செல்லுமா...? எல்லாவற்றிற்க்கும் இறைவன் போதுமானவன்.













10 comments:

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்க பக்கம் வரணும் வரணும் என்று நினைத்து முடியாமல், இப்போதான் வரமுடிந்தது அப்சரா! :) பிரிந்து வாழ்வதின் வருத்தங்களை எதேர்ச்சையான முறையில் கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

//“பொண்ணை கொடுத்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க கூடாது” என்பதையே ஒரு ஏட்டில் பதித்தவாறு அவரவர் மனதில் பதித்து வைத்துள்ளார்கள்//

இது எங்க பக்கமெல்லாம் கிடையாது அப்சரா. நாட்டுப் புறங்களில்தான் இந்த தத்துவமெல்லாம்! அதனால்தான் நாட்டுப் புறத்து மருமகளாக இருந்தாலும் பட்டிணத்துப் பெண்(என்)ணிடம் அது பலிக்கவில்லை ;) அங்கு 10 நாட்கள், இங்கு 10 நாட்கள்; இங்கு 1 மாதம் என்றால் அங்கும் 1 மாதம்! தேவை நாட்களில் மற்றும் உடல் நலக்குறைவு எங்கு ஏற்படுகிறதோ அங்கு ஓவர்டைம் பார்த்துக் கொள்வது :) இரண்டு வீட்டாரையும் கவனித்தது மாதிரி ஆகிடுச்சு. இது எப்பூடி இருக்கு..? :))

//இதற்க்கு மாற்றம் வராதா...?இல்லை இன்னும் இதையும் தாண்டி காலம் செல்லுமா...?//

இதற்கெல்லாம் மாற்றம் என்பது முதலில் மனதில்தான் வரவேண்டும். எழுதப்படாத ஒரு சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகணும் என்று நினைப்பவர்கள் இதில் எந்த மாற்றத்தையும் காணமுடியாது. சின்ன சின்ன எதிர்வலைகள் கிடைத்தாலும் துணிந்து சமாளித்து, அதேசமயம் அதை சரிபடுத்தும் வகையில் சமயோஜிதமாக நடந்துக் கொண்டால், கண்டிப்பாக மாற்றம் என்பது சுலபமே இன்ஷா அல்லாஹ்!

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் அஸ்மா...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது போல் அவரவர் மனதில் மாற்றங்கள் வந்தாலே எல்லாம் நன்றாக அமையும் என்பது சரியே... ஆனால் நான் சொல்ல வந்தது சூழ்நிலைகள் காரணமாக பெற்றவர்களுடன் போய் மகள்கள் தங்க முடிவதில்லை.காரணம் பிள்ளைகளின் ஸ்கூல் விஷயமே எடுத்து கொள்ளுங்களேன்.அவர்கள் செல்லும் ஸ்கூல் புகுந்த வீட்டிலிருந்து போகும் வழியாக இருக்கும் போது எப்படி அவர்களால் நினைத்த நேரத்தில் போய் பெற்றொர்களுடன் தங்க முடியும் என்று சொல்லுங்கள்.ஒரே ஊர்,பக்கத்து ஊர் என்று இரு வீடும் இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே.... ஆனால் இது வேறு வழி, அது வேறு வழி என்றிருப்பின் எப்படி இது சாத்தியமாகும்?பெற்றோர்கள் தான் நம் வீட்டில் தங்கலாம்.ஆனால் அதற்க்கு நம் பெற்றோர்களே தயாராக இருப்பதில்லை என்றே சொல்லியிருக்கின்றேன்.அது காலம் காலமாக நமது ரத்தங்களில் ஊறிபோய்விட்டது.
சரி அப்படியே.., நாம் நமது பெற்றோர்களுக்குக்காக அந்த பக்கம் இருக்கும் ஸ்கூலில் சேர்த்து விட்டு தங்கி விட்டோம் என்றால் நாம் மாமியாருக்கு செய்ய வேண்டிய கடமை என்று உள்ளதே... அதை எப்போது செய்வது?அதன் குற்ற உணர்வு நம் மனதை உருத்தி கொண்டு இருக்குமல்லவா...?
பெற்ற தாய் தகப்பனை விட்டு மாமியார் வீட்டில் அதிக நாட்கள் இருந்து கொண்டால் இந்த ஊர் ஒன்றும் சொல்லாது.ஆனால் அதே நான் பிள்ளையை ஸ்கூலில் சேர்த்து விட்டேன் இனி இங்குதான் இருப்பேன் என அம்மா,அத்தாவுடன் இருந்து விட்டோம் என்றால் அதை கேவலமாக தான் பேசுவார்கள்.நம் கணவர்களுக்கே மிகுந்த கெட்ட பெயரினை ஏற்படுத்தி விடும். இதையெல்லாம் மனதில் கொண்டுதான் நாம் சில தியாகங்களை மேற்கொண்டு நாம் நமது மாமியாரை அம்மாவை போல் பார்த்து கொண்டால் நமது அம்மாவும் நன்றாகவே இருப்பார்கள் என ஒவ்வொரு பெண்ணும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் தான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என இருக்க வேண்டியுள்ளது என கூறினேன்.

இருப்பினும் தங்களுடைய கருத்துக்கும் நன்றி அஸ்மா...

அன்புடன்,
அப்சரா.

அஸ்மா said...

//நான் சொல்ல வந்தது சூழ்நிலைகள் காரணமாக பெற்றவர்களுடன் போய் மகள்கள் தங்க முடிவதில்லை//

சூழ்நிலை என்பது பெற்றொர்களுடன் சேர்ந்து வாழ முடியாததில் மட்டுமில்லை அப்சரா! வாழ்க்கையில் எல்லாவற்றிற்குமே நமக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத சூழ்நிலையைப் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். ஆனால் என் கருத்துக்களை நான் பதிய வந்த காரணம்,

//“பொண்ணை கொடுத்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க கூடாது” என்பதையே ஒரு ஏட்டில் பதித்தவாறு அவரவர் மனதில் பதித்து வைத்துள்ளார்கள்//

என்று நீங்கள் சொன்னதால்தான், //இதற்கெல்லாம் மாற்றம் என்பது முதலில் மனதில்தான் வரவேண்டும். எழுதப்படாத ஒரு சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகணும் என்று நினைப்பவர்கள் இதில் எந்த மாற்றத்தையும் காணமுடியாது. சின்ன சின்ன எதிர்வலைகள் கிடைத்தாலும் துணிந்து சமாளித்து, அதேசமயம் அதை சரிபடுத்தும் வகையில் சமயோஜிதமாக நடந்துக் கொண்டால், கண்டிப்பாக மாற்றம் என்பது சுலபமே இன்ஷா அல்லாஹ்!// என்று என் அனுபவத்தைக் கருத்தாக கூறியிருந்தேன்.

//பெற்ற தாய் தகப்பனை விட்டு மாமியார் வீட்டில் அதிக நாட்கள் இருந்து கொண்டால் இந்த ஊர் ஒன்றும் சொல்லாது// ஊர் பேச்சை ஒதுக்கித் தள்ளி இஸ்லாம் சொல்லும் முறைப்படி நம் கடமைகளை இருவருக்கும் சரியாக செய்தாலே எல்லாமே சீராக அமையும் இன்ஷா அல்லாஹ்! :)

//நாம் மாமியாருக்கு செய்ய வேண்டிய கடமை என்று உள்ளதே... அதை எப்போது செய்வது?அதன் குற்ற உணர்வு நம் மனதை உருத்தி கொண்டு இருக்குமல்லவா...?//

இரண்டு பக்கமும்தான் நமக்கு கடமைகள் உள்ளது! ஸ்கூல், வேலை போன்ற சூழ்நிலைகள் நமக்கு தடங்கலாக இல்லாத பட்சத்தில் நான் ஏற்கனவே சொன்னதுபோல் இரண்டு வீடுகளிலும் மாறி மாறி தங்கி நம்மால் முடிந்த பணிவிடைகள் இரண்டு தரப்பிலும் செய்யலாம் அப்சரா.

நாட்டுப் புறங்களில் ஒரு மருமகள் சில இடங்களில் வேலைக்காரியாகவும் சில இடங்களில் அடிமைகள் போன்றும் ஆகிவிடும் அவலங்களை நேரில் பார்த்ததால் இவ்வளவு நேரம் மெனக்கெட்டு கருத்திடுகிறேன். அதே இரண்டு வீடுகளிலும் மாறி மாறி இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் வராது. (மருமகளை தன் பிள்ளைகளைப் போல் வைத்திருப்பவர்களைப்பற்றி பேசவில்லை) இங்குதான் இருந்தாக வேண்டும் என்று சட்டமாக செயல்படுத்தி பெண்களைக் கஷ்டப்படுத்துவதுதான் தவறு என்று சொல்ல வந்தேன். வேறொன்றும் இல்லமா :)

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,நான் சொன்னதில் ஏதும் தவறாக எடுத்து கொண்டீர்களா..என்ன?நீங்கள் சொல்வதை நான் தவறாக சொல்லவில்லை அஸ்மா... மாற்றமுடியாத மனநிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதைதான் சொன்னேன்.... உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகுந்த அர்த்தம் கொண்டவையே....
உங்களை போன்றவர்களீன் கருத்தும் பதியவேண்டும் என்றேதான் இந்த தலைப்பை பதித்துள்ளேன். எதையும் நல்வழியில் நடத்தி செல்ல எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் துணையாக இருப்பானாக....
என் மீது வருத்தம் உண்டெனில் மன்னிக்கவும்.

அன்புடன்,
அப்சரா.

Jose Ramon Santana Vazquez said...
This comment has been removed by a blog administrator.
அஸ்மா said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அட என்னமா.. இதில் வருத்தமெல்லாம் ஒன்றுமில்ல! என் கருத்தில் நீங்க வருத்தப்பட்டீர்கள் என்று நினைத்து நான் இரண்டாவதாக விளக்கம் சொல்ல, அதைப் பார்த்து நான் வருத்தப்பட்டதாக நீங்கள் நினைக்க.. சிரிப்புதான் போங்க! :)) மொத்தத்தில் பெண்களைக் கஷ்டப்படுத்தும் இன்னும் திருந்தாத சிலர் மீதுதான் வருத்தமே, நமக்குள் எதுவுமில்லமா.. போதுமா? :-)

(புரியாத பாஷையில் மேலே யாரோ கொடுத்துள்ள கமெண்ட்டை டெலிட் பண்ணிடுங்களேன் அப்சரா)

ஸ்ரீராம். said...

வாதங்களும் பின்னூட்டத்தில் பிரதிவாதகளும் மனதிலிருந்து வந்தது போல, நேரில் நின்று பேசுவது போல, மடைதிறந்த வெள்ளம் போல, எழுதி இருக்கிறீர்கள். பத்தி பிரித்து எழுதினால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்குமே... சென்னையில் சமீபத்தில் பெற்ற தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு அமெரிக்காவுக்கு கம்பி நீட்டிய மகனைப் பற்றி படித்த செய்தி நினைவுக்கு வருகிறது.

ஸ்ரீராம். said...

"ஏதேனும் தவறாக எழுதியிருப்பின் சுட்டிக்காட்டவும்."//

//"எனக்கு நீண்ட நாட்களாக மனதில் உதித்த விஷயம் இன்னும் ஆழமாக "நிற்க்க" ஆரம்பித்துவிட்டது"//

நிற்க என்றுதான் வரும்...நிற்க்க என்று வராது!!! நீங்கள் கருத்தில் பிழை இருந்தால் கேட்டீர்கள்...கேட்டதற்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று எழுத்தில் பிழை சுட்டினேன்!!

apsara-illam said...

தங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....
பிழையை சுட்டி கண்பித்ததற்க்கும் எனது முக்கியமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இனி தவறு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.
எழுத்துக்களையும் சரியான நடையில் எழுத முயற்ச்சிக்கிறேன்.
மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Asiya Omar said...

மடை திறந்த வெள்ளம் போல எழுத்துக்கள்,பாராட்டுக்கள் அப்சரா.தொடர்ந்து எழுதுங்க,எழுதுங்க..நல்ல பகிர்வும் கூட.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out