Sunday, December 4, 2011

மார்க்க கேள்வி-பதில்கள்










இஸ்லாம் மார்க்கம் போன்ற ஒர் எளிய மார்க்கம் ஏதும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனாலும் அதில் நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன... நாமறிந்து கொள்வதோடு அல்லாமல் நம் பிள்ளைகளுக்கும் சொல்லிகொடுத்து அவர்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.... அதை மனதிற்க் கொண்டே எனது மைத்துனர் வழக்கம்போல் எங்கள் ஊர்களில் நடக்கும் பெருநாள் போட்டியில் இந்த வருடம் மார்க்க வினா விடை என்ற ஒரு பகுதியையும் இணைத்தார்.அதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  யார் வேண்டுமாயினும் கலந்துக் கொண்டு தங்களுக்கு தெரிந்தவைகளுக்கு விளக்கம் அளிக்கலாம் என்று ஒரு ஐம்பது கேள்விகளை தயார் நிலையில் அச்சிட்டு முன்னதாகவே எல்லோருக்கு அளித்து விட்டார்.
அதில் கலந்து பெரும்பாலும் பதில் அளீப்பவர்களுக்கு சில நூறு தொகைகள் பரிசாக தானே வழங்குவதாகவும் அறிவித்தார்.அதே போன்று மிகவும் சிறப்பாக நடத்தினார். அவை எல்லாமே மிகவும் முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய கேள்வி பதில்கள்.அவரும்,அவர் மனைவியும் (அவர் ஒரு முஹல்லிமா)சேர்ந்தே குரான்,ஹதீஸை கொண்டு தயார் படுத்தியது.
அவற்றில் பாகம்-1 ஆக பாதியை தருகின்றேன்.இதை நாம் நம் வீட்டிலேயே ஒருவரையொருவர் கேட்டு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.தெரிந்தவர்களுக்கு இது சின்ன விஷயம்... தெரியாதவர்களுக்கு இது அறிய வேண்டிய விஷயம் இல்லையா....?







Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்

Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.

Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாகபிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போதுஎங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில்உள்ளது.

Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன்கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன்அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்

Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா

Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)

Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல்ஜின்னு(72:10)

Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்

Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில்உள்ளது. (19:52)

Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம்பெற்றுள்ளது.

Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது எனகுர்ஆன் கூறுகிறது?
A) கஃபா

Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில்இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

இன்ஷா அல்லாஹ் இதன் பாகம்-2 ஆக மற்ற கேள்விகளை தருகின்றேன்.


குறிப்பு:-)))முஹர்ரம் மாதத்தின் சிறப்பாக இந்த சிறு முயற்ச்சி.இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளே...ஆஷூரா நோன்பு பிடுத்து விட்டீர்களா...?

எல்லாவற்றிற்க்கும் அல்லாஹ் போதுமானவன். 





Monday, November 28, 2011

அதிக செல்ஃபோன் பேசுபவர்களின் கவனத்திற்க்கு...,



இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும்,யாரை பார்த்தாலும் செல்ஃபோன் வைத்து கொண்டு மணிக்கணக்கில் பேசி கொள்வது என்பது மிகவும் சாதாரணவிஷயமாகி விட்டது.ஃபோன் என்ற விஷயமே பெரியதாக கருதிய மூலைமுடுக்குகளில்கூட இப்போது ஒருவருக்கு இரண்டு,மூன்று செல்ஃபோன் என புலக்கத்தில் இருந்து கொண்டுதான் வருகின்றது.அவசியத்திற்க்கு என்பது போய் பொழுது போக்கிற்க்காகவே பேசும் பழக்கமே நம்மில் பலருக்கும் இருந்து வருவது நம்மால் மறுக்கமுடியாத ஒன்று.


இப்படி இருந்து கொண்டிருக்க இதில் உபயோகம் எவ்வளவு உள்ளதோ,அதே போல் ஆபத்தும் ஓரளவு இருக்கதான் செய்கின்றது.எல்லா விஷயத்திலும் அப்படித்தானே...பல நல்லவிஷயங்கள் இருந்தாலும்,சில கெடுதலான விஷயங்கள் இல்லாமல் இருப்பதில்லை.அப்படி ஒரு விஷயம் தான் சமீபத்தில் எனக்கு மெயில் வந்த விஷயமும்... என்னை அதிர்ச்சுக்குள்ளாகி விட்டது.


ஒருவர் தன் படுக்கையறையில் செல்ஃபோனை சார்ஜரில் போட்டு விட்டு அமர்ந்திருக்கின்றார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வரவே அதன் ஒயரை விட்டு கலட்டாமலே சார்ஜ் ஏறும் பட்சத்திலேயே பேசி கொண்டிருந்திருக்கின்றார்.அப்போது ஏற்பட்ட எலக்ட்ரிக் பவர் சர்க்யூட் ஆகி அந்த நபர் தூக்கி எரியப்பட்டிருக்கின்றார்.சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய பெற்றோர்கள் வந்து பார்க்கையில் அவர் கைவிரல்களில் தீக்காயங்களோடு மயக்கநிலையில் இருந்துள்ளார்.செல்ஃபோனும் எரிந்தநிலையில் இருந்திருக்கின்றது.அவற்றை நான் சொல்வதை விட படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்களேன்.




அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.இந்த சம்பவம் மியாமியில் நடந்து அங்குள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மியாமி ஹாஸ்பிட்டல் என்ற மருத்துமனைமூலம் இந்த செய்தி வெளியாகி உள்ளது.


இது வெறும் செய்தி அல்ல நம் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம்.நம்மையும் மீறி நாம் சில நேரங்களில் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. இது போன்று பேட்டரி லோ என்று காட்டும் போது ஏதேனும் அவசர அழைப்பு வர நாமும் தவிர்க்க இயலாமல் சார்ஜரில் போட்டுக்கொண்டே பேசி விடுவது இயல்புதான்.
நான் இரண்டு மூன்று தடவைகளில் இவ்வாறு செய்துள்ளேன்.இனி இது போன்ற தவறை செய்யும் அனைவருக்கும் இது ஒரு நல்லபாடமாக அமையும்.(முக்கியமாக எனக்கும் தான் அவ்வ்வ்வ்....) இனி நாம் அனைவரும் அலட்சியம் செய்யாமல் கவனமாக இருப்போம்.அப்புறம் பேசுகிறேன் என்றோ,இல்லை சார்ஜரை துண்டித்து விட்டோ பேச பழகிக் கொள்வோம்.


                                                    
                                                             அட பாவிங்களா.......
                                                                      எங்களை பயமுறுத்துறதுக்கும் 
                                                                         ஒருஅளவில்லாம போச்சே......             
                                                               
                                                                             ஸ்ஸ்ஸ்ஸூ>>>>முடியல....


எல்லாவற்றிற்க்கும் இறைவன் போதுமானவன்....





Friday, November 18, 2011

ஸ்பெஷல் ஜூஸ்



ஜூஸ் வகைகளில் ஃப்ரூட்ஸ்,கேரட்,பீட்ரூட் என நாம் எவ்வளவோ பருகி கொண்டு வருகின்றோம்.பாக்கெட் மற்றும் பாட்டில் ஜூஸ்கள் அதிகமாகவே நம்மில் புழக்கத்தில் இருந்துதான் வருகின்றது.பெரும்பாலும் குழந்தைகளும் அந்த மாதிரியான ஜூஸ்களையே தான் பெரிதும் விரும்புகின்றனர்.அதையும் தாண்டி ஃப்ரஷ் ஜூஸ்க்கு உள்ள சுவையே அலாதிதான்.செய்வதற்க்கு கொஞ்சம் சோம்பேறியானாலும் அதனால் கிடைக்கும் பலனோ அதிகம்.டயட் இருப்பவர்களில் சிலர் இது போன்று ஜூஸையே காலை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.அப்படியிருக்க எல்லோராலும் குடித்து பழகக்கூடிய ஒரு ஜூஸ் வகையைதான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.ஜூஸின் செய்முறை மட்டுமின்றி,அதனால் நாம் அடையக்கூடிய பத்து வகை பலன்களையும் அறிய போகின்றோம்.முதலில் செய்முறையை பார்க்கலாம்.





தேவையான பொருட்கள்


கேரட் ---------------------------------------------  இரண்டு
பீட்ரூட்--------------------------------------------  ஒன்று
ஆப்பிள்-------------------------------------------   ஒன்று


செய்முறை


கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் இவைகளின் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி துண்டுகளாக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் அல்லது ஜூஸரில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு (வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து) நன்கு அடித்து கொள்ளவும்.
நன்கு வடிக்கட்டி விட்டு சுவைக்கு சிறிது எலுமிச்சை சாறும்,வேண்டுமாயின் உப்பு சிறிதும் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
மிகவும் சத்தான ஸ்பெஷல் ஜூஸ் தயார்.



இதை நாம் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை அருந்திய பின் ஒரு மணிநேரம் கழித்துதான் காலை உணவையே  உட்க்கொள்ள வேண்டும்.
சரி ஜூஸ் தயார்.இதன் பயன்களை அறிய வேண்டாமா..?


இதனால் நாம் அடையக்கூடிய பயன்கள்:-


1. கேன்ஸர் வராமல் தடுப்பதற்க்கும், நம் செல்களை பாதுகாக்கின்றது.
2. அல்சர் பிரச்சனகளுக்கும்,கிட்னி,லிவர்,பேன்க்ரீஸ் போன்றவைகளில் ஏற்படும் உபாதைகளிலிருந்தும் நம்மை காக்கின்றது.
3. உடம்பில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஹார்ட் அட்டாக்கிலிருந்து நம்மை காத்து கொள்ள வழிவகுக்கின்றது.
4. உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.
5.கண் சோர்வு மற்றும் கண் பார்வை கோளாறுகளையும் தடுப்பதற்க்கு பயனுள்ளதாக உள்ளது.
6.செரிமாண கோளாறுகளையும்,தொண்டை புண்களையும்,சுவாசகோளாறுகளையும் இது சரி செய்கின்றது.
7.எலும்பு,மூட்டு வலிகளுக்கும் இது நல்ல பலனளிக்கின்றது.
8.நம் தோலினால் ஏற்படும் உபாதைகளை போக்கவும்,நன்கு ஸ்கின்னை சாஃப்ட்டாக வைக்கவும் இது உதவுகின்றது.
9.அலர்ஜியினால் ஏற்படும் உபாதைகளுக்கும் இது நல்ல பலனளிக்கின்றது.
10. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதன் வலியை போக்குவதற்க்கும்பெரிதும் உதவுகின்றது.


படிக்கும்போதே புரிந்திருக்கும்,இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சர்யபடவும் வைத்திருக்கும் அல்லவா...?ஏன் நாட்களை வீணாக்குவானேன்.மாத்திரை மருந்து என சாப்பிட்டு குடல் வெந்து போவதற்க்கு,இது போன்ற அரிய கைமருந்தாக விளங்கும் ஜூஸ்களை குடித்து நம்மை ஓரளவிற்க்கு காத்துக் கொள்ளலாமே.... வாங்க முயன்றுதான் பார்ப்போமே.....


[[[குறிப்பு:-]]] இந்த குறிப்பும்,விளக்கங்களும் எனக்கு தோழி ஒருவரின் மூலம்மெயிலில் வந்ததாக்கும்.அதை என் கருத்துக்களையும்சேர்த்து விரிவான தமிழாக்கத்தோடு உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  


நன்றி....




Wednesday, November 9, 2011

மட்டன் சூப்



தேவையான பொருட்கள்
   
மட்டன் நெஞ்செலும்பு ........................... 2 துண்டுகள்
சின்ன வெங்காயம் .................................. பத்து
தக்காளி .......................................................... ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை .............................. ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் ............................................... ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் .................................................. ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் .................................... கால் ஸ்பூனுக்கும் குறைவாக
பட்டை ............................................................ மிக சிறிய துண்டு
நல்லெண்ணை............................................ மூன்று தேக்கரண்டி
மல்லிதழை .................................................. சிறிதளவு


செய்முறை




மட்டன் எலும்பை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி விட்டு மிக்ஸியில் விட்டு விட்டு ஒன்றிரண்டாக (நைசாக இல்லாமல்)சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.



ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து ,எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு பின்பு இஞ்சி,பூண்டு அரவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.



ஓரளவு எண்ணெய் மினுமினுக்க வதங்கியதும்,பச்சைமிளகாய் சேர்த்து கூடவே தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி,மட்டன் எலும்பையும் சேர்த்து ஒரு நிமிடம் சிம்மிலேயே வதக்க விடவும்.
பிறகு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பும்,அரிந்த மல்லி தழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை வைத்து பின்பு இறக்கவும்.



சுவையான முறையில் மட்டன் சூப் தயார்.
இட்லி,தோசை,சாதம் இவைகளில் ஊற்றி சாப்பிடவும் சரி,சும்மாவே குடிக்கவும் சரி சுவை நன்றாகவே இருக்கும்.
இந்த செய்முறையிலேயே ஆட்டு கால்,கோழி இவைகளிலும் சூப் செய்யலாம்.அதற்க்கேற்றார் போன்றே சுவை நன்றாக இருக்கும்.மட்டன்,சிக்கன் இவைகளின் அளவிற்க்கேற்றார் போல் இதர பொருட்களின் அளவையும் அதிகரித்து கொள்ள வேண்டும்.


நன்றி.


Saturday, November 5, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வலைப்பூவில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இஸ்லாமியர்களின் மிக பெரிய மற்றும் இறுதி கடமையான ஹஜ் கடமையினை இந்த வருடம் நிறைவேற்ற சென்றிருக்கும் அனைவருடைய ஹஜ்ஜையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு,அவர்களின் முன் பின் பாவங்களை போக்கிடுவானாக என நாம் அனைவரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
அதே போல் நாம் அனைவருக்கும் இக்கடமையை இனிதே நிறைவேற்ற கூடிய பாக்கியத்தினை இறைவன் அருள வேண்டும் என நிய்யத்தோடு துஆ செய்வோமாக....

Wednesday, November 2, 2011

எங்கள் வீட்டின் கை வண்ணம்



எனது இல்லத்தில் இதற்க்கு முன் எனது கைவண்ணம் என்று சில எனக்கும் தெரிந்தவற்றில் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.அப்பகுதியிலேயே எனது மாமியார் நிறைய விஷயங்களை கற்றறிந்தவர் அவரது திறமைகளையும் இங்கே வெளீயிடுவதாக சொல்லியிருந்தேன்...சரி சரி எதற்க்கு இத்தனை ஃப்ளாஷ்பேக் மேட்டருக்கு வா என்கின்றீர்களா...?அதாங்க.... இங்க தாங்க மேட்டரே.... எனது மாமியார் நிறைய கைவேலப்பாடுகள் செய்வதில் சகலகலா வல்லவர்.தனக்கு தெரிந்தவைகள் என்று மட்டுமல்லாது புதுமையாக பார்ப்பவற்றையும் தெரிந்து கொண்டு செயல்பட முனைபவர்.
இதற்க்கென்று மெனக்கெட்டு வாங்கி வந்து செய்வது என்று ஆரம்பிக்க மாட்டார்.ஏதேனும் வேஸ்ட் பொருட்களோ,உடைந்த பொருட்களோ கையில் அகப்பட்டால் அவ்வளவுதான் அவருக்கு டிங்.... என்று ஒரு மணி அடிக்க என்னவெல்லாம் இதில் செய்யலாம் என்று பல யோசனைகள் பிறக்கும். 
அப்படி செய்த விஷயங்கள் நிறைய உண்டு.அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்தேன்.




இந்த பூக்கள் கொத்து செய்தது எப்படி தெரியுமோ...?ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..?அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..?அதையெல்லாம் சேகரித்து வைத்து தான் அதில் இந்த ரோஸ்,அதற்க்கான இலைகள் எல்லாம் செய்து அதனை கலரிட்டு வைப்பார்கள்.அந்த பூங்கொத்தின் கீழே ஃப்ளவர் வாஷ் எதனால் உருவானதென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களை சுற்றி வரும் தெர்மோகோல் மூலம் செய்ததாக்கும். ஏனோ ஃபோட்டோவை சரியாக என்னால் எடுக்க முடியவில்லை.நேரில் இது இன்னும் அழகாக இருக்கின்றது.
இது மட்டுமல்லாது,தையல் வேலைகளிலும் நன்கு சிறந்தவர்.தலையணையை கூட மீன் வடிவத்தில்,ஹார்ட் வடிவத்தில் என தைத்திருப்பார்.குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.அது தற்போது கைவசம் இல்லாததால் இங்கே வெளியிட முடியவில்லை.முடிந்த போது அதை இங்கே சேர்த்து விடுகிறேன்.சரி அடுத்தது என்ன என்று பார்ப்போமா...?
இவைகள் எங்கள் வீட்டில் அலங்கரிக்கபட்டிருப்பவைகள்.
இது ஒரு மரப்பலகையை கொண்டு செய்திருப்பது என்று ஓரளவு கனித்திருப்பீர்கள்.அதன் ஓரங்களில் இருப்பது என்ன தெரியுமோ...?தானிய வகைகள்.அரிசி,பச்சைபயிர்,வெள்ளை ,மற்றும் கறுப்புஉளுந்து,கேழ்வரகு,சீரகம்,மிளகு,கடுகு,கோதுமை,தனியா,கிராம்பு,எள் இவைகளை கொண்டு அலங்கரித்ததாகும்.இதனை எனது சிறிய நாத்தினாரும்,அவள் கஸினும் படித்து கொண்டிருக்கும் போது சேர்ந்து செய்தது.நடுவில் இருக்கும் ஃபோட்டோ எனது மகளுடையது.மேலே கண்ணாடியை கொண்டு கூட ஃப்ரேம் செய்யவில்லை.ஆனாலும் அப்படியே அழகாக சுவரில் இன்னும் காட்சி அளிக்கின்றது.அவர்கள் செய்த மற்றுமொரு கைவண்ணம் தான் கீழே நீங்கள் பார்க்கும் அழகிய வீடு.

இது ஐஸ் குச்சியினால் செய்த வீடாகும்.இதை இன்னும் அழகுபடுத்தியிருந்தார்கள்.அவை எல்லாம் கொஞ்சம் விழுந்துவிட்டது.இது போன்று இன்னும் பல கைவண்ணங்கள் எங்கள் வீட்டின் ஆங்காங்கே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை மற்றுமொரு பகுதியினில்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.

*** நன்றி ***


Saturday, October 22, 2011

பொன்னாங்கன்னி கீரை சார்

என்னதான் காலங்கள் மாறி,உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும்,நம்ம பாரம்பர்ய கை மணத்திற்க்கான சுவையே தனிதான்.சுவை மட்டும் அல்லாது உடம்பிற்க்கும் நல்லதொரு பலனை தரக்கூடியதாக இருக்கும்.
அதுவும் எங்கள் ஊர் கிராம பகுதிகளில் நிறைய சின்ன சின்ன சமையல்களெல்லாம் கை வைத்தியம் நிறைந்ததாக இருக்கும்.அவற்றில் ஒன்றை தான் இந்த குறிப்பாக வெளியிடுகிறேன்.




தேவையான பொருட்கள்


பொன்னாங்கன்னி கீரை --------------- நான்கு கைய்யளவு
முருங்கை கீரை இலை --------------    இரண்டு கப்
கெட்டி தேங்காய் பால் --------------- ஒரு டம்ளர்
அரிசி கழநீர்   ---------------------------- இரண்டு டம்ளர்
சின்ன வெங்காயம் -------------------- அரை கப்
பச்சைமிளகாய் ------------------------- இரண்டு
சீரகம் -------------------------------------- அரை ஸ்பூன்
உப்பு   -------------------------------------- தேவைக்கேற்ப  


செய்முறை


பொன்னாங்கன்னி கீரையை நல்ல இலைகளாக பார்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்.


அரிசி கழநீர் என்பது சாப்பாடு சமைக்கும் அரிசியை நல்ல தண்ணீர் ஊற்றி கலைந்து அந்த தண்ணீரை இருத்து தனியே வைத்துக் கொள்வதற்க்கு பெயர் தான்.இந்த தண்ணீரில் தூசு ஏதும் இருப்பின் வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.திக்காக இருக்கும்.இது ஒரு தனி மணம் கொடுக்கும்.


பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.


இப்போது அந்த தண்ணீரை (நாம் சொன்ன அளவு) ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் சீரகம்,பச்சைமிளகாய்,வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து விடவும்.
இரண்டு கொதி தள தளவென கொதித்ததும்,அதில் அலசி வைத்திருக்கும் பொன்னாங்கன்னி கீரையை போட்டு வேக விடவும்.


நன்கு கொதித்து பாதியளவு வெந்து கொண்டிருக்கும்போதே முருங்கை இலையையும் சேர்த்து கொதிக்க விடவும்.


இரண்டும் வெந்ததும்(கைய்யால் மசித்து பார்த்தால் தெரிந்து விடும்) அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் விட்டு கலக்கி மூடி வைத்து விடவும்.
மிகவும் சுவையான சத்தான கீரை சார் ரெடி.


இது அல்சர் போன்ற வயிற்று புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது.நல்ல பலன் கிடைக்கும். சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
தேங்காய் பால் வேண்டாம் என நினைப்பவர்கள் வெறுமெனவே சாராக சாப்பிடலாம்.ஆனால் தேங்காய்பாலும் வயிற்று,வாய் புண் உள்ளவர்களுக்கு நல்லதே....பொன்னாங்கன்னியும்,சரி முருங்கை கீரையும் சரி உடம்பிற்க்கு மிகவும் சத்தானது.மருத்துவ குணம் கொண்டது.
ஒரு வயது குழந்தைகள் முதற்க் கொண்டு வயதானவர்கள் வரை சாதத்தில் ஊற்றி சாப்பிட உகந்தது.
வெறும் முருங்கை இலை, மணத்தக்காளி இலையிலும் இதே போன்று செய்யலாம்.


***நீங்களும் முயன்று செய்து பார்த்துட்டு சொல்லுங்களேன்.இதற்க்கு தொட்டுக் கொள்ள சுருக்கென்று ஒரு மருத்துவமிக்க துவையல் இருந்தால் எப்படி இருக்கும்.....?நல்லாயிருக்குமுல்ல.... இதோ அடுத்து அந்த குறிப்போடு வருகிறேன்.



Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out