Saturday, March 12, 2011

என் மகளின் இசைத்திறன்

என் பிள்ளைகளின் ஓவியங்களை இதற்க்கு முன் என் இல்லத்தில் அரங்கேற்றினேன் அல்லவா...?அதே போல் இப்போது எனது மகளுக்கு கடந்த ஒரு வருடங்களாக ஏற்பட்டிருக்கும் இசை ஆர்வத்தினால் அவளாகவே ஸ்கூல் ரைம்ஸை இசை மூலம் முயன்று இசைத்து வருகிறாள்.மூத்த மகன் பிறந்து ஒரு வயதிருக்கும் போது என்று நினைக்கிறேன்.அப்போது ஏதோ ஒரு சூப்பர் மார்க்கேட்டின் இலவச கூப்பனால் என்ன வாங்குவதென்றே தெரியாமல் நாற்பது திர்ஹமுக்கு வாங்கிய கீ-போர்ட் அது.அதை அப்படியே கொஞ்ச நாள் தட்டிவிட்டு மேலே தூக்கி வைத்திருந்தேன்.சென்ற வருடம் தான் அவளுக்கு ஸ்கூல் டீச்சர் வாசிப்பதை பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தினால் அந்த கீ போர்டை எடுத்து தாங்கம்மா என்று கேட்டு வாங்கி வைத்து கொண்டு அவளாகவே வாசித்து வாசித்து கற்று கொண்டாள். எனது சின்ன மகன் டீச்சர் சொல்லி கொடுத்த ரைம்ஸை வீட்டில் வந்து பாடி கொண்டிருந்தான்.அதையும் அவள் விட்டு வைக்கவில்லை. அவனை திரும்ப திரும்ப பாட சொல்லி அதையும் அன்றே இசையாக வெளிகொண்டு வந்தாள். 
ஒரு நாள் அவள் எல்லா ரைம்ஸையும் பாடி வாசித்து கொண்டிருந்தபோது என்னவரை அதை வீடீயோவில் கவர் செய்யுங்கள் என்று சொன்னேன்.அவை முழுவதும் நிறைய நீளமுடன் இருப்பதால் குறிப்பிட்ட இந்த பாடலின் இசையை மட்டும்  இந்த வீடீயோ மூலம் வெளிப்படுத்தவே ஆசைப்பட்டேன்.அவளுக்கு இந்த ஆர்வம் ஒரு சில நாட்களுக்கு பிறகு மாறிவிடலாம்.குழந்தைகளே அப்படிதானே....?அவள் பெரியவளாக  ஆனதும் “நீ இப்படியெல்லாம் வாசித்திருக்க தெரியுமா?” என்று காட்டலாம் அல்லவா...? அதான் இந்த ஒரு சின்ன க்ளிக்.நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சரியா...?

 

Friday, March 11, 2011

மேத்தி புலாவ்


*** தேவையான பொருட்கள் ***

வெந்தயக்கீரை                          _   ஒரு சிறிய கட்டு
பாஸ்மதி அரிசி                         _     ஒரு டம்ளர்
வெங்காயம்                                _     ஒன்று
கேரட்(அரிந்தது)                        _      ஒரு மேசைக்கரண்டி
உதிரி கார்ன்                               _       ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது               _      ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய்                           _      இரண்டு
எண்ணெய்                                    _      4 தேக்கரண்டி
பட்டை                                           _      சிறு துண்டு
ஏலக்காய்                                      _      ஒன்று
கிராம்பு                                           _       இரண்டு
பிரிஞ்சி இலை                             _       கால் பகுதி

*** செய்முறை ***


வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த கார்னையும்,கேரட்டையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி விட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியையும் கழுவி விட்டு ஊறவித்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,பிரிஞ்சி இலை,ஏலக்காய்,கிராம்பு இவைகளை போட்டு தாளித்து அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் கேரட்,கார்ன்,பச்சை மிளகாய்  சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

வதங்கியதும்,கீரையை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
பின்,அரிசியை தண்ணீர் இல்லாமல் அதில் போட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து முக்கால் வாசி தண்ணீர் சுண்டும் நிலையில் குக்கரை மூடிவெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு வைக்கவும்.

சுவையான மேத்தி புலாவ் தயார்.
குழந்தைகளுக்கு கூட வெறும் கீரையை சமைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.அவர்களுக்கு இது போன்று சுவையாக செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.நமக்கும் சத்துள்ளதை தந்தோம் என்ற திருப்தி இருக்கும்.




Tuesday, March 8, 2011

சன்னா சால்னா...,


*** தேவையான பொருட்கள் *** 
வெள்ளை அல்லது 
காபூலி சன்னா         }                    _       அரை கப்
வெங்காயம்                                   _        ஒன்று
தக்காளி(சிறியதாக)                    _        ஒன்று  
பச்சைமிளகாய்                             _         ஒன்று  
இஞ்சி,பூண்டு விழுது                  _         ஒரு தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்                              _         ஒரு தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                                _         அரை தேக்கரண்டி
சோம்புத்தூள்                                  _         ஒரு தேக்கரண்டி
எண்ணெய்                                        _         6 தேக்கரண்டி
கறிவேப்பிலை                                _         ஒரு கொத்து
மல்லி,புதினா தழை                       _         சிறிதளவு

*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல்                      _     அரை கப்
முந்திரி                                              _     5
பட்டை                                               _     சிறியதுண்டு
கிராம்பு,ஏலக்காய்                           _     தலா ஒன்று 
மிளகுத்தூள்                                     _     ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள்                                          _     ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள்                                     _     இரண்டு தேக்கரண்டி

*** செய்முறை ***

சன்னாவை நன்கு ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை,மல்லி,புதினா தழைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதங்க விடவும்.

அதன் பின் தூள் வகைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறியிருக்கும் சன்னாவை தண்ணீர் இல்லாமல் போட்டு நன்கு கிளறி மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.

அதற்க்கிடையில் அரைக்க கொடுத்தவைகளை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.

ஐந்து நிமிடம் கழித்து வதங்கிய சன்னாவோடு அரைத்தவைகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது அடுப்பில் வைத்து இறக்கினால் மினுமினுப்பாக இருக்கும்.(கட்டாயம் இல்லை) 
 இதை பரோட்டா,சப்பாத்தி பூரி இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

### குறிப்பு ### 
இதில் இன்னொரு முறையும் செய்வதுண்டு.முந்திரியையும் தவிர்த்து தேங்காயையும் குறைத்து கொண்டு வேர்க்கடலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொண்டு எல்லாவற்றையும் சிறிது வதக்கி அரைத்தும் ஊற்றலாம்.இது டயட்டானவர்களுக்குன்னு செய்யலாம்.டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.









Monday, March 7, 2011

பேரிச்சை,மாங்காய் பச்சடி


*** தேவையான பொருட்கள் ***

பேரிச்சை பழம்                                _        5
மாங்காய் சீவியது                          _       கால் கப்
கேரட்     நறுக்கியது                       _       ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது                    _       கால் தேக்கரண்டி
வெங்காயம்                                      _       ஒன்று
தக்காளி சிறியதாக                        _       ஒன்று
பச்சைமிளகாய்                                _       ஒன்று
இஞ்சி                                                  _       சிறிய துண்டு
பூண்டு                                                  _       2 பல்
புளி                                                       _      நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள்                                  _     1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                                    _      1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்                                           _       1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                                       _      1/2 தேக்கரண்டி
தேங்காய் விழுது அல்லது
தேங்காய் பால் பவுடர்       }            _      1 தேக்கரண்டி
சீனீ                                                         _      1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்                                _     5 தேக்கரண்டி
கடுகு                                                      _     ஒரு ஸ்பூன்\
கறிவேப்பிலை                                   _      ஒரு கொத்து          

 *** செய்முறை ***


பேரிச்சம்பழத்தை கழுவி விட்டு விதையை நீக்கி விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே தண்ணீரில் புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி,பூண்டையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு பேரிச்சைபழத்தையும்,மாங்காய்,கேரட்டையும் சேர்த்து மிதமான தீயில் கிளறி இரண்டு நிமிடம் அப்படியே வதங்க விடவும்.

அதற்க்குள் புளியை கரைத்து வடித்த தண்ணீரில் மல்லி,சீரகத்தூள்,தேங்காய் விழுது அல்லது பவுடர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வதங்கியவற்றில் கரைத்து வைத்துள்ளவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்தித்து சுண்டும் நிலையில் இருக்கும் போது குறைந்த தீயில் வைத்து சீனியை தூவி கிளறி வைக்கவும்.
சிறிது நேரம் வைத்திருந்தால் எண்ணெய் மினுமினுப்போடு பிரண்டு இருக்கும்.அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

பிரியாணி,நெய் சோறு காம்பினேஷனுக்கு பொருத்தமான பக்க உணவாக இருக்கும்.
இதே செய்முறையில் வெறும் மாங்காயிலும் செய்யலாம்.வெறும் பேரிச்சைபழத்திலும் என தனி தனியே செய்யலாம்.வெறும் பேரிச்சை பழத்தில் செய்யும் குறிப்பைதான் முதன் முதலாக அறுசுவைக்கு படத்துடன் கூடிய குறிப்பில் அனுப்பி வைத்தேன்.
அதை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்.























                                              

Sunday, March 6, 2011

வெள்ளை மட்டன் குருமா..,


எங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...
அதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை  மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குறிப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.


*** தேவையான பொருட்கள் ***


மட்டன்                     _         முக்கால் கிலோ
தயிர்                          _         முக்கால் கப்
வெங்காயம்             _         பெரியதாக ஒன்று
தக்காளி                    _          அரிந்தது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்      _         மூன்று
பட்டை                       _         இரண்டு இன்ச் அளவு
ஏலக்காய்                  _         ஒன்று
மல்லி,புதினா தழை _      சிறிதளவு
எண்ணெய்                  _       5 தேக்கரண்டி
நெய்                              _       2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்            _       முன்று சிட்டிகை
எலுமிச்சை பழம்       _      ஒன்று

*** அரைத்து கொள்ள ***
 தேங்காய்த்துருவல்    _    அரை கப்
வெள்ளை மிளகுத்தூள் _   4 தேக்கரண்டி
முந்திரி                             _    10
பாதாம்                               _   15

*** செய்முறை ***  


மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.

பிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.


சுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.

 இதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.




Saturday, March 5, 2011

வாழைக்காய் வறுவல்


தேவையான பொருட்கள்

வாழைக்காய்                         _        இரண்டு
மிளகாய்த்தூள்                      _        ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                        _           கால் தேக்கரண்டி
சோம்புத்தூள்                         _          அரைத்தேக்கரண்டி
உப்பு                                          _           தேவையான அளவு
எண்ணெய்                               _          நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை                       _         ஒரு கொத்து

*** செய்முறை ***
வாழைக்காயை தோல் நீக்கி விட்டு கழுவி கொஞ்சம் தடிமனாக வட்ட வடிவில் அரிந்து வைத்து கொள்ளவும்.

ஒரு அகல வானலியில் அதை வேக வைக்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து உப்பு சிறிதும் சேர்த்து வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும்,வடித்து விட்டு ஒரு தட்டில் தூள் வகைகள்,உப்பும் (வேக வைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து சிறிதளவு சேர்க்கவும்)சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி இந்த வாழைக்காயை அதில் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைக்கவும்.

பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இந்த பிரட்டிய வாழைக்காயை பரவலாக வைத்து இரண்டு பக்கமும் நன்கு வறுபடும்படி செய்து எடுத்து விடவும்.

தயிர்,ரசம்,சாம்பார் சாதத்திற்க்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.இதை வறுக்கும் போது கறுப்பு உளுந்து குருணையை தூவி வாழைக்காயின் எல்லா இடமும் படும்படி பிரட்டி வறுத்து எடுத்தால் மிகவும் வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கும்.ஊரில் கருப்பு உளுந்து குருணை என்றே வைத்திருப்பார்கள்.இங்கு நான் வைத்திருக்கவில்லை.எனவே இந்த செய்முறையில் அது இல்லை.
இது நமது ஊர்களில் கிடைக்கும் மொந்தன் வாழைக்காயில் செய்தால் தான் மிகவும் நன்றாக இருக்கும்.வெளிநாடுகளில் கிடைக்கும் நேந்திர காய் போன்றவைகளில் செய்தால் நன்றாக வராது.சவுக் சவுக்கென்று இருக்கும்.




Friday, March 4, 2011

கொலஸ்ட்ரால் பற்றி அறிவோமா...




கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?

 

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)



கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.



கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.





எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.





கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .




இதுவரை நீங்கள் படித்தது எனக்கு தோழி மூலமாக மெயிலில் வந்தது.அதையும் தவிர்த்து இன்னொரு விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
முடிந்த அளவிற்க்கு டென்ஷனை தவிர்த்து கொள்வது நல்லது.இன்றையை சூழலில்,அதுவும் ஐ.டி துறையில் உள்ளவர்களுக்கு இது கஷ்ட்டமான விஷயம்தான்.ஆனால் அது மனிதனின் உடலில் பல கோளாறுகளையல்லாவா ஏற்படுத்துகின்றது.முடிந்த வரை குறைத்து கொள்ளவேண்டும்.
மனதை அமைதிபடுத்ததான் ஆசனங்கள்,தியானம் என்ற முறையை கைய்யாள மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
சிலர் என்னதான் கட்டுபாடும்,உடற்பயிற்ச்சியும் மேற்கொண்டாலும்,ஜெனிடிக்(குடும்ப வாகு)மூலம் அது இருந்து கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அப்படி போன்றவர்கள் ஒமேகா _ 3 வகை மாத்திரையை உபயோகபடுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு விஷயமும் ஆதாரம் இல்லாமலோ,அனுபவம் இல்லாமலோ சொல்லவில்லை.எனது கணவருக்கும் இந்த பிரச்சனை உண்டு.தொடர்ந்து மருந்து உபயோகப்படுத்தியும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும் முற்றிலும் குறைந்த பாடில்லை.அது எனது மாமனாருக்கு இருந்ததால் இவருக்கும் இருந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.தகுந்த 
ஆலோசனைபடியே இந்த ஒமேகா- 3 மருந்தை கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகின்றார்.அதனால் தான் இந்த பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் எல்லோருக்கும் நோய் நொடியற்ற வாழ்வை தருவானாக....

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out